விலாடிமிர் என்ற நகரத்தில் டிமிட்ரிச் ஆக்சியனோவ் என்னும் இளைஞன் வியாபாரம் செய்து வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு வீடும் இரண்டு கடைகளும் இருந்தன.

ஆக்சியனோவ் அழகன். அழகிய சுருட்டை முடிக்காரன். வேடிக்கை விளையாட்டுப் பேர்விழி. பாடல்களை விரும்பிப் பாடுவான். இளவயதில் அதிகமாகக் குடித்துக் கொண்டிருந்தவன், திருமணத்துக்குப் பிறகு குடியை விட்டுவிட்டான். எப்போதாவது குடிப்பதுண்டு.

ஒரு கோடைக்காலம். நிழ்னி ஃபேருக்கு கிளம்பிய ஆக்சியனோவ் மனைவியிடம் விடைபெற்றபோது, அவனிடம் அவள், “இவான் டிமிட்ரிச், இன்னிக்கு நீ கிளம்ப வேண்டாம். உன்னைப் பற்றி ஒரு கெட்ட கனவு கண்டேன்,” என்றாள்.

ஆக்சியனோவ் சிரித்து விட்டு, “நான் அப்படியே போய்விடுவேன் என்று நீ பயப்படுகிறாய்,” என்று சொன்னான்.

மனைவி சொன்னாள், “நான் எதற்கு பயப்படுகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்ததெல்லாம், எனக்கு ஒரு கெட்ட கனவு வந்தது. என் கனவில் நீ நகரத்திலிருந்து திரும்பி வரும்போது, உன் தொப்பியை நீ கழற்றினாய்; உன் தலைமுடி நரைத்திருந்தது,”

ஆக்சியனோவ் சிரித்தான். “அது அதிர்ஷ்டத்தின் அறிகுறி,” என்றான். “நான் எல்லா பொருள்களையும் விற்றுவிட்டு உனக்கு நல்ல பரிசுகளும் வாங்கி வருவேன்,” என்று சொல்லி குடும்பத்தினரிடம் விடைபெற்றுக்கொண்டு போனான்.

பாதி வழியில் அவனுக்குத் தெரிந்த இன்னொரு வியாபாரியைச் சந்தித்தான். இருவரும் இரவில் ஒரே சத்திரத்தில் தங்கினார்கள். இருவரும் இணைந்தே தேநீர் அருந்தினர். அருகருகிலிருந்த அறையில் தங்கள் படுக்கையில் படுத்துத் தூங்கிவிட்டனர்.

ஆக்சியனோவுக்கு நீண்ட நேரம் தூங்கும் பழக்கமில்லை. குளிர்ந்த பொழுதில் பயணம் செய்ய வேண்டுமென்று அதிகாலையில் கிளம்ப நினைத்து, வண்டியோட்டியிடம் குதிரையை வண்டியில் பூட்டச் சொன்னான்.

பின்னால் தங்கி இருந்த வீட்டின் சத்திரக்காரரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தான்.

ஒரு இருபத்தைந்து மைல் பயணம் செய்த பிறகு குதிரைகளுக்கு உணவளிக்க வண்டியை நிறுத்தினான். ஆக்சியனோவ் சத்திரத்தின் பாதையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தான். பிறகு தாழ்வாரத்தில் நடந்து போய் தேநீருக்காக ஒரு பாத்திரத்தில் வெந்நீர் வைக்கச் சொல்லிவிட்டு, கிடாரை எடுத்து வாசிக்க ஆரம்பித்தான்.

திடீரென்று குதிரை வண்டி ஒன்று மணியடித்துக் கொண்டு வந்தது. ஒரு அதிகாரி வண்டியிலிருந்து இறங்கி வந்தார். இரண்டு ராணுவ வீரர்கள் அவர் பின்னால் வந்தனர்.

அவர் ஆக்சியனோவுக்கு அருகில் வந்து, அவன் யார் எங்கிருந்து வருகிறான் என்று கேட்டார். ஆக்சியனோவ் அவருக்கு முழுமையாக பதில் சொன்னான். மேலும் “நாம் சேர்ந்து தேநீர் அருந்தலாமா?” என்றும் கேட்டான்.

ஆனால் அந்த அதிகாரி மேலும் மேலும் குறுக்குக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். “நேற்று இரவு எங்கே தங்கி இருந்தாய்? நீ தனியாக இருந்தாயா? வேறு வியாபாரி யாரும் உடன் இருந்தார்களா? அந்த வியாபாரியை காலையில் பார்த்தாயா? ஏன் அதிகாலையிலேயே சத்திரத்திலிருந்து கிளம்பி விட்டாய்?”

இத்தனை கேள்விகளைத் தன்னிடம் ஏன் கேட்கின்றனர் என்று ஆக்சியனோவ் ஆச்சரியப்பட்டுப் போனான். ஆனால் எல்லா கேள்விகளுக்கும் நடந்த உண்மையான விஷயங்களை நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட்டு,  “ஏன் இத்தனை குறுக்குக் கேள்விகளை ஒரு திருடனிடம் அல்லது கொள்ளைக்காரனிடம் கேட்பது போல என்னிடம் கேட்கிறீர்கள்? நான் வியாபார விஷயமாக போய்க்கொண்டு இருக்கிறேன். இதெல்லாம் என்னிடம் கேட்க வேண்டியதில்லை,” என்றான்.

அதிகாரி அந்த வீரர்களை அழைத்து, “நான் இந்த மாவட்ட போலீஸ் அதிகாரி. நான் ஏன் இத்தனை கேள்வி கேட்கிறேன் என்றால், நேற்று இரவு உன்னுடன் இருந்த வியாபாரி கழுத்து அறுபட்டு கொல்லப்பட்டிருக்கிறான். நாங்கள் உன் பொருள்களை சோதனை செய்ய வேண்டும்”, என்றார்.

அவர்கள் அந்த வீட்டுக்குள் வந்தனர். ஆக்சியனோவின் பொருள்களில் அதிகாரியும் இரு வீரர்களும் தேட ஆரம்பித்தனர். “இந்தக் கத்தி யாருடையது?” என்று கத்திக்கொண்டே சட்டென்று ஒரு கத்தியை பைக்குள்ளிருந்து எடுத்தார் அந்த அதிகாரி.

ஆக்சியனோவ் பார்த்தான்; அவனுடைய பையிலிருந்து ரத்தம் தோய்ந்த கத்தி எடுக்கப்பட்டதைக் கண்டு பயந்து போனான்.

“இந்தக் கத்தியில் எப்படி ரத்தம் வந்தது?”

ஆக்சியனோவ் பதில் சொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் வாயடைத்துப் போனான். “எனக்குத் தெரியாது. இது என்னுடையதில்லை.”

போலீஸ் அதிகாரி சொன்னார், “இன்று காலையில் அந்த வியாபாரி கழுத்தறுக்கப்பட்டு படுக்கையில் கிடந்ததைப் பார்த்தோம். நீ தான் அதைச் செய்தவன். வீடு உள்ளே பூட்டி இருந்தது. உள்ளே யாருமே இல்லை. இதோ இங்கே ரத்தம் தோய்ந்த கத்தி உன் பையில் இருக்கிறது. உன் முகமும் நீ நடந்துகொள்வதும் உன்னைக் காட்டிக் கொடுத்தன. சொல். எப்படி அவனைக் கொன்றாய்? எவ்வளவு பணத்தை எடுத்தாய்?”

ஆக்சியனோவ் தான் அதைச் செய்யவில்லையென்று உறுதியாகச் சொன்னான்; இரவு சேர்ந்து தேநீர் குடித்த பிறகு, அந்த வியாபாரியைப் பார்க்கவில்லை என்றும் சொந்தப் பணமான எட்டாயிரம் ரூபிள்கள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும், அந்த கத்தி தன்னுடையது இல்லை என்றும் சொன்னான். ஆனால் அவனுடைய குரல் உடைந்திருந்தது; முகம் வெளுத்துப் போனது; அவன் உடல் பயத்தில் நடுங்கியது, அவனே குற்றம் செய்ததைப் போல.

PC: Project Gutenberg

போலீஸ் அதிகாரி, அந்த வீரர்களிடம் ஆக்சியனோவைக் கட்டி வண்டியில் ஏற்றுமாறு சொன்னார். இரு கால்களையும் பிணைத்து வண்டியில் அவனைத் தூக்கிப் போட்டனர். ஆக்சியனோவ் இரு கைகளாலும் மார்பைக் கட்டிக் கொண்டு அழுதான். அவனுடைய பணமும் பொருள்களும் அவனிடமிருந்து அகற்றப்பட்டன. அருகிலிருந்த நகரத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். விலாடிமிரில் அவனுடைய குணாதிசயங்களைப் பற்றி விசாரணை நடந்தது. நகரத்தில் அக்கம் பக்கத்தினரும் தெரிந்த வியாபாரிகளும், ‘முதலில் குடித்துக்கொண்டு நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தான் ஆனால் நல்ல மனிதன்தான்,’ என்று சொன்னார்கள். விசாரணை முடிவுக்கு வந்தது. வழக்கு… ரியாஸானிலிருந்து வந்த வியாபாரியைக் கொன்று அவனிடமிருந்து இருபதாயிரம் ரூபிள்களைக் கொள்ளையடித்ததற்காக  அவனுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.

அவனுடைய மனைவி எதை நம்புவது என்று அறியாமல் விரக்தியில் இருந்தாள். அவளுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். ஒரு குழந்தை கைக்குழந்தை. எல்லா குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு, தன்னுடைய கணவனைப் பார்க்க அவன் சிறையில் இருக்கும் நகரத்துக்குப் போனாள்.

முதலில் அவளை அவனைப் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை. பலமுறை கெஞ்சிய பிறகு அதிகாரிகள் அவளை அனுமதித்தனர். அவனிடம் அழைத்துச் சென்றனர்.

அவன் சிறைக்கான உடைகளுடன் சங்கிலியில் பிணைக்கப்பட்டு இருப்பதையும், திருடர்களுடனும் குற்றவாளிகளுடனும் அடைக்கப்பட்டிருப்பதையும் பார்த்து அவள் மயங்கி விழுந்தாள். நீண்ட நேரத்துக்கு உணர்வில்லாமலேயே கிடந்தாள். பிறகு குழந்தைகளை அருகில் இழுத்துக் கொண்டு அவனுக்கு அருகில் உட்கார்ந்தாள். வீட்டு நிலவரத்தை அவனிடம் சொன்னாள். “என்ன நடந்தது?” என்று விசாரித்தாள். அவன் எல்லா விஷயங்களையும் அவளிடம் சொன்னான். அவள், “இனி நாம் என்ன செய்வது?” என்று கேட்டாள்.

 “ஒரு அப்பாவியை காப்பாற்ற வேண்டுமென்று மன்னனுக்கு நாம் மனு கொடுக்க வேண்டும்,” என்றான்.

அவள் அரசுக்கு அனுப்பிய மனு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று அவள் கூறினாள்.

ஆக்சியனோவ் பதில் எதுவும் சொல்லவில்லை. கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.

இப்போது அவள், “இது வேறெதற்கும் இல்லை. அன்றைக்கு நான் உங்க தலைமுடி நரைத்திருப்பது போல கனவு வந்ததென்று சொன்னேனில்லையா. அன்று நீங்கள் வெளியில் கிளம்பி இருக்கக்கூடாது,” என்றாள்.

அவனுடைய முடியில் விரல்களை நுழைத்தபடியே அவனிடம் அவள் கேட்டாள், “அன்பே, உங்கள் மனைவியிடம் உண்மையைச் சொல்லுங்கள். நீங்கள் இல்லை என்றால், வேறு யார் இதைச் செய்திருப்பார்கள்?”

“அப்படியென்றால் நீயும் என் மேல் சந்தேகப்படுகிறாயா?,”என்றான் ஆக்சியனோவ். முகத்தைக் கைகளால் மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தான். அப்போது ஒரு வீரன் வந்து இப்போது அவனுடைய மனைவியும் குழந்தைகளும் போகவேண்டும் என்றான். ஆக்சியனோவ் அவர்களை வழியனுப்பி, தன்னுடைய குடும்பத்திடம் கடைசியாக விடைபெற்றான்.

அவர்கள் போன பிறகு ஆக்சியனோவ் பேசிய அனைத்தையும் நினைவு கூர்ந்து பார்த்தான். மனைவிகூட தன்னை சந்தேகப்பட்டு கேள்வி கேட்டதை நினைத்து தனக்குள், “கடவுளுக்கு மட்டும்தான் உண்மை தெரியும்; அவரிடம் மட்டும்தான் நாம் மனு செய்ய முடியும், அவரிடமிருந்து மட்டும்தான் கருணையை எதிர்பார்க்க முடியும்,” என்று சொல்லிக் கொண்டான்.

அதற்குப் பிறகு ஆக்சியனோவ் எந்த மனுவும் யாருக்கும் எழுதி அனுப்பவில்லை. எல்லா நம்பிக்கைகளையும் கைவிட்டு கடவுளை மட்டும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

ஆக்சியனோவ் சாட்டையடி பெற்று வேலைக்காக சுரங்கப் பணி தண்டனை பெற்றான். சாட்டை அடி காயங்கள் ஆறியதும், இதர குற்றவாளிகளுடன் சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டான். 

இருபத்தி ஆறு வருடங்கள் ஆக்சியனோவ் சைபீரியாவில் குற்றவாளியாக வாழ்ந்து வந்தான். அவனுடைய முடி பனியைப் போல வெளுத்துப் போனது; அவனுடைய தாடி மெலிந்து நீண்டு நரைத்துப் போனது; அவனுடைய மகிழ்ச்சி அனைத்தும் இல்லாமல் போனது; அவன் வளைந்து மெதுவாக நடந்தான்; குறைவாகப் பேசினான்; சிரிக்கவே இல்லை; ஆனால் எப்போதும் பிரார்த்தனை செய்தான்.

சிறையில் ஆக்சியனோவ் பூட்ஸ் செய்யக் கற்றுக்கொண்டான்; கொஞ்சம் பணமும் சம்பாதித்தான்; அதில் அவன் ‘ஞானிகளின் வாழ்க்கை’ புத்தகத்தை வாங்கினான். சிறையில் போதுமான வெளிச்சம் இருக்கும்போது அந்தப் புத்தகத்தைப் படித்தான். ஞாயிற்றுக்கிழமை சர்ச்சில் பாடங்களைப் படித்தான், குரல் இப்போதும் நன்றாக இருந்ததால் பாடல் குழுக்களில் பாடினான்.

சிறை அதிகாரிகள் ஆக்சியனோவின் சாந்த குணத்துக்காக அவனை விரும்பினார்கள்; சக கைதிகள் மதித்தார்கள்; அவரை, ‘தாத்தா’ என்றும், ‘சாது,’ ‘துறவி’ என்றும் அழைத்தார்கள். சிறை அதிகாரிகளிடம் எதற்காகவாவது மனு கொடுக்க வேண்டுமென்றால் அவர்கள் எப்போதும் ஆக்சியனோவையே தங்களுக்காக பேசும்படி கூறினார்கள். தங்களுக்குள் ஏதேனும் சண்டை இருந்தால், ஆக்சியனோவிடம் வந்து எது சரி என்று பார்த்து தீர்ப்பு சொல்லச் சொன்னார்கள்.

ஆக்சியனோவின் வீட்டிலிருந்து எந்த செய்தியும் இல்லை; மனைவியும் குழந்தைகளும் இன்னும் உயிருடன்தான் இருக்கிறார்களா என்பது கூடத் தெரியவில்லை.

ஒருநாள் புதிய குற்றவாளிகளின் குழு ஒன்று அந்த சிறைக்கு வந்தது. அன்று மாலையில், பழைய கைதிகள் புதிய கைதிகளைச் சுற்றிலும் இருந்து கொண்டு, எந்த நகரம் அல்லது கிராமங்களிலிருந்து அவர்கள் வந்திருக்கின்றனர், எதற்காக தண்டனை பெற்றிருக்கின்றனர் என்று கேட்டார்கள். மீதி இருந்தவர்களில் ஆக்சியனோவ் புதிதாக வந்தவர்களின் அருகில் அமர்ந்து கொண்டு, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்துக் கொண்டிருந்தான்.

புது கைதிகளில், அறுபது வயதைக் கடந்த உயரமான பலவானான நரைத்த தாடியுடன் இருந்த ஒருவன், எதற்காக தன்னைக் கைது செய்தார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.

“நல்லது நண்பர்களே. ஒரு ஸ்லெட்ஜில் கட்டப்பட்டிருந்த குதிரையை நான் பிடித்தேன், திருடினேன் என்று குற்றம் சுமத்தி என்னைக் கைது செய்து விட்டார்கள். வீட்டுக்கு வேகமாகப் போக வேண்டுமென்பதற்காக அதைப் பிடித்தேன்; பிறகு அதை விட்டு விடலாமென்று இருந்தேன்; அந்த வண்டி என்னுடைய நண்பனுடையது. அதனால் நான் செய்தது, ‘சரி’ என்றேன். அவர்கள், ‘இல்லை நீ திருடினாய்’ என்று சொல்லி விட்டார்கள். எப்படி எங்கே திருடினேன் என்று அவர்கள் சொல்லவில்லை.

நான் முன்பு உண்மையிலேயே தவறு செய்திருந்தேன், அப்போதே வெகு காலத்துக்கு முன்பே இங்கே வந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது நான் கண்டுபிடிக்கப் படவில்லை. இப்போது தவறு எதுவுமே செய்யாமல் இங்கே தண்டனைக்காக வந்திருக்கிறேன். நான் உங்களிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன். முன்பே சைபீரியாவுக்கு வந்திருக்கிறேன். ஆனால் அதிக நாள் தங்கவில்லை,” என்றான்.

 “எங்கிருந்து வந்தாய்? உனக்கு எந்த ஊர்?” என்று ஒருவன் கேட்டான்.

“விலாடிமிரிலிருந்து. என் குடும்பம் அந்த நகரத்தில்தான் இருக்கிறது. என் பெயர் மாக்கர், அவர்கள் என்னை, ‘செமெனோவிச்’ என்று கூப்பிடுவார்கள்.”

ஆக்சியனோவ் தலையை உயர்த்தி அவனைப் பார்த்து, “சொல்லு செமெனோவிச், உனக்கு விலாடிமிரில் ஆக்சியனோவ் வியாபாரக் குடும்பத்தைப் பற்றி எதுவும் தெரியுமா? யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா?” என்று கேட்டான்.

“எனக்கு நன்றாகத் தெரியும். ஆக்சியனோவ் குடும்பத்தினர் செல்வந்தர்கள். அவர்களுடைய அப்பா சைபீரியாவில் இருக்கிறார் என்று தெரிகிறது, நம்மைப் போல பாவம் செய்தவராக. பெரியவரான நீங்கள் எதற்கு இங்கே வந்தீர்கள்?”

ஆக்சியனோவ் தன்னுடைய துரதிர்ஷ்டத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை. அவர் பெருமூச்சு விட்டு , “நான் செய்த பாவத்துக்காக இங்கே இருபத்தி ஆறு ஆண்டுகள் சிறையில் இருக்கிறேன்.”

“என்ன குற்றம் செய்தீர்கள்?” என்று மாக்கர் செமெனோவிச் கேட்டான்.

ஆனால் ஆக்சியனோவ், “நல்லது – எனக்குத் தேவையானதுதான்!” என்று மட்டுமே சொன்னார். அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. ஆனால் அவருடன் இருந்தவர்கள் புதிதாக வந்த கைதிகளிடம் ஆக்சியனோவ் எப்படி சைபீரியாவுக்கு வந்தார் என்பதைச் சொன்னார்கள். எப்படி யாரோ ஒருவன் ஒரு வியாபாரியைக் கொன்றுவிட்டு அந்த கத்தியை ஆக்சியனோவின் பொருட்களுடன் சேர்த்து வைத்துவிட்டான் என்றும் அதனால் ஆக்சியனோவ் தவறுதலாக தண்டிக்கப்பட்டாரென்றும் சொன்னார்கள்.

மாக்கர் இவோனிச் இதைக் கேட்டதும் ஆக்சியனோவைப் பார்த்துவிட்டு, தன்னுடைய முழங்காலில் அடித்துக் கொண்டான். “ஆஹா என்ன அதிசயம், ஆனால் நீங்கள் இப்படி வயதானவராகி விட்டீர்களே தாத்தா,” என்று வியப்புடன் கூறினான்.

மற்றவர்கள் அவன் ஏன் இப்படி ஆச்சரியப்பட்டான் என்றும் ஆக்சியனோவை இதற்கு முன்னால் எங்கே பார்த்தான் என்றும் கேட்டனர். ஆனால் அவன் பதில் சொல்லவில்லை. “நாங்கள் இங்கே சந்திக்க வேண்டுமென்றிருந்தது அதிசயமானது,” என்று மட்டும் சொன்னான்.

இப்படி அவன் சொன்னது ஆக்சியனோவை வியக்க வைத்தது. இந்த மனிதனுக்கு அந்த வியாபாரியைக் கொன்றது யாரென்று தெரிந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் அவன், “செமெனோவிச் உனக்கு அதைப் பற்றித் தெரியுமா, இல்லையென்றால் இதற்கு முன்னால் என்னைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டான்.

“எனக்கு எப்படித் தெரியும்? இந்த உலகம் முழுக்க வதந்திகள்தான் இருக்கின்றன. நிறைய ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது, நான் கேள்விப்பட்டதையும் மறந்துவிட்டேன்,” என்றான்.

“அப்படியானால் யார் அந்த வியாபாரியைக் கொன்றார்கள் என்று கேள்விப்பட்டாயா?” என்று கேட்டான் ஆக்சியனோவ்.

மாக்கர் செமெனோவிச் சிரித்துவிட்டு, “யாருடைய பையில் கத்தி இருந்ததோ அவன்தான் கொன்னவன். வேறு யாராவது கத்தியை மறைத்து வைத்திருந்தால், அவன் பிடிபடும் வரையில் அவன் திருடன் இல்லை என்று சொல்வார்களே, அதுதான். உன்னுடைய பை உன் தலைக்குக் கீழே இருக்கும்போது எப்படி ஒருவன் கத்தியை உன் பையில் வைக்க முடியும்? அப்போது நீ விழித்துவிட மாட்டாயா?” என்றான்.

இதை ஆக்சியனோவ் கேட்டதுமே, அவனுக்கு நிச்சயமாகத் தெரிந்தது இவன்தான் அந்த வியாபாரியைக் கொன்றவன் என்பது. ஆக்சியனோவ் உடனே எழுந்து போய்விட்டான். அன்று இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தான். மிகவும் சோகமாக இருந்தான். பல காட்சிகள் அவனுடைய மனதில் எழுந்து ஓடிக் கொண்டிருந்தன. அவனுடைய மனைவியின் உருவம் அவன் வியாபாரத்துக்காக பிரிந்து சென்றபோது பார்த்த தோற்றத்தில் தெரிந்தது. அவள் இப்போது இருப்பது போலவே காட்சி தோன்றியது. அவளுடைய முகமும் கண்களும் அவனுக்கு முன்னால் மலர்ந்திருந்தன, அவளுடைய பேச்சையும் சிரிப்பையும் கேட்டான். பிறகு அவனுடைய குழந்தைகளையும் பார்த்தான், அப்போதிருந்ததைப் போல மிகவும் சிறிய குழந்தைகளாக இருந்தனர். ஒரு குழந்தை அங்கி அணிந்துகொண்டும், ஒரு குழந்தை மனைவியின் மார்பிலும் இருந்தனர். தன்னையும் நினைத்துப் பார்த்தான் மகிழ்வுடனும் இளமையாகவும் இருப்பதுபோல. அவன் கிடார் வாசித்துக் கொண்டிருந்தபோது அந்த சத்திரத்தின் தாழ்வாரத்தில் கைது செய்யப்பட்டதை நினைவு கூர்ந்தான். எப்படி சுதந்திரமாக இருந்தான் என்றும் நினைத்துப் பார்த்தான். அவனுடைய மனதில் காட்சிகள் ஓடின. அவன் எப்படி அதிகாரிகளால் இழுத்து வரப்பட்டான், சாட்டையடி, சுற்றிலும் இருந்த மக்கள், சங்கிலி, குற்றவாளிகள் இந்த இருபத்தி ஆறு ஆண்டு சிறை வாழ்க்கை, முன்னாலேயே அவன் அடைந்த முதுமை என்று எல்லாம் நினைவுக்கு வந்தன. இந்த நினைவுகள் அவனை பாதித்து எதிர்மறைசிந்தையுடன் அப்போதே தற்கொலை செய்து கொள்ளத் தயாரானான்.

“இதெல்லாம் வில்லன்கள் தான் செய்வார்கள்!” என்று ஆக்சியனோவ் நினைத்தான். மாக்கர் செமெனோயெவிச்சின் மீதான அவனுடைய கோபம் அதிகரித்தது; வஞ்சம் தீர்த்துக் கொள்ள தோன்றியது; இதற்காகவே தான் இன்னும் உயிரோடு இருந்தது போலிருந்தது. இரவு முழுக்க திரும்பத் திரும்ப பிரார்த்தனை செய்தான், ஆனால், அமைதியடையவில்லை. காலையிலும் அவன் மாக்கர் செமெனோவிச்சுக்கு அருகில் போகவில்லை, அவனைத் திரும்பியும் பார்க்கவும் இல்லை.

இப்படி இரண்டு வாரங்கள் சென்றன. இரவில் ஆக்சியனோவுக்கு உறக்கம் இல்லை, என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் துயரமாக இருந்தது.

ஒரு இரவில் அவன் சிறையில் நடந்து கொண்டிருந்தபோது சிறைக்கைதிகள் தூங்கும் இடத்தின் ஒரு பகுதியிலிருந்து கீழே தரையில் உருள்வது போன்று வருவதை கவனித்தான். நின்று அது என்ன என்று பார்த்தான். சட்டென்று மாக்கர் அந்த இடத்தின் அடியிலிருந்து வந்து, ஆக்சியனோவைப் பார்த்ததும் பயந்த முகத்துடன் இருந்தான். ஆக்சியனோவ் அவனைப் பார்க்காததுபோல கடந்து சென்றான். ஆனால், மாக்கர் அவனுடைய கையைப் பிடித்து இழுத்து, சுவரில் ஒரு பொந்து தோண்டி இருப்பதாகவும், உயரமான பூட்ஸில் மண்ணை வைத்து ஒவ்வொரு நாளும் கைதிகள் வேலைக்குப் போனதும் சாலையில் போய் கொட்டிவிடுவதாகவும் சொன்னான்.

“கிழவா. நீ அமைதியாகப் போய் விடு. நீ ஏதாவது உளறினால், அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள், ஆனால் நான் முதலில் உன்னைக் கொன்று விடுவேன்,” என்றான்.

தன்னுடைய எதிரியைப் பார்த்ததும் ஆக்சியனோவுக்கு கோபத்தில் உடல் நடுங்கியது. அவனுடைய கையை உதறிவிட்டு, “எனக்கு தப்பிக்க ஆசையில்லை, உனக்கு என்னைக் கொல்ல வேண்டிய தேவை இல்லை, நீ எப்போதோ என்னைக் கொன்று விட்டாய்! நான் ஒண்ணு சொல்றேன் – நான் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் வழி நடத்துவார்,” என்றான்.

மறுநாள், குற்றாவாளிகள் வேலை செய்யப் போனபோது, சிப்பாய்கள் யாரோ மண்ணை பூட்ஸில் எடுத்துப் போனதை கவனித்து விட்டனர். சிறை முழுக்க தேடுதல் நடக்க, அந்த தோண்டப்பட்ட பொந்து கண்டுபிடிக்கப் பட்டது. கவர்னர் வந்து யார் பொந்தை தோண்டினார் என்று கண்டுபிடிக்க எல்லா சிறைக்கைதிகளிடமும் கேள்வி கேட்டார். யாருக்கும் எதுவும் தெரியவில்லை. தெரிந்தவர்களும்கூட அடித்தே கொன்றுவிடுவார்கள் என்பதால் மாக்கரைக் காட்டிக் கொடுக்கவில்லை. கடைசியில் கவர்னர் ஆக்சியனோவைப் பார்த்து அவன்தான் நேர்மையான மனிதன் என்பதால் அவனிடம், “நீ உண்மையானவன். கடவுளுக்கு முன்னால் கேட்கிறேன், பொந்தை யார் தோண்டினார்கள், சொல்?” என்றார்.

மாக்கர் செமெனொவிச் எதுவும் தெரியாததுபோல ஆக்சியனோவைப் பார்க்காமல் கவர்னரைப் பார்த்தபடி நின்றிருந்தான். ஆக்சியனோவின் உதடுகளும் கைகளும் நடுங்கின, நீண்ட நேரம் வரையில் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ‘என் வாழ்க்கையை அழித்தவனைப் பற்றி நான் ஏன் சொல்ல வேண்டும்? அவனே நான் பட்ட கஷ்டத்துக்கு அனுபவிக்கட்டும். நான் சொன்னேனென்றால், அவன் உயிரை அடித்தே எடுத்து விடுவார்கள், நான் தவறாகக் கூட அவன் மீது சந்தேகப் பட்டிருக்கலாம். இதனால் எனக்கென்ன நன்மை?’ என்று அவன் நினைத்தான்.

“நல்லது முதியவரே. உண்மையைச் சொல். யார் இந்த சுவரில் தோண்டியது?” என்று கவர்னர் மறுபடியும் கேட்டார்.

ஆக்சியனோவ் மாக்கரைப் பார்த்து விட்டு, “நான் எதுவும் சொல்ல முடியாது மேன்மை பொருந்தியவரே. நான் சொல்ல வேண்டுமென்று கடவுள் விரும்பவில்லை. நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். நான் உங்கள் கைகளில்தான் இருக்கிறேன்.”

கவர்னர் எவ்வளவு முயன்றும் ஆக்சியனோவ் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. அதனால் அந்த விஷயம் அத்தோடு முடிந்தது.

அன்று இரவு ஆக்சியனோவ் படுக்கையில் படுத்து அப்போதுதான் அரைத்தூக்கத்தில் ஆழ்ந்த போது யாரோ அருகில் வந்து அமைதியாக படுக்கையில் அமர்ந்தது போலிருந்தது. இருளில் உற்றுப் பார்த்தபோது மாக்கர் இருப்பது அடையாளம் தெரிந்தது.

“உனக்கு என்னிடமிருந்து இன்னும் என்ன வேண்டும். ஏன் இங்கே வந்தாய்?” என்றான் ஆக்சியனோவ்.

மாக்கர் செமெனோவிச் மௌனமாக இருந்தான். அதனால் ஆக்சியனோவ் எழுந்து உட்கார்ந்து, “உனக்கு என்ன வேண்டும்? போய்விடு. இல்லை என்றால் காவலாளியைக் கூப்பிடுவேன்,” என்றான்.

மாக்கர் செமெனோவிச் ஆக்சியனோவை நோக்கிக் குனிந்து மெதுவாக, “இவான் டிமிட்ரிச், என்னை மன்னித்து விடுங்கள்!” என்றான்.

“எதற்கு?” என்று ஆக்சியனோவ் கேட்டான்.

“நான் தான் அந்த வியாபாரியைக் கொன்று விட்டு கத்தியை உங்களுடைய பொருள்களுடன் வைத்தேன். உங்களைக்கூட கொல்ல நினைத்தேன். ஆனால், வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அதனால், உங்களுடைய பையில் கத்தியை ஒளித்து வைத்துவிட்டு ஜன்னல் வழியாக தப்பித்துப் போய் விட்டேன்.”

ஆக்சியனோவ் என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியாக இருந்தான். மாக்கர் செமெனோவிச் தவழ்ந்து வந்தான்.  “இமான் டிமிட்ரிச் என்னை மன்னித்து விடுங்கள். கடவுளின் கருணையின் பேரில் கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள்! இப்போது குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன். நான்தான் அந்த வியாபாரியைக் கொன்றேன், நீங்கள் விடுதலையாகி உங்களுடைய குடும்பத்தினரிடம் போகலாம்.”

“இது சொல்வதற்கு உனக்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இருபத்தி ஆறு வருடங்கள் நான் உன்னால் கஷ்டப்பட்டேன். இப்போது நான் எங்கே போக முடியும்? என் மனைவி இறந்துவிட்டாள். என் குழந்தைகள்  என்னை மறந்து விட்டனர். எனக்குப் போக இடமில்லை,” என்றான் ஆக்சியனோவ்.

மாக்கர் எழுந்திருக்கவில்லை, ஆனால், தலையை தரையில் முட்டிக் கொண்டான். “இவான் டிமிட்ரிச் என்னை மன்னியுங்கள்!” என்று அவன் அழுதான். “அவர்கள் சாட்டையினால் அடித்த போது இப்போது உங்களைப் பார்க்கும் போது இருப்பதை விட வலி அதிகமில்லை… உங்களுக்கு என் மேல் இரக்கம் இருந்து என்னிடம் சொல்லாமல் இருந்தால், கடவுளின் பெயரில் கேட்கிறேன் என்னை மன்னித்து விடுங்கள். நான் கெட்டவன்,” என்று அழ ஆரம்பித்தான்.

அவனின் தேம்பலைக் கேட்ட ஆக்சியனோவும் விம்மி அழ ஆரம்பித்தான்.  

“கடவுள் உன்னை மன்னிப்பார்,” என்றான்.  “நான் உன்னை விட நூறு மடங்கு கெட்டவனாக இருந்திருக்கலாம்.”

இதைச் சொன்னதும் அவனுடைய இதயம் ஒளிர்ந்து குடும்பத்தைப் பற்றிய தேடல் விலகியது. அவனுக்கு இனி இந்தச் சிறையை விட்டுப் போவதற்கான எந்தத் தேடலும் இல்லை. அவனுடைய கடைசி நிமிடங்களுக்கான நம்பிக்கை மட்டுமே இருந்தது.

ஆக்சியனோவ் சொன்னதைக் கேட்காமல், மாக்கர் செமெனோவிச் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டான். ஆனால், விடுதலைக்கான ஆணை வந்த போது, ஆக்சியனோவ் ஏற்கனவே இறந்திருந்தான்.

மூலக் கதை : லியோ டால்ஸ்டாய், ‘God sees the truth, but waits.’

‘கடவுள் உண்மையைக் காண்கிறார், ஆனால் காத்திருக்கிறார்’ என்பது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் சிறுகதையாகும், இது முதன்முதலில் 1872ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. கொலைக் குற்றம் சாட்டப்பட்டு சைபீரியாவில் சிறைக்கு அனுப்பப்பட்ட ஒரு மனிதனைப் பற்றிய கதை இது. மன்னிப்பு, நீதி, நம்பிக்கை ஆகிய கருப்பொருள்களை இந்தக் கதை ஆராய்கிறது.

படைப்பாளர்

மதுமிதா

மதுமிதா என்னும் பெயரில் எழுதிவரும் கவிதாயினி மதுமிதா ராஜபாளையத்தில் வசிக்கிறார். சுதந்திரப் போராட்ட தியாகி, காந்தி அரங்கசாமிராஜா அவர்களின் பேத்தி.

எம்.ஏ ஆங்கில இலக்கியம், டிப்ளமோ இன் போர்ட்போலியோ மேனேஜ்மெண்ட் ஆகியவை கற்றவர். தமிழில் பல நூல்கள் படைத்துள்ள இவரின் தாய்மொழி, தெலுங்கு. ஹிந்தி பிரவீன்உத்தரார்த் வரையும், சமஸ்கிருதத்தில் பட்டயப்படிப்பும் படித்துள்ளார். முப்பதுக்கும் அதிக நூல்களை உருவாக்கியுள்ளார். இருபதுக்கும் அதிக விருதுகளை வென்றிருக்கிறார்.