என் தங்கை 1952ஆம் ஆண்டு வெளியான திரைப்படம். டி.எஸ். நடராஜன் எழுதிய ‘என் தங்கை’, மற்றும் பாலசுந்தரம் அவர்கள் எழுதிய ‘பராசக்தி’ என்கிற இரு நாடகங்களும் அந்த காலகட்டத்தில், நாடக மேடைகளில் அரங்கேறின.
மின்னல் ஒளியால் பார்வை இழந்த தங்கைக்காக அண்ணன் வாழும் கதை ‘என் தங்கை’ என்றால், கணவனை இழந்த தங்கைக்காக வாழும் அண்ணனின் கதை ‘பராசக்தி’. என் தங்கை நாடகத்தில் அண்ணனாக நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி. என் தங்கை கதையை எழுதிய டி.எஸ். நடராஜன், ‘என் தங்கை’ நடராஜன் என்றே அறியப்பட்டு இருக்கிறார். நாடகம் அவ்வளவு பிரபலமாக இருந்து இருக்கிறது.
பராசக்தி திரைப்படத்தில் தங்கையின் பெயர் கல்யாணி. இரண்டையும் இணைத்துப் பிற்காலத்தில் ‘என் தங்கை கல்யாணி’ என்ற பெயரில் டி. ராஜேந்தர் ஒரு திரைப்படம் எடுத்தார்.
‘என் தங்கை’ கதையை ஹிந்தியில் சோட்டி பென் (1959) என்ற பெயரில் எடுத்து எல்.வி. பிரசாத் வரலாறு படைத்தார். என் தங்கை தெலுங்கு, கன்னடம், ஒடிய மொழிகளிலும் மொழியாக்கம் செய்து எடுக்கப்பட்டுள்ளது.
அசோகா பிக்சர்ஸ் குகை சேலம் திரையிடும் ‘என் தங்கை’ எனத் தொடங்கி, பின் நடிகர்கள் பெயரைப் போடுகிறார்கள்.
நடிகர்கள்
எம்.ஜி. ராமச்சந்திரன் – ராஜேந்திரன்
பி.எஸ். கோவிந்தன் – சூரியமூர்த்தி
பி.வி. நரசிம்மபாரதி – செல்வம்
எம்.ஜி. சக்கரபாணி – கருணாகரன்
டி.ஆர்.பி. ராவ் – வீராசாமி
சி.எஸ். பாண்டியன் – அழகன்
எஸ்.என். நாராயணசாமி – வீரியன்
கொட்டாபுளி ஜெயராமன் – சித்ரகுப்தன்
மாஸ்டர் கிருஷ்ணன் – இடியட் பையன்
ந. ஆழ்வார் – குண்டு
பெண் நடிகர்கள்
மாதுரி தேவி – ராஜம்
வி. சுசீலா – மேரி
எஸ்.ஆர். ஜானகி – குணவதி
ஈ.வி. சரோஜா – மீனா
எம்.என். ராஜம் – அழகி
மூலக்கதை டி.எஸ். நடராஜன்
வசனம் டி.எஸ். நடராஜன், KM கோவிந்தராஜன்
பாடல்கள்: பாரதிதாசன் (காதல் வாழ்விலே வாழ்வதிலும் நலம்), மருதகாசி, சரவணபவானந்தர், சுரதா, கி. ராஜகோபால், நரசிம்மன்.
பின்னணிப் பாட்டு எம்.எல். வசந்தகுமாரி, பி. லீலா, என். லலிதா, ஏ.பி. கோமளா, கே.வி. ஜானகி மற்றும் ஏ.ஜி.ரத்னமாலா, மோத்தி, ராஜா.
சங்கீத டைரக்டர் சி.என். பாண்டுரங்கன்
திரைக்கதை, டை ரக்ஷன் & எடிட்டிங் Ch. நாராயண மூர்த்தி
தந்தை இல்லாத ராஜேந்திரன், அம்மா, தம்பி செல்வம் மற்றும் தங்கை மீனா என ஒரு அழகான குடும்பம். தம்பி செல்வம், சென்னையில் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கிறார்.
ராஜேந்திரனின் சிற்றப்பா கருணாகரன். அவர், இவர்களின் சொத்தை அபகரித்துக் கொள்ள, குடும்பம் வறுமையில் தள்ளாடுகிறது. சிற்றப்பா மகன் சூரியமூர்த்தி, இவர்களின் குடும்பத்துடன் நல்ல உறவில் இருக்கிறார். தந்தையின் போக்கு பிடிக்காமல் சண்டையும் போடுகிறார். இவரும் சென்னையில்தான் படிக்கிறார்.
இவ்வாறான காலகட்டத்தில் மின்னல் தாக்கி, மீனா பார்வை இழக்கிறார்.
செல்வம் தன்னுடன் படித்த பணக்கார ராஜத்தைத் திருமணம் செய்கிறார். ராஜம் மொத்த குடும்பத்தையே கொடுமைப்படுத்துகிறார். ஒரு காலகட்டத்தில் இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி, செல்வத்துடன் தன் வீடு போகிறார். புதிதாகப் பணத்தைக் கண்ட செல்வம், அனைத்துத் தீய செயல்களுக்கும் அடிமையாகிறார். விளைவு, மனைவியைக் கொடுமைப் படுத்துகிறார்.
இந்த காலகட்டத்தில் அம்மாவும் இறக்கிறார். சிற்றப்பா, இருந்த ஒரு வீட்டையும் பிடுங்கிக் கொள்ள, அண்ணனும் தங்கையும் வீதியில் நிற்கிறார்கள். இருவரும் சென்னை செல்கிறார்கள்.
சூரியமூர்த்தி, தன்னுடன் படித்த மேரியைக் காதலிக்கிறார். அப்பா எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் சென்னை சென்று ரிக்ஷா ஓட்டுநராக மாறுகிறார். அவரே, சென்னை வந்த ராஜேந்திரனுக்கும் மீனாவுக்கும் தங்க இடம் கொடுக்கிறார்.
இதற்கிடையில், செல்வம் திருந்தி, மீண்டும் குடும்பத்துடன் இணைய வரும்போது ஏற்பட்ட விபத்தில், ராஜம் இறக்க, செல்வத்துக்குக் கை போய்விடுகிறது. சிகிச்சை பலனின்றி, அண்ணன் மடியிலேயே இறந்தும் போகிறார். கருணாகரன் தன் மகனைத் தேடி சென்னை வர, கார் மோதி, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப் படுகிறார். அங்குச் செவிலியராக இருந்த மேரியைத் தன் மகனுடன் இணைத்து வைத்துவிட்டு அவர் இறக்கிறார்.
பிக்பாக்கெட் அடித்து வந்த திருடன் ஒருவன், மக்கள் துரத்தவே, பர்ஸை ராஜேந்திரன் கையில் கொடுத்து விட்டு ஓடி விடுகிறான். மக்கள் ராஜேந்திரனை அடிக்கிறார்கள். இது தெரிந்த மீனா அங்கு வந்து இறந்து விடுகிறார். மீனாவின் உடலைத் தூக்கிக் கொண்டு கடலுக்குள் சென்று மூழ்குகிறார் ராஜேந்திரன். சூரியமூர்த்தி, மீனாவின் நினைவாகக் கண் தெரியாதவர்களுக்காகப் பள்ளி தொடங்குகிறார்.
இப்படிப் பல இறப்புகளைக் கொண்ட சோகம் ததும்பும் திரைப்படம்.
எம் ஜி ஆர் அவர்களின் நடிப்புக்குத் தீனி போட்ட, அவரது நடிப்பை மட்டுமே நம்பிய திரைப்படம் என இதைச் சொல்லலாம். அவருக்கு இணைகூட இந்தத் திரைப்படத்தில் கிடையாது. பெரும்பாலும் சோகமான சூழ்நிலையிலேயே வாழும் கதாபாத்திரம். அவ்வளவு இயல்பாகச் செய்து இருக்கிறார்.
“எம்.ஜி. ஆருக்கு ஒரு சகோதரி இருந்தார், அவருடைய தந்தையின் மறைவைத் தொடர்ந்து குடும்பம் இலங்கையிலிருந்து கும்பகோணத்துக்குக் குடிபெயர்ந்த பின், அந்த சகோதரி மருத்துவ வசதி இல்லாததால் இறந்தார். அவரது இழப்பு இத்தகைய பாத்திரத்தில் அவர் அழுத்தமாக நடிப்பதற்கு, படத்தின் வெற்றிக்கு உதவியது” என்கிறார், வரலாற்றாளர் ராண்டார் கை.
பாடலாசிரியர் மருதகாசி திரைப்படத்தின் பெரும்பாலான பாடல்களை எழுதியுள்ளார். ஏ.பி. கோமளா ‘அழகான பொம்மை வைத்தே’ பாடலைப் பாடியுள்ளார். இளம் மீனாவாக வரும் சிறுமி அவ்வளவு துறுதுறுவென இருக்கிறார். ‘அழகாய் பொம்மை வைத்து கொலுவைச் சிங்காரித்து இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்’ எனத் தோழியருடன் அவர் ஆடுவது அவ்வளவு அழகு. நான் பார்த்தவரை இதுதான் திரைப்படத்தில் முதல் கொலு நடனம்.
அழகாய் பொம்மை வைத்தே
கொலுவை சிங்காரித்தே
இனிதாய் எல்லோரும் கொண்டாடுவோம்
ஜப்பான் பொம்மை ஜப்பான் பொம்மை
சண்டை செய்யும் சிப்பாய் பொம்மை
சிலபலவகை பொம்மை தான்
ஜிலுஜிலுவென்றே தான்
கொலு புரிந்திட செய்வேன் நான்
மனம் மகிழ்ந்திடுவோம்
வீதி எல்லாம் ஜோதி மயம்
வீடுதோறும் திருவிழா
வீணா வாணிதனைக் கொண்டாடும் திருவிழா
மாலை தனில் யாவருமே கூடுவோம்
கூவும் மாங்குயில் போலே இசை பாடுவோம்
தோகை மயிலாக நடனமாடுவோம்
‘குட் லக் குட் லக்,’ என ஆடும் எம்.என். ராஜம் சிறு வேடத்தில் வந்தாலும் மனதில் நிற்கிறார். இதற்குமுன் ஓரிரு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், வளர்ந்த பெண்ணாக நடித்த முதல் படம் இது. மருதகாசி அவர்கள் எழுதி சி.எஸ். பாண்டியன், ஏ.ஜி. ரத்னமாலா பாடிய பாடல் இது.
Good Luck Good Luck கட்ட கந்தல் இல்லாத ஏழை
கஷ்டம் நீக்கும் குபேரனாக்கும்
முட்டாள் தன்னை முன்னேறச்செய்யும்
எட்டுத்திக்கும் கொண்டாட வைக்கும்
குடிசை தனிலே பிறந்தேன்
தெருவின் நனைந்தே திரிந்தேன்
அடிமை எனவே உழன்றேன்
வீட்டில் ராணி போலே வாழ்ந்திடுவேன்
மொட்டை காளி போலே
உடல் கட்டும் கொண்ட மாறா
கட்டுக்காவல் இல்லே
மனம் விட்டுப் பேசலாம் வாராய்
கட்டிவெல்லாம் போலே
துளி சொட்டும் பேச்சுக்காரி
கட்டி என்னைப் பியாரி
என் லட்டு ஒய்யாரி
ஓடிவா
லேடியே
சோடியாய் விளையாடவே
சந்தர்ப்பம் இன்றைக்கே நன்றாய் அமைந்ததே
சந்தித்தேன் ஆனந்தம் கொள்ளத் தகுந்ததே
கருப்பும் காகமும் போலே வெறும்
கசப்பும் வேம்பும் போலே
கரும்பும் எறும்பும் போலே
காதல் வாழ்வில் இந்நாளே
கலந்து இணைந்து மகிழ்ந்து வாழ்ந்திடு பார்
ஜாலி
‘என் இன்ப ஜோதியே உன் அன்பு பார்வையால்’ என்ற பாடல் வெள்ளை உடை தேவதைகள் வரும் பாரதி ராஜா திரைப்படப் பாடல் போல உள்ளது.
ஆடும் ஊஞ்சல் போலே அலையே ஆடுதே
ஆறு வந்து கடலிலே சேருதே
வாலிபம் போலே ஆசை வளருதே
விழியிலே நீல வானம் தெரியுதே
வாசனை தரும் சந்தானம் தனைப்
பூசிட யோசிப்பதேனோ
சம்மதமின்றி மலர் மேலே
தாவும் வண்டு நானல்ல
இணையும் பாம்பு போன்று நதியின் அருகிலே
நேற்று பாடி ஆடினோமே இன்ப இரவிலே
அதுபோலே இனிமேலே
ஆனந்தம் அடைந்திடுவோமே
நெஞ்சில் இன்பமே கொஞ்சும் கிளி நீயே
நித்திரைக்கு மெத்தை கடற்கரையே
காதலுக்கே அனுகூலமே
யவ்வன காலமே கனிரசமே
இறுதிக் காட்சிப் பாடல் சென்னை நகரின் ஊருக்குள் தங்கையைத் தூக்கிக் கொண்டு அண்ணன் நடந்து செல்கிறார். பழைய சென்னையை நினைவுகூரும் விதமாக இது உள்ளது.
படைப்பாளர்
பாரதி திலகர்
தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’ என்கிற புத்தகமாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறது.