கீழ்வரும் அகிலத்திரட்டு அம்மானை வரிகளில் ‘சான்றோர்’ என்று குறிப்பிடப்படுவது நாடார் சாதியினரையே ஆகும். நீசன் என்று குறிப்பிட்டிருப்பது திருவிதாங்கூர் அரசனை ஆகும். மேலும் சாணார்* என்று கட்டுரையில் குறிப்பிடப்படும் மக்கள், இப்போது ‘நாடார்’ என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

*இந்தச் சொல் மானுடவியல் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுக்காக அப்படியே பயன்படுத்தப்பட்டுள்ளது, பிற இடங்களில் இதன் பயன்பாட்டில் படைப்பாளருக்கோ, பதிப்பாளருக்கோ உடன்பாடு இல்லை.

‘பெரிய திருமாலே எந்தனக்குத்

கைக்குள்ளே ஏவல் கருத்தாகச் செய்வதற்கு

மெய்க்குணம் போலுள்ள சாதி ஒன்று

வருவித்து எந்தனுட மணிவாசல் காத்திருக்க

தருவித்து நல்ல சாதியொன்று என்றுரைத்தான்

அப்போது மாயன் அதற்கு ஏது செய்யலுற்றார்

இப்போது உந்தனுக்கு ஏவல் தொழில்கள் செய்ய

ஆகின்ற பேரை அழைத்துக்கோ என்றுரைத்தார்

வேகின்ற நீசன் விளம்புவான் அமைச்சருடன்

ஆரைக்கொடு வரலாம் அருகில் விட்டு வேலை செய்ய

ஏரை ஒத்த மந்திரியே இயம்புமெனக் கேட்டனனே

அப்போது மந்திரிகள் அந்நீசனுக்கு உரைப்பார்

இப்போது வேறொருவர் இருந்தால் ஆகாதெனவே

நல்ல வகையான நாடும் சான்றோர்களைத்தான்

வல்ல வகையாலும் வருவித்து வைப்பீரால்

ஆகுமந்த சாதியென்று அந்நீசனுக்கு உரைத்தார்’

மேற்சொன்ன அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளின் பொருள், புரிந்து கொள்ள மிகவும் எளிதானது. ‘நீசன்’ என்று  அகிலத்திரட்டு அம்மானை வர்ணிக்கும் திருவிதாங்கூர் அரசன், தனக்கு ஏவல் வேலை, மற்றும் காவல் வேலை செய்வதற்கு உண்மையான குணமுள்ள சாதி ஒன்றை சொல்லும்படி திருமாலிடம் கேட்கிறார். ‘உனக்கு ஆகின்ற பேரை வேலைக்கு அழைத்துக்கோ’, என்று சொல்லிவிட்டு திருமால் நழுவிக் கொண்டார்.

திருமால் ஆலோசனை சொல்லாமல் கைவிட்டுவிட்டதால், நீசன் அமைச்சர்களிடம், ‘ஏவல் மற்றும் காவல்  வேலைகளை செய்வதற்கு யாரைக் கொண்டு வரலாம்?’ என்று ஆலோசனை கேட்கிறான். அமைச்சர், ‘வேறு யாரும் இவ்வேலைக்கு சரிப்பட்டு வரமாட்டார்கள், சான்றோர்களைத்தான் வரவழைத்து வேலைக்கு அமர்த்த  வேண்டும், அந்த சாதியினரே இந்த வேலைகளுக்கு சரியாக இருப்பார்கள்’ என்று ஆலோசனை சொன்னான்.

‘வேகும் பொழுதில் வெற்றிச் சான்றோர்களுக்கு

ஆள்விட்டு வருத்தி அதிகநிதி கொடுத்து

வாள் கொடுத்து ஆயுத பாணி மிகக் கொடுத்து

சட்டை குல்லா கொடுத்து தலைப்பா மிகக் கொடுத்து

பட்டயமுங்கொடுத்து பாரயிறைக்கூலி விட்டு

வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே

வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள்

காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார்

அப்படியே காத்திருந்து அவர் வரும் வேளையிலே

முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால்

அந்த நீசன் தனக்கு அழிவு வரும் வேளையிலே

இந்தச் சான்றோர்கள் இவர் தூக்கம் வைத்திடவே

நீசன் வம்சத்தோர் நேரக் கூறே அறிந்து

வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே அவ்வினத்தோர்

சீவன் போகும் வேளை செப்புவான் சாபம் ஒன்று

காவலாய் நீர் இருந்து காட்டிக் கொடுத்தீரென்று

கோபித்தான் சான்றோரை கூறழியப் பேசி அவன்

சபித்தான் சான்றோர்க்கு சத்தியில்லா நீசன்

என் குடும்பத்தோர்கள் ராஜ்ஜியத்தை ஆளும் மட்டும்

உன் குடும்பத்தோர்கள் ஊழியங்கள் செய்து மிக

அழுந்தப்படுவார் எனவும் அந்நீசன் சான்றோர்க்கு

விழுந்த மொழியாய் விரைந்துரைத்தானே நீசன்

சொல்லி அந்த நீசன் சோர்ந்து இறந்தான் அவனும்’

ஆகிய அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் சொல்லும் பொருளைக் காண்போம்.

அமைச்சரின் ஆலோசனைப்படி, சான்றோர்களை வரவழைத்து, அதிகமான சம்பளம் கொடுத்து, வாள் முதலான ஆயுதங்களைக் கொடுத்து, சட்டை, குல்லா, தலைப்பாகை போன்ற சீருடையும் கொடுத்து, பட்டயங்களை பரிசாகக் கொடுத்து, வரிகள் கொடுப்பதில் இருந்து விலக்கு அளித்து அரண்மனையின் வாசல்களில் காவல் காக்கும்படி நீசன் பணியில் அமர்த்தினான்.  வாசனையான மொழியை பேசுகின்ற கலியனின் மாயையால் காளி வளர்த்த கண்மணிகளான சான்றோர்கள் காவல் வேலை செய்தார்கள். அப்படிச் சான்றோர்கள் காவல் காக்கும் போது ஒருநாள், முழுக்கலியன் தோசத்தால், தூங்கி விட்டார்கள்.

அந்த நேரத்தை சரியாகக் கணித்து காத்திருந்த நீசனின் வம்சத்தவர்கள், நீசனை வாசமிட்டு கொன்று விட்டார்கள். இறக்கின்றத்  தருவாயில் நீசன், காவலுக்கு இருந்துத் தன்னைக் கொல்லக் காட்டிக் கொடுத்தது சான்றோர்கள் என்று எண்ணி சான்றோர்களை சபிக்கின்றான். எப்படி சபிக்கிறான் என்றால், ‘என் குடும்பத்தார்கள் ஆட்சி செய்யும் காலம் வரை, உனது குடும்பத்தார்கள் ஊழியங்கள் செய்து அழுந்தித் துன்பப்படுவார்கள்’ என்று சபித்து விட்டு இறந்து போகின்றான் நீசன்.1

மேற்சொன்ன சம்பவம் திருவிதாங்கூரில் நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவத்துடன் தொடர்புடையது போல் தெரிகிறது. இதில் கூறப்பட்டுள்ள சம்பவத்தில் மூன்று முக்கியமான தகவல்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். அவை,

  1. மேற்கூறிய சம்பவத்தில் இறந்து போன திருவிதாங்கூர் அரசன் யாராக இருக்கக்கூடும்?
  2. மேற்கூறிய சம்பவத்தினால், கோபம் கொண்டுதான் திருவிதாங்கூர் அரசாங்கம் நாடார் (சாணார்) மக்களின் மீது வரிச்சுமைகளை விதித்து கொடுமை செய்ததா?
  3. குமரி மாவட்டத்தை சேர்ந்த சில சாதிய எழுத்தாளர்கள் எழுதுவது போல், நாடார்கள் (சாணார்கள்) திருவிதாங்கூர் மன்னரின் போர்ப்படையில் வீரர்களாகவும் தளபதிகளாகவும் இருந்தார்களா?

அகிலத்திரட்டு அம்மானை நீசன் என்று தனியொரு அரசனைக் குறிப்பதாகத் தெரியவில்லை. ‘நீசன்’ என்ற சொல்லுக்கு ‘இழிந்தோன்’ எனப் பொருள் தந்து, ‘நீசர் வெகுளி கெடுங்கால மின்றிப்பரக்கும்’ (நாலடி, 68) என்ற நாலடியார் செய்யுளை அகராதி சுட்டுகிறது. ஒவ்வொரு சூழலிலும், குற்றம் செய்கின்றவர்களையும், சில இடங்களில் சாணார் சாதியினருக்கு எதிரானவர்களையும் நீசன் என்றே அகிலத்திரட்டு குறிப்பிடுகிறது. மேலும் அது சொல்கின்ற நீசன்கள் பற்றி பின்வரும் அத்தியாயங்களில் காண்போம்.

மேற்கூறிய அகிலத்திரட்டு வரிகளில்1 நீசன் என்று குறிப்பிடப்படுபவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆட்சி செய்த அரசர்களில் ஒருவர் என்று தெரிகிறது. அதற்கான ஆதாரங்கள்,

‘அப்போது சோதிரிசி அந்நீசனைப் பார்த்து

இப்போது கேளுநீ ஆகமத்திலுள்ள முறை

பெற்றாலும் உன் மகவு பேருலகம் ஆளாது

மற்றோர் பெற்று உன் மருகன் ஆளுவான் வையகத்தை

என்றேதான் சாஸ்திரமும் இசையுது காண் மன்னவனே’2

நீசனின் மகன் அரசாள முடியாது. நீசனின் மருமகன் அரசாள வேண்டும் என்பதே ஆகமங்களும், சாத்திரங்களும் சொல்லும் முறையாகும் என்று சோதிரிசி, நீசனுக்கு சொல்வதாகப் பொருள் தரும் மேற்சொன்ன அகிலத்திரட்டின் வரிகள்தான் நீச மன்னன் என்பவன் திருவிதாங்கூர் அரசன் என்பதை உணர்த்துகிறது.

‘ஆதி முறைப்படியே அவன் மருகன் தனக்கு

பட்டந்தான் என்று பறை சாற்றி ஆண்டிருந்தார்’3

என்ற அகிலத்திரட்டின் வரிகள், மருமக்கதாயத்தின் வழி அரசாண்ட திருவிதாங்கூர் அரசாட்சியைக் குறிக்கிறது. இதன் மூலம் முதல் பாடலில் சொல்லப்பட்டிருக்கும் அரசன், திருவிதாங்கூர் அரசர்களில் ஒருவர் என்று அறியலாம். அந்த அரசனை, அவனது வம்சத்தை சேர்ந்த இனத்தாரே  கொலை செய்து விட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அந்த அரசனின் பெயர் அகிலத்திரட்டு அம்மானையில் குறிப்பிடப்படவில்லை.

சுவாமிதோப்பு பதியின் வளாகத்தில், புத்தகக்கடை ஒன்றில் நான் வாங்கிய நாடகக்கதை புத்தகம், ‘மாருதி பிரியன்’ எழுதிய ‘அய்யா வைகுண்டர், மனிதனாக வாழ்ந்த தெய்வத்தின் கதை’. அந்தப் புத்தகத்தில், மேலே அகிலத்திரட்டு வரிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும், கொலை செய்யப்பட்ட அரசன் ‘மார்த்தாண்ட வர்மா’ என்று எழுதப்பட்டிருக்கிறது. ‘திருவிதாங்கூர் அரசன் மார்த்தாண்ட வர்மா, குழித்துறை ஆற்றை கடக்க முயற்சி செய்த போது, மார்த்தாண்ட வர்மாவைக் கொலை செய்ய வந்த எதிரிகளுக்கு, சாணார்கள் உதவி செய்ததாக மன்னர் நம்புகிறார்’ என்று அந்த நாடகக்கதையில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாடகக்கதை மட்டுமின்றி அய்யா வைகுண்டர் பற்றி எழுதப்படுகின்ற மற்றும் சொல்லப்படுகின்ற கதைகள் அனைத்துமே அகிலத்திரட்டு அம்மானையில் இருந்துத் திரட்டப்பட்ட தகவல்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே.

நாடகக்கதையில் வருகின்ற வசனங்கள்:

பூவண்டர்: சான்றோர்களிடத்தில் கொண்ட கோபம் குறையவில்லை மன்னருக்கு!

சேனாதிபதி: எப்படிக் குறையும்? குழித்துறை ஆற்றைக் கடக்க இறங்கிய மார்த்தாண்ட வர்மாவை வாள் வீசிக் கொன்றவர்கள்தானே அவர்கள்? அவர்களை எப்படி மன்னிக்க முடியும்?

பூவண்டர்: அதை நீங்களுமா நம்புகிறீர்கள்?

சேனாதிபதி: நம்பாமல்? தமக்கு மெய்க்காப்பாளர்களாக சாணார்களைத் தானே அவர் நியமித்திருந்தார்? அவர்களை மீறி அவர் எப்படிக் கொல்லப்பட்டார்?

பூவண்டர்: மன்னர் மார்த்தாண்டர் அன்றைக்குத் தவறாகப் புரிந்து கொண்டுவிட்டார். அரியணை ஆசையால் அவரது உயிருக்கு உலை வைத்தது அரச குடும்பத்தினர்தான்! அதாவது மாடம்பிமார்கள், அந்த தாக்குதலிலிருந்து அவர் பிழைத்திருந்தால் உண்மை வெளியாகியிருக்கும். பாவம் சான்றோர்கள், செய்யாத தவறுக்குத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.4

அந்த நாடகக் கதையை எழுதிய எழுத்தாளர் மாருதி பிரியன், மேற்கூறிய வசனங்களின் வாயிலாகச் சொல்லுவது, முன்னாள்  திருவிதாங்கூர் அரசனான மார்த்தாண்ட வர்மாவை கொலை செய்ய சாணார்கள் உதவி செய்ததாக, அப்போது ஆட்சி புரிந்த அரசன் தவறாக நினைத்ததால், அவன் சாணார்களை துன்புறுத்துகிறான் என்ற செய்தியைத்தான். அதே செய்தியைத்தான் அகிலத்திரட்டும் கூறுகின்றது. நாம், ‘அகிலத்திரட்டு சொல்லும் சாதி’ என்ற தலைப்பின் கீழ் ஆய்வு மேற்கொள்ள வேண்டியதும் இதைக் குறித்துதான்!

ஆனால் அதில் இறந்ததாகச் சொல்லப்படும் அரசன் மார்த்தாண்ட வர்மா என்பதுதான் ஏற்க முடியாததாக இருக்கிறது. இந்தத் தகவலை ஆராயமல் கடந்து செல்ல இயலவில்லை.

திருவிதாங்கூர் வரலாற்றில் மார்த்தாண்ட வர்மா என்ற பெயர் கொண்ட மன்னர்கள் பலர் இருந்திருக்கிறார்கள். ஆனால் குழித்துறை ஆற்றில் வெட்டப்பட்டு கொலையுண்ட மார்த்தாண்ட வர்மா இருப்பதாகத் தெரியவில்லை.

மேலும், அகிலத்திரட்டின்1 வரிகளான,

‘மெய்க்குணம் போலுள்ள சாதி ஒன்று

வருவித்து எந்தனுட மணிவாசல் காத்திருக்க

தருவித்து நல்ல சாதியொன்று என்றுரைத்தான்’

‘வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே’ என்ற வரிகளில் சான்றோர்கள் எனப்படும் சாணார்கள் (நாடார்கள்) அரண்மனை வாசல் காக்க நிறுத்தப்பட்டார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.

‘காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார்

அப்படியே காத்திருந்து அவர் வரும் வேளையிலே

முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால்

அந்த நீசன் தனக்கு அழிவு வரும் வேளையிலே

இந்தச் சான்றோர்கள் இவர் தூக்கம் வைத்திடவே’ என்ற வரிகளை நோக்குக. இதில் காவல் காக்கும் வேளையில் நாடார்கள் (சாணார்கள்) தூங்கி விட்டதாக சொல்லப்பட்டுள்ளது. கடமை தவறி சோம்பேறித்தனத்தால் தூங்கிய சாணார்கள், தூங்கியதற்கு முழுக்கலியன் தோஷம்தான் காரணம் என்று சொல்லி சாணார்களுக்கு வக்காலத்து வாங்கும் தொனி ஒருபுறம் இருக்கட்டும்!

குழித்துறை ஆற்றில், சாணார்கள் தூக்கம் கொள்ளும் சம்பவம் நிகழ்ந்திருக்க முடியுமா? மன்னர் ஆற்றுக்குள் இறங்கும் போது, அவரது மெய்க்காப்பாளர்கள் தூங்கியிருக்க முடியுமா? எனில் அகிலத்திரட்டில் சொல்லப்பட்டிருக்கின்ற மேற்கூறிய சம்பவம், மன்னர் ஓய்வெடுக்கும்போதுதான் நிகழ்ந்திருக்க வேண்டும். ஏதோ ஒரு அரண்மனையிலோ அல்லது போர்ப்பாசறையாகவோக்கூட இருந்திருக்கலாம். அது இரவு நேரமாகக்கூட இருந்திருக்கலாம்.

‘நீசன் வம்சத்தோர் நேரக் கூறே அறிந்து

வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே அவ்வினத்தோர்’ என்ற வரிகளை நோக்கும் போது திருவிதாங்கூர் அரசன் வாசமிட்டுக் கொல்லப்பட்டதாக அகிலத்திரட்டு சொல்கிறது. ‘வாசமிட்டு’ என்றால் விஷ வாயுவை சுவாசிக்கச் செய்து கொல்வதாகவோ அல்லது விஷம் கொடுத்து கொல்வதாகவோ இருக்கலாம். இந்த ஆதாரங்களைக் கருத்தில் கொண்டு, கொலை செய்யப்பட்ட மன்னர், நாடகக்கதையில் சொல்லப்பட்ட மார்த்தாண்டர் இல்லை என்பதை உறுதி செய்யலாம்.

பொ.ஆ.1678 ஆம் ஆண்டு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட ஆதித்ய வர்மா அரசரின் மரணத்தோடு அகிலத்திரட்டு சொல்லும் மேற்கூறிய சம்பவம் பொருந்திப்போவதாகத் தெரிகிறது.

ஆதித்ய வர்மா என்ற திருவிதாங்கூர் மன்னர், பொ.ஆ. 1661 முதல் 1678 வரை திருவிதாங்கூரை அரசாட்சி செய்த மன்னர். இவர் மதத்தின் மீது பற்று கொண்டவராக இருந்தார். பத்மனாபசுவாமி கோயில்  தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை நேர்த்தியாக நடத்த விரும்பினார். பத்மனாபசுவாமி கோயில் தேவஸ்தானத்தை நிர்வகித்துக் கொண்டிருந்த எட்டு வீட்டில் பிள்ளைமார்களுக்கு, மன்னர்கள் தேவஸ்தானத்து நிர்வாகத்தில் தலையிடுவது கோபத்தை ஊட்டியது. இந்நிலையில் தேவஸ்தானத்தின் நிர்வாகத்தை நேர்த்தியாக செய்ய நினைத்த ஆதித்ய வர்மாவின் திருவனந்தபுரத்து அரண்மனைக்கு பிள்ளைமார்கள் தீ வைத்தார்கள். இதனால் ஆதித்ய வர்மா அங்கிருந்து தப்பியோடி, கிள்ளியூருக்கு அருகில் இருந்த புத்தன்கோட்டையில் சென்று தங்கினார். பொ.ஆ.1678 ஆம் ஆண்டு அந்தக் கோட்டையில் அரசர் ஆதித்ய வர்மா விஷம் கொடுக்கப்பட்டதால் மரணமடைந்தார்.

எட்டு வீட்டில் பிள்ளைமார்கள் என்பவர்கள் மாடம்பிகள் என்று அழைக்கப்படும் எட்டு நாயர் குடும்பத்தை சேர்ந்தவர்கள். திருவிதாங்கூர் அரசர்களும் சத்திரியர் என்று கௌரவிக்கப்பட்ட, நாயர் முதலான இரண்டாம் படிநிலை சாதியை சேர்ந்தவர்களே.5

எனவே,

‘நீசன் வம்சத்தோர் நீசனை வதைத்தார்’ என்ற அகிலத்திரட்டின் கூற்றும் இச்சம்பவத்தோடு பொருந்துகிறது.

‘விழுந்த மொழியாய் விரைந்துரைத்தானே நீசன்

சொல்லி அந்த நீசன் சோர்ந்து இறந்தான் அவனும்’1

என்ற வரிகளின் தொடர்ச்சியாக

‘வல்லியுடன் பிறந்த மகன் தேசமாண்டிருந்தான்’6 என்ற வரி இங்கு உற்று நோக்கத்தக்கது.

ராணியுடைய, பிறந்த மகன் அரசாண்டிருந்தான் என்ற பொருள் தருகிறது மேற்சொன்ன வரி.

குறிப்பு: அகிலத்திரட்டு முதலில் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டு, பலரால் ஓலைச்சுவடிகளிலேயே பிரதி எடுக்கப்பட்டது. அதனால் வார்த்தைகளிலும், சில எழுத்துக்களிலும் மாறுபாடு இருக்கலாம், ஆனால் பொருள் மாறாது. மேற்சொன்ன வரியில் வல்லியுட என்பதே வல்லியுடன் என்று திரிந்திருக்க வேண்டும். மலையாளம் கலந்த தமிழில், ‘வல்லியுட பிறந்த மகன்’ என்பதே பொருந்தும் பொருளாகும்.

ஆதித்ய வர்மா இறந்த பிறகு ஆறு ஆண்டுகள் உமையம்மை ராணி (1678-1684) அரசு நிர்வாகங்களைக் கவனித்தார். அதன் பிறகு உமையம்மை ராணியின் மகன் ரவி வர்மா அரியணை ஏறினார்.7

திருவிதாங்கூர் மன்னர் இறந்து விட்டால், மன்னரின் சகோதரன் அரியணை ஏறலாம். மன்னருக்கு சகோதரர்கள் இல்லாத பட்சத்தில், மன்னரின் பிள்ளைகளுக்கு அரசுரிமை கிடையாது. மன்னரின் சகோதரியின் மகனே அடுத்து அரசுரிமை பெற்றவன் ஆவான். இதுவே மருமக்கதாய முறையை ஏற்றுக் கொண்ட திருவிதாங்கூர் அரசின் நடைமுறையாக இருந்தது. அவ்வகையில் ஆதித்ய வர்மா இறந்த பிறகு, அரச குடும்பத்தில் இருந்த ஒரே ராணியான உமையம்மை ராணிக்குப் பிறந்த, ரவி வர்மா அரியணை ஏறினார் என்ற வரலாற்றுத் தகவல் அகிலத்திரட்டின் வரிகளோடு பொருந்துவதைக் காண்க.

எனவே நீசனின் இனத்தோர் நீசனை வாசமிட்டு வதைத்தார்கள் என்ற அகிலத்திரட்டின் கருத்தை ஆதித்ய வர்மா அரசரின் மரணத்தோடு ஒப்பிட்டு நோக்குக.

வரலாற்று ஆராய்ச்சியின் முடிவுகள் அனைத்தும் பெரும்பாலும் யூகங்களே! ஆய்வாளர்களின் யூகங்கள், கிடைத்திருக்கும் சான்றுகளோடு பொருந்திப் போகின்ற சதவிகிதத்தின் அளவே சரியான மற்றும் தவறான தீர்மானங்களை முடிவு செய்கின்றன.

தொடரும்…

தரவுகள்

  1. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் – 142, 143.., அகிலத்திரட்டு அம்மானை (மூலம் ஏட்டுப் பிரதி) மூலமும் உரையும், உரையாசிரியர் நா.விவேகானந்தன், இரண்டாம் பதிப்பு 2006, பாகம் ஒன்று, பக்கம் எண் – 272
  2. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் – 140
  3. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் – 143.
  4. அய்யா வைகுண்டர், மனிதனாக வாழ்ந்த தெய்வத்தின் கதை, மாருதி பிரியன், முதற்பதிப்பு ஜூலை 2013 பக்கம் எண் – 18. 
  5. The Travancore state manual, V.Nagam Aiya, first published 1906, Vol I, பக்கம் எண் – 304.
  6. The Travancore state manual, V.Nagam Aiya, Vol I, first published 1906, பக்கம் எண் – 310.
  7. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, பக்கம் எண் – 143

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.