கணவனே கண்கண்ட தெய்வம் 1955-ம் ஆண்டு வெளியான திரைப்படம். இது இந்தியில் தேவ்தா என்ற பெயரில் 1956-ம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் ஜெமினி கணேஷ், அஞ்சலி தேவி, நம்பியார் பாத்திரங்களில் நடித்துள்ளனர். லலிதாவின் பாத்திரத்தில் வைஜெயந்தி மாலா நடித்துள்ளார். 

எழுத்து இவ்வாறு போடுகிறார்கள்;

நாராயணன் கம்பனி கணவனே கண்கண்ட தெய்வம்

அஞ்சலி தேவி லலிதா கணேஷ் நாகய்யா நடித்தது. 

கதை வசனம் கே.வி. சீனிவாசன், உமாச்சந்திரன் சதாசிவபிரம்மம்

பாடல்கள் பாபநாசம் சிவன், ஹேமந்த் ராவ் வி. சீதாராமன், கே.வி. சீனிவாசன், கு.மா. பாலசுப்ரமணியம் மற்றும்

சங்கீத டைரக்ஷன் ஏ. ராமராவ், ஹேமந்த் குமார்

திரைக்கதை உதவி டைரக்ஷன் KV சீனிவாசன் 

பாடியவர்கள் சுசிலா லீலா கண்டசாலா 

நடிகர்கள் 

ஆர். கணேஷ் 

வி. நாகய்யா 

எம்.என். நம்பியார் 

ராமசாமி 

அண்ணாஜி ராவ் 

வி.பி. பலராமன் 

பெண் நடிகர்கள்

அஞ்சலி தேவி – நளினி 

லலிதா – நாகராணி 

எம்.என். ராஜம் – மல்லிகா 

டி.பி. முத்துலட்சுமி – நாகி 

பாலா – நாககன்னி 

பேபி உமா – ராஜா 

பிரடியூசர் பட்டண்ணா

டைரக்டர் டி. ஆர். ரகுநாத் 

ஓய்வு பெற்ற படை வீரர் கருணாகரனின் மகன் விஜயன். தந்தைக்குப் பொறுப்பற்றுத் திரியும் மகன், அரண்மனையில் போய் வேலை செய்ய வேண்டும் என்பது விருப்பம். தந்தை, ஏற்கனவே போர்க்களத்தில் மன்னரைக் காப்பாற்றியிருக்கிறார். அதற்குப் பரிசாக ஒரு குறுவாளைப் பெற்றிருக்கிறார். அதை மகனிடம் கொடுத்தனுப்பி, பார்வையற்ற மன்னன் இதைத் தொட்டுப் பார்த்து உணர்ந்து கொள்வார் என்கிறார். ‘அப்படியா மன்னருக்குப் பார்வை தெரியாதா?’ என மகன் கேட்க, ‘மூன்று நான்கு ஆண்டுகளுக்கு முன், கண்கொத்திப் பாம்பு கொத்தி அவரின் பார்வை போட்டுவிட்டதாகத் தெரிகிறது’ என்கிறார் தந்தை. மன்னருக்குப் பார்வை தெரியாது என்பதுகூட தெரியாத இவரை, எதை நம்பி ஒரு முன்னாள் வீரர் அனுப்புகிறார் என்ற கேள்வி தோன்றியதைத் தவிர்க்க இயலவில்லை. 

இவர் இவ்வாறு போய்க்கொண்டு இருக்க இளவரசி நளினி, மன்னரின் கண் பார்வையை எவ்வாறு திரும்பக் கொடுப்பது என ஆலோசனை தரக்கூடிய ஒரு முனிவரைத் தேடி, தளபதி வீரசேனனுடன் (நம்பியார்) வருகிறார். வழக்கம் போல நாயகியுடன் ஈர்ப்பு; வில்லனுடன் சண்டை.

மன்னர் சூரசிம்மரைப் பரிசோதித்த முனிவர், நாகலோகத்தில் உள்ள நாக ஜோதிதான் இதற்கான ஒரே தீர்வு என்கிறார். மன்னர்,  நாக ஜோதியைக் கொண்டு வருபவர்களுக்கு அவர்கள் கேட்டப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கிறார். 

கத்தியை அடையாளம் கண்ட மன்னர், விஜயனைப் படையில் சேர்க்க வீரசேனனுக்கு ஆலோசனை கூறுகிறார். 

வீரசேனன், பழிவாங்க வாய்ப்பு கிடைத்த நேரம், பொய்க்குற்றம் சாட்ட, மன்னர் மறுநாள் விஜயனை தூக்கிலிட உத்தரவிடுகிறார். விஜயன், சிறையில் இருந்து தப்பி நளினியைச் சந்திக்க வருகிறார். 

நாக ஜோதியைக் கொண்டுவந்தால், மன்னர் தன்னை மணமுடித்துத் தருவார் என நளினி ஆலோசனை கூறுகிறார். இதனால்,விஜயன் புறப்படுகிறார். வழியில்,  நாககன்னி என்கிற பாம்புப் பெண்ணை ஆபத்தில் இருந்து காப்பாற்றுகிறார். அவர், மந்திர மோதிரம் கொடுத்து, நாக ஜோதியை வைத்திருக்கும் நாகராணியின் இடத்திற்குப் போக உதவுகிறார். 

நாகராணிக்கு விஜயன் மீது கண்டதும் காதல். விஜயன், தானும் காதலிப்பதாக நடித்து, நாகராணியிடமிருந்து சாவியைத் திருடிச் சென்று நாகஜோதியை எடுக்கிறார். நாகராணி கண்டுபிடித்து விடுகிறார். கோபமடைந்த அவர், விஜயனை ஒரு அழகிழந்த வயோதிகத் தோற்றத்திற்கு மாற்றுகிறார். 

விஜயன் மன்னிப்பு கேட்டுப் பரிகாரம் எதுவும் உண்டா எனக் கேட்கிறார். நாகராணி, “உன் மகன் நாக ஜோதியைப் பயன்படுத்தி ஐந்து ஆண்டுகளுக்குள் குகையினுள் நுழைந்து அங்கு இருக்கும் கண்ணாடிக் கல்லை எடுத்து உடைக்க வேண்டும். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லவும் கூடாது” என்கிறார்.

நாக ஜோதியுடன், திரும்பி வந்த விஜயன் மன்னரின் பார்வையை மீட்டெடுக்கிறார். தனது பரிசாக நளினியைக் கேட்கிறார். வேறு வழியில்லாமல் இருவரின் திருமணமும் நடக்கிறது. ஆனால் மன்னர் ஆசீர்வாதம் கேட்டபோது எட்டி உதைக்கிறார். மரியாதை இல்லாத இடத்தில் இருக்க விரும்பாத விஜயன், அரண்மனையை விட்டு வெளியேறுகிறார். கணவனே கண் கண்ட தெய்வம் என நளினி உடன் செல்கிறார். நளினியும் விஜயனும் ஒரு காட்டில் குடியேறுகிறார்கள். நளினி, ராஜா என்கிற மகனைப் பெற்றெடுக்கிறார். 

ராஜாவுக்கு நான்கு வயது ஆகிறது. நளினி சாபம் மற்றும் சிகிச்சை பற்றி அறிந்து கொள்கிறார்; அவர், ராஜாவை அழைத்துக் கொண்டு, நாக ஜோதியுடன் குகைக்கு விரைகிறார். ராஜா குகைக்குள் நுழைந்து உள்ளே மாட்டிக் கொள்கிறான். விஜயனின் ஆலோசனையின் பேரில், நளினி, நாகராணியைச் சந்தித்து மன்றாடுகிறார். நாகராணி மறுக்கிறார். ஏற்கனவே விஜயனுடன் சென்ற அவரது நண்பர் சிங்கன் அங்கு இருக்கிறார். அவரிடமும் ஒரு நாகஜோதி இருக்கிறது. அதன் மூலம் எல்லாம் நல்லபடி நடக்கிறது. 

தனது கணவர் காதலன் இருவரும் ஒருவரே எனத் தெரிந்து நளினி மகிழ்கிறார். ஆனால் நாகராணி அழகை இழக்கிறார். நளினி சாபவிமோசனம் கொடுக்கிறார். மன்னர் விஜயனையும் நளினியையும் அரண்மனைக்குத் திரும்ப அழைக்கிறார். அவர்களும் செல்கிறார்கள். 

மாயம் ஜாலம் மந்திரம் தந்திரங்கள் நிறைந்த திரைப்படம் என்பதால், காட்சிகள் எல்லாம் மிகவும் பிரமாண்டமாக அமைத்திருக்கிறார்கள். அரண்மனை, நாகலோகம், ஆடை அலங்காரம் என அனைத்தும் மிகச்சிறப்பாக உள்ளன. 

ஜெமினி கணேசன்தான் நாயகன். மிகவும் அழகாக இருக்கும் இவர் எப்படி, பிற்பகுதியில் நடிப்பார் என்ற எண்ணம் தயாரிப்பாளருக்கு இருந்திருக்கிறது. இவர் கூன் விழுந்த பிச்சைக்காரர் போன்று வேடமிட்டு வந்திருக்கிறார். யாராலும் இவரை அடையாளம் காண முடியவில்லை. அதனால் இவரே சரியானவர் எனத் தேர்வு செய்து இருக்கிறார். அவரும் தயாரிப்பாளரை ஏமாற்றவில்லை. 

முதல் காட்சியில் சுருட்டை முடியுடன், அவர் வரும் அழகென்ன! பிற்பகுதியில் கூன் விழுந்து அவர் நடக்கமுடியாமல் வருவதென்ன! அப்பப்பா… வேடத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் பெரிய மாறுபாட்டைக் காட்டியிருக்கிறார். வேடமும் அந்த காலகட்டத்திற்கு மிகவும் சிரமமான செயலாகத்தான் இருந்திருக்க வேண்டும். அவர் உழைப்பு வீணாகவில்லை. திரைப்படம் நன்றாகவே ஓடியிருக்கிறது. அவரது சிறந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று. 

தொடக்கத்தில் வரும் வாள் சண்டையில் அவரின் நளினம், குறும்பு எல்லாம் படத்தை இன்னொரு தளத்திற்கு எடுத்துச் செல்கின்றன.

அதே போல அஞ்சலிதேவி, இளவரசி, சிறுவனின் தாயார் என இரு வேடத்திலும் பெரிய வேறுபாட்டைக் காட்டி இருக்கிறார். மகன் குகைக்குள் சிக்கிக் கொள்ளும்போது அம்மா பாறையில் தலையை முட்டி அழவேண்டும். அவர் உண்மையிலேயே முட்டி நெற்றியிலிருந்து ரத்தம் வழிவதைக்கூட கவனிக்காமல் நடித்தாராம். 

லலிதாவின் நடிப்பு, நடனம், கோபம் என அனைத்தும் அவ்வளவு கச்சிதமாக இருக்கின்றன. காதலித்தவன் ஏமாற்றியதும் அவரது தோற்றத்தில் கைவைப்பது என்பது, இப்போது காதலிக்க மறுத்தப் பெண் மீது அமிலம் ஊற்றிய கயவர்களின் பெண் வடிவம்தான். அதை அவர் அப்படியே காட்டியும் இருக்கிறார். 

மன்னராக வரும் நாகையா, ஒரே ஒரு காட்சியில் மட்டும் விஜயனின் அப்பாவாக வரும் அண்ணாஜி ராவ் இருவரும் உள்ளத்தில் நிற்கிறார்கள். 

தஞ்சை N. ராமையா தாஸ் எழுதிய பாடல்களைப் பாடியவர் P. சுசீலா. அவரைப் பட்டிதொட்டியெல்லாம் எடுத்துச் சென்ற பாடல் திரைப்படம் இது. 

அழைக்காதே நினைக்காதே 

அவைதனிலே என்னையே ராஜா

ஆருயிரே மறவேன்

எழில் தரும் ஜோதி மறந்திடுவேனா

இகமதில் நானே பிரிந்திடுவேனே

எனை மறந்தாடிட சமயமிதானா

கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா

காதலினாலே கானத்தினாலே

காவலனே என்னை சபையின் முன்னாலே

சோதனையாகவே நீ அழைக்காதே

கனிந்திடும் எந்நாளுமே கண்ணான என் ராஜா

கு ம பாலகிருஷ்ணன் எழுதிய பாடலைப் பாடியவர் பி சுசிலா அவர்கள். 

எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் ஏனோ 

கண்ணும் கண்ணும் ஒன்றாய் கூடி பேசும்  விந்தை தானோ

ஆசைதான் மீறுதே யாரிடம் சொல்வேன் 

எவ்விதம் அவன் உள்ளம் நான்தான் அறிவேன் 

எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணி எண்ணி ஏங்குதே 

எந்தன் ஆசை நிறைவேறும் நாளும் எந்த நாளோ

பாரினிலே எனக்கே நிகர் யாரோ 

கண்ணாலே உள்ளம் தன்னைக் கொள்ளை கொண்ட கள்வனே 

எண்ணாத …எந்த நாளோ

உன்னைக் கண் தேடுதே 

உன் எழில் காணவே உளம் நாடுதே

உறங்காமலே என் மனம் வாடுதே

பெண்ணே தன் ஆசையை பேசுதல் உண்டோ

கண் பேசும் ஆவல் புரியாததோ

அறியாத பாவனை இனி மேலும் ஆகுமோ

மங்கை என் புன்னகையிலே

மங்காத பேரழகிலே… 

மயங்காதவர் யாரோ… ஒ… ஒ… ஒ… ஒ…

எழில் ராணி போலே எனை காண்பதாலே

ஜகமே என் காலில் சுழன்றாடுதே

எனதாவல் யாவுமே நிறைவேறும் திண்ணமே

வி சீத்தாராமன் எழுதிய பாடலைப் பாடியவர் பி சுசிலா. 

அன்பில் மலர்ந்த நல் ரோஜா

கண் வளராய் என் ராஜா

வாழ்விலே ஒளி வீசவே

வந்தவனே கண் வளராய் -என் 

தென்றல் மலர் மாலை சூட்டுமே

வண்டு தேனை வாயில் ஓட்டுமே

மான்களின் கூட்டமே

வேடிக்கை காட்டுமே

மன்னன் உந்தன் நாட்டிலே

தங்க தொட்டிலில் தாலாட்டியே

சுகுமரனே சீராட்ட்யே

வெண்ணிலா காட்டியே பாலன்னம் ஓடியே

கொஞ்சிடும் நாள் வந்திடுமே

பாபநாசம் சிவன் எழுதி, பி லீலா பாடிய பாடல் இது.

அம்பா பேதைக்கிறாங்குவது வம்பா

வேறு கதி ஏது ஜகதம்பா

கண் போல் எனை வளர்த்த தந்தை

இரு கண் பேர ஏங்கும் என் சிந்தை

கலக்கம் தீருமோ கருணை வருமோ

நாக லோகம் சென்றவரை 

கண் குளிர காண்பேனோ 

ஜெயமெனும் மதுர மொழி கேட்பேனோ 

கனவாமோ நின் திருவுளம் எதுவோ தேவி 

அம்மா நீ கலங்காதே அம்மா நீ தயங்காதே

கணவனே கண் கண்ட தெய்வம் யென மதிதாயே

அம்மா ஆ நீயல்லவோ பெண் தெய்வம்

பரத நாட்டுக்குப் பெருமை அளித்திடும் 

அணிகலன் பெண்குலமே..ஏ..

வீரமடைவாரே துன்பத்திலும்

உயர் கண்ணியமும் பெரும் புண்ணியமும்

தன்னியல்பாய் கொள்வாள்

வாழ்வினை மகிழ வைப்பாள்

கானகமே இன்ப வீடேனா நிழல் போலே

ஜானகி பின் தொடர்ந்தாள் -பதியுடன்

கணவன் பணிவிடையில் மணிபனியாடைகள்

துரும்பாய் கருதும் மடந்தை தெய்வம்

கடவுலரும் கற்புடைய மங்கையர்கள்

ஆணைக்கு காத்திருப்பார்

அவள் தெய்வம் தொழாள் தொழுனர் தொழுதெழுவாள்

பெய்யென பெய்யும் மழை

தன்னலம் சிறிதும் கருதாள் 

உடல் பொருள் தியாகமே உரு கொண்டாள்

துயர் எத்தனை வாரினும்

பூமி போலே தானும்

மன உறுதியும் கொண்டாள்

புன்னகை இன் சொல்லும் 

பொற்பணியாய் அணிந்து 

அன்பே உரு கொண்டாள் தெய்வம்

KV ஸ்ரீனிவாசன் எழுதி P. சுசீலா, P. லீலா இணைந்து பாடிய பாடல் 

இந்த வீண் கோபம் வரலாமோ

உள்ளததை சொன்னாள்

எரிந்து என் மேல் விழாமோ

அப்புறம் 

உணவில்லை உரக்கமில்லை உணர்வில்லை

கனவிலும் நீங்காத காதலின் சோதனை

தன்னால் இந்த வேதனை தன்னால் இந்த வேதனை

வலையிது நீ விழும் காலம் வருமே-காதல்

நானா இல்லை பிறவி இங்கு இல்லை

ஏனோ உனை போல் எனக்கிந்த ஆண் தொல்லை

கண்டேன் நான் கண்டேன்

கண்டியா என்னடி

அதிசயம் கண்டேன் ரகசியம் கண்டேன்

நாதனாய் நினைந்ததேன் -நீ 

இம்மாநாடும் புரிந்ததாயே

சிரிப்போ உனக்கே எதார்க்கோ

உன் ஆசை உள்ளம் பொங்கிடுதே 

எனை நாடியே விஜயனும் வருவாரா

எனைத் திருமணம் புரிவாரே

ஜகமிதிலே ஏக்கிணையே எவரிங்கே 

வாழ்வு மலர்ந்திடுமே -என்

ஹையா ஆசையா பாரு

நீ ஆகாச கோட்டை கட்டாதே

இது ஆகாத காரியம் கிட்டாதே

நேற்று வந்த ஒருத்தியிடம்

நேசம் வைத்தானே -அவன்

உன்னை வெறுத்தானே 

அவள் கண்ணழகி அவள் கட்டழகி 

அவள் காதலிலே மனம்

சொக்கி விட்டான் சுந்தரி

அவன் உனை மறந்தான் கண்மணி

இனி உனக்கிதுவே தண்டனை

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.