அகிலத்திரட்டு வரிகளில் சொல்லப்பட்டிருக்கும் அரசர் யாராக இருக்கலாம்? என்பதை வாசகர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வரலாம்.
ஆய்வின் முடிவு எதுவாயினும், திருவிதாங்கூரின் ஓர் அரசரை எதிரிகள் கொலை செய்ய முயன்றபோது, சாணார்கள்* கொலையாளிகளுக்கு துணையாயினர் என்று மன்னர் நம்பி, சாணார் மக்கள் மீது குற்றம் சாட்டினார் என்றும், அதனால் கோபம் கொண்டுதான் திருவிதாங்கூர் அரசாங்கம் நாடார் (சாணார்) மக்களின் மீது வரிச்சுமைகளை விதித்து கொடுமை செய்தது என்றும் அகிலத்திரட்டு சொல்கிறது. இது சரியான கூற்றா என்பதை ஆராய்வோம்.
திருவிதாங்கூர் மாநிலக் கையேட்டில் (The Travancore State Manual) சாணார்கள் மீதான தனிப்பட்ட வெறுப்பு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.
தெற்கு கொல்லத்தின் கோயில் ஒன்றில் உள்ள தூணில் காணப்படும் கல்வெட்டு சொல்லும் செய்தி, ’18 சாதி மக்களின் குறைகளையும் நிவர்த்தி செய்து, திருவிதாங்கூர் அரசர் அவர்களை தனியான ஓர் இடத்தில் குடியமர்த்தினார்’ என்பதாகும். குடியமர்த்திய அரசரின் பெயர் தெரியவில்லை. இக்கல்வெட்டானது THE TRAVANCORE STATE MANUAL என்ற புத்தகம் எழுதப்பட்ட 1906ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட நான்கு நூற்றாண்டுகள் பழமையானது. அதாவது 16 அல்லது 17ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம்.8
‘சாதி பதினெட்டாய்த் தாம் பிரித்தானே நீசன்’9
என்ற அகிலத்திரட்டின் வரியும் மேற்சொன்ன கல்வெட்டுச் செய்தியும் ஒன்றாய் இருத்தல் காண்க!
‘சாதி பதினெட்டும் தன்னால் கேடு ஆகும் வரை
நீதி அழியாதே நீ சாபம் கூறாதே’10
‘சாதி பதினெட்டும் தலையாட்டிப் பேய்களையும்
வாரி மலையதிலும் வன்னியிலும் தள்ளிவிடு’11
ஆகிய அகிலத்திரட்டின் வரிகள், சாதிகளை 18 என்று பிரித்து வைத்திருக்கும் சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று சொல்வதைக் காணலாம்.
‘சாணார் முதலாய்ச் சாதி பதினெட்டையுமே
நாணாமல் ஓடி வர நாராயணர் நினைத்தார்’ 12
‘பதினெண் சாதிகளும் பண்பாய் ஒரு தலத்தில்
விதி வந்தது என்று மேவிக் குலாவி இருந்தார்’
‘சாதி பதினெட்டும் தலம் ஒன்றிலே குவிந்து
கோரிக் குடிக்கும் ஒரு கிணற்றில்’13
‘சாதி பதினெட்டும் சடல வரவுமற்று
ஆதி வைகுண்டர் அடி வீழ்ந்து ஏற்றி’14
‘சாதி பதினெட்டும் ஆராட்டுப் பார்த்தனரே’15 ஆகிய அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் ஒடுக்கப்பட்ட பதினெட்டு சாதிகளை ஆதரிப்பதைக் காண முடிகிறது.
எனில் தனிமையான ஓரிடத்தில் குடியமர்த்தப்பட்ட 18 சாதிகளும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதை அறியலாம். ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அகிலத்திரட்டு அம்மானை அரவணைக்கின்றது என்பதையும் அறியலாம். பதினெட்டாகப் பிரிக்கப்பட்ட சாதிப்பிரிவினை ஒழிய வேண்டும் என்று ஆரம்பத்தில் கூறும் அகிலத்திரட்டு, வாசிப்பின் பயணத்தில் 18 சாதிகளின் ஒற்றுமையை உணர்த்தி அரவணைக்கின்றது என்பதையும் உணர முடிகின்றது.
அகிலத்திரட்டு யார் யாரை அரவணைக்கிறது? யார் யாரை எதிர்க்கிறது?
‘சாணார் இடையன் சாதி வணிகனுடன்
நாணாத காவேரி நல்ல துலுக்கப்பட்டர் முதல்
சூத்திர பிறமார் தோல் வாணியன் பறையன்
ஊத்திர நீசன் உழவனுடன் குறவன்
கம்மாளன் ஈழன் கருமறவன் பரவன்
வெம்மா நசுராணி வேகவண்டன் இடலையன்
சக்கிலியனோடு சாதி பதினெட்டுகளும்
ஓடிவந்தார் அம்மானை’16
மேற்கூறிய வரிகளைக் கவனிக்கும், ஆண்ட பெருமைக்கு அலைமோதும், எழுத்தாளர்கள் பலரும், மேற்கூறிய வரிகளில் காணப்படும் தத்தம் சாதிப் பெயர்களை பார்த்துவிட்டு வெகுண்டெழுந்து, ‘நாங்கள் தீண்டத்தகாத வகுப்பில் இருந்ததில்லை’ என்று மறுப்பு எழுதுவதை, சமீப காலமாக இணையத்தில் பார்க்க முடிகின்றது.
இப்போது மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகளில் (16ல்) ‘சூத்திர பிறமார்’, ‘சாதி பதினெட்டு’ என்ற வார்த்தைகளை முதலில் ஆராய்வோம்.
சூத்திரப் பிறமார்
பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டத்தில், திருவிதாங்கூரில், குறிப்பிட்ட சில சாதியினரைத்தான் சூத்திரர்கள் என்று அழைத்துள்ளனர். சூத்திரர்கள், மலையாளி சூத்திரர்கள், பாண்டி சூத்திரர்கள் என்ற இருவகையினராக இருந்துள்ளனர்.
மலையாள சூத்திரர்கள் ‘நாயர் சாதியினர்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர். 1871 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நாயர் சாதியில் 34 உட்பிரிவுகள் இருந்ததாகத் தெரிவிக்கிறது. பாண்டி சூத்திரர்கள் என்பவர்கள் தங்களை ‘வெள்ளாளர்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாண்டி சூத்திரர்களில் தேவதாசி அல்லது நட்டுவன் என்றழைக்கப்பட்ட சாதியினர் முதலாக 4 உட்பிரிவுகள் இருந்துள்ளனர்.17
எனவே நாயர், தேவதாசி முதலான சூத்திரர் என்று அழைக்கப்பட்ட சாதியினரும், அய்யா வைகுண்டரைக் காண வந்ததாகச் சொல்லி அகிலத்திரட்டு அம்மானை பெருமை கொள்கிறது என்பது தெளிவு.
சாதி பதினெட்டு
‘சாதி பதினெட்டு’ என்று அகிலத்திரட்டு குறிப்பிடும் மக்கள், அவர்ணர் என்று பிராமணியத்தால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டு, ஒடுக்கப்பட்ட கடைநிலை மக்கள் ஆவர்.
அகிலத்திரட்டு சொல்கின்ற சாணார், இடையன், சாதி வணிகன், தோல் வாணியன், பறையன், ஈழவன், உழவன், குறவன், கம்மாளன், கருமறவன், பரவன், சக்கிலியன், வேகவண்டன், பட்டர், இடலையன் ஆகிய சாதிகளுடன், வலயன், அரயன், முக்குவன், மரக்கன், கணியன், வில்குருப்பு, கணக்கன், புலையன் அல்லது செருமன், வேட்டுவன், உல்லட்டன், நாயாடி, மலயன், காடன் முதலான சாதிகளும், பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டங்களில் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டனர்.18
இதுவரையில் மேலே சொன்ன சாதிகள் எல்லமே, பதினெட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டு காலகட்டங்களில், தமக்குள் தீண்டாமை பார்த்துக் கொண்ட சாதிகள்தான்! அதாவது நாயர் எனப்படும் சூத்திர சாதி, கம்மாளன் முதலான மற்ற சாதிகளிடம் தீண்டாமை பாராட்டியது. கம்மாளன், சாணார், ஈழவன் போன்ற சில சாதிகள் புலையன், பறையன் முதலான சாதிகளிடம் தீண்டாமை பாராட்டியது. புலையன், பறையன் முதலான சாதிகள் உல்லாடன், நாயாடி முதலான சாதிகளிடம் தீண்டாமை பாராட்டியது.
விவரத்திற்கு census of india, 1901, volume XX, PART 1, REPORT ன் பக்கங்களைக் கீழே தருகிறேன்.
குறிப்பு: தீண்டாமை பாராட்டியது என்றேன் (இறந்தகாலம்). தற்போது இந்நிலை வெகுவாக மாறியுள்ளது.
நசுறாணி மற்றும் துலுக்கர்
மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானைப் பாடல் வரிகளில் (16ல்) ‘நசுராணி மற்றும் துலுக்கர்’ என்ற சொற்களைக் கவனிக்க! நஸ்ராணி என்பது, கேரள மக்கள், சிரியன் கிறிஸ்தவர்கள் எனப்படும் நெஸ்தோரியர்களை குறிக்கப் பயன்படுத்தும் சொல்லாகும்.19 ஆனால் அன்றைய திருவிதாங்கூரில் வாழ்ந்த பாமர மக்கள், அனைத்து தரப்பட்ட கிறிஸ்தவர்களையும், நசுறாணி என்றே அழைத்திருக்கலாம் என்பது எனது கணிப்பு. ஏனென்றால் அகிலத்திரட்டு பல இடங்களில் ஆங்கிலேயர்களையும் நசுறாணி என்று குறிப்பிடுகிறது.
துலுக்கர் என்ற சொல் ‘துருஷ்க’ என்ற சொல்லிலிருந்து வந்த சொல்லாகும். ‘துருக்கியர்கள்’ என்பது சமஸ்கிருதம் பேசுபவர்களால் துருஷ்கர்கள் என்று உச்சரிக்கப்பட்டு நாளடைவில் துலுக்கர் என்று மருவியது. துலுக்கர் என்பது முகம்மதியர்களின் ஒரு பிரிவினரைக் குறிக்கும் சொல்லாகும்.20 ஆனால் கேரள நாட்டு, மற்றும் நாஞ்சில் நாட்டு மக்கள் முஸ்லிம் மக்களை பொதுவாக துலுக்கர்கள் என்று அழைப்பதை இன்றும் தென் மாவட்டங்களில் காணலாம்.
திருச்செந்தூர் கோயிலில் நிகழ்ந்த முறைகேடுகளை அய்யா வைகுண்டர் நக்கன் ஒருவனிடம் சொன்னதாக முன்பே பார்த்தோம். நக்கன் என்பது சமண மதத் துறவியைக் குறிக்கும். சமண மதத் துறவி ஒருவர் அய்யா வைகுண்டரின் நண்பராக இருந்துள்ளார் என்பதை இதன் மூலம் அறியலாம்.
இவ்வாறாக அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடும் சாதியினர் அனைவருமே சமூகத்தின் விளிம்பு நிலையில் ஒடுக்கப்பட்டவர்களாக வாழ்ந்த சூழலில் சாணார் சாதியினரும், அவர்களுடன் சேர்ந்து வரிவிதிப்பு முதலான கொடுமைகளுக்கு ஆளாயினார்களே அன்றி, குறிப்பாக சாணார்கள் மட்டும், திருவிதாங்கூர் அரசன் ஒருவனின் மரணத்திற்கு வீண்பழி சுமத்தப்பட்டு, பழிவாங்கப்பட்டார்கள் என்ற வாதம் ஏற்புடையதாக இல்லை.
மன்னர் மார்த்தாண்ட வர்மா (1729 – 1758) தனது ஆட்சிக் காலத்தில் மறவர்கள் கொண்ட போர்ப்படை ஒன்றை உருவாக்கினார்.21 மன்னர் ராம வர்மா (1758-1798) தனது படைகளில் சிப்பாய்களாக, சோவாக்களை நியமித்திருந்தார் என்று பாதிரியார் பார்தலம்யூ (Friar Bartolomeo) எழுதியுள்ளார். ஈழவர்கள்தான் சோவாக்கள் என்றழைக்கப்பட்டனர். சாணார்கள் (நாடார்கள்) ஈழவர் சாதியின் ஓர் பிரிவு என்றே 1901ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவேடு குறிப்பிடுகின்றது.22 நாயர்கள் திருவிதாங்கூர் படைப்பிரிவில் வீரர்களாக பணியாற்றியுள்ளனர்.
சாணார்கள் (நாடர்கள்) திருவிதாங்கூர் மன்னர் அரண்மனையிலும் படையிலும், சிப்பாய்களாகவும் மெய்க்காப்பாளர்களாகவும் பணியாற்றியுள்ளார்கள் என்பது உண்மையே! ஆனால் குறிப்பிட்ட வன்மத்தினைக் கொண்டு அரசால் பழி வாங்கப்பட்டார்கள் என்பதற்கு வரலாற்றில் சான்று இல்லை. திருவிதாங்கூர் கையேடு அவ்வாறான தகவல் எதையும் தரவில்லை.
ஆதிக்க சாதி வெறியாட்டத்தாலும், சர்வாதிகாரத்தாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களில் சாணார் இன மக்களும் உண்டு என்பதே ஏற்புடையதாக உள்ளது.
சமீப காலமாக அனந்த பத்பனாபன் என்பவர் நாடார் என்றும், அவர் டி லெனாயை கைது செய்த வீரர் என்றும் உண்மைக்குப் புறம்பாகக் கட்டுக்கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் நாடார் சாதி வெறி கொண்ட எழுத்தாளர்களுக்கு, திருத்தமிழ்த்தேவனார் ‘குளச்சல் போர்’, ‘குளச்சல் போர் கட்டுக்கதைகளும் கற்பனைக் குதிரைகளும்’ ஆகிய இரு புத்தகங்களின் வாயிலாக, ஏற்கனவே மறுப்பு எழுதி விட்டதால், இந்த வதந்தியை நாம் கடந்து செல்கிறோம்.
மேலும் சாணார்கள் மெய்க்காப்பாளர்களாக இருந்துள்ளார்கள் என்றுதான் அகிலத்திரட்டு அம்மானை சொல்கிறதேத் தவிர, தளபதியாக உயர்பதவிகளில் இருந்ததாக அகிலத்திரட்டு கூறவில்லை. எனவே சமீப காலத்திய நாடார் சாதி வெறியர்களின் அனந்த பத்மநாபன் பொய் மூட்டைகளை, அகிலத்திரட்டு ஆமோதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
‘சட்டை குல்லா கொடுத்து தலைப்பா மிகக் கொடுத்து
பட்டயமுங்கொடுத்து பாரயிறைக்கூலி விட்டு
வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே
வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள்
காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார்‘ என்ற வரிகளில் (1) சாணார் மக்கள், மெய்க்காப்பாளராகவும், ஏவலாளிகளாகவும் வேலை செய்ததற்காக அய்யா வைகுண்டர் வருந்துவதைக் கவனிக்க! சாணார்கள் உயர் பதவிகளில் இல்லை என்ற வருத்தமே அது.
ஆக மொத்தத்தில், ‘சாணார் சாதியினர் திருவிதாங்கூர் அரசின் தனிப்பட்ட பழி வாங்குதலுக்கு ஆளாகியிருந்தார்கள் என்று அய்யா வைகுண்டர் நம்பியிருக்கிறார் என்பது உறுதி. எனவேதான் சாணார் சாதியினை முதன்மைப்படுத்தும் கருத்துக்களை அகிலத்திரட்டு அம்மானையில் பதிவு செய்திருக்கிறார். சாணார் சாதி சத்திரிய சாதி என்று நிறுவ முயற்சி செய்திருக்கிறார்’ என்ற முடிவுக்கு வரலாம்.
அத்துடன் அகிலத்திரட்டு அம்மானை ஓரிரு வாரங்களுக்குள்ளாகவோ, மாதங்களுக்குள்ளாகவோ எழுதி முடிக்கப்பட்ட ஒரு நூலாக இருக்க முடியாது. ஏனென்றால் அகிலத்திரட்டு எழுதப்பட்ட, 1841ஆம் ஆண்டுக்குப் பிறகு 11 ஆண்டுகள் கழித்து, வைகுண்டர் இறந்த நிகழ்வுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே அகிலத்திரட்டு எழுதி முடிக்க பல ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்பதே உண்மை! எழுதத் தொடங்கிய போது அய்யா வைகுண்டருக்கு இருந்த அரசியல் புரிதலுக்கும், எழுதி முடிக்கும் போது இருந்த அரசியல் புரிதலுக்கும் நேர்மறை வேறுபாடு இருந்திருக்கும். எனவேதான் அகிலத்திரட்டின் தொடக்கத்தில், புராணக்கதைகளும், சாணார் (நாடார்) சாதிக்காக உருவாக்கப்பட்ட ஆரியக் கட்டுக்கதைகளும் இடம்பெற்றுள்ளன. பிறகு, வாசிப்பின் பயணத்தில், எழுதப்பட்டுள்ள சாதிய சமூக அவலங்களும், 18 சாதிகளாகப் பிரித்த சாதியப் பிரிவினையின் அழிவும், 18 சாதி மக்களை அரவணைத்த பண்பும், பிற்காலங்களில் நடைபெற்றதாக இருக்கலாம். அதை அகிலத்திரட்டில் பதிவு செய்திருக்கலாம். ஆக அய்யா வழி இயக்கம் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட மக்களோடு, சாதியத்தால் வஞ்சிக்கப்பட்ட பிற சாதி மக்களையும், ஏழ்மையால் வாடிய மக்களையும்கூட அரவணைத்து ஏற்கின்றது என்பதே உண்மை.
‘ஏழைக்குடி சாதிகட்கு மீள விடை கொடுத்தாய்’ – அகிலத்திரட்டு.23
இக்கட்டுரையில், அகிலத்திரட்டு ஆதரிக்கும் சாதிகள் அனைத்தும் தமக்குள் தீண்டாமை பார்த்தாலும், அகிலத்திரட்டு அவர்களை ஏற்கின்றது.
எனில் அகிலத்திரட்டு அம்மானையும், அய்யா வழி இயக்கமும், அய்யா வைகுண்டரும் எதிர்ப்பது யாரை? மேற்கூறிய சாதியினர் அனைவரையும் ஒட்டு மொத்தமாக, தீண்டத்தகாதவர்களாக பார்க்கும் பார்ப்பனர் முதலான உயர் சாதி இந்துக்களை அல்லவா?
எனில் அய்யா வழி சனாதனத்திற்கு எதிரானது என்பது சரியான வாதமே!
தொடரும்…
தரவுகள்
8. The travancore state manual, V.Nagam Aiya, first published 1906, பக்கம் எண் – 196
9. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் ஒன்று, பக்கம் எண் – 408.
10. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 62.
11. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 64
12. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 144.
13. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 146.
14. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 148.
15. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 282.
16. அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் இரண்டு, பக்கம் எண் – 144…, அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் ஆண்டு 178, [2011] இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் – 300.
17. Census of travancore report 1874, பக்கம் எண் – 198.
18. CENSUS OF INDIA, 1901. VOLUME XX., Cochin, PAR1– I. REPORT~ BY M. SANKARA MENON. D. A, SUPERINTENDENT OF CENSUS OPERATIONS. COCHIN STATE. பக்கம் எண் – 181.
19. அறியப்படாத கிறிஸ்தவம், நிவேதிதா லூயிஸ், பக்கம் எண் – 37
20. Census of india 1901, volume XXVI, travancore, Part 1, report by, N.Subramaniya aiyar, M.A, MBC. பக்கம் எண் – 354.
21. The travancore state manual, V.Nagam Aiya, 1906, VOL I , பக்கம் எண் – 334.
22. Census of india 1901, volume XXVI, travancore, Part 1, report by, N.Subramaniya aiyar, M.A, MBC. பக்கம் எண் – 278.
23. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் ஆண்டு 178, [2011] இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் – 271.
படைப்பாளர்
சக்தி மீனா
பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.