பர்மா ராணி 1945ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம். இரண்டாம் உலகப் போரின் போது, இங்கிலாந்து அரசின் வசம் இருந்த இன்று மியான்மர் என அழைக்கப்படும் அன்றைய பர்மா, ஜப்பான் வசம் சென்றது. ஆகஸ்ட் 1942இல் ஜப்பானிய நிர்வாகம் பர்மாவில் நிறுவப்பட்டது. அஞ்சல் தலைகள்கூட வெளியிட்டார்கள்.

1944 இன் பிற்பகுதியில் தொடங்கி, ஜூலை 1945 இல் ஜப்பானிய ஆட்சியின் முடிவுக்கு வழிவகுத்த நேச நாட்டுப் படைகள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தின. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில், 1945 ஏப்ரல் 13ஆம் நாள் இந்தத் திரைப்படம் வெளியாகி இருப்பதால், அந்தக் காலகட்டத்தில் மக்களின் மனநிலை என்ன என்பது போன்றவற்றைச் சொல்லும் படமாக இதைச் சொல்லலாம். அதாவது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டம் அது.

சட்டென்று பார்த்தால், விமானப் படை வீரரான நாயகன் அவருடன் பணிபுரியும் வீரர்கள், அவர்களுக்கு உதவும் நாயகி என நாட்டுப்பற்று மிக்க பாத்திரங்களைக் கொண்ட படம் எனத் தோன்றலாம். ஆனால், இது நடப்பது பிரிட்டிஷ் இந்தியாவில். படம் எடுக்கப்பட்டு வெளிவந்ததும் நாம் அடிமை இந்தியா எனச் சொல்லப்படும் ஆங்கிலேயர் ஆட்சியில். அதனால் எப்படி இருக்கிறது எனப் பார்க்கும் ஆர்வம் மேலோங்கியது.

பர்மியத் தளபதியும், பிடிபட்ட இந்திய விமானி ஒருவரும் பேசுவதாக ஓர் உரையாடல் வருகிறது. பர்மிய அதிகாரி, ‘நீயும் ஆசியன், நானும் ஆசியன் இருவரிடமும் ஒற்றுமை வேண்டும்’ எனச் சொல்ல, சீனாக்காரனும்தான் ஆசியன்; இந்த ஒற்றுமை அவர்களிடம் இல்லையே என இவர் கேட்கிறார். இது அப்போதைய புவியியல் அரசியலை நமக்குச் சொல்கிறது.

கதை என எடுத்துக் கொண்டால், இந்திய விமானப்படை வீரரான கேப்டன் குமார், ஜப்பான் ஆக்கிரமித்த பர்மாவில் தாக்குதல் நடத்திய போது, விமானம் பழுதடைய, அவர் மற்றும் உடன் வந்த வீரர்கள், பாரசூட்டில் இறங்கி, மாறு உடையில், ரங்கூன் புத்த விகாரத்தை அடைகின்றனர். புத்த பிக்கு அவர்களுக்கு உதவுகிறார். அந்தக் காலகட்டத்திலேயே புத்த பீடம், அங்கு அரசியலில் நுழைந்து இருக்கிறது.

குமார் வெளியே சென்ற போது, ஒற்றன் பின்தொடர்ந்து வந்ததால், ஒரு வீட்டு மாடியில் குதிக்கிறார். அது பர்மாவின் அமைச்சர் வீடு. அமைச்சரின் வளர்ப்பு மகள் ராணி, அப்பாவிற்குத் தெரியாமல், குமாரை மறைத்து வைக்கிறார். ராணி ஓர் இந்தியப் பெண். இருவரும் காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

ஜப்பானியத் தளபதி ராணியைப் பலாத்காரம் செய்ய முயலும் போது, வளர்ப்புத் தந்தை கண்டிக்கிறார். மேலும் ஏழரை லட்சம் அரிசி மூட்டைகளை டோக்கியோவுக்கு அனுப்பும் உத்தரவில் ராணியின் வளர்ப்புத் தந்தையாகிய அந்தப் பர்மிய அதிகாரி, கையெழுத்திட மறுத்ததால், ஜப்பானிய தளபதி, அவரைச் சிறையிலடைத்துவிட்டு, ராணியின் வளர்ப்புத் தந்தை, டோக்கியோவிற்குச் சென்றிருப்பதாக வானொலியில் பொய்ச் செய்தியைப் பரப்புகிறார்.

புத்த பிக்குவின் உதவியால் விமானிகள், ராணி இந்தியாவிற்குத் தப்பி வருகின்றனர். குமாரும் ராணியும் திருமணம் செய்து வாழ்கின்றனர் எனக் கதை முடிகிறது.

Burma Rani என ஆங்கிலத்தில் பெயர் போட்டதும், K. L. V. Vasantha எனக் நாயகியின் பெயரைத்தான் முதலில் போடுகிறார்கள். பின் இயக்குநர் பெயரை ஆங்கிலத்தில் போடுகிறார்கள். பிறகு தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயர்களை ஆங்கிலத்தில் போட்ட பின், தமிழில் நடிகர்கள் பெயர் போடுகிறார்கள்.

ஹொன்னப்ப பாகவதர், செருக்களத்தூர் சாமா, கே. கே. பெருமாள், டி. எஸ். பாலையா, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், சி. டி. ராஜகாந்தம்

எஸ். வி. சகஸ்ரநாமம் போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.

.பர்மிய ஆடை அலங்காரம், குடை பிடித்து ஆடும் நடனம், நீள கோபுரம் கொண்ட புத்த விகாரம், யானைப்படை போன்றவை இயக்குநர் டி. ஆர். சுந்தரத்தின் இயக்கத்தின் சிரத்தையை, சிறப்பைச் சொல்கின்றன. படத்தைக் கோவை மாடர்ன் தியேட்டர் நிறுவனத்தினர் தயாரித்து வெளியிட்டுள்ளனர்.

(தொடரும்)

படைப்பாளர்:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.