குழந்தைகள் என்பவர்கள் நம் மூலம் வந்தவர்கள். அழகான நடமாடும் பூந்தோட்டங்கள். கை, கால் முளைத்த நந்தவனங்கள். ஆடை பொதியப்பட்ட ரோஜாக் குவியல்கள். சின்னஞ் சிறு போன்சாய் மனிதர்கள். கள்ளமற்ற அவர்கள் உலகத்தில் அன்பு ஒன்றுதான் நிரம்பி வழிகிறது. அவர்களின் குழந்தைப் பருவம் பிற்காலத்தில் நினைத்துப் பார்க்கும் போது இனிமையாக இருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இப்போதிருக்கும் வக்கிரம் பிடித்த மனநோயாளிகள் நிறைந்த சமுதாயத்தில் எப்படிக் குழந்தைகள் இனிமையாகக் காலம் கழிக்கும் என்று சொல்லுங்கள்?
சிறு குழந்தைகள், மழலைகள், பால்மணம் மாறாத பிஞ்சுகளைக்கூட வக்கிரம் பிடித்த மனிதர்கள் பாலியல் பலாத்காரம் செய்து, அவர்கள் வாழ்வின் இறுதி வரை ஒருவித மனக்கசப்புடன் இருக்கும்படிச் செய்து விடுகிறார்கள். காம விகாரம் கொண்ட மனிதப் பதர்கள் அந்தப் பட்டாம்பூச்சிகளின் இறக்கைகளைக் குரூரத்துடன் பிய்த்துப் போடுகிறார்கள். அந்தக் குருத்துகளின் இறைஞ்சல் மிகுந்த கண்களைப் பார்த்து விட்டும் இப்படி நடந்து கொள்பவர்களை உயிரோடு சிலுவையில் அறைந்தால்தான் என்ன?.
குழந்தைகளைப் பாலியல் வன்முறை செய்பவர்கள் பெரும்பாலும் பீடோஃபீலியா (pedophilea) என்கிற மனநோய்க்கு ஆட்பட்டவர்களாகத்தான் இருப்பார்கள். சிறுவர், சிறுமியர் மூலம் பாலியல் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வக்கிரவாதிகள் உலகம் எங்கும் இருக்கிறார்கள். பட்ட இந்த இந்தியாவில் இப்போது நிறையப் பேர் இந்த நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள். மேல் நாட்டவர்களுக்காகத்தான் சைல்டு செக்ஸ் டூரிஸம் என்கிற ஒன்று ஏற்படுத்தப்பட்டது. வணிக நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட இத்தகைய சுற்றுலாவின் மூலம் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அவர்களின் நிகழ்காலமும் எதிர்காலமும் கேள்விக்குறியாக்கப்பட்டு இருக்கிறது. லத்தீன் அமெரிக்கன் குழந்தைகள், தென் கிழக்கு ஆசியக் குழந்தைகள் எல்லாம் வறுமை காரணமாக இந்தப் பாலியல் தொழிலுக்கு வருகின்றனர். குழந்தைகள் பாலியல் சுரண்டல் கொடுமையில் முன்னணியில் இருக்கும் நாடுகளான தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, கம்போடியா, அமெரிக்கா, நேபாளம், டொமினிகன் குடியரசு, கென்யா, மொராக்கோ ஆகிய நாடுகளுடன் நம் பெருமைமிகு இந்தியாவும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறது. இந்தப் பாலியல் தொழிலில் குழந்தைகளை ஈடுபடுத்தி வெளிநாட்டவரை ஈர்க்கும் கும்பல் ஒடிசா, கோவா, மகாபலிபுரம் போன்ற சுற்றுலாத்தலங்களில் மும்முரமாக இயங்கி வருகின்றன. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (NHRC) அறிக்கையின்படி புனித யாத்திரை, பாரம்பரியம், கடலோரச் சுற்றுலா என்கிற பெயரில் குழந்தைகள் பாலியல்ரீதியாகச் சுரண்டப்படுகின்றனர். இதனால் இந்தியா, குழந்தை பாலியல் சுற்றுலாவின் ஹாட்ஸ்பாட் ஆக மாறி வருகிறது என்று தெரிவித்திருக்கிறது. எத்தனை வெட்கக்கேடான நிகழ்வு இது?.
பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாக்கவெல்லாம் ஆண்கள் முன்வர வேண்டாம். அவர்களைத் துன்புறுத்தாமல் உங்கள் ஐம்புலன்களையும் அடக்கி வைத்தாலே போதும். ஆண்களின் வக்கிர மனதுக்குத் தீனி போட குழந்தைகளைப் பயன்படுத்துவது மிகவும் கொடூரமான ஒன்று. குழந்தைகளின் வறுமை, குடும்பச் சூழ்நிலை, கல்வியின்மை, வேலையின்மை, பொருளாதாரப் பின்புலமின்மை, பணம் கொடுத்து ஆசையைத் தூண்டுவது போன்ற காரணங்கள் மூலமாக இந்தச் சுற்றுலா நடத்தப்படுகிறது. அரசாங்கமும் சமூகமும் இதற்கு எதிராக குரல் கொடுக்காமல் இருப்பது அதிர்ச்சிகரமான ஒரு விஷயமாகும்.
குழந்தைகள் எளிதாக நம்பி விடுவார்கள். அவர்களை ஏமாற்றுவது எளிது. அவர்கள்தாம் எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள். தனக்கு நடந்ததை வெளிப்படுத்தத் தெரியாது என்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அது மட்டுமன்றி குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகத்தான் அவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அது பெற்றோரின் நண்பர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டினர், வேலையாட்கள், நெருங்கிய ஒரே வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் போன்றவர்களால்தாம் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் சொல்லும் போது பெரும்பாலான பெற்றோர் நம்புவதில்லை. அப்படியே நம்பினாலும் விஷயம் வெளியே தெரிவது அவமானகரமானது என்று மூடி மறைத்து விடுகின்றனர். இல்லாவிடில் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்குதாம் பெரும்பாலும் அடி, உதை போன்றவை கிடைக்கிறது. ஏற்கெனவே உடல்ரீதியான வலிகளில் துன்பப்படும் குழந்தைகள் இத்தகைய நடவடிக்கைகளால் மனதாலும் நொந்து விடுகிறார்கள். அது ஓர் ஆறாத, மாறாத வடுவாக மனதில் ஆழப் பதிந்துவிடுகிறது.
திருவிழாக்கள், பயணங்கள் போன்றவற்றின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குழந்தைகள் தொல்லைக்கு உட்படுகிறார்கள். ஆதரவற்ற குழந்தைகள், தெருவோரக் குழந்தைகள் இவர்களின் நிலை மிகவும் துயரமானது. வீட்டுக்கு அடுத்தபடி குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவது பள்ளிகளில்தாம். ஆனால் அங்கும் பாதுகாப்பற்ற நிலையே நிலவுகிறது. இரண்டாம் பெற்றோராக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் குழந்தைகளிடம் முறைகேடாக நடந்து கொள்வது நாம் நாள்தோறும் செய்தித்தாள்களில் படித்துக் கொண்டுதானே இருக்கிறோம்?. இத்தகைய பாலியல் கொடுமைகளால் குழந்தைகளுக்குப் பல்வேறு விதமான நோய்த் தொற்றுகள் ஏற்படுகின்றன. மனரீதியாகவும் காயங்கள் ஏற்படுகின்றன. மனச்சோர்வு, மன அழுத்தம், தாழ்வு மனப்பான்மை, தனிமையை நாடுதல், படிப்பில் நாட்டம் குறைதல், போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், புதியவர்களைக் கண்டால் பயப்படுதல், எதன் மீதும் ஆர்வம் இன்மை என்று அவர்கள் அவதிப்படுகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 96 சதவீதம் அதிகரித்திருப்பதாக அதிர்ச்சித் தகவலை குழந்தை உரிமைகள் தன்னார்வத் தொண்டு நிறுவனம் (க்ரை) தெரிவித்துள்ளது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2016ஆம் ஆண்டில் 19,765, 2017இல் 27,616, 2018இல் 30,917, 2019இல் 31,132, 2020இல் 30,705, 2021இல் 36,381 மற்றும் 2022இல் 38,911 குழந்தை பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளனவோ?. எத்தனை நிகழ்வுகள் பதிவாகாமல் புதைந்து போயினவோ என்று நினைக்கும் போது நெஞ்சம் பதறி விடுகிறது.
The protection of children from sexual offenses ( சுருக்கமாக POCSO) என்பது இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமாகும். இந்தச் சட்டமானது 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ஆம் தேதி மாநிலங்களவையிலும், மே 12ஆம் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு முன்னால், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் கையாளப்பட்டன. இப்போது போக்ஸோ சட்டம் பிரிவு 3 மற்றும் 4இன்படி குழந்தைகளைப் பாலுறவுக்கு உட்படுத்துவது குற்றம். இதற்குக் குறைந்தபட்ச தண்டனை ஏழாண்டுகள் முதல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். போக்ஸோ சட்டம் பிரிவு 5 மற்றும் 6இன்படி குழந்தைகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் பெற்றோர், பாதுகாவலர், ஆசிரியர், காவல் துறை அதிகாரி போன்றவர்களாக இருந்தால் அதிகபட்சமாக 10 வருட தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரையிலும் அபராதமும் விதிக்கப்படும். போக்ஸோ சட்டம் பிரிவு 7 மற்றும் 8 இன்படி குழந்தைகளிடம் அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது, அவர்களைத் தொட வைப்பது போன்ற பாலியல் சீண்டல்களுக்கு குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் முதல் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் உண்டு.
போக்ஸோ சட்டம் பிரிவு 13 மற்றும் 14இன்படி குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்கள் எடுப்பது, தயாரிப்பது, விற்பனை செய்வது ஆகிய குற்றங்களுக்கு 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு உடந்தையாக இருப்பதும் மிகப்பெரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. குற்றமிழைத்தவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையே உடந்தையாக இருந்தவருக்கும் கொடுக்கப்படும். குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை மறைப்பது பிரிவு 21இன்படி குற்றம். இதற்கு ஆறுமாதம் சிறைத்தண்டனை நிச்சயம். இப்போது வரைமுறை இல்லாமல் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைப் பார்த்த மத்திய அரசு 2019இ ல் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை என்கிற ஷரத்தை மாற்றி, தேவைப்பட்டால் மரண தண்டனை என்று விதித்துள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் ஒன்பது வயதுப் பெண் குழந்தையை, பத்தொன்பது வயது பையனும், ஐம்பத்து நான்கு வயது ஆணும் வன்புணர்வு செய்து அந்தக் குழந்தையைக் கொன்று சாக்கில் அடைத்து, சாக்கடையில் வீசி விட்டனர். நான்கு நாட்கள் தேடலுக்குப் பின் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பெண்கள் கவர்ச்சியான ஆடை அணிவதன் மூலமும், ஆண்களைக் கவரும் வகையில் நடந்து கொள்வதன் மூலமும்தான் ஆபத்தைத் தேடிக்கொள்கிறார்கள் என்று கூவும் கலாச்சாரக் காவலர்கள் எந்தக் கவர்ச்சியும் இல்லாத சின்னஞ் சிறு குழந்தைகளிடம் மிருகத்தனமாக நடந்து கொள்ளும் ஆண்(?)களுக்கு எப்படி முட்டுக் கொடுக்கப் போகிறார்கள்?.
என் தோழி ஒரு சம்பவத்தைப் பகிர்ந்தார். அவரது சிறுவயதில் அவர் வகுப்புத் தோழிகள் நிறையப் பேர் டியூஷன் படித்து அதிக மதிப்பெண் எடுப்பார்களாம். அவர்களுடன் தானும் டியூஷன் செல்ல வேண்டும் என்று தந்தையிடம் கேட்டிருக்கிறார். தந்தையோ பள்ளியில் சொல்லித் தரும் பாடங்களை ஒழுங்காகக் கவனித்தாலே போதும் என்று மறுத்து விட்டிருக்கிறார். சிலநாட்கள் கழித்து அவரது வகுப்புத் தோழி அழுது கொண்டிருப்பதைப் பார்த்து நம் தோழி விசாரித்திருக்கிறார். டியூஷன் மாஸ்டர் இல்லாத சமயத்தில் அவரது மகன் டியூஷனுக்கு வரும் பெண் குழந்தைகளைத் தொட்டுப் பேசியிருக்கிறான். யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியிருக்கிறான். அடுத்த நாள் காலையில் டியூஷன் வகுப்புக்கு அவர்களை வரச் சொல்லியிருக்கிறான். வகுப்புக்குப் போன குழந்தைகளுக்கு மாஸ்டர் வெளியூர் போனது தெரிய வந்திருக்கிறது. கிளம்பியவர்களுக்கு வீடியோவில் படம் காட்டுவதாகச் சொல்லியிருக்கிறான். அப்போதெல்லாம் சினிமா என்பது அரிது. அதனால் குழந்தைகள் அமர்ந்து விட்டன. தொலைக்காட்சியில் ஆபாசப் படம் ஓட ஆரம்பித்திருக்கிறது. குழந்தைகள் பயந்து விட்டன. தோழியிடம் நடந்ததைச் சொல்லிக் கொண்டிருந்த பெண்ணை உள்ளறைக்கு இழுத்திருக்கிறான் அவன். அவள் ஓவென்று கத்திக் கூச்சல் போட்டு அழத் தொடங்கவும், அவன் பயந்து போய் அவர்களை மிரட்டி வெளியே அனுப்பி விட்டிருக்கிறான்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நம் தோழிக்கு கை காலெல்லாம் வெடவெடத்திருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை டியூஷன் என்றாலே அவருக்கு அலர்ஜியாகிவிட்டது. பாதிப்புக்குள்ளான அந்தப் பெண்ணின் நிலை எத்தனை துயரமாக இன்றுவரை இருக்கும் என்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. யாருக்கும் இந்தக் காலகட்டத்தில் நல்லவர் என்று ‘க்ளீன் ஸ்லேட்’ கொடுக்கவே கூடாது. மனித மனம் என்பது வக்கிரங்கள் நிறைந்த குப்பைத் தொட்டி. சமுதாயத்துக்கும், சுற்றி இருப்பவர்கள் நம்மீது வைத்திருக்கும் மரியாதைக்கும் தான் நிறைய பேர் நல்லவர்(?)களாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். சில பல கட்டுப்பாடுகள் இல்லை என்றால் மனிதனைவிடக் ஒரு கேவலமான விலங்கு இந்த உலகத்திலேயே கிடையாது. பாலுணர்வு வக்கிரம் உச்சத்தை அடையும் போது அதற்குக் கண்மண் தெரியாது, உறவுகளும் என்பதுதான் உண்மை.
இவற்றில் இருந்து குழந்தைகளைக் காக்க பெற்றோர் முதலில் குழந்தைகளை நம்ப வேண்டும். அடுத்து என்ன நடந்தாலும் தங்களிடம் தெரிவிக்கலாம் என்கிற நம்பிக்கையைக் குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். யாரிடம் குழந்தைகள் பழகுகின்றனர் என்று கண்காணிக்க வேண்டும். “குட் டச். பேட் டச்” என்பதைவிட யாராக இருந்தாலும் “டோண்ட் டச்” என்று சொல்லிப் பழக்க வேண்டும். பெண் குழந்தைகள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. ஆண் குழந்தைகளும் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். 53 சதவீதம் குழந்தைகள் இத்தகைய துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம். இவற்றைத் தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகளை அவசரமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். குழந்தைகள் யாரிடமாவது பேச விரும்பவில்லை என்றால் அது குறித்து மிரட்டாமல், பக்குவமாகப் பெற்றோர் விசாரிக்க வேண்டும். அடுத்தவர்கள் நம் உடல் மீது எவ்வளவு தூரம் உரிமை எடுத்துக் கொள்ள அனுமதிக்கலாம் என்று குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். பாலியல் கல்வியைப் பள்ளிகளில் ஆரம்பித்து இது குறித்துப் போதிக்கலாம்.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஒரு தனிநபர் பிரச்னையோ அல்லது அந்தக் குழந்தையின் குடும்பம் சார்ந்த பிரச்னையோ மட்டுமல்ல. இது ஒட்டுமொத்த சமுதாயம் சார்ந்த ஒரு பொதுவான பிரச்னை. இதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் தீர்வு காண வேண்டும். குழந்தைகளுக்கு இனிமையான நினைவுகளை மட்டுமே நாம் பரிசளிக்க வேண்டும். அது மிகவும் முக்கியமானது. ஏனெனில் அவர்கள்தாம் நாளைய இந்தியத் தூண்கள். அவற்றை உளுத்துப் போனதாக வளர்க்கக் கூடாது. குழந்தைகளுக்கு என்று ஓர் உலகம் இருக்கிறது. அது அமைதியாக, அழகாக இருப்பது மிகவும் அவசியம்.
படைப்பாளர்:
கனலி என்ற சுப்பு
‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ என்கிற நூல்களாக வெளிவந்திருக்கிறது