ஆச்சரிய சுற்றுலா. ஆம். இன்ப சுற்றுலா என்று ஆரம்பித்த எனக்கு, காத்திருந்தன பல ஆச்சரியங்கள்.

பெண் தோழர்கள் கூடியதும், ‘பாட்டுக்கு பாட்டு’ என்றதும் கீதா தோழர் குறுக்கிட்டு, இரவு சுற்றுலாவின் நோக்கம் குறித்து பேசியது அருமை. பெண்கள் இரவிலும் வெளிவர வேண்டும் என்றதும், வழக்கம்போல பாதுகாப்பு பிரச்னை நம் சிந்தைக்கு வர, ‘ஆயிரம் ஆண்கள் இருக்கும் இடத்தில், ஆயிரம் பெண்கள் இருந்தால் பயமில்லை’ என்ற அவரின் கருத்து பளீர்.

சரி, பூனைக்கு யார் முதலில் மணி கட்டுவது? இதற்கான பதிலாய் சுற்றுலா அமைந்தது அற்புதம். சுற்றுலா வந்த பெண்களில் சிலர் தாங்கள் முன்பே இரவில் உலா வருவதை வெளிபடுத்த, நெளிந்தது என் புருவம். பாதிப்புக்குள்ளான சில பெண்களை, சிறு சதவீதத்தை, பெரிதுபடுத்தி, நம்முள் பயத்தை ஊடகங்கள் விதைத்திருந்தது புலனாகியது. பாதுகாப்பான இரவுப் பயணங்கள் பெரும்பாலும் வெளியே பேசப்படவில்லை. ஏனெனில், அவற்றில் சுவாரஸ்யமில்லை!

பிரதான சாலைகளில் இன்றும் பல பெண்களும், பல குடும்பங்களும் நடு இரவில் சுற்றித் திரிவதை நம் கண்முன் நிறுத்துகிறது கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர். அதுவரை அறிந்திராத உலகம். வியப்பு!

இரவில் மகிழுந்து மற்றும் இருசக்கர வாகனங்களில் பயணிப்பதும் பிரதான சாலைகளில் நடப்பதும் சாத்தியமாய்த்தான் தெரிகிறது. ஆனால் உள்புற சாலைகளில் நடப்பது?

அனைத்து இடங்களிலும் எல்லா நேரத்திலும் ஆண்களின் ஆதிக்கம் இருக்கும்போது, பெண்களுக்கு ஏன் இந்தத் தடை? முதற்கட்டமாக, வெளியே நடப்பவர்களுக்கு சில பாதுகாப்பு செயலிகளும், பாதுகாப்பு வழிமுறைகளும் உதவலாம். அத்துடன் அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தவேண்டும் என்பது என் கருத்து.

இறுதியாக, ஒருவரைப் பற்றி நினைக்கவே வியப்பாக இருக்கிறது. தரவுகளின் சுரங்கம், ஆற்றலின் ஊற்று (நிச்சயமாக மிகைபடுத்தவில்லை). மடைதிறந்த வெள்ளமென வார்த்தைகள், அதில் அலை அலையாய் ஆழமான கருத்துக்கள். அவர் யாரென்பது வாசகர்களின் கற்பனைக்கு…
(இருப்பினும் அறிவார்ந்த நன்றிகள் நிவேதிதா தோழர்)

இது போன்ற இன்னும் பல பல வாய்ப்புகள் பெற்று, பல பல நன்றிகள் கூற விரும்புவதால், தற்சமயம் நன்றிகள் சில…

படைப்பாளர்

அருள்மொழி

சென்னையில் வாழும் மென்பொருள் பொறியாளர். தமிழ் வாசிப்பிலும், எழுதுவதிலும் ஆர்வமுள்ளவர். மகளுடன் சேர்ந்து சுற்றுலா, உணவு, அறிவியல், விளையாட்டு என வாழ்வைக் கொண்டாடுபவர். யாருக்கும் வளைந்து கொடுக்காதவர். வீட்டுப்பணிகளில் கணவருக்கும் சம உரிமை, கடமையை வலியுறுத்துபவர்.