கயவர் சொல்லைக் காலில் மிதி

“ஆண்களைவிட பெண்களே அதிகம் கிசுகிசுக்கிறார்கள்” என்கிறார்கள் சில உளவியலாளர்கள். ஆனால் உண்மையில், பெண்களின் வாழ்வையே புரட்டி போடும் அளவுக்கு புரளி பேசும் திறமையில் ஆண்கள் பெண்களை மிஞ்சியவர்கள் என்பதுதான் உண்மை.

தனக்கு வசப்படாத பெண்ணை, தனக்கு அடங்காத பெண்ணை, தன்னை விட திறமையான பெண்ணை எப்படி அடக்குவது? எனும் போது அவர்கள் உபயோகிக்கும் தார்க்குச்சி தான் அவதூறு. ( ஜாலியாக பொழுதுபோக்கவும் பெண்களைப் பற்றி கிசுகிசு பேசுபவர்களும் உண்டு).

வேறு எவ்வகையில் துவளாத பெண்ணும், தன்னைப் பற்றிய அவதூறினால் உடைந்து போவாள். உள்ளம் கலங்கி போவாள். மனதளவில் ஒடுங்கி போவாள். அதுதான் ஆண்களின் வெற்றியாகிவிடும். அவளின் வீழ்ச்சியில், அவளை வெற்றிகொண்ட மமதையில் அவர்களின் காழ்ப்புணர்ச்சி மெல்ல தணியும்.

ஆனால், “கயவர் சொல்லைக் காலில் மிதி. கண்ணியம் காக்க ஏந்து தீ. தூஷணைக்குச் சுருண்டு போதல் அவமானம். அழவைப்பதுதான் அவன் நோக்கம். நீ அழுவது அவன் வெற்றி. அழாதே” என்பதுதான் வதம் கதையின் நாயகி பெண்களுக்கு சொல்லும் கீதை.

திலகவதி ஐ.பி.எஸ் எழுதிய ‘வதம்’ கதையின் நாயகி கோமதி. அவள் அலுவலகத்தில் பணிபுரியும் திறமையான லலிதா என்னும் ஒரு பெண்ணைப்பற்றி அந்த அலுவலகத்தின் மேனேஜரும், கிளார்க்கும் தவறான வதந்தியை கிளப்புகிறார்கள். அதனால் மனம் உடைந்து போகிறாள் லலிதா. கோமதி எவ்வளவு எடுத்துச்சொல்லியும் கேட்காமல், எங்கே தன் வாழ்க்கைக் கேள்விக்குறியாகி விடுமோ என்ற பயத்தில் தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு அவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுகிறாள் லலிதா. ஏற்கனவே இதுபோல் நிகழ்ந்ததில் சந்திரிகா என்னும் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள்.

கொஞ்ச காலம் கழித்து அதே மேனேஜரும் கிளார்க்கும் அடுத்ததாக இதே போன்று கோமதியைப் பற்றியும் அவதூறு பரப்புகிறார்கள். இதை அறிந்த கோமதி, துணிச்சலாக நேரே மேனேஜர் அறைக்குச் சென்று மேனேஜரை கேள்வி மேல் கேள்வி கேட்டு திணறடிக்கிறாள். தன் மீது தவறான பழி போட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் மேலிடத்திற்கு புகார் போகும் என்று சொல்லி அவனை கதிகலங்க வைக்கிறாள். ஒருவழியாக தன் குற்றத்தை ஒப்புக்கொண்டு அடங்கி போகிறான் அந்த மேனேஜர். கோமதி தைரியமாக தன் வேலையைப் பார்க்க வெளியே நடக்கிறாள்.

படிப்பு, வேலை என வெளியுலகை நோக்கி புறப்படும் ஒவ்வொரு பெண்ணும் பலவிதமான ஆயுதங்களால் காயம்பட நேரும். அதில் மிகவும் கூர்மையான ஆயுதம் இந்த அவதூறு. அதற்கு பயந்தால் வெளியே வரவே முடியாது. குனிய குனிய குட்டதான் செய்வார்கள். ஆனால் நாம் ஏன் குனிய வேண்டும்?
“நம் கற்பை நிரூபிக்க தீக்குளிக்க வேண்டி அவசியமில்லை. சீதைக்கு அடுத்த ரேங்க் நீ வரவேண்டாம். எதிர்த்து நில். மனுஷியாக துணிந்து நிற்க வேண்டுமே தவிர காகிதமாக பறக்க வேண்டியதில்லை. ஓ! தாய்க்குலமே உங்கள் புத்திரிகள் நாளை செவ்வாய்க் கிரகத்தில் பால் காய்ச்சப் பேகிறவர்கள். ‘மடி நெருப்பு’ தியரியிலே இருந்து வெளியே வந்துவிடுங்களேன்” என்பவை கோமதியின் வேதவாக்குகள்.

துணிச்சல் என்பது ஒருவர் அளிக்க ஒருவர் பெறுவதல்ல. பூவினுள் மகரந்தம் போல் அவரவர்பால் மருவி விளங்க வேண்டும். பெண்களே பூஞ்சைகளாக இருக்காதீர்கள். துடைத்தெறிந்துவிடுவார்கள். மனதை காளானாய் வைத்திருக்காதீர்கள். கிள்ளி எறிந்துவிடுவார்கள். துணிவினால் உங்கள் உள்ளம் சுடர்விடட்டும். தீயை போல் உங்கள் அறிவுக் கனன்றெறியட்டும்.

சிறுகதை: வதம்
ஆசிரியர்: திலகவதி ஐ.பி.எஸ்

நூல்: பெண்ணியக் கதைகள் (காவ்யா பதிப்பகம்)
தொகுப்பு: முனைவர். இரா. பிரேமா

(‘வெளிச்சத்துக்கு வராத டைரி‘ என்னும் தொகுப்பிலும் இச்சிறுகதை இடம்
பெற்றிருக்கிறது.)

வதம் சிறுகதையை இங்கே படிக்கலாம்.

கலைச்செல்வியின் சவுந்தரி சிறுகதை பற்றி இங்கே படிக்கலாம்.

கட்டுரையாளர்:

ஸ்ரீதேவி மோகன்

பத்திரிகையாளராக கடந்த ஏழு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஸ்ரீதேவி மோகன், குமுதம், தினகரன் உள்ளிட்ட இதழ்களில் பணியாற்றியிருக்கிறார். 2015ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்துள்ளார். 2018-ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற ‘தமிழ் இலக்கியத்தில் மதம், சமூகம்’ பற்றிய சர்வதேச மாநாட்டில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை அளித்துள்ளார். எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி மற்றும் திருவையாறு ஐயா கல்விக்கழகம் இணைந்து நடத்திய எட்டாவவது தமிழ் மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளார்.