இன்றைய சூழலில் ஒவ்வொருவரும் காலை எழுந்ததிலிருந்து இரவு படுக்கைக்குச் செல்லும் வரை வேலை வேலை என்று அடுத்தடுத்த வேலைகளைப் பற்றியும், மறுநாளுக்கான தேவையைக் குறித்து மட்டும் சிந்தையில் வைத்துக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துவதில்தான் பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.

வாழ்க்கையில்  தேவையை நோக்கி ஓடிச் செல்லும் ஓட்டத்தில், பலவற்றை ரசிக்கவும் உணரவும் மறந்து விடுகிறோம். அதில் புத்தக வாசிப்பு பழக்கமும் ஒன்று.

அன்றாட வாழ்வில் ஓடும் ஓட்டத்தின் முடிவில், கடமைகள் முடிந்து ஓய்வெடுக்கும் வயதில், நாம் இத்தனை நாட்கள் சேர்த்து வைத்தவற்றின் விளைவாக மனநிறைவுடன் முழுமையாக மகிழ்வுடன் வாழ்ந்திருக்கிறோமா என்று பலரிடம் கேட்டால், பெரும்பாலனவர்களின் பதில் இல்லை என்றுதான் இருக்கும்.

நாம் உயிராக நேசித்த உறவுகள், ஆசை ஆசையாகத் தேடிச் சேர்த்த பொருட்கள் என எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிடும் என்பதுதான் உண்மை.

’ஒரு நல்ல நூலைப் போல சிறந்த நண்பனும்,

நெருக்கமான உறவினனும் எனக்கு வேறு இல்லை!’ பேரறிஞர் அண்ணா.

நம் தனிமையின் தவிப்பை நீக்கி, புத்துணர்ச்சியுடன் இருக்கச் செய்து,  வாழ்வின் கடைசி வரை நமக்கு உறுதுணையாக இருந்து வழிகாட்டும் தோழன் இவன். நாம் இருக்குமிடத்திலிருந்தே இப்பிரபஞ்சம் முழுவதையும் சுற்றிக் காட்ட அவன் ஒருவனால் மட்டுமே முடியும். நம் ஞானத்தை பட்டைத் தீட்டி ஜொலிக்க வைக்கும் ஆகச் சிறந்த நண்பன். அந்த ஆயுள்கால நண்பனின் பெயர்தான் ‘புத்தகம்.’ 

நம் தலைமுறைகளுக்கு எதை எதையோ சேர்த்து வைப்பதற்காகப் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்யத் தயாராக இருக்கும் நம்மில் பலர், குறைவான விலையில் கிடைக்கும் நல்ல புத்தகங்களைச் சேகரித்து வைத்து அடுத்த தலைமுறைகளுக்கு வழிகாட்ட மறந்து விடுகிறோம்.

இன்றைய தலைமுறைகளை மட்டுமல்ல, திறன்பேசி பயன்பாட்டில் இல்லாத போது பிறந்த தலைமுறைகளில்  பலரையும், இன்று திறன்பேசி தன் வசம் அடிமையாக்கி விட்டது.

பெரும்பான்மையான பெற்றோர், குழந்தைகளுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், அவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் வருவதே இல்லை என்று புலம்பித் தவிப்பதைப் பார்க்கிறேன்.

அதற்குப் பெற்றோர்களாகிய நாமும் ஒரு வகையில் காரணம்தான் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.  தினமும் இரவு உறங்குவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பு, புத்தகம் படிக்கத் தொடங்குகள். அதற்குப் பிறகு உங்கள் குழந்தைகளும் தானாக உங்களைப் பின்பற்றத் தொடங்கி விடுவார்கள்.

உங்கள் குழந்தைகளிடம் நல்ல மாற்றம் வர விரும்பினால், முதலில் உங்களிடம் அம்மாற்றம் வர வேண்டும். நீங்கள் அதை நடைமுறைப்படுத்தத் தயராகிவிட்டால், அவர்களும் நீங்கள் நினைத்த வண்ணம் உங்களைப் பின் தொடருவார்கள். நம் குழந்தைகள் நம்மைப் பார்த்துதான் வளருகிறார்கள்.

குழந்தைகளைக் கவரும் வண்ணம் பலதரப்பட்ட புத்தகங்களை, அவர்களின் வயதிற்கேற்றவாறு விருப்பமுள்ள புத்தகத்தை தேர்வு செய்யுங்கள். உங்கள் விருப்பத்திற்காக அவர்களுக்கு நாட்டமில்லாத புத்தகங்களைப் படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தாதீர்கள்!

படைப்பாளர்:

 இராஜதிலகம் பாலாஜி. ஜெர்மனியில் வசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்தவர். வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளர். பிரதிலிபி தமிழ், பிரித்தானிய தமிழிதழ், சஹானா இணைய இதழ் பலவற்றில் கதை, கட்டுரை, கவிதை, குறுநாவல், நாவல் பல எழுதி வருகிறார். சிந்தனைச் சிறகுகள் என்கிற சிறுகதைத் தொகுப்பு புத்தகத்தின் ஆசிரியர்.

அவர்களுக்காக வாங்கி வந்த புத்தகத்தை முதலில் நீங்கள் வாசித்திருக்க வேண்டும். அதன்பின் அப்புத்தகத்தின் கதைகளில் வரும் கதாபாத்திரமாக மாறி அவர்களுடன் நீங்கள் உரையாட வேண்டும். அவ்வாறு செய்யும்போது விரைவில் குழந்தைகள் கதைகளைக் கேட்கத் தொடங்கி அக்கதாபாத்திரங்களில் ஒன்றுவதோடு, தொடர்ந்து வாசிப்பதற்கான ஆர்வமும் அவர்களிடம் வந்துவிடும்.

       புத்தக வாசிப்பின் மூலம் குழந்தைகளின் நினைவாற்றல், கற்பனைத் திறன் அதிகரிக்கும். அவர்களின் கவனச்சிதறல் பிரச்னையையும் வாசிப்பின் வாயிலாகச் சரிசெய்ய இயலும்.

அதுபோல இளம் வயதில் வாசிப்பு அதிகமாக இருந்தால் வயதான பிறகு ஞாபக மறதி தொடர்பான பிரச்னைகள், 32 சதவீதம் தடுக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறுகிறார்கள்.

 உடல் தசைகளுக்கு உடற்பயிற்சி தேவைப்படுவது போல மூளைக்கும் பயிற்சி வேண்டும். புத்தக வாசிப்பு பழக்கம்தான் மூளைக்கான சரியான பயிற்சி. முதியவர்கள் வாசிப்பைப் பழக்கப்படுத்திக் கொண்டால், ‘டிமென்ஷியா, அல்சைமர்’ போன்ற மூளை தொடர்பான பிரச்னைகள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

புத்தக வாசிப்பின் வாயிலாக நம் எண்ணங்கள், சிந்திக்கும் திறன், பிறரிடம் நாம் அணுகும் முறை என அனைத்திலும் சிறந்த மாற்றங்களையும் ஏற்றங்களையும் காண இயலும்.

இந்த நூற்றாண்டு மட்டுமல்ல, கடந்த நூற்றாண்டின் நிகழ்வுகள் வரை புத்தகத்தின் மூலமாக நாம் பயணித்து பல தகவல்களை ரசித்து உணர முடியும்.

வாசிப்பை நேசிப்போம்!

இராஜதிலகம் பாலாஜி

     எழுத்தாளர்

பிராங்க்புர்ட்,ஜெர்மனி