UNLEASH THE UNTOLD

ராம் குமார்

ஆணுக்கு (ம்) அவசியம் பாலியல் கல்வி

ஆணுக்குப் பாலியல் கல்வி அளிப்பதன் மூலம் ஆணாதிக்கம், பாலியல் பாகுபாடு, பெண் அடிமைத்தனம் போன்றவை ஒழியும். பாலியல் கல்வி இல்லாத ஆண்பிள்ளை வளர்ப்பு இன்னோர் ஆணாதிக்கவாதியைத்தான் உருவாக்கும்.

அவனுடைய செய்கைக்கு அவனே பொறுப்பு!

ஆண்கள் செய்யும் தவறுகளுக்கு ஒரு காரணம் தன் வீட்டார், தான் தவறு செய்யும்போது தனக்கு உறுதுணையாக இருப்பார்கள், தன்னைக் காப்பாற்றுவார்கள் என்னும் எண்ணமே. மாறாக நாம் அவனிடம் நீ செய்யும் தவறுக்கு நீயே பொறுப்பு என்பதை சிறுவயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். எப்படி இன்னொரு வீட்டு ஆண் தவறு செய்யும்போது அவனைச் சட்ட ரீதியாகத் தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வருகிறதோ அதேபோல நம் வீட்டு ஆண்மகனும் அவ்வாறு தவறு செய்யும்போது சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும் என்கின்ற எண்ணம் நம் பெற்றோர்களுக்கு வரவேண்டும்.

பெண்களே ஆண்களைத் தேர்ந்தெடுக்கட்டும்!

சுய சார்பும் சுயமரியாதையும் கொண்ட ஒரு பக்குவமடைந்த பெண்ணால் சுயமாகத் தேர்ந்தெடுக்கப்படும் ஓர் ஆண், பெண்களை மதிப்பவனாகவும் தன் சக உயிராக நினைப்பவனாகவும் காதலிக்கத் தெரிந்தவனாகவும், நல்ல தோழனாகவும், அந்தப் பெண்ணிற்குப் பொருத்தமானவனாகவும் வாழ்க்கைத் திறன்கள் கற்றவனாகவும் பிரியும் நிலை ஏற்படும்போது, கண்ணியத்துடன் விடைபெற்றுச் செல்பவனாகவும் இருப்பான்.

கரண்டியை எங்களிடம் கொடுங்கள்!

ஆண்களுக்குச் சமைக்க வராது என்றெல்லாம் இல்லை. சில ஆண்கள் வீட்டில் மனைவி சின்னச் சின்ன வேலைகள் சொன்னால் தப்புத்தப்பாகச் செய்து வைப்பார்கள். அப்படிக் காட்டிக் கொண்டு தப்பும் தவறுமாகச் செய்தால் மறுபடி சமைக்க அல்லது வீட்டு வேலை செய்யச் சொல்ல மாட்டார்கள் என்ற நினைப்பில் அவ்வாறு நடிக்கிறார்கள்.