கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.
தமிழில்: சி.சு. சதாசிவம்
5
பாப்புவிற்கு இப்போது ஒன்பது மாதங்களாகியிருந்தது. கட்டிலின் விளிம்பு, படிக்கட்டுகள் போன்றவற்றைப் பிடித்துக்கொண்டு நிற்கப் பழகியிருந்தான். தன் தாயை விட்டு ஒரு விநாடிகூட அப்படி இப்படி நகர மாட்டான். தாத்தா பாட்டியையும் நன்றாக அடையாளம் தெரிகிறது. இன்னும்கூடத் தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்தான். அவன் பால்குடித்துக்கொண்டு இருந்தால் நாதிராவுக்கு ஏதோ ஒரு மன நிம்மதி, மன நிறைவு. பீடி சுற்றிக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தால், முழங்காலில் தவழ்ந்தபடி பாப்பு அங்கு வருவான். பீடித் தட்டை தன் கையினால் இழுப்பான். நாதிராவுக்குப் புரிந்துபோகும்.
”சீ… திருட்டுப்பயலே. பீடி சுற்றாமப் போனா நமக்கு யாரு கஞ்சி ஊத்துவாங்க?” என்று சொல்லிக் கொண்டே அவள் தட்டைக் கீழே வைத்துவிட்டு, குழந்தையை மடியில் படுக்க வைத்துக்கொண்டு பாலூட்டுவாள். அப்படிப் பாலூட்டும்போது அவளது பார்வை எதிரிலிருக்கும் சந்திரகிரி ஆற்றில் பட்டு அதற்கு அப்பால் இருக்கும் பாவோடு கிராமத்திற்கு நீண்டு, அங்கிருந்து காவள்ளி வீட் டுக்கு அந்தத் தென்னை, பாக்குத் தோட்டத்திற்குப் போகும். மாமி இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்? வெள்ளிக்கிழமை மாலைகளில் இப்போதும் ரஷீத் வீட்டிலேயே இருப்பானா? தோட்டத்திற்கெல்லாம் தாயும் மகனுமே நீர் ஊற்றுவார்களா? தான் வரும்போது கோழி, முட்டைமீது அடைகாத்துக்கொண்டிருந்தது. அது இப்போது குஞ்சுபொரித்து அந்தக் குஞ்சுகளும் பெரியவையாகியிருக்கும். மாமிக்கு இடுப்புவலி என்று சொல்லிக்கொண்டிருந்தார். இப்போது எப்படி இருக்கிறதோ என்னவோ? என்ன இருந்தாலும் அங்கேயிருந்து யாரும் ஒருமுறைகூட வந்து பார்க்கவேயில்லையே?
யோசித்துக்கொண்டே நாதிரா தன்னை மறந்து உட் கார்ந்திருந்தபோது, ”நாதிராம்மா, எப்பிடியிருக்கீங்க?” என்ற குரல் கேட்டு நாதிரா திடுக்கிட்டுப் போனாள். காவள்ளியில் மீன் விற்கவரும் ‘பாரூ ‘ என்னும் பெண் உலர்ந்த மீனைச் சுமந்து நின்றுகொண்டிருந்தாள். ஒரு நொடி நாதிராவின் கண்கள் மின்னின. தந்தை வீட்டிலில்லாமலிருந்ததினால் நாதிரா துணிவாகப் பாரூவோடு பேசத் தொடங்கினாள்:
”எங்க வீட்டுப் பக்கமா போயிருந்தியா பாரூ’?” இதைக் கேட்கும்போது அவள் குரல் நடுங்கிற்று. கண்ணில் நீர் தளும்பிற்று. அவள் சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.
”உம், போயிருந்தேம்மா… நேத்துகூட உங்க வீட்டுக்குப் போயிருந்தேன். உங்க மாமியார் தான் ரொம்ப எளைச்சுப் போயிருக்காங்க.”
”இவங்களைப் பாத்தியா?” மெதுவாகக் கேட்டாள் நாதிரா, மகனைக் காட்டியவாறு.
‘‘ஊம்.. பாத்தேன். உங்களுக்கொரு கடுதாசி குடுத்திருக்கிறாங்க.” பக்கத்தில் யாரும் இல்லையென்று உறுதிப்படுத்திக்கொண்டு அந்தப் பெண், தன் சேலைத் தலைப்பில் முடித்து வைத்திருந்த காகிதத்தை அவிழ்த்துக் கொடுத்தாள்.
நாதிராவின் இதயத்திற்குள் ஒரு சந்திரகிரி ஆறு கலகலவென்று ஒலியெழுப்பிக் கொண்டு பாய்ந்தோடத் தொடங்கியது. கைநீட்டி காகிதத்தை வாங்கிக் கொண்டு தன் அறைக்குப் போகப் புறப்பட்டாள். ”உம்மா, பாரூவுக்கு ஒரு டம்ளர் சாயா போட்டுக்குடும்மா” என்று சொல்லிக்கொண்டே தன் அறைக்கு ஓடினாள்.
கடிதத்தைப் பிரித்துப் பார்த்தாள். எழுத்துகள் அவள் கண்முன் நடனமாடத் தொடங்கின. ரஷீத் என்றோ கற்றுத்தந்த எழுத்துகளெல்லாம் மறந்துவிட்டது போலிருந்தது. அப்போது பாடுபட்டு நன்றாகக் கற்றுக் கொள்ளாமல் போனதற்காக இப்போது தன்னைத்தானே நொந்துகொண்டாள். மிகவும் முயற்சி செய்த பின்பு, எழுத்துகள் புரியத் தொடங்கின.
’என் அன்பான நாதிரா,
நீயாகவே வருவாய் என்று இவ்வளவு நாளும் காத்திருந்தேன். நீ வரும் அறிகுறியே காணோம். பாப்புவைப் பார்க்காமல் என்னால் இனி ஒருநாள்கூட இருக்க முடியாது. நாளை சாயங்காலமும் பாரூ வருவாள். அவளோடு தோணியில் ஏறி பாகோடு கிராமத்துக்கு வந்துவிடு. அங்கே நான் டாக்சி கொண்டுவந்து நிறுத்தியிருப்பேன். வீட்டுக்குத் தெரியப்படுத்தாமல் வந்துவிடு. உன் வருகைக்காக காத்திருப்பேன்.
-ரஷீத்’
பாடுபட்டு எழுத்துகளைக் கூட்டி இவ்வளவையும் படித்து முடிப்பதற்கு நாதிராவுக்கு அரைமணியாவது பிடித்திருக்கும். அவள் வெளியில் வந்து பார்த்தபோது பாரூ புறப்பட்டுப் போயிருந்தாள். நாதிராவுக்குத் தலை சுற்றியது. மெதுவாக நடந்து தன் கட்டிலின் மீது விழுந்தாள். குழந்தை பாட்டியின் பக்கத்தில் ஆடிக்கொண்டிருந்தது.
இது என்றாவது நடக்கக் கூடியதா? தான் தன் தந்தைக்குத் தெரியாமல் இந்தச் சந்திரகிரி ஆற்றைத் தாண்டுவது எப்போதாவது முடியுமா ? குழந்தையிலிருந்து கிழவி வரை யாராயிருந்தாலும் முஸ்லிம் பெண்கள் எவ்வளவு அபலைகளாகவும் ஆதரவற்றவர்களாகவும் இருக்கின்றனர். தன் கணவனே வந்து ஆற்றின் அடுத்த கரையில் நின்று கொண்டு அழைத்தாலும் தான் தன் தந்தையின் கண்ணுக்குத் தப்பி அவனிடம் போக முடியாதே. எப்போதும் மாலை வேளைகளில் தன் தந்தை துறைக்குச் சென்று வந்து போகிறவர்களுடன் பொழுது போக்காகப் பேசிக்கொண்டு உட்கார்ந்திருப்பாராதலால் தான் அவரெதிரில் துறையைக் கடப்பது என்பதும் வெறுங் கனவு; தந்தை இனி எப்போதும் தன்னை அனுப்பப் போவதில்லை. இங்கே அவர் தண்டித்துக்கொண்டிருப்பது, அவரைப் பொருத்தவரையில் மருமகனை, மகளையல்ல.
நாதிராவுக்கு இப்போது தெளிவாகவே புரிந்திருந்தது. தந்தை தன்னை என்றும் தன் கணவன் வீட்டுக்கு அனுப்பப் போவதேயில்லை. அனுப்பிவிட்டால் இங்கே யார் பீடி சுற்றுவார்கள்? பீடி சுற்றாவிட்டால், அந்த வருவாய் இல்லாவிட்டால் தந்தைக்குப் பிழைப்பே சுமையாகப் போய் விடும். அவருக்கு ஊரார் என்ன சொல்வார்கள் என்ற பயமும் இல்லை. எல்லோரிடமும் அவரே சொல்லிக் கொண்டிருக்கின்றார், தன் மருமகன் எவ்வளவு கெட்டவன், மோசமானவனென்று. திருமணத்துக்கு வந்தவர்களிடமும்கூட அவராகவே சொல்லியிருக்கிறார். அந்த மருமகனைத் தன் வீட்டு வாசற்படிகூட ஏறவிடமாட்டேன் என்று.
நாதிரா தனக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியைத் தன் தாய்க்குத் தெரியப்படுத்தினாள். தந்தையை ஏமாற்றிவிட்டு மகள் ஆற்றை தாண்டவே முடியாது. என்ன இருந்தாலும் பாத்திமா கிராமத்தவர். தந்தைக்குத் தெரியாமல், தந்தையை வேதனைப் படுத்திவிட்டு, போகக் கூடாது; தந்தையின் உத்தரவும் ஆசீர்வாதமும் பெற்றே போகவேண்டும் என்பது அவரது ஆசை. அதனால் அவரால் எந்த விதத்திலும் மகளுக்கு உதவி செய்ய முடியவில்லை.
வேதனை நிறைந்த, நீண்ட, உறக்கமில்லாத இன்னோர் இரவையும் கழித்தாள் நாதிரா. எவ்வளவு தான் எண்ணிப் பார்த்தும் எந்த வகையான மாற்றுவழியையும் அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
தன் கணவனுக்கு ஒரு கடிதமாவது எழுதிக் கொடுத்தனுப்ப வேண்டும் என்று விரும்பினாள் அவள். ஆனால், பென்சிலும் காகிதமும் அந்த வீட்டில் என்றுமே இடம் பெற்றதேயில்லை. ஒருவேளை அவை இருந்தாலும் தன்னால் எழுத முடிந்திருக்குமோ இல்லையோ என்று அவள் தனக்குள்ளாகவே சந்தேகப்பட்டுக் கொண்டாள்.
மாலையாயிற்று, மீன் கூடையைச் சுமந்துகொண்டு பாரூ வந்தாள். நாதிரா கையைக் கையைப் பிசைந்து கொண்டாள். இவ்வளவு நாட்களாக இந்த நரகத்திலிருந்து எப்படியாவது தப்பித்துத் தன் வீட்டுக்கு, தன்னுடைய சொர்க்கத்திற்குப் போய்விட வேண்டுமென்று இரவுபகலாகத் தவித்துக்கொண்டிருந்தாள், நம்பிக்கொண்டிருந்தாள். என்றாவது ஒரு நாள் தன் தந்தை மனம் மாறி தன்னை இங்கிருந்து அனுப்பினாலொழிய தானாகவே அங்கே போவது என்பது நடைபெற முடியாத ஒன்று.
பாரூ தன்னை அழைக்க வந்தபோது அவள் பட்ட வேதனை கொஞ்ச நஞ்சமல்ல. அந்த மீனவப் பெண்ணிடம் என்ன சொல்வது என்றே அவளுக்குத் தெரியவில்லை. கடைசியில் அவள் கெஞ்சும் குரலில் பாரூவிடம், ”இங்கபாரு பாரூ, எங்கப்பாவுக்குச் சொல்லாம, அவருக்குத் தெரியாம நான் இங்கிருந்து பொறப்படவே முடியாது. எப்படியாவது எங்கப்பாவோட சமாதானம் பண்ணிகிட்டு என்னெ கூட்டிட்டுப் போகும்படி அவருக்குச் சொல்லு. இங்கேயே இருந்தா எனக்குப் பயித்தியம் புடிச்சிடும்னு சொல்லு” என்றாள்.
அழுதுகொண்டே நாதிரா இதைச் சொன்னதும் பாரூ எதுவும் சொல்ல முடியாமல் சற்று நேரம் அங்கேயே நின்றிருந்து, பிறகு மெதுவாக அவள் புறப்பட்டுப் போனாள். நாதிரா, இதயமே வெடித்துப் போகும்படியான பொறுத்துக்கொள்ள முடியாத வேதனையில் உழன்றுகொண்டே, கால்களை மெதுவாக இழுத்துக்கொண்டு வந்து ஆற்றங்கரையிலிருக்கும் ஒரு பாறையின் மீது ஆற்றுநீரில் கால்களைத் தொங்கவிட்டவாறு, மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள். டாக்சி வந்து நின்றிருந்த இடம் இங்கிருந்து நாதிராவுக்கு நன்றாகத் தெரிந்தது.
காரின் மீது சாய்ந்துகொண்டு நின்றிருந்த தெளிவற்ற உருவத்தைப் பார்த்ததும் நாதிராவின் இதயம் வேகமாக அடித்துக்கொள்ளத் துவங்கியது. நிலையான பார்வையோடு அவள் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவனும் இந்தத் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். நாதிரா சேலைத் தலைப்பினால் அவ்வப்போது கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருந்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, பாரூ ஆற்றங்கரையில் தோணியிலிருந்து இறங்கி அவன் அருகில் சென்று எதையோ சொன்னாள். ஒருவிநாடி அவனது பார்வை இப்பக்கத்து ஆற்றங்கரையிருந்த பாறாங்கல்லின் மேல் நிலைத்தது. பிறகு கையை மெதுவாகத் தூக்கி அசைத்தான். நாதிராவும் கையசைத்தாள், குழந்தையின் கையைத் தன் கையால் பிடித்துக் கொண்டு அசைத்தாள். பார்த்துக்கொண்டிருக்கும்போதே ரஷீத் காரில் உட்கார்ந்தான். கார் மண்ணை வாரி இறைத்துத் தூசியைக் கிளப்பிவிட்டுப் புறப்பட்டுப் போயிற்று. ஆற்றுநீரோடு அவளது கண்ணீரும் கலந்துகொண்டிருந்தது. சந்திரகிரி அமைதியோடு அவளது பாதங்களை வருடிக் கழுவியவாறே ஓடிக்கொண்டிருந்தது.
தன் வாழ்வின் ஓர் அத்தியாயம் முடிவடைந்ததைப் போலிருந்தது. ஆனாலும் அவள் இதயத்திற்குள் ஓர் ஆசை விளக்கை ஏற்றி வைத்துக்கொண்டே நாட்களைத் தள்ளிக்கொண்டிருந்தாள். தன் கணவன் என்றாவது ஒரு நாள் தன் தந்தையுடன் சமாதானம் செய்து கொண்டு தன்னைக் காவள்ளிக்கு அழைத்துக்கொண்டு போவான் என்று அவள் திடமாக நம்பிக்கொண்டிருந்தாள். அதனால் தான் பாரூ வந்துபோனதற்குப் பிறகு அவள் சற்றுத் தெம்போடிருந்தாள். பீடி சுற்றுவதில் முன்னைவிட உற்சாகம் காட்டினாள்.
ஒருநாள் நாதிரா திண்ணையில் அமர்ந்து குழந்தைக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது, புருகா போட்டுக் கொண்டு யாரோ தன் வீட்டுப்பக்கம் வருவதைப் பார்த்தாள். கூடவே பதினேழு பதினெட்டு வயதுப் பையன் ஒருவனும் இருந்தான். பையனை எங்கோ பார்த்திருப்பதைப் போலிருந்தது. ‘புருகா’ பெண்மணி அருகில் வந்ததும் நாதிராவுக்கு அடையாளம் தெரிந்தது. தன்னுடைய மாமியார்!
ஒரே நொடியில் அவளது எண்ண மேகங்களனைத்தும் திடீரென்று வீசிய சூறைக்காற்றில் கலைந்ததைப் போலாயின. மாமியாரைப் பார்த்ததும் அவளது கண்கள் ஒளிரத் தொடங்கின. இருந்த இடத்திலிருந்தே அழைத்தாள், ”உம்மா, யாரு வந்திருக்காங்க… பாரு!”
பாத்திமா வெளியே வந்து பார்த்தார். சம்பந்தியம்மாவைப் பார்த்து அவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. உள்ளே அழைத்துப் பாய் விரித்தார். நாதிராவின் மடியில் பால் குடித்துக் கொண்டிருந்த பேரனை எடுத்துக்கொண்டே உள்ளே வந்து ஆமினா பாயில் உட்கார்ந்தார். பாத்திமா எல்லார் நலனையும் ஒன்றுவிடாமல் விசாரித்துவிட்டுச் சம்பந்திக்குத் தேநீர் போடச் சமையல் அறைக்குப் போனார். நாதிரா தன் அறைக்குப் போய் தன் துணிமணிகளை மடித்து எடுத்துவைக்கத் துவங்கினாள். தன்னை அழைத்துக்கொண்டு போவதற்காகவே மாமியார் வந்திருக்கின்றார். மாமியாரே வந்து நயமாகக் கேட்கும்போது தன் தந்தை தன்னை அனுப்பாமல் இருக்க முடியாது. அவளது இதயப் பறவை இறக்கை விரித்துப் பறந்தது. தன் இனியவனைப் பார்க்கப் போகும் உற்சாகத்தில் அவனது அணைப்புக்குள் புதைந்து கிடக்கப்போகும் மகிழ்ச்சியில் அவள் உலகத்தையே மறந்துவிட்டாள். துணிமணிகளை எடுத்து வைத்துவிட்டு அவள் வெளியே வந்தாள். அரிதாக வந்திருக்கும் சம்பந்திக்குக் கொடுப்பதற்காகத் தாய் சிற்றுண்டி தயாரித்துக் கொண்டிருந்தார்.
”உம்மா, மாமி எங்கே?” நாதிரா கேட்டாள்.
”அங்கே உக்காந்துட்டுல்லியா? நான் இங்க சாயா, பலகாரம் பண்ண வந்தேன். கொழந்தைய எடுத்துகிட்டு வெளியே போனாங்களோ என்னமோ. அவன் அழுத சத்தம் கேட்டது. அவனுக்குப் பாட்டிய அடையாளம் தெரிஞ்சிருக்காது. எங்கெ இருக்கிறாங்க, போயிப் பாரு.”
நாதிரா வெளியே வந்து புழக்கடை, தோட்டமெல்லாம் தேடிப் பார்த்தாள். ஆற்றங்கரை வரையில் பார்வையை ஓட்டினாள். பார்வை ஆற்றங்கரையின் அப்புறத்திற்கு வந்து நின்றது. அங்கே ஒரு கார் நின்றுகொண்டிருந்தது. எதிர்த் துறையில் தோணியிலிருந்து புருகா போட்டிருந்த பெண்மணியொருவர் கீழேயிறங்கினார். தன் வீட்டுக்கு மாமியாருடன் வந்திருந்த பையனின் கையில் தன் குழந்தையிருந்தது. குழந்தை அழுகிறதா இல்லையா என்று நாதிராவுக்கு இவ்வளவு தொலைவிலிருந்து தெரியவில்லை. நாதிரா மலைத்துப்போய் இடி விழுந்தவளைப் போல் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அவர்களிருவரும் வேகவேகமாக நடந்து சென்று நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி உட்கார்ந்தனர். தூசியைக் கிளப்பியவாறு கார் புறப்பட்டுப் போயிற்று.
(தொடரும்)
படைப்பாளர்
சாரா அபுபக்கர்
கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.