பெண்கள் வானத்தில் பறக்கும் விமானத்தை அண்ணாந்து பார்த்து வியந்த காலம் போய், விமானத்தில் பயணிக்கும் காலமும் வந்துவிட்டது. என்னதான் குடும்பத்தினரோடு பயணித்தாலும் மனதில் நீங்காத இடத்தில் இருப்பது திருமணத்துக்கு முன் நான் செய்த தனிப் பயணங்களே…
திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் வருவதற்கு ஏன் உடன்குடி பஸ்ஸை பிடிக்கக் கூடாது என்று யோசித்து, தவறான பேருந்தில் ஏறியதற்காக வீட்டில் எல்லோரும் கிண்டல் அடித்திருக்கிறார்கள்.
அதுவரை எங்கே செல்ல வேண்டும் என்றாலும் அப்பாவோ அண்ணனோ கொண்டு விட்டு, அழைத்து வந்து பழகியவளுக்கு, தவறான பேருந்தில் ஏறி இறங்கியதுகூட இன்று வரை எதையோ சாதித்த உணர்வைத்தான் தந்திருக்கிறது.
ஆனால் அதன் பின்னர் சென்னையிலும் பெங்களூரிலும் என் காலடி படாத இடங்கள் இல்லை எனும் அளவுக்கு தனியாகவோ தோழிகளோடோ பயணித்த நாள்கள் என்றும் மனதில் நீங்காத இடம் பெறுபவை.
‘இவ தனியா போனா எங்கயாவது தொலஞ்சிறப் போறா’ என்று கவலைப்பட்டவர்கள்கூட, ‘விட்டா தனியா உலகத்தையே சுத்தி வந்துருவா போலையே?’ என்று சொல்லுமளவுக்கு நான் மாறிய காலம் வந்தது. என்னால் எதையும் தனியாக செய்ய முடியும் என்று என் மீதே எனக்கு தன்னம்பிக்கை வர காரணம் என்னுடைய பயணங்கள்.
நான் தனியாக வாழ்ந்த காலங்களில் அதிகம் பயணத்திலே கழிந்திருக்கிறது. சுற்றுலாத் தலங்களில் வரலாறுகள் நிறைந்து இடங்களுக்கு பயணிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். உணவகத்தில் தனியாக உண்பதிலும், தனியாக ஷாப்பிங் செல்வதிலும்கூட ஒருவித சுதந்திரம் இருக்கிறது.
வாரக் கடைசியானால் எங்கே செல்ல வேண்டும் என்று வாரம் தொடங்கும் போதே முடிவு செய்து, அந்த இடம் குறித்து தகவல்கள் சேமித்து, பயணிப்பது இரயிலிலா? பேருந்திலா? அந்த இடம் தனிப் பயணத்துக்கு ஏற்றதா, போன்ற தகவல்கள் சேமித்து என்று பயணிப்பது ஒரு நாள் என்றால், அந்த பயணத்துக்கான திட்டமிடலில் மீதி நாள்கள் கழிந்திருக்கின்றன. மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் வேலை பார்த்த நாள்களில், புத்துணர்வைத் தந்தவை பயணம் குறித்த எதிர்பார்ப்புகள்.
பெண்கள் தனியே பயணிப்பது குறித்த பெரும்பான்மையினரின் அச்சத்துக்குக் காரணமாக சுட்டப்படுவது பாதுகாப்புக் குறைவு. அமரும் இருக்கைக்கு அடியில் கை வைத்து மகிழ்ச்சி அடையும் அல்பப் புத்தி கொண்டவர்கள், பேருந்து நெரிசல் என்று சொல்லி மேலே விழ எத்தனிக்கும் உத்தமர்கள், ரயில்வே ஸ்டேஷனில்கூட தவறாக நடக்கத் தயங்காத நல்லவர்கள், வழி கேட்கிறேன் என்று சொல்லி தவறாக தீண்ட முயலும் கண்ணியவான்கள் எல்லாரையும் கடந்துதான் ஒரு பெண் தனியாக பயணிக்க வேண்டி இருக்கிறது.
முதல் முறை அழுது, தோழிகளிடம் சொன்ன போது, ‘இதெல்லாம் சகஜம்’ என்று கிடைத்த ஆறுதல் வார்த்தைகளால், அதைவிட அதிகமாகக் காயமடைந்தேன். ஆனால் அதற்காக எனக்குள் முடங்குவதற்குப் பதிலாக, எல்லை மீறும் கைகளை திருக்கக் கற்றுக் கொண்டேன். கையில் திறந்த நிலையில் எப்போதும் இருக்கும் சேஃப்டி பின் உண்மையில் பல நேரங்களில் பேருந்துப் பயணத்தில் என்னை பாதுகாத்திருக்கிறது. கையில் இருக்கும் குடையை ஆயுதமாக மாற்றக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்படியான தடைகளைத் தாண்டி தொடங்கிய என் பயணங்கள் என் எல்லைகளைத் தாண்டி என் சிறகுகளை விரிக்க கற்றுத் தந்தன.
பயணம் எனக்குக் கற்றுத் தந்த இரண்டாவது மிக முக்கியமான பாடம், எப்போதும் நமக்கு பாதுகாப்பாக இருக்கும் ஒரே நபர், நாம் மட்டுமே. பல வருடங்களுக்கு முன் பெங்களூரில் என்னுடன் பயணப்பட்ட நெருங்கிய தோழியான சூர்யாவுடன் இன்றும் பகிர்ந்து சிரிக்கும் பல அழகான நினைவுக்கு பயணித்த சமயங்களில் நிகழ்ந்தவையே. கூகுள் மேப்ஸால் தவறான சாலையில் சென்று பின் திரும்பி, வழி கேட்டு சரியான பாதையில் பயணிக்க, வழியில் எத்தனையோ தெரியாத நபர்கள் உதவி கோரியிருக்கிறோம்.
பயணத்தில் சந்தித்து இன்று வரை நல்ல தோழர்களாக இருப்பவர்களும் என் நட்பு வட்டத்தில் உள்ளனர். சென்னையில் வார இறுதியில் பார்க்க உத்தேசிக்கும் இடத்தை வரைந்து எடுத்துச் சென்று அதை புகைப்படங்கள் பிடித்திருக்கிறேன். என் கிறுக்கல்களும் பொருளுள்ளவையாக மாறியது அப்போதுதான். கவலை என்று மெரினாவில் தனியாக நின்று அழுது, பின் என்னை நானே தேற்றிக்கொண்டு மீண்டு வந்திருக்கிறேன். சர்ச்சில் உள்ள வண்ணக் கண்ணாடி வழியாக ஊடுருவி தரையில் விழும் வெளிச்சத்தின் அழகை ரசிக்க, மணிக்கணக்கில் அமர்ந்திருக்கிறேன். கொலு பொம்மைகள் பார்க்க மயிலை வீதிகள் முழுவதும் தனியாக திரிந்திருக்கிறேன். பலமுறை தொலைந்து என்னை நானே கண்டு கொண்டிருக்கிறேன். அருங்காட்சியகங்களில் உதவியாளர்களுக்கு கூகுளை விட அதிக தகவல்கள் தெரியும் என்பதை நான் கற்றுக் கொண்டது பயணங்களில்தான். ஒரு புன்னகையுடன் மரியாதை கலந்த ஒரு வணக்கம் எந்த ஒரு மனிதனையும் நட்பாக்கும்.
காலார பல இடங்களில் நடந்திருக்கிறேன். இன்று வரை அப்படித்தான். நாம் இருக்கும் இடங்களை அறிந்து கொள்வதில், நடை செய்யும் உதவி பெரியது. நான் சந்தித்த மனிதர்கள், அடைந்த அனுபவங்கள் என் இன்றைய ‘நானாக’ நான் மாற முக்கிய பங்கு, புத்தகங்கள் அல்லாமல் பயணத்துக்கும் உண்டு.
சின்ன சின்ன பயணங்கள் கூட தரும் அனுபவங்கள் பெரியது. அது கொடுக்கும் சுதந்திரமும் பெரியது. பல நேரங்களில் பயணம் பெண்களுக்கு, ‘நீ இப்படித் தான் இருக்க வேண்டும்’ என்று சமூகம் வரையும் கோட்டைத்தாண்டி, தனியாக தன் விருப்பப்படி தன் வாழ்க்கையை வாழும் வழியாகவே எனக்குத் தோன்றியிருக்கிறது. சுற்றுலா நாள் வாழ்த்துகள்!
படைப்பாளர்
பொ. அனிதா பாலகிருஷ்ணன்
பல் மருத்துவரான இவருக்குச் சிறுவயது முதல் தன் எண்ணங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக எழுதப் பிடிக்கும். நாளிதழ்கள், வலைதளங்களில் வரும் கவிதைப் போட்டிகள், புத்தக விமர்சனப் போட்டிகள் போன்றவற்றில் தொடர்ந்து பங்கேற்று பரிசுகள் பெற்று வருகிறார். இயற்கையை ரசிக்கும், பயண விரும்பியான இவர் ஒரு தீவிர புத்தக வாசிப்பாளர். தன் அனுபவங்களைக் கவிதைகளாக, கட்டுரைகளாக, ஒளிப்படங்களாக வலைத்தளங்களில் பதிந்து வருவதோடு சிறுகதைகளும் கதைகளும் எழுதி வருகிறார்.