கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

2

ர‌ஷீத், நாதிரா. இவர்களின் இல்லறம் எளிமையானது, இணக்கமானது. காலையில் எழுந்து கணவன் மனைவி இருவரும் குளித்துவிட்டு நமாஜ் செய்வார்கள். அத்தையும் நமாஜ் செய்வாள். பிறகு வழக்கமான வேலைகள். வீட்டு வேலைகளை மாமியாரும் மருமகளும் பங்கிட்டுக்கொண்டு செய்வார்கள். ஆடிடம் பால் கறப்பது, கோழிகளுக்குத் தீனிபோடுவது இவையெல்லாம் இப்போது நாதிராவின் வேலைகள். ரஷீத் தேநீர், சிற்றுண்டி முடித்துக்கொண்டு மணிப்புரத்திற்குப் புறப்பட்டுப் போனால், திரும்பி வருவது இரவு எட்டுமணி பஸ்ஸில் தான். இந்த பஸ்ஸைத் தவற விட்ட நாட்களில் நடந்தே வீடு சேரவேண்டியிருக்கும். கணவன் வீட்டுக்கு வராமல் நாதிரா சாப்பிடவே மாட் டாள்.

எப்போதாவது நகரத்தில் நல்ல மீன் வந்தால் ரஷீத் மீன் வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சற்று விரைவாகவே வந்துவிடுவான். அதைக் கழுவி எடுப்பது, துண்டுதுண்டாக அரிந்தெடுப்பது, காரம் சேர்ப்பது, குழம்பு வைப்பது, பொரித்தெடுப்பது போன்றவற்றை நாதிரா மகிழ்ச்சியோடு செய்வாள். இரவுநேர கடைசி நமாஜ் முடிந்த பின்னால் எல்லோரும் சாப்பிடுவார்கள். இவை இவர்களின் நாள்தோறும் நடைபெறும் வேலைகள். வெள்ளிக்கிழமை ரஷீத் கடைக்குப் போகமாட்டான். வீட்டிலேயே இருந்து தோட்டத்தில் ஏதாவது வேலை செய்வான். பாக்குச் செடிகளின் அடித்தண்டை சரிப்படுத்துவது, அவற்றிற்கு நீர் ஊற்றுவது, தென்னைமட்டைகளைப் பொறுக்கிச் சேர்ப்பது, அவற்றை விறகுக்காகச் சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டிவைப்பது போன்ற வேலைகளையெல்லாம் செய்வான். இந்த வேலைகளில் நாதிராவும் கணவனுக்கு உதவியாக இருப்பாள். தென்னங்கீற்றுகளைப் பின்னும் வேலையை மட்டும் நாதிராவும் அத்தையும் செய்வார்கள். நடுப்பகலாகும்போது ரஷீத் மசூதிக்குப் போய் தொழுகை செய்துவிட்டு வருவான். வெள்ளிக்கிழமை மாலை மட்டும் மணிப்புரத்திற்குச் சென்று ஒரு சினிமா பார்த்துவிட்டு வருவான்.

ஒருமுறை நாதிரா கேட்டாள்: ”சினிமான்னா எப்பிடியிருக்குங்க? ஒருமுறை என்னையும் கூட்டிப் போங்களேன்.”

உடனடியாக அவனால் எதுவும் சொல்ல முடியாவிட்டாலும் ஏனோ அவளது அந்த விருப்பம் அதற்குப் பிறகு அவனை உறுத்தத் தொடங்கியது. அதன் பிறகு அவன் சினிமாவுக்குப் போனாலும் அவனால் முன்போல தன்னை மறந்து சினிமாவை ரசித்துப் பார்க்க முடியவில்லை. நாதிரா அவனிடம் இப்படிக் கேட்டு, பிறகு அதை மறந்தே போய்விட்டிருந்தாள். ஆனால், அவனால் அதை மறக்கவே முடியவில்லை. முஸ்லீம் பெண்கள் யாரும் அங்கு
திரையரங்குகளுக்குப் போகும் வழக்கமில்லாத காரணத்தால், அவளை மட்டும் அழைத்துக்கொண்டு போவதென்பது வெறுங்கனவாகவே இருந்தது. இப்போதெல்லாம் அவனுக்குப் படம் பார்ப்பதில் ஆர்வம் குறையத் தொடங்கியிருந்தது. வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டுக்குப் பின்புறம் இருந்த தோட்டத்திலேயே ஏதாவது வேலை இருந்தால் செய்வது, இல்லாவிட்டால் நாதிராவோடு உட் கார்ந்து பேசிக்கொண்டிருப்பது என்பதே அவனுக்குப் படத்தைவிட அதிக மகிழ்ச்சியைத் தந்தது. எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருந்தபடியால் இப்போதெல்லாம் பத்திரிகைகளையும் படிக்கத் தொடங்கியிருந்தான். நாதிராவுக்கும் படிக்கக் கற்றுக்கொடுக்க முயற்சி செய்தான்.


இப்படிக் கணவனின் அன்பில் திளைத்துக்கொண்டிருந்த நாதிராவுக்குத் தாய்வீட்டு நினைவு வருவதே மிகவும் குறைவு. அவள் தன்னையே மறந்துவிட்ட மகிழ்ச்சியில் திளைத்தாள். கணவனுக்கு எதற்கும் தொல்லைத் தரமாட்டாள். பண்டிகைக்குத் தனக்குச் சேலை வேண்டாமென்று சொல்லியும் கேட்காமல் கணவனே சேலை வாங்கி வருவான். முகம் சற்று வாடினாற் போலிருந்தாலும் மாமியார் கேட்பார், ”ஏம்மா நாதிரா.. ஒடம்பு சரியில்லையா?” என்று.


இத்தகைய மாமியையும் கணவனையும் விட்டுவிட்டுத் தாய்வீட்டுக்குப் போனால் ஒரேநாளில் தந்தையைத் துணைக்கு அழைத்துக்கொண்டு திரும்பி வந்துவிடுவாள். இல்லாவிட்டால் கணவனே வந்து அழைத்து வந்துவிடுவான். அவள் தனியாக எப்போதும் சந்திரகிரி ஆற்றைத் தாண்டியதில்லை. தன்னைச் சார்ந்த ஆண்துணையில்லாமல் தோணியில் உட்கார்ந்து ஆற்றைக் கடந்து போவதும் நடைமுறையில் இயலாத ஒன்றாகும்.

இப்போது நாதிரா ஓர் ஆண் குழந்தைக்குத் தாய். குழந்தைக்கு ஆறு மாதம் ஆகிறது. குழந்தைக்கு மூன்று மாதம் முடிவதற்குள்ளாகவே நாதிராவுக்குத் தாய்வீடு சோர்வு தட்டியது. கணவன் வாரத்திற்கு ஓரிருமுறை வந்துபோய்க் கொண்டிருந்தாலும் அவளுக்கும் குழந்தைக்கும் வேண்டியதையெல்லாம் கொண்டுவந்தாலும் கூட, வந்து அரைமணி நேரத்திற்குள் அவன் புறப்பட்டுவிடுவான். அதனால் அவனோடு தனிமையில் நெருங்கியிருக்கப் போகும் நாளை எதிர்பார்த்து ஏங்கத் தொடங்கினாள். அத்துடன் இப்போது தாய்வீட்டு நிலைமையும் முன்பு போல் அவ்வளவு திருப்திகரமாக இல்லை.

தந்தை, தங்கை ஜமீலாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்யும் முயற்சியில் இருந்தார். என்னவெல்லாமோ செய்து நாதிராவுக்குச் செய்துபோட்ட தங்க நகைகளின் அளவுக்கே ஜமீலாவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால், எவ்வளவு தான் அலைந்தும் வரதட்சணை பணத்தை மட்டும் ஏற்பாடு செய்ய முடியவில்லை. என்றைக்காவது ஒரு நாளைக்கு வீட்டுக்கு மீன் வாங்கி வருவார். தாய் பாடுபட்டு, வயிற்றைக்கட்டி வாயைக்கட்டி பணத்தைச் சிறுகச் சிறுகச் சேர்ப்பதைப் பார்க்கும் போது நாதிராவுக்கு அழுகையாக வரும். ஆனால், அவள் எதுவும் செய்ய முடியாதநிலை. தான் கணவன் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டால், தன்னால் ஏற்படும் செலவாவது அவர்களுக்குக் குறையுமே என்று எண்ணி தாயிடமும் அப்படியே சொன்னாள்.

” உம்மா . . நான் காவள்ளிக்குப் போறனே…”

” என்ன சொல்றே நீ, நாதிரா ? உன்னெ இவ்வளவு சீக்கிரம் அனுப்பிட்டா உங்க மாமியார் ஊட்டுலே என்னென்னு நெனைப்பாங்க? கொழந்தைக்கு ஆறுமாசம் ஆகட்டும், அதுக்கப்புறமா போயேன்…”

” அப்படீன்னா இன்னும் மூணுமாசமா? ஐயோ என்னால முடியாதும்மா ”

அன்று மாலையே ரஷீத் வந்ததும் அவள் அவன் காதோடு காதாகச் சொன்னாள்.

”பாருங்க… எனக்கு இங்க முடியலே, பொழுதே போகல. அங்கெயும் ஊட்டுல அத்தை மட்டும் தனியா இருக்காங்க. அவங்க வந்து எங்க அம்மாகிட்ட என்னெ அனுப்பிவையுங்கன்னு கேட்டா எங்கம்மாவும் தடை சொல்ல மாட்டாங்க. நான் வீட்டுக்கு வந்துடறேன்.”

உடல் நிறைய ஆசையைச் சுமந்து, தன் குழந்தையை மடியில் கிடத்திக் கொண்டு முலைப்பால் கொடுத்துக்கொண்டே, தன் இனியவள் தன் வீட்டுக்கு வருகிறேன் என்று கேட்கும் போது, இதயம் இருக்கும் எந்தக் கணவன் தான் அதை மறுக்க முடியும்?

மறுநாள் ஆமினா வந்ததைப் பார்த்ததும் ஃபாத்திமாவுக்கு ஆச்சரியமாக இருந்தது.

” கொழந்தைக்கு இன்னும் ஆறுமாசங்கூட ஆகலயே? இப்பவே கூட்டிப் போனா எப்பிடி?” என்று சலிப்போடு ஃபாத்திமா கேட்டாள். கொடிக்கு காய் ஒரு சுமையா என்ன?

ஆனால் ஆமினா, ”எனக்கு வீட்டுல தனியா இருக்கிறது என்னமோ மாதிரியாயிருக்குது. ரஷீத் காலையிலே போனா திரும்ப வீட்டுக்கு வர்றது ராத்திரிதான். உங்க பொண்ணு எனக்கும் மகமாதிரிதானே?” என்று மருமகளை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

இதைக் கேட்டதும் ஃபாத்திமா எதுவும் பேச முடியாமல் மௌனமானாள். நாதிரா கணவன் வீட்டுக்குப் புறப்பட்டு போனாள்.

மஹமத்கான் எவ்வளவு முயற்சி செய்தும் ஜமீலாவின் திருமணத்திற்குத் தேவையான வரதட்சிணைப் பணம் மூவாயிரம் ரூபாயைத் திரட்ட முடியவில்லை. பையனின் வீட்டார் அவசரப்படுத்தினார்கள். வேறு இடத்தில் பெண் பார்த்துக் கொள்வதாக மிரட்டத் துவங்கிவிட்டனர். நல்ல பையன், நல்ல சம்பந்தம். பையனுக்குச் சின்னதாக ஒரு கடையும் உண்டு. அந்தக் கடையிலேயே உட்கார்ந்து பீடியையும் சுற்றுகிறான். எப்படியோ தொல்லையில்லாமல் இல்லறத்தை நடத்திக்கொண்டு போகலாம். அத்தகைய சம்பந்தத்தை இப்போது விட்டுவிட்டால் இன்னும் இப்படிப்பட்ட பையன் கிடைப்பது அரிது.

ஒரு நாள் காலை மஹமத்கான் எழுந்து சிற்றுண்டி தேநீர் முடித்துக்கொண்டு ஃபாத்திமாவிடம் சொன்னார்:

”பாரு, நான் மணிப்புரத்துக்குப் போயிட்டு வர்றேன். ரஷீத்கிட்ட கொஞ்சம் வேலை இருக்கு. வர சாயங்காலமாகலாம்.”

” அப்பிடியே போயிட்டு நாதிராவையும் கொழந்தையையும் பாத்துட்டு வாங்க. அவ வர்றதாயிருந்தா கூட்டி வாங்க. ரெண்டு நாள் வச்சிருந்துட்டு கூட்டிப்போயி உட்டுட்டா போச்சு. ரெண்டு மூணு வாட்டி கொழந்த கனவுல வந்திடிச்சி.”

”அவள கூட்டி வரணும்னா டாக்சி வைக்கணும். சும்மா காருகாரனுக்குத்தான் காசு அழுவணும். எப்பிடியும் கலியாணத்துக்கு வரப்போறா இல்லியா? அதுவரைக்கும் சும்மாயிரு” என்று கான் ஓர் அதட்டல் போட்டார்.

கணவனை எதிர்த்துப் பேசியறியாத ஃபாத்திமா மீண்டும் வாய்திறக்காமல் தன் ஆசையை அடக்கிக்கொண்டாள்.


படகுத்துறைக்கு மஹமத்கான் வரும்போது தோணி புறப்படத் தயாராக இருந்தது. அவரும் தோணி ஏறி இடம் பிடித்தார்.

தோணியிலிருந்தவர்களெல்லாம் மஹமத்தானுக்குத் தெரிந்தவர்கள்தான். சிறிய ஊரானதால் எல்லோரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்களாகவே இருந்தனர். மெதுவாக எல்லோரும் சம்பிரதாயமாக எதையோ பேசத் துவங்கி, அவரவர் சுகதுக்கங்கள், பிள்ளைகளின் திருமணம், பணத்தொல்லை, விளைச்சல் நிலைமை என்று ஏதேதோ பேசிக்கொண்டு வந்தனர். தோனி பாகோடுத் துறையை அடைந்ததே தெரியவில்லை. தோணியிலிருந்து இறங்கி அவரவர் இலக்குகளை நோக்கிச் சென்றனர். மஹமத்கான் தீய்த்த வெய்யிலுக்குத் தடுப்பாகக் குடையைப் பிடித்துக்கொண்டு மணிப்புரத்தை நோக்கிப் புறப்பட்டார்.

(தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.