விநாயகர் சதுர்த்தி நெருங்கிவிட்டது. ஆங்காங்கே பிரம்மாண்டமான பிள்ளையார் சிலைகள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. விதவிதமான உருவங்களில் பிள்ளையார்களைப் பார்க்கும்போது கார்ட்டூன் கேரக்டர்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

பண்டிகைகள் என்றாலே பெண்களுக்கு வழக்கத்தைவிட இரண்டு மடங்கு வேலை கொண்ட நாளாக அமைந்துவிடும். என் பள்ளிக் காலங்களில் விநாயகர் சதுர்த்தி இன்றைக்கு இருப்பது போல ஆர்ப்பாட்டமான பண்டிகையாக இருக்கவில்லை. சதுர்த்திக்கு முதல் நாள் வீட்டைச் சுத்தம் செய்வார்கள். தாத்தோவுடனோ அப்பாவுடனோ சென்று, களிமண் பிள்ளையாரை வாங்குவோம். எங்களைப் போல பலரும் குழந்தைகளோடு வந்துதான் பிள்ளையார் வாங்குவார்கள். சின்ன சின்ன சிலைகளில் குழந்தைகள் எதைக் கேட்கிறோமோ அதை வாங்கிவிடுவார்கள். அதைப் பத்திரமாகவும் பக்தியோடும் எடுத்துக்கொண்டு, தேங்காய், பழம், அவல், பொரி, கொழுக்கட்டை செய்வதற்குத் தேவையான அரிசி மாவு, வெல்லம், வாழைக் கன்று எல்லாவற்றையும் வாங்கிகொண்டு வீட்டுக்கு வருவோம். பிள்ளையாரை வைத்து, பிள்ளையாருக்கு இரண்டு புறமும் வாழைக் கன்றுகளை வைத்துவிடுவோம். மறுநாள் பிடிக் கொழுக்கட்டை, பூரணக் கொழுக்கட்டைகளை அம்மா செய்வார். பூரணம் தயாரானதுமே என் அண்ணன் சாப்பிடக் கேட்பான். சாமிக்குப் படைக்காமல் சாப்பிடக் கூடாது என்பார் எங்கள் அப்பத்தா. ஆனால், எங்கள் தாத்தாவோ, குழந்தைகள் தெய்வத்துக்குச் சமம். அவர்களுக்குக் கொடுப்பதால் ஒன்றும் ஆகிவிடாது என்பார். அதனால் எல்லாருக்கும் பூரணம் கிடைக்கும்.

கொழுக்கட்டை, அவல், பொரி, பழம் எல்லாம் வைத்துப் பூஜை செய்வார்கள். தாத்தா தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி, தீபாராதனைக் காட்டுவார். அதன் பிறகு கொழுக்கட்டைகளைச் சாப்பிடக் கொடுப்பார்கள். அந்தக் காலத்தில் நொறுக்குத் தீனிகள் அதிகம் இல்லை என்பதால், கொழுக்கட்டைகளை எல்லாரும் விரும்பிச் சாப்பிடுவோம்.

மறுநாள் பிள்ளையார் சிலைகளைக் கொண்டு போய் நீர்நிலைகளில் கரைத்துவிட்டு வருவார்கள். பிள்ளையாரை ஏன் கரைக்கிறார்கள் என்று தாத்தாவிடம் கேட்டேன். ’கண்மாய், ஊரணி போன்ற நீர்நிலைகளில் பங்குனி, சித்திரை மாதங்களில் தண்ணீர் வற்றத் தொடங்கும். அப்போது மையப் பகுதியில் இருக்கும் களிமண்ணை எடுத்துக்கொண்டு வருவார்கள். அவர்கள் களிமண்

எடுப்பதால், நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, ஆழப்படுத்தப்படும். சாமி கும்பிட்ட பிறகு பிள்ளையார் சிலைகளை நீர்நிலைகளை ஒட்டியுள்ள கரைகளின் மீது கரைக்கும்போது, கரை பலமாகும். மண்பாண்டம் செய்பவர்களுக்கும் வருமானம் கிடைக்கும்’ என்றார்.          அந்த நாள் விநாயகர் சதுர்த்தியில் ஆர்ப்பாட்டமும் இல்லை, ஆடம்பரமும் இல்லை. காதைப் பதம் பார்க்கும் ஸ்பீக்கர்கள் இல்லை. விநாயகருக்கு வண்ணச் சாயம் ஏற்றுவதும் இல்லை. யாருக்கும் எந்தத் தொந்தரவும் இல்லாமல், மகிழ்ச்சி ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட பண்டிகையாக அப்போது இது இருந்தது.

இன்றோ ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸில் பிரம்மாண்டமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன. அவற்றின் மீது ரசாயனக் கலவைகளால் செய்யப்பட்ட வர்ணங்கள் பூசப்படுகின்றன. மதவாதத்தைத் தூண்டிவிடும் நோக்கோடு சில இந்துத்வ அமைப்புகள் ஒவ்வோர் ஊரிலும் ஆங்காங்கே சிலைகளை நிறுத்திவிடுகிறார்கள். அந்தந்தப் பகுதி மக்கள் சிலைகளுக்குப் பூஜை செய்து, கொண்டாடுகிறார்கள். மூன்று முதல் பத்து நாட்கள் வரை பூஜைகள் செய்யப்படுகின்றன. பிறகு அந்தச் சிலைகளைப் பெரிய பெரிய வண்டிகளில் ஏற்றி, ஊர்வலமாக எடுத்துச் சென்று, நீர்நிலைகளுக்குக் கொண்டு செல்கிறார்கள். பெரிய சிலைகளை அப்படியே போட்டால் கரையாது என்பதால் கைகள், கால்கள், தலை எனத் தனித்தனியாக உடைத்து வீசுவதைப் பார்க்கும்போது இவர்களின் பக்தியே கேள்விக்குறியாகிவிடுகிறது. ரசாயனங்கள் நீர்நிலைகளில் கலப்பதால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.

பக்தி என்பது தனிப்பட்ட விஷயம். அந்தப் பக்தியை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்காக இவர்கள் செய்யும் ஒவ்வோரு செயலும் இயற்கைக்குச் செய்யும் கேடு. நீர்நிலைகளை மாசுபடுத்தாமல், சுற்றுச்சூழலைக் கெடுக்காமல், பிறருக்கு அச்சத்தைக் கொடுக்காமல் ஒரு விழாவைக் கொண்டாடுவதில்தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது? பக்தி என்கிற பெயரில் பரப்பப்படும் வெறுப்புணர்வும் மதவாதமும் பண்டிகையை அச்சத்துடனே பார்க்க வைக்கிறது.  

படைப்பாளர்:

சிவசங்கரி மீனா

தீவிர வாசிப்பாளர். ஏராளமான நூல்களை வைத்திருக்கிறார். ஹெர் ஸ்டோரிஸ் ஆடியோ நூலுக்குப் புத்தகங்களை வாசிக்கிறார். மதுரையில் வசிக்கிறார்.