சிங்காரி 1951ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். திரைப்படத்தின் கதை வி.எஸ்.வெங்கடாசலம் என்பவருடையது. டி. ஆர். ரகுநாத் அவர்கள், திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்கள். வசனம் எழுதியவர், V.N. சம்பந்தம். 

திரைப்படத்தை நேஷனல் புரொடக்ஷன் குமரவேல் பிக்சர்ஸ் வெளியிட்டு உள்ளது. சென்னை நியூ டோன் ஸ்டுடியோவில், தொனிப்பதிவு முறையில் தயாரிக்கப் பட்டுள்ளது எனப் போடுகிறார்கள். RCA தொனிப்பதிவு என்பது என்ன என்பது தெரியவில்லை. எஸ்.வி. வெங்கட்ராமன், டி.ஆர். ராமநாதன், டி.ஏ. கல்யாணம் என மூன்று இசையமைப்பாளர்கள் இணைந்து திரைப்படத்திற்கு இசை அமைத்து உள்ளார்கள்.  பாடல் வரிகளைத்  தஞ்சை என். ராமையா தாஸ், கே.பி. காமாட்சி சுந்தரம் மற்றும் கண்ணதாசன் எழுதியுள்ளனர். 

1949 ஆம் ஆண்டு வந்த ‘கன்னியின் காதலி’ திரைப்படத்தில் எழுதிய ‘கலங்காதிரு மனமே’ பாடல் மூலம் தனது திரை வாழ்வைத் தொடங்கிய கண்ணதாசன், தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத, கடந்து செல்ல முடியாத உயர்ந்த இடத்தைப் பெற்றவர். 

அதே ஆண்டு வெளியான ‘திகம்பர சாமியார்’ திரைப்படத்திலும் பாடலாசிரியர் வரிசையில் அவரது பெயரைப் போடுகிறார்கள். ஆனால் அந்தப் படத்தில் அவர் எழுதிய பாடல் எது எனத் தெரியவில்லை. இந்தத் திரைப்படத்தில் வரும், கண்ணதாசன் அவர்கள் எழுதி ஜிக்கி அவர்கள் பாடிய கருத்தாழம் மிக்க பாடல் இதோ! 

சுத்தம் செய்யணும் 

துடைத்து சுத்தம் செய்யணும்

பூனை குறுக்கே போவது சகுனம்

பானை வண்டியைப் பார்த்தால் சகுனம் 

சகுனம் சகுனம் என்றே வாழ்வைத் 

தகனம் செய்வோரே 

சுத்தம் செய்யணும் மனத்தை 

சுத்தம் செய்யணும்

துடைத்து சுத்தம் செய்யணும்

மூடக் கொள்கைகள் ஒழியணும் நல்ல 

மூதறிவாளர் பெருகணும் 

தேசம் சிறந்து வாழணும் 

சகலமும் தெரியணும் புரியணும் அறியணும் 

வாழ்வை சுத்தம் செய்யணும் 

துடைத்து சுத்தம் செய்யணும்

தந்திக் கம்பியைக் கண்டவர் யார்?

தெரியாது 

சப்மரினைக் கண்டுபிடித்தவர் யார்?

தெரியாது

இந்த ரேடியோ பாடுவதெப்படி?

தெரியாது

எலக்ட்ரிக் லைட் எரிவதெப்படி 

தெரியாது

ம்ஹூம் டெலிபோன் பேச்சு, 

ம்ஹூம் 

டெலிவிஷன் காட்சி 

ம்ஹூம் 

பேசும் சினிமா 

பாத்திருக்கேன் 

வானவிமானம் 

ஐயோ தெரியாதே 

எதுவும் தெரியாதா? சரி 

எனதர்மனுக்கு வாகனம் என்ன?

எருமைக்கடா 

ஆஹா என்ன ஞானம் 

என்ன அறிவு?

என்ன முதிர்ச்சி 

இப்படிப் பாசிப்படிந்த மனதைத் திருத்தும் 

பகுத்தறிவாளன் போல் 

தூசு படிந்த இடங்களை எல்லாம் சுத்தம் செய்யணும்.

அமெரிக்காவில் உள்ள, சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்திய தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்ற கண்ணதாசன் அவர்கள், 1981ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி சிகாகோவில் இறந்தார்.

அதற்கு சில நாட்களுக்கு முன் எடுத்த புகைப்படம் இது.  இந்த புகைப்படத்தைத் தந்து உதவியவர், குடும்ப நண்பர் மீனா பழனியப்பன். சிகாகோ போவதற்கு முன் அமெரிக்காவில் உள்ள மிச்சிகனில் சில நாள்கள் கண்ணதாசன் அவர்கள் தங்கி இருந்து இருக்கிறார்.

ஜிக்கி, P. A. பெரியநாயகி, P. லீலா, திருச்சி லோகநாதன், கே. ராணி போன்றோர் பின்னணி பாடியுள்ளனர்.  P.G. கிருஷ்ணவேணி எனத்தான், ஜிக்கி அவர்களின் பெயரைப் போடுகிறார்கள். நாற்பதுகளின் இறுதியில், பாடகியாக வந்த பி.லீலா அவர்கள் தான், இந்தத்  திரைப்படத்தில் பெரும்பாலான பாடல்களைப் பாடியுள்ளார்கள். 

பின்னணிப் பாடகி பி. லீலா
பின்னணிப் பாடகி கே. ராணி, https://en.wikipedia.org/wiki/K.Rani(singer)

பாடகர் கே. ராணி அவர்களுக்கும் இது தொடக்ககாலத் திரைப்படமாக இருக்க வேண்டும். இவர் தமிழில் பாடி வெளியான முதல் திரைப்படம் இதுவே. இவர், ‘இன்னிசை ராணி’ எனக் காமராஜரால் பெயர் சூட்டப்பட்டவர்.  நாகூர் இசைமுரசு இ.எம். ஹனிபா அவர்களுடன் பல பாடல்களை இணைந்துப் பாடிய இவர்தான், இலங்கையின் தேசிய கீதத்தைப் (ஸ்ரீ லங்கா மாதா) பாடியவர் என்பது கூடுதல் தகவல். ‘தேவதாஸ்’ திரைப்படத்தில்தான் இவர் முதலில் பாடினார் என்றாலும், அது இதற்குப் பின்னர் 1952ஆம் ஆண்டுதான் வெளிவந்திருக்கிறது.

திரைப்படத்துக்கு வசனம் எழுதிய வி.என். சுந்தரம், நடிகர், பாடகர், எழுத்தாளர் என பல முகங்களைக் கொண்டவர். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ‘வெற்றி வடிவேலனே சக்தி உமைபாலனே’ என்ற பாடல் பாடியவர். இவர் மணமகள் திரைப்படத்தின் புகழ்பெற்ற பாடலான ‘சின்னஞ்சிறு கிளியே’ என்னும் பாடலைப் பாடியவர். நடிகை பி.கே. சரஸ்வதி இவரின் மனைவி. இவர், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டு என்கிற நட்ராஜின் கொள்ளு தாத்தா ஆவார்.

ஆண் நடிகர்கள்

டி.ஆர். ராமச்சந்திரன்

எஸ்.வி. சஹஸ்ரநாமம்

டி. பாலசுப்ரமணியம்

டி.கே. ராமச்சந்திரன்

வி.கே. ராமசாமி

சி.வி. நாயகம்

சி.எஸ். பாண்டியன்

டி.வி. ராதாகிருஷ்ணன் 

தங்கவேலு

பெண் நடிகர்கள்

லலிதா

பத்மினி

ராகினி

என்.ஆர். லீலா

நிர்மலா

எம்.எம். ராதா பாய்

சி.கே. சரஸ்வதி

எம்.எஸ்.எஸ். பாக்யம்

நடராஜன் பணக்காரர். அவரின் மகன் சிவப்பிரகாசம். இவர்  வெளிநாட்டுக்குச் சென்று படித்து திரும்பியவர். ஊரில் ஒரு தொழிற்சாலை கட்டவேண்டும் என்கிறார். அதற்கு அப்பா முட்டுக்கட்டை போட, மகன் சொல்லாமல் கொள்ளாமல், வெளியூர் புறப்படுகிறார். வேலைக்காரர் அப்பாவைக் கூட்டி வருவதற்கு முன்பாக மகன் வெளியே கிளம்பி விடுகிறார். சிவப்பிரகாசம் பம்பாய்க்குச் செல்கிறார் என அவர் பயணப்படும் ரயில் மூலம் நமக்குத் தெரிகிறது.

தொழுப்பேடு என்ற ஊரிலிருந்து, தங்கம் என்ற தனது சிறு வயது மகளுடன் பட்டணத்துக்கு வேலை தேடி வருகிறார் நாயகம். நாயகம் ஒரு நிறுவனத்துக்கு வேலை தேடிப்  போகிறார். அப்போது அங்கு கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். பழி நாயகம் மீது விழுகிறது. இதனால் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெறுகிறார்.

இதே நேரம் நடராஜன், மகனின் பயணத்தைத் தடுக்கும் நோக்குடன் காரில் விரைந்து வருகிறார். தூரத்தில் வண்டியைப் பார்த்த தங்கம், தனது அப்பா வருவதாக நினைத்து ஓடி வந்து வண்டியின் முன் விழுந்துவிடுகிறார். அப்பாவோ சிறையில். யாரும் தங்கத்தைத் தேடி வராததால், நடராஜனே வளர்க்கவும் தொடங்குகிறார். பத்மினி எனப் பெயர் வைக்கிறார். பள்ளியில் கொண்டு சேர்க்கிறார்.

அங்கே, தொழுப்பேடு துரைசாமி தனது மகள் செல்லத்தை விடுதியில் சேர்த்துப் படிக்க வைக்கிறார். செல்லம் பூமி உருண்டையைச் சுற்றிவிட,  ஆறு ஆண்டுகள் ஓடிப்போகின்றன. பத்மினியும் செல்லமும் இப்போது கல்லூரி மாணவிகள். இருவரும் கல்லூரி விழாவில் நடனம் ஆடுகிறார்கள். இதைப் பார்த்த நாடகக் கம்பனி வைத்திருக்கும் நித்தியானந்தன், செல்லத்தை அணுகி, தனது நாடகக் குழுவில் சேரச்சொல்லி ஆசை காட்டுகிறார். இதை நம்பி யாருக்கும் தெரியாமல் வந்த செல்லம், தனது பெயரைச் ‘சிங்காரி’ என மாற்றிக் கொண்டு நடிக்கிறார். பேரும் புகழும் பெறுகிறார். மறுபுறம், அவரது பெற்றோர், மகளைத் தேடி ஊர் ஊராக அலைகிறார்கள். 

இவ்வாறு காலம் செல்ல, நடராஜன் வடநாட்டுக்குப் பயணம் செய்கிறார். மகன் கிடைக்க மாட்டானா என்ற எண்ணமும் அதில் சேர்ந்துதான் இருந்தது. அந்த காலகட்டத்தில் மகன் சிவப்பிரகாசம், வீடு வந்து சேருகிறார். பத்மினியும் அவரும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். சிங்காரியின் நாடகக்குழுவும் சென்னை வருகிறது. சிவப்பிரகாசம், சிங்காரி பின்னால் சுற்றத் தொடங்குகிறார். சிங்காரி, நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அளவுக்கு சிவப்பிரகாசம், சிங்காரி இருவரும் சுற்றுகிறார்கள். இதனால் நாடகக் கம்பனியே கலகலத்துப் போகிறது. கூட்டத்தைச் சமாளிக்க, ஒரு நடனம் மட்டும் ஆடும்படி நித்தியானந்தன் பத்மினியைக் கேட்க, அவரும் செல்கிறார். இதைச் சிவப்பிரகாசத்தால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. வந்து சண்டை போடுகிறார்.

இந்த காலகட்டத்தில், சிறையிலிருந்து நாயகமும் வெளியே வருகிறார். மகளைத் தேடித் தேடி, தாடியும் மீசையுமாக ஊர் ஊராகப்  பிச்சைக்காரராக அலைகிறார். பத்மினியைப்  பார்த்துச் சிறு சந்தேகம் அவருக்கு எழுகிறது. ஆனாலும், தன் மகள் இங்கே எப்படி இருப்பார்? என்ற எண்ணத்தில் கடந்து விடுகிறார்.

நாயகம் ஏதாவது வேலை கிடைக்குமா என நித்தியானந்தத்தின் நாடக கம்பனிக்குப் போகிறார். அங்கும் வேலை கிடைக்கவில்லை. ஆனால் உள்ளே இருந்த சாமி மற்றும் குழுவினர், சிவப்பிரகாசத்தைத் தாக்கப் போவது தெரிகிறது. இவர் காப்பாற்றப் போகிறார். தாக்கப்பட்டாலும்,  நாயகம் உதவியால், சிவப்பிரகாசம் காப்பாற்றப் படுகிறார். சாமி ஏற்கனவே நித்தியானந்தத்தால் கம்பனியை விட்டு விரட்டப் பட்டவர். 

சிவப்பிரகாசத்தைப் பார்க்க நித்தியானந்தம் வருகிறார். சிங்காரி, சாமியுடன் வருகிறார். வாக்குவாதத்தில் சாமி, நித்தியானந்தத்தை அடிக்க ரத்தம் வருகிறது. அதைப் பத்மினி துடைக்க அதற்கும் சிவப்பிரகாசம் சந்தேகம் கொண்டு திட்டுகிறார். இதனால் பத்மினி வீட்டை விட்டு வெளியே செல்கிறார். 

நாயகம், சிவப்பிரகாசம் வீட்டிலிருந்த தங்கத்தின் – இப்போதைய பத்மினியின் சிறு வயது புகைப்படத்தைப் பார்த்து பத்மினிதான் தனது மகள் என உறுதி செய்கிறார். தனது கதையைச் சொல்கிறார். தம்பி மனைவியால் விரட்டப்பட்ட இவரும் இவரது மனைவி மற்றும் மகளும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் மனைவி இறக்க, இவர் வேலை தேடி பட்டணம் வந்து சிறைப்படுகிறார். இதுதான் அவரது கதையின் சுருக்கம்.

சிங்காரியை, சாமி ஒரு அறையில் சிறை வைக்கிறான். அந்த நேரம் செல்லத்தின் (சிங்காரி) அம்மா, அப்பா தேடி அங்கு வருகிறார்கள். மகளைத் தேடி சிவப்பிரகாசம் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் விரட்டிய தம்பிதான் நாயகம். அண்ணன் தம்பி இருவரும் இணைகிறார்கள். 

பத்மினி, ரயில் தண்டவாளம் அருகில் விழ, அதே ரயிலில் ஊருக்குத் திரும்பி  வந்து கொண்டிருந்த நடராஜன், அவரை வீடு கொண்டு வந்து சேர்க்கிறார். நித்தியானந்தம், சாமியின் இடம் தேடிச்சென்று  சிங்காரியை மீட்டு வருகிறார். 

நித்தியானந்தா, செல்லம் மற்றும்  சிவப்பிரகாசம் பத்மினி  திருமணம் நடைபெறுகிறது. 

சஹஸ்ரநாமம், T.R. ராமச்சந்திரன் இருவரும் திரைப்படத்தில் ஏறக்குறைய சமமான நேரம் வருகிறார்கள். சகஸ்ரநாமம் அவர்களைப் பிற்காலத்தில் அண்ணன், அப்பா எனப் பார்த்துப் பழகி விட்டதால், சின்னஞ்சிறு பத்மினியின் காதலன் என்பதை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.

 திருவிதாங்கூர் சகோதரிகள் எனப்படும் லலிதா, பத்மினி, ராகினி மூவருமே இந்த திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்கள். லலிதாதான் சிங்காரி பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவரது நடனம் மட்டுமல்ல, நடிப்பும் மிகவும் சிறப்பாகவே இருக்கிறது. கொஞ்சம் பூசினாற்போல் இருக்கும் அவரது உடல்வாகு, அவரது நாகரிக பணக்காரத் தோரணைக்குக் கைகொடுத்து இருக்கிறது.

பத்மினி சிறு பெண்ணாக இருக்கிறார். ஓரிரு நடனங்களும் ஆடுகிறார் என்றாலும், நடிப்பதற்கே அவருக்குக் கூடுதல் வாய்ப்பு. அதை அவர், தனது இயல்பான நடிப்பு மூலம் வெளிக்காட்டி இருக்கிறார். 

ஜிமிக்கி என்ற நடனப் பெண்ணாக, நாடகக்குழுவில் இணைந்து பயணிக்கும் ராகினி அவர்கள் இதற்குமுன் திரைப்படங்களில் நடனம் ஆடி மட்டுமே நான் பார்த்து இருக்கிறேன். பொதுவாக நடனம் ராகினி எனப் போடுவார்கள். இதில் தான் நடிகர்கள் பெயரில் அவரின் பெயர் இணைந்து உள்ளது. 

ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா 

இந்த உலகினில் ஏது கலாட்டா 

உணவு பஞ்சமே வரட்டா 

நம்ம உயிர வாங்குமா பரோட்டா 

என அவர் ஆடிப்பாடி அறிமுகமாகும் இடமே அழகாக இருக்கிறது. பாடல் முடிந்ததும், அவருடன் ஆடும் இளம் நடிகரின் குரல் கேட்ட குரலாய் இருக்க, கவனித்துப் பார்த்தால், பிற்காலத்தில் தாத்தாவாக நடித்துப் புகழ் வாங்கிய காக்கா ராதாகிருஷ்ணன். இவர், தன்னுடைய முதல் திரைப்படமான ‘மங்கையர்க்கரசி’யில், வேலையில் சேர்வதற்காகக் காக்காப் பிடிக்க வேண்டி அவருடைய தாயார் கூறியதும், உண்மையான காகத்தைப் பிடித்துக் கொண்டு போய் வேலை கேட்பார். அதனால் ‘காக்கா ராதாகிருஷ்ணன்’ என அழைக்கப்பட்டார் என்கிறது இணையம். இந்த திரைப்படத்தில், ‘டோன்ட் கேர்’ என அடிக்கடி சொல்லிக்கொண்டு வரும் இவரின் பெயர் காக்காதான்.

சிவப்பிரகாசம் மும்பை செல்லும் ரயிலில் பம்பாய் எனத் தமிழில் எழுதப்பட்டுள்ளது.  मुंबई (மும்பை) எனத் தான் இந்தி/மராத்தியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் என ஆறு மொழிகளில் எழுதப் பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Bombay என எழுதியிருக்கிறார்கள். 

ஆவோ மஜராஜ் 

மேலே பகவான் 

கீழே மனுஷாளுங்கோ 

அந்த மனுஷாளும் 

பத்து மாசத்திலே பொறந்தவருங்கோ 

உச்சத்திலே சவுகார் வசிக்கிறாங்கோ 

ஒட்டுத்திண்ணியிலே நம்மாள் படுக்கிறாங்கோ 

அங்கே ஓவலும் வின்கோவும் விழுங்கிறாங்கோ 

இங்கே ஒரு வா புவாவுக்கு ‘

தரிங்கிணத்தோம்  போடுறாங்கோ 

ஒரு ஜாண் வயிறே இல்லாட்டா 

இந்த உலகினில் ஏது கலாட்டா 

உணவு பஞ்சமே வரட்டா 

நம்ம உயிர வாங்குமா பரோட்டா 

மேலே மழையில்லே 

கீழே விளைவுமில்லே 

அதனாலே படி அரிசி விலை 

குறையவே இல்லை.

தில்லானா பாடுறோம் நல்லாத்தான் ஆடுறோம் 

ஜால்னா இட்லிக்கி 

காலணா லாட்ரிகே

எனக் காக்கா ராதாகிருஷ்ணன், ராகினி ஆடிப்பாடுவார்கள். பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். பாடலை கே.என். ரெட்டி மற்றும்  கே. ராணி இணைந்து பாடியிருக்கிறார்கள். 

என்.எஸ்.கே அவர்கள், இந்தப் பாடலைக் கேட்டுவிட்டு, 1330 குறளைவிட சிறந்த பாட்டு என பாடலாசிரியரை அழைத்துப் பாராட்டி இருக்கிறார். கவிஞர் வாலி, ஒரு கூட்டத்தில் இப்பாடல் குறித்து வியந்து பேசியிருக்கிறார்.  

விருப்பம் இருப்பவர்கள் அவரின் இந்த உரையைப் பாருங்கள். பெரியார் குறித்தும் பாடலின் எளிமை எவ்வளவு தேவை என்பது குறித்தும் இயல்பாகப் பேசுகிறார். சொல்லப்போனால், பலரும் அவரின் உரை கேட்டுத்தான் இந்தப்பாடலைத் தேடி இருக்கிறார்கள் என கருத்துப்பதிவுகள் தெரிவிக்கின்றன. 

இரண்டாம் உலகப்போர் நடந்த காலகட்டத்தில், உணவுப் பஞ்சத்தால் அரிசி கிடைக்காமல்தான் பரோட்டா நம்மிடம் வந்திருக்கிறது என்பதை இந்தப் படம் காட்டுகிறது. அரிசிப் பற்றாக்குறையினால் தமிழ்நாடு முழுதும் கோதுமைத் தானியமும், மைதா மாவும் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது என்கிறது ‘திரையும் தேர்தலும்’ என்ற புதிய தலைமுறைத் தொடரின் ஐந்தாம் பாகம். இப்போது பரோட்டா நமது உணவுகளில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. 

பள்ளியில் நான்காம் பாரம் படிக்க மாத சம்பளம் ஏழு ரூபாய் ஸ்பெஷல் பீஸ் எல்லாம் சேர்த்து, 17.50; ஹாஸ்டல் பீஸ் 40 ரூபாய் என இருந்து இருக்கிறது. 

“குடும்பப் பெண்களுக்கு இது ஆகாதுன்னு அப்படின்னா பெரிய பெரிய மனிதர்களும் ஜட்ஜுக்களும் தனது பெண்களுக்கு நாட்டியம் சொல்லி வைக்காங்களே ஏன்? ஆடியதால் நான் மானம் கெட்டவளா?” என வசனம் உள்ளது. 

வீடுகளில் காந்தி, நேரு போன்றோரின் புகைப்படங்கள் உள்ளன. 

‘மேல படிக்க வைச்சதனால்தான் இப்படி மேலே போய் நிக்குது’ என மகள் ஓடிப்போனதற்குப் படிப்பைக் காரணமாக காட்டும் செல்லத்தின் (சிங்காரியின்) அப்பா, ‘படித்திருந்தும் பகுத்தறிவு இழந்தேன்’ எனச் சொல்லும் சிவப்பிரகாசம், ‘அதிகமா படிச்சவனுடைய லட்சணமா இது?’ என கேள்வி கேட்கும் நடராஜன் எனப் படிப்பைச் சுற்றிப் பல சொல்லாடல்கள் வருகின்றன. 

மொத்தத்தில், சண்டை, கொலை எனப் பெரிதும் இல்லாத அன்றைய நகர சமூகத்தைப் பிரதிபலித்த திரைப்படம் என இதைச் சொல்லலாம்.

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.