ஒரு மனிதப்பெண்ணை உயிரோடு நெருப்பில் தூக்கிப் போட்டு துள்ளத்துடிக்க எரித்துக் கொலை செய்யுமளவிற்கு, ‘கைம்பெண்கள்’ பற்றிய மூடநம்பிக்கை வெறியில் மூழ்கியிருந்தக் காட்டுமிராண்டிச் சமூகம் நம் இந்தியச் சமூகம், குறிப்பாக இந்துச் சமூகம்.
கைம்பெண்கள் வாழ வேண்டிய நெறிகளாக மனுதர்மம் சொல்கின்ற விதிகளும் கட்டுப்பாடுகளும் அட்டவணையில் அடக்க முடியாதவை. இன்றும் வெளியே கிளம்பும்போது கைம்பெண்கள் எதிரில் வருவதை அபசகுனமாகக் கருதும் மனிதர்களை இந்தியச் சமூகம் சுமந்து கொண்டுதான் இருக்கின்றது. ஓரிரு பிள்ளைகளைப் பெற்ற பிறகு, ஒரு பெண்ணின் கணவன் இறந்து போனால், ‘எம்மொவகிட்ட எவ்ளவோ ச்சொல்லிப் பாத்துட்டோம். அவ இன்னொரு கல்யாணம் வேண்டவே வேண்டாங்கா. சவத்த நாங்குடிக்க கஞ்சிய குடிச்சுட்டு அப்டியே இருந்துட்டு போவட்டும்’ என்று பெருமை ததும்பச் சொல்லி தங்களது கௌரவத்துக்கு மகுடம் சூட்டிக் கொள்ளும் பெற்றோர்கள் வாழத்தான் செய்கிறார்கள்.
திருமணமாகாத பெண்ணொருத்தி ‘இப்போ எனக்கு கல்யாணம் வேண்டாம், நா மேல படிக்கணும்’ என்று சொன்னால், ‘இப்போ நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்னா, நாங்க கழுத்த அறுத்துட்டு செத்துருவோம்’ என்று மிரட்டுகிற அதே பெற்றோர்கள்தான் அவர்கள்.
இச்சமூகத்தில் பெண்கள் சம்மதிப்பதில்லை, சுற்றியிருப்பவர்களின் சம்மதத்துக்கு தலையாட்ட நிர்பந்திக்கப்படுகிறார்கள், அவ்வளவே. படிக்கின்ற பெண்ணுக்கு திருமணம் நிச்சயமாவதும், கைம்பெண்ணுக்கு ‘மறுமணம் கிடையாது’ என்பது நிச்சயமாவதும் பெண்களின் சம்மதத்தால் அல்ல. நிர்பந்தத்தால் பெண்கள் தலையாட்டுவதால்…
கைம்பெண்களுக்கு இந்தியச் சமூகம் விதித்த கொடுமையான விதிமுறைகள் யாவற்றுக்கும் அடிப்படையாக அமைந்திருப்பது, மனுதர்மம் என்ற மனு சாஸ்திர நூலின் சில சமஸ்கிருதப் பாடல்களே. அந்த சமஸ்கிருதப் பாடல்களின் புகைப்படங்களை கீழே தருகிறேன்.


இவ்வாறாக மனுநீதி சாஸ்திரத்தின் 5வது அத்தியாயத்தின் 156 முதல் 161 வரையிலான சமஸ்கிருதப் பாடல்கள் கைம்பெண்கள் வாழ வேண்டிய விதிமுறைகளை வகுத்து வைத்திருக்கின்றது. இவ்விதிகளின் முக்கிய சாராம்சம் கைம்பெண்கள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பதாகும்.
ஆனால் அகிலத்திரட்டு அம்மானை கைம்பெண்களின் மறுதிருமணத்தை ஆதரிக்கின்றது. அத்துடன் கைம்பெண்கள் தாலியைக் கழற்றக்கூடாது என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை. பூ, குங்குமம், ஆடை, ஆபரணங்கள், தாலி முதலியவற்றை கைம்பெண்கள் இழக்கக்கூடாது என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.
சான்றோர்களின் புராணத் தொன்மக்கதை அகிலத்திரட்டு அம்மானையில் இடம்பெற்றிருப்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அக்கதையில், திருமால் ஏழு கன்னியர்களை அவர்களின் விருப்பமின்றி புணர்ந்ததால் சன்றோர்கள்(சாணார்கள்*) ஏழு பேர் பிறந்தார்கள். இந்த ஏழு சான்றோர்களும் வளர்ந்து திருமணம் செய்து கொண்டனர். வைகைக்கரை உடைந்து வைகையாற்றின் வெள்ளம் ஊருக்குள் வந்தது. எனவே வைகை அணையடைக்க சான்றோர்களை சோழ மன்னன் ஏவினான். சான்றோர்கள் கூடையில் மண் சுமக்க மாட்டோம் என்று மறுத்து உரைத்தனர். சோழன் சான்றோர்களில் இருவரது தலைகளை யானையின் கால் கொண்டு இடறி அவர்களைக் கொன்றான். இக்கதையை முன்பே பார்த்தோம்.
இறந்துபோன அவ்விரு சான்றோர்களின் மனைவிமார்களும் தவம் புரிந்தனர். அவர்கள் தவம் புரிந்த நிலையை அகிலத்திரட்டு அம்மானை கீழ்க்கண்டவாறு விளக்குகிறது-
இறந்த சான்றோர்களுட ஏந்திழைமாரெல்லாம்
சிறந்த தவம் புரிய சென்றார் காணம்மானை
சென்ற தவத்தின் செய்தி கேளன்போரே
அழுக்குக் கலையணிந்து அந்த பொன் தாழாமல்
இழுக்கு சொல்லீந்த ஈழன் பழி கொள்ளவும்
இறந்த மன்னவர்கள் எழுந்திருந்து எங்களையும்
சிறந்த மனத்தோடு உடன் சேர வந்திடவும்
பழி செய்த சோழனூர் பகல் நரி ஓடிடவும்
அழிவாகி சோழன் அவன் மாண்டு போயிடவும்
வரந்தாரும் என்று மாயவரை நெஞ்சில் வைத்து
பரமான பெண்கள் பரந்தவசு நின்றார்
- அகிலத்திரட்டு அம்மானை1*
மேற்சொன்ன வரிகளில் ‘அழுக்குக் கலையணிந்து அந்த பொன் தாழாமல்’ என்ற வரியை நோக்குக. அழுக்கான உடையணிந்து அந்த தங்கம் தாழாமல் சான்றோர்களின் (சாணார்களின்) மனைவிமார்கள் தவம் செய்தனர் என்றுரைக்கின்றது அகிலத்திரட்டு. இதில் பொன் என்ற சொல் தங்கத்தைக் குறித்தால் கைம்பெண்கள் தங்கம் அணியக்கூடாது என்ற சனாதன தர்மத்தின் விதி உடைபடுகிறது. இதில் பொன் என்ற சொல் தாலி என்ற பொருளைத் தருமாயின் கைம்பெண்கள் தாலியணியக்கூடாது என்ற சனாதன விதி உடைபடுகிறது. எப்படியோ அகிலத்திரட்டு அம்மானை சனாதன விதிகளை உடைக்கிறது.
மேற்சொன்ன பாடலில் பொன் என்ற வார்த்தை தாலியைக் குறிப்பதாகவே நான் கருதுகிறேன். அதற்கு அகிலத்திரட்டு அம்மானையில் மேலும் சில வரிகளை உதாரணமாக்ச் சொல்லலாம்.
சான்றோர்களின் (சாணார்களின்) மேற்சொன்ன தொன்மப் புராணக்கதையில், ஏழு சான்றோர்களை (சாணார்களை) பெற்ற ஏழு கன்னிமார்களும் குழந்தைகளை திருமாலிடம் கொடுத்து விட்டு தவம் செய்ய சென்று விடுகின்றனர். அவ்வாறாக தவம் செய்த ஏழு கன்னிகளும் தவம் முடித்து வந்த பிறகு, தங்களின் ஏழு மகன்களும் (சான்றோர்களும்) பத்திரகாளியிடம் வளர்ந்தனர் என்பதையும், அவ்வேழு சான்றோர்களில் இருவரை சோழன் கொன்றுவிட்டான் என்பதையும் அறிகின்றனர். அறிந்தபொழுது ஏழு கன்னிமார்களும் பின்வருமாறு அழுது புலம்பினார்கள் என்று வர்ணிக்கின்றது அகிலத்திரட்டு அம்மானை.
மக்கள் ரெண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ
பக்குவ வயதிலோ பாளறுவான் செய்த வினை
கல்யாணம் செய்த கண்மணிகள் ஆனாக்கால்
வலியான மங்கையர்கள் மனம் சடைத்து வாடுவரே
இட்ட உடைமை இழக்காது இருப்பாரோ
கட்டின மாங்கலியம் கழட்டாது இருப்பாரோ
இத்தனையும் கழட்டாது இருக்க சிவன் செயலால்
புத்திதனைக் கொடுத்து பெண்ணரசைக் காப்பாரோ
ஏதென்று அறிந்திலமே எங்களுடை தாயாரே”
- அகிலத்திரட்டு அம்மானை2*
இவ்வரிகளில் கட்டின மாங்கலியம் கழட்டாது இருப்பாரோ எனும் வரியை காண்க!
‘சோழனால் கொலை செய்யப்பட்ட இரண்டு சான்றோர்களின் மனைவிகள், அவ்விருவரின் இறப்புக்குப் பிறகு தங்களுடைய உடைமைகளை இழக்காமல் இருந்தார்களா? அவர்களின் மாங்கலியத்தை (தாலியை) கழட்டாமல் இருந்தார்களா? தாலி முதலான உடைமைகளை அவர்கள் கழற்றாது இருக்க சிவன் அவர்களுக்கு புத்திதனை கொடுத்துக் காத்தாரோ? தெரியவில்லையே’ என்று ஏழு கன்னிமார்களும் கதறி அழுதார்கள் என்று அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறது.
எனவே கைம்பெண்களின் மாங்கல்யத்தைக் கழற்ற அய்யாவழி அனுமதிக்கவில்லை. மாறாகக் கணவனை இழந்த பெண்கள் கணவனின் மறைவுக்குப் பிறகும் தாலி அணிய வேண்டுமென அய்யாவழி அறிவுறுத்துகிறது. அப்பெண் மறுமணம் செய்து கொள்ள விரும்பினால் இறந்துபோன கணவன் கட்டிய தாலியை அகற்றிவிட்டு புது தாலியைக் கட்டிக் கொள்ளலாம் என்பதே அய்யாவழியின் கொள்கையாகும். ஆக, பெண்களின் கைம்பெண் கோலத்தை மறுப்பதன் மூலம் அய்யாவழி சனாதனத்துக்கு எதிராக நிற்கிறது.
ஆனால் நான் அறிந்த வரையில் அய்யாவழியினர் எவரும் அகிலத்திரட்டு கைம்பெண்களுக்கு சொன்ன விதிகள் எதையும் பின்பற்றவில்லை. கணவனை இழந்த, வயதான அய்யாவழி பெண்கள் தாலி அணிவதாகத் தெரியவில்லை. வெள்ளை, நீலம் போன்ற நிறமுடைய, ப்ளைன் புடவைகளைத்தான் அணிந்து கொள்கிறார்கள். பூ, பொட்டு வைப்பதில்லை.
தற்காலத்தில் இளம் பெண்களின் கணவர்கள் இறக்க நேரிட்டால், அவர்கள் ஸ்டிக்கர் பொட்டு வைத்துக் கொள்கிறார்கள். டிசைன் வரையப்பட்ட எளிமையான புடவைகளை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் தாலி அணிவதில்லை. பூ, குங்குமம் வைக்க அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
அதாவது, காலத்தின் நாகரீக மாற்றத்துக்கு ஏற்ப அய்யாவழியைப் பின்பற்றும் கைம்பெண்களும் மாறியிருக்கிறார்களேத் தவிர, அய்யாவழி இயக்கம் கைம்பெண்களின் வாழ்வில் சிறு துளி முன்னேற்றத்தையும்கூட உருவாக்கியதாகத் தெரியவில்லை.
பெரியாரில் ஆரம்பித்த திராவிடக் கொள்கைகளின் புழக்கம் மட்டுமே கைம்பெண்களின் வாழ்வில் உருவாகியிருக்கும் சிறு சிறு முன்னேற்றங்களுக்குக் காரணம்.
தரவுகள்
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்:99.
- பொ. முத்துக்குட்டி சுவாமி அவர்களால் இயற்றப்பட்டு, பா. தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட, அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, பக்கம் எண்:151.
படைப்பாளர்
சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.




