கடந்த வாரம் சென்ற பயணத்தில் மலையோர கிராமத்தில், எஸ்டேட்டில் வேலை செய்யும் பெண்மணி ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் வீட்டு விஷயங்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தார். “எனக்கு நாலு குழந்தைகள், மூத்தது பொண்ணு, அடுத்தது பையன், அப்புறம் ரெண்டு பொண்ணுங்க. ரெண்டோட நிறுத்திக்கிறேன்னு சொன்னா எங்க பாட்டி விடவே மாட்டேன்னுச்சு. அவங்க குழந்தைங்க ரெண்டு செத்துப் போயி, ஒண்ணுதான் தங்கிச்சாம். ஒத்த புள்ளையை வச்சுக்கிட்டு வயசான காலத்துல நான் கஷ்டப்படுற மாதிரி நீயும்படக் கூடாதுன்னு ஏதேதோ சொல்லி, நாலு குழந்தைங்க ஆயிடுச்சுங்க. இனி பெத்தா வளக்க முடியாதுன்னு, நான்தான் கவர்மெண்ட் ஆசுபத்திரியில குடும்பக் கட்டுப்பாடு ஆபரேசன் பண்ணிக்கிட்டேன்”
“அப்படியா, ஏன் உங்க வீட்டுக்காரரைப் பண்ணிக்கச் சொல்லலையா?” என்று கேட்டேன்.
“நீங்க வேற, என்னையே ஆபரேசன் செஞ்சுக்க வேண்டாம்னு சொல்ற வீட்டுல, அவர் கிட்ட போயி என்ன பேசறது? என்னோட பிடிவாதத்தாலதான் நானே போயி ஆபரேசன் பண்ணிக்கிட்டேன். அதுக்கப்புறம் உடம்பு முன்ன மாதிரி இல்லங்க. சத்தே போயிட்ட மாதிரி இருக்கு, தொடர்ச்சியா வேலை செஞ்சா வயித்துல இழுத்துப்புடிக்குது, நரம்பெல்லாம் இழுக்கற மாதிரி வலிக்குது, வெயிட் தூக்க முடியல, கஷ்டமா இருக்கு… ” என்று வருத்தப்பட்டார்.
அந்தப் பெண்மணிக்கு மட்டுமல்ல, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்ட பெரும்பாலான பெண்களின் நிலை இதுதான். ஆனாலும், இந்த ஆணாதிக்க சமுதாயம் பெண்களைத்தான் குடும்பக் கட்டுப்பாடு செய்யச் சொல்லி நேரடியாகவும் மறைமுகமாகவும் வலியுறுத்துகிறது.
2017-2018ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைகளில் 93.1 சதவீதம் பெண்கள் செய்து கொண்டதுதான் என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2,55,858 பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்திருக்க, ஆண்களின் எண்ணிக்கையோ 2,401 மட்டுமே. இரண்டரை லட்சம் எங்கே, இரண்டாயிரத்து நானுறு எங்கே?
பெண் உடல் என்பது அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை. பெண் எப்போது குழந்தை பெற வேண்டும் என்பதைக் குடும்பமும் சுற்றமும்தான் தீர்மானிக்கின்றன. இரண்டு குழந்தைகள் ஆனபிறகு, இனி குழந்தைகள் வேண்டாம் என்று கணவனும் மனைவியும் முடிவெடுக்கும் போதும், குடும்பக் கட்டுப்பாட்டை மனைவிதான் செய்து கொள்ளவேண்டும் என்பது இங்கு எழுதப்படாத விதியாக இருக்கிறது. பெரும்பாலும் இரண்டாவது குழந்தை பெற்றெடுக்கும் போதே, அதனுடன் சேர்த்து பெண்ணுக்குக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையைச் செய்துவிடுவதும் இங்கு வழக்கமாக இருக்கிறது. இதில் அந்தப் பெண்ணின் விருப்பத்தை, வசதியை யாரும் கேட்பதில்லை. பெண்ணுடல் ’take it for granted’ ஆக உள்ளது. மட்டுமல்ல, ஏன் கணவன் செய்துகொள்ளக் கூடாது என்றும் யாரும் கேள்வி கேட்பதில்லை. குறிப்பாக, அந்தப் பெண் கேட்பதே இல்லை.
பெண்ணைவிட ஆணுக்கு, வாசக்டமி என்ற இந்தச் சிகிச்சை முறை மிக எளிமையானது. ஆணுக்கு, லோகல் அனஸ்தீஸியா எனப்படும் சிகிச்சைக்கான குறிப்பிட்ட இடத்தை மட்டும் மரத்துப் போகச் செய்து, 15 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். வலியிருக்காது. அன்றே மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்து ஒரு நாள் ஓய்வுக்குப் பிறகு வழக்கமான பணிகளைத் தொடரலாம். ஆனால், பெண்ணுக்கு செய்யப்படும் ’டியூபெக்டமி’ எனப்படும் குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சைமுறை சிக்கலானது. ஜெனரல் அனஸ்தீஸியா எனப்படும் முழு மயக்கநிலைக்கு பெண்ணை உட்படுத்தி செய்யப்படுவது. மருத்துவமனையில் சில நாட்கள் தங்க வேண்டும். சிகிச்சைக்குப் பிறகு வலியிருக்கும். டியூபெக்டமி செய்து கொண்ட பெண்கள், பக்க விளைவுகள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள்.
ஆண்களுக்கு எளிமையான முறையான வாசக்டமியை விட்டுவிட்டு, ஏன் பெண்களுக்கு சிக்கலான டியூபெக்டமி அதிகமாக செய்யப்படுகிறது? முக்கியமான காரணம் ஆணாதிக்கம்தான். குடும்பத்தின் நலனுக்காகச் செய்தாலும், அது ஆணைப் பாதித்து விடக் கூடாது, அவனைச் சிறிதளவும் கஷ்டப்படுத்தக் கூடாது என்று பொதுப்புத்தி கருதுகிறது. மேலும், வாசக்டமியைக் குறித்து பல தவறான கருத்துகள் இங்கே நிலவுகின்றன. இந்தச் சிகிச்சைக்குப் பிறகு, ஆண்களுக்கு ’ஆண்மை’ குறைந்துவிடும் என்றும், ’வீரியம்’ இருக்காது என்றும், செக்ஸில் செயல்பட முடியாது என்றும், வலு குறைந்துவிடும் என்றும் எண்ணுகிறார்கள். இவை முழுக்க முழுக்க தவறான கருத்துகள். இந்தச் சிகிச்சைக்குப் பிறகு செக்ஸ் மீதான ஆர்வமும் ஆணின் இயக்கமும் குறையாது என்று மருத்துவர்கள் தெளிவாகத் தெரிவிக்கிறார்கள். வாசக்டமி செய்து கொண்ட ஆண்களும் தாங்கள் முன்பு போலவே இருப்பதாகவும், இந்தச் சிகிச்சையால் எந்த மாற்றமும் இல்லை என்றும் உறுதியாகக் கூறுகிறார்கள். ஆனாலும், வாசக்டமி முறை இன்னும் இங்கே பரவலாகச் செய்யப்படுவதில்லை.
வாசக்டமி செய்ய ஆண்கள் தயங்குவதுதான் யதார்த்தமாக இருக்கிறது. ’அவன் சம்பாதிக்கற ஆம்பளை. அவன் உடம்பு நல்லாயிருக்கணும். அவனைப் போயி இதெல்லாம் செய்யச் சொல்லணுமா?’ என்று குடும்பமும் அவனுக்கு ஆதரவாகப் பேசுகிறது. பல இடங்களில் பெண்களே, தன் கணவனுக்கு வேண்டாம் தானே குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையைச் செய்து கொள்கிறேன் என்று முன்வருகிறார்கள். இதற்குக் காரணங்கள்: குடும்பத்தின், கணவனின் வற்புறுத்தல்; வாசக்டமி, டியூபெக்டமி பற்றிய சரியான அறிவியல் புரிதல் இல்லாதது; புரிதல் இருந்தாலும் கணவன் ஒத்துக்கொள்ள மாட்டான் என்று எண்ணிக்கொண்டு, அவனிடம் அதைப் பற்றிய பேச்செடுக்காமல் தானே முன்வருவது; தன் உடலைப் பற்றி அறிவு இல்லாமல், எதுவந்தாலும் தான் ஏற்றுக் கொள்வோம் என்ற தன்-நேசம் இல்லாத ’தியாகத்திருவுரு’ மனப்பான்மை. இதனால் டியூபெக்டமியால் ஏற்படும் வலியையும் பக்க விளைவுகளையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள் நம் பெண்கள். இதில் முற்போக்கு பேசும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
வாசக்டமியைப் பிரபலப்படுத்தவும், இதனைச் செய்துகொள்ளுமாறு ஆண்களை ஊக்கப்படுத்தவும் அரசு தரப்பிலும் போதிய முயற்சிகள் இல்லை. இதனை அரசுகளும் முடுக்கிவிட வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, ஆவணப்பட இயக்குநர் தீபா தன்ராஜ் இயக்கிய ’சம்திங் லைக் எ வார்’ என்ற படத்தைப் பார்த்தது நினைவுக்கு வருகிறது. அதில், அரசின் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தில், பெண்ணின் உடல், அவள் அனுமதியைக் கோராமல், அவள் உரிமையைப் பற்றித் துளிக்கூட கவலைப்படாமல், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கியிருப்பார். படத்தில், லேப்ராஸ்கோபி முறையைப் பயன்படுத்தி எவ்வளவு விரைவாகப் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சையைத் தான் செய்கிறேன் என்று மருத்துவரொருவர் தன் பெருமையைப் பறைசாற்றுவார். அதில் தன் சாதனை எண்ணிக்கையில்தான் அவர் குறியாக இருப்பாரே தவிர, பெண் உடலைப் பற்றிய எந்த உணர்வும் இன்றி அவர்களை ’கேசஸ்’ என்றே விளிப்பார். மனதைக் கனக்கச் செய்த படம் அது. பெண் உடலைப் பற்றிக் குடும்பத்திற்கும் கவலையில்லை, சமுதாயத்திற்கும் கவலையில்லை, அரசுக்கும் கவலையில்லை. அறிவியலும் இவர்களின் ஆணாதிக்கத்திற்குத் துணை போகிறது.
இந்த நிலையில், பெண்தான் வாசக்டமி பற்றித் தன் கணவனிடம் எடுத்துக் கூறி அவனைச் செய்யச் சொல்ல வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டைப் பற்றி இருவருமோ குடும்பமோ முடிவெடுக்கும் போது வாசக்டமி பற்றிப் புரிய வைக்க வேண்டிய முதல் பொறுப்பை, பெண்கள் கையில் எடுக்க வேண்டும். நம் உடலை நாம்தான் காக்க வேண்டும் பெண்களே, தேவையில்லாமல் டியூபெக்டமி செய்துகொண்டு உங்கள் உடலைச் சிரமப்படுத்தாதீர்கள்.
அன்புத் தோழியரே, நீங்கள் வாசக்டமி முறையையும் இதன் எளிமைத் தன்மையையும் பற்றி வாசித்து, எழும் சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்து முழுதாக உள்வாங்கிக் கொள்ளுங்கள். பிறகு கணவனுக்குப் புரிய வையுங்கள். கருவுற்று, நீங்கள் குழந்தை பெறுவதைவிட ஒன்றும் கடினமானதில்லை வாசக்டமி. உங்கள் கணவனுக்கு, அவர் உடலுக்கு இந்தச் சிகிச்சையால் ஒன்றும் பாதிப்பில்லை என்று உணர்த்துங்கள். அவரைச் செய்யச் சொல்லுங்கள்.
அன்புத் தோழர்களே, வாசக்டமி பற்றி நீங்கள் முழுதாகத் தெரிந்து கொண்டு, ’நான் வாசக்டமி செய்துகொள்கிறேன்’ என்று முன்வாருங்கள். மனைவியை, அவள் உடலைப் பரிவோடு பாருங்கள். தேவையற்ற கற்பிதங்களையும் தவறான கருத்துகளையும் ஒதுக்கிவிட்டு, அறிவியலையும், மருத்துவத்தையும் நம்புங்கள். மனைவியை நேசிக்கும் ஆண்கள் வாசக்டமியை வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள்.
இனியாவது பெண்ணுடலை, அவள் உடல்சார் உரிமைகளை முன்னிலைப்படுத்துவோம். அறிவியலின் துணையோடு, அடுத்த தலைமுறைக்கான ஆரோக்கியமான முன்மாதிரிகளை உருவாக்குவோம் தோழர்களே!
படைப்பாளர்:
கீதா இளங்கோவன்
‘மாதவிடாய்’, ‘ஜாதிகள் இருக்கேடி பாப்பா’ போன்ற பெண்களின் களத்தில் ஆழ அகலத்தை வெளிக்கொணரும் ஆவணப் படங்களை இயக்கியிருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்; சிறந்த பெண்ணிய சிந்தனையாளர். அரசுப் பணியிலிருக்கும் தோழர் கீதா, சமூக வலைதளங்களிலும் தன் காத்திரமான ஆக்கப்பூர்வமான எழுத்தால் சீர்திருத்த சிந்தனைகளை தொடர்ந்து விதைத்து வருகிறார்.
பெண்கள் உடல் மீதான உரிமை மீரல்களை கட்டுரை எடுத்துரைத்திருப்பது மிக சிறப்பு தோழர் Geeta Ilangovan . . ❤️
இதையே தான் நான் இந்தியாவில் இருக்கும் சாமியாருகளுக்கு செய்ய வேண்டும் என்று சொல்லுகறேன் ஒரு பய கேக்க மாட்டேங்குறான்
//பெண்கள் உடல் மீதான உரிமை மீரல்களை கட்டுரை எடுத்துரைத்திருப்பது மிக சிறப்பு தோழர்//
அன்பும் நன்றியும் தோழர் !