அன்னையர் தின வாழ்த்து முதல் ஆட்சி மாற்றம் வரைக்கும் இன்று சோஷியல் மீடியாக்களின் பங்கு மிக முக்கியமானதாகவே மாறி விட்டது. நாம் மனதில் நினைப்பதை உலகம் அறியச் செய்ய ஒருநொடி போதும் என்கிற எளிமையான போக்கு இந்த அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. டிவிட்டரில் வெளியுறவுத்துறை அமைச்சரை டேக் செய்து உதவி கோருவதிலிருந்து, உள்ளூரில் சாக்கடையை சுத்தம் செய்வதற்கு கவுன்சிலரிடம் உதவி கேட்பதுவரை ஒரு சொடுக்கில் உலகத்தை நம் பக்கம் திருப்பும் மாயத்தை நிகழ்த்துகிறது இந்த இணைய உலகம்.
கடந்த ஒரு வார காலமாக பேஸ்புக்கில் அதிக நபர்களால் பேசப்பட்ட ஒரு செயலி, “கிளப்ஹவுஸ் (clubhouse)”. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புதிய செயலி வரும்போது அதன்மேல் ஒரு ஈர்ப்பு மக்களுக்கு வந்துவிடுவது இயல்பு. அதே ஈர்ப்புடன் அந்த செயலியைத் தரவிரக்கம் செய்த போது தான் அதன் ஐகானில் (Icon) ஒரு பெண்ணின் உருவத்தைப் பார்க்க நேர்ந்தது. இதுவரை ஆயிரம் செயலிகளுக்கு மேல் தரவிரக்கம் செய்தும், எப்பொழுதும் நான் கண்டிராத ஒரு புதிய வடிவிலான ஐகானைப் பார்த்ததும், அதிலும் குறிப்பாக ஒரு பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அது யார் என்று எனக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
கிளப்ஹவுஸ் 2020 மார்ச்சில் தொடங்கப்பட்டது முதல், பல பிரபல கலைஞர்கள் அதன் ஐகான்களாக வலம் வந்திருக்கிறார்கள். நடைமுறையில் உள்ள பல செயலிகள் குரல் பதிவை ஒரு தேர்வாகக்கொடுத்தாலும், பிரத்தியேகமாக குரல் பதிவுக்கென நடைமுறையில் எந்த செயலியும் இல்லாததால், கிளப்ஹவுஸ் நிறைய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் முக்கிய அம்சம் பெரும் பேச்சாளர்களையும், பிரபலங்களையும் கூட நாம் நேரலையாக கேட்க முடியும், அவர்களுடன் உரையாட முடியுமென்பதால், கிட்டத்தட்ட ஒரு பிரம்மாண்ட மேடை போன்ற தோற்றத்தையே தருகிறது.
கிளப் ஹவுசின் ஐகானாக சில வாரங்களுக்கு ஒரு புகழ்பெற்ற கலைஞரின் முகம் கருப்பு வெள்ளையில் அலங்கரிக்கும். அப்படி இன்னும் சில வாரங்களுக்கு பதின்மூன்று மில்லியனுக்கும் மேலான ஸ்மார்ட் அலைபேசிகளில் கிளப்ஹவுசின் எட்டாவது ஐகானாக வலம் வரவிருப்பவர் டிரூ கட்டோகா (Drue Kataoka). இவர் ஒரு ஆசிய-அமெரிக்கர். பல வருடங்களாக விஷுவல் ஆர்ட்டிஸ்ட்டாக பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ஐந்து கண்டங்களிலும், முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் முதல் நிலை கலை வடிவமைப்பாளராக நம்மை வியக்க வைக்கிறார். சமூக செயற்பாட்டாளராகவும் பல தளங்களில் செயல்படுகிறார்.
நான்கு தலைமுறைகளுக்கும் மேலான தனது மூதாதையர்களின் ஜீன்களை தன்னகத்தே கொண்டுள்ள கட்டோகா, ஜப்பானின் டோக்கியோவை பூர்வீகமாக கொண்டவர். பதினாறாம் நூற்றாண்டில் ஜப்பான் வரலாற்றில் மிக முக்கியமான போராகக் கருதப்பட்ட செகிகஹாரா போரில் டகுகாவா (takugawa) என்ற படையும், டொயோடொமி (Toyotomi) என்ற படையும் எதிரெதிராகப் போர் புரிந்தன. அதில் கட்டோகாவின் மூதாதையர்கள் டொயோடொமி (Toyotomi) பிரிவில் சேர்ந்து போர் புரிந்தனர். போரில் அவர்கள் தோல்வி அடைந்ததும் நடந்த ஆட்சி மாற்றங்களுக்குப் பிறகு, ஜப்பானின் மையப்பகுதியில் இருக்கும் கட்டோகா என்ற மலைக்கிராமத்தில் குடியேறிவிடுகிறார்கள்.
டகுகாவா (Takugawa) ஆட்சி சுமார் பதினெட்டாம் நூற்றாண்டு வரை நீடிக்கின்றது. பின்னர் அமெரிக்கக் கடற்படைகளால் மிகப்பெரும் சீரழிவிற்கு உள்ளான ஜப்பான், மீண்டும் பல அரசியல் மாற்றங்கள் காண டொயோடொமி (Toyotomi) படைகள் பெரும் உதவி புரிந்தன. இன்றைய நவீன டோக்கியோ உருவாக இந்தப் படைகள் பெரிதும் உதவின. அந்த வழியில் கட்டோகாவின் மூதாதையர்கள் டகுகாவா (Takugawa) ஆட்சியாளர்களைப் பழிதீர்த்தார்கள் என்று அவரின் வலைத்தளத்தில் கட்டோகா விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்சமயம் அமெரிக்காவில் அதிகம் தலையெடுத்திருக்கும் ஆசிய இனவெறுப்பு பிரச்னையைக் கையில் எடுத்ததுதான் கட்டோகா கிளப்ஹவுஸ் ஐகானாக தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் . சமீபமாக ஆசிய-அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் ஒஹையோவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தனது மேல்சட்டையைக் கழற்றி தனது போர்த்தழும்புகளைக் காட்டி, “எனது தேசப்பற்றை நிரூபிக்க இது போதாதா?” என்று ஆசிய வெறுப்புக்கு எதிராகப் பேசியது உலக மக்கள் கவனம் பெற்றது. இந்தச் சூழ்நிலையில் கட்டோகா தன் கிளப்ஹவுஸ் கணக்கு மூலம் அதிலுள்ளள 7,00,000 மேலான செயலி பயன்பாட்டாளர்களைத் திரட்டி ஆசிய வெறுப்பு, வளர்ந்து வரும் இனவெறி மீதான விவாதங்களை நிகழ்த்துகிறார்.
#StopAsianHate என்ற ஹேஷ்டேக் வழியாக அது பல கோடி மக்களை சென்றடைகின்றது. அதன் வழியாக சுமார் 1,00,000 டாலருக்கும் அதிகமான நிதியை திரட்டுகிறார். அதோடு நில்லாமல் இந்த செயலியின் வழியாகவே கொடையாளர்கள் நிதி அளிக்கும் வசதியும் வைக்குமாறு கோரிக்கை முன்வைத்து அதிலும் வெற்றிகாண்கிறார்.
அகில உலக விண்வெளி மையத்தில் அவருடைய “First Zero Gravity Art Exhibit” காட்சிப்படுத்தப்பட்டது இன்னும் கூடுதல் சிறப்பு. தனது “Rotary Drue Art Scholarship” வழியாக பல இளம் தலைமுறையினருக்கு உதவித்தொகைகள் வழங்கி வருகிறார். டோக்கியோ, நியூயார்க், பெய்ஜிங், அபுதாபி உள்ளிட்ட பல நகரங்களின் கலை அமைப்புகள் மற்றும் அரசு சார்ந்த பல கருத்தரங்கங்களுக்கு பேச்சாளராகச் சென்றுள்ளார். இவரது படைப்புகள் புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ், சி.என்.என், ஃபாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளன. புல்லாங்குழல் வாசிப்பதில் முறையாக பயிற்சி பெற்றுள்ளார். பொதுச் சேவைக்காக சில விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரின் கலைப்படைப்புகள் பெரும்பாலும் விர்ச்சுவல் ரியாலிட்டி(VR- Virtual Reality), EEG (Electroencephalogram) என்று சொல்லப்படுகின்ற மூளை நரம்புகளை தொழில்நுட்பத்துடன் தொடர்புபடுத்தி வரக்கூடிய கலைச் சிற்பங்களாக பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவரின் படைப்பு ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்ததாகவே உள்ளது.
“மனிதன் ஒரு நாணல், இயற்கையில் மிகவும் பலவீனமானவன்; ஆனால் அவன் ஒரு சிந்தனை நாணல். அவனை நசுக்க முழு பிரபஞ்சமும் தன்னைக் கையாளத் தேவையில்லை. ஒரு நீராவி, ஒரு சொட்டு நீர் அவனைக் கொல்லப் போதுமானது. பிரபஞ்சத்திற்கு இது எதுவும் தெரியாது. நம்முடைய கண்ணியம் அனைத்தும் நம் சிந்தனையில் உள்ளது. அதை நாம் உயர்த்திக் கொள்ள வேண்டும், நம்மால் நிரப்பவே முடியாத இடத்தினாலும் நேரத்தினாலும் அல்ல. ஆகவே, நன்றாக சிந்திக்க முயற்சிப்போம்; இது ஒழுக்கத்தின் கொள்கை”, என்ற பிரெஞ்ச் கணிதமேதையும், தத்துவஞானியுமான பாஸ்கல் (Pascal) அவர்களின் மனித மனம் குறித்த இந்த தத்துவத்தை உத்வேகமாக கொண்டு படைக்கப்பட்டதே இந்த பாஸ்கல் மரம்.
உயிருள்ள சிறிய மரம் ஒன்று காந்தப்புலங்களால் சூழப்பட்ட ஒரு சிறிய கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பட்டிருக்கிறது. முழுவதுமாக மின்சாரத்தில் இயங்கும் இதற்கு மின்அழுத்தம் (Voltage) மனித மூளையிலிருந்து வரும் எண்ணங்களின் வழியாகக் கிடைக்கிறது. மின்அழுத்தத்தின் அளவைப்பொறுத்து அச்சிறிய மரம் பச்சையம் உற்பத்தி செய்து உயிருடன் இருக்கிறது. ஒரே நேரத்தில் ஐந்து பேர் தங்களின் EEG அலைகளை அதனுடன் இணைக்கலாம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட EEG அலைகளுடன் சேர்ந்து ஒளிபுகும் (Transparent) தன்மையில் இருந்து ஒளிபுகா (Opaque) தன்மைக்கு உருமாற்றம் செய்து கொள்கிறது அந்த கண்ணாடிப்பேழை.
உலகெங்கிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியலாளர்கள், சிந்தனையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழிலதிபர்கள் என அனைவரது எண்ணங்களும் (EEG waves) ஒன்று சேர்க்கப்பட்டு இந்த மரத்தின் ஆயுள் வளர்ந்து கொண்டு இருக்கிறது. கணிப்பொறித்துறைக்கும் பின் வந்த செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) துறைக்கும் பெரிதும் உதவிய பாஸ்கல் அவர்களின் எண்ணத்திற்கு மரியாதை செய்யும் விதமாக, கட்டோகா இதை படைத்திருக்கிறார்.
தொழில்நுட்ப உதவியுடன் மனதின் ஆற்றலைப் பெருக்கும் ஒரு கலைப்படைப்பு கணிப்பொறி மாணவியான என்னைக் கவர்ந்ததில் வியப்பேதும் இல்லை தானே? எண்ணங்களே வாழ்க்கை. நல்ல எண்ணங்கள் கொள்வோம். அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் துணை கொண்டு வெறுப்பின்றி சமூக ஊடகங்கள் வழியாக உலக மக்களை அன்பு செய்வோம்!
படைப்பாளரின் பிற படைப்புகள்:
படைப்பு:
சாந்தி சண்முகம்
கோவையைச் சேர்ந்த சாந்தி தற்போது துபாயில் வசித்து வருகிறார். கல்லூரியில் துணை விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். பயணங்களிலும், எழுதுவதிலும் ஈடுபாடு கொண்டவர்.
Very interesting article,,,,,