அன்று அய்யாவழியின் புத்தகங்கள் சிலவற்றை சேகரிப்பதற்காக சாமி தோப்பு பதிக்கு சென்றிருந்தோம். என் குடும்பத்தாருக்கு, அய்யா வைகுண்டர் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தது! எனக்கு அய்யா வைகுண்டரின் ‘சமத்துவப் பொதுவுடைமை சித்தாந்தம்’ காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. பதியை சுற்றி வந்த பிறகு, புத்தகக் கடைக்கு சென்றோம். கடையின் வாசலில் ஆ. அரிசுந்தர மணி எழுதிய, ‘அகிலத்திரட்டு அம்மானை, பாராயண உரை’ என்ற புத்தகம் நிறைய அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

நான் நா. விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை, உரையும் மூலமும்’ புத்தகத்தை ஒருவரிடம் இரவல் வாங்கி, ஏற்கனவே படித்திருந்தேன். நா. விவேகானந்தனின் விளக்கம் அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளுக்குப் பொருந்துவதாக இருந்தாலும், சில இடங்களில் பகுத்தறிவுக்குப் பொருந்தாத விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

புத்தகத்தின் சொந்தக்காரரிடம் புத்தகத்தை திருப்பிக் கொடுத்து விட்டதால், நா. விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை, உரையும் மூலமும்’ புத்தகத்தைத் தேடியபடியே கடைக்குள் நுழைந்தேன். கடை முழுவதும் எங்கும் தென்படவில்லை.

“விவேகானந்தன் எழுதிய புக் இல்லியா?” நான் கடைக்காரரிடம் கேட்டேன்.

“இருக்கு! ஆனா, அரிசுந்தர மணி எழுதின புக்தான் பெஸ்ட்! விவேகானந்தனை விட அரிசுந்தரமணி புக்லதான் நல்லா விளக்கம் கொடுத்துருப்பாரு… இப்போல்லாம் எல்லாரும் இந்த புக்தான் வாங்குறாங்க,” என்றார் கடைக்காரர்.

“இல்லங்க! எனக்கு விவேகானந்தன் எழுதின புக்தா வேணும்,” நான் சொன்ன பிறகு, மூடியிருந்த அலமாரியைத் திறந்து, நா. விவேகானந்தன் எழுதிய புத்தகத்தை எடுத்துத் தந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் விவேகானந்தன் எழுதிய புத்தகங்கள் இரண்டு பாகங்களாக இருப்பதால், அதன் விலை அதிகம்; அரிசுந்தரமணி எழுதிய புத்தகத்தின் விலை விவேகானந்தன் எழுதிய  புத்தகத்தின் விலையை விடக் குறைவு. கடைக்காரர் விலை அதிகமான புத்தகத்தை விற்கத்தானே முனைப்புக் காட்ட வேண்டும்? அதை விடுத்து பாராயண உரையை பரப்புவதில் முனைப்பு காட்டுவது ஏன்? எனக்கு விநோதமாக இருந்தது.

எதற்கும் இருக்கட்டுமே என்று ஆ. அரிசுந்தர மணி அவர்கள் எழுதிய பாராயண உரையையும் வாங்கிக் கொண்டேன்.

அடுத்தடுத்து இருந்த கடைகளிலும் கவனித்தேன். அக்கடைகளிலும் ஆ. அரிசுந்தர மணியின் பாராயண உரைகள்தான் பாராட்டப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. ‘இதெல்லாம் ஒரு விசயம்னு எழுத வந்துட்டியா?’ என்று வாசகர்கள் நினைக்கலாம்.

பொதுவாக, எல்லா எழுத்தாளர்களுடைய புத்தகங்களையும் விளம்பரப்படுத்தி, வாசகர்கள் தேர்வுக்கு புத்தகங்களை விற்பனை செய்வதே விற்பனையின் அறம். இங்கோ, அய்யா வைகுண்டரின் தலைமைப் பதியாக அறியப்படுகின்ற சாமிதோப்பில், குறிப்பாக ஆ. அரிசுந்தர மணியின் புத்தகம் கடைக்காரர்களால் மக்களுக்கு பாராட்டிப் பரிந்துரைக்கப்படுகின்றது.

‘அய்யா வழி என்பது வேதங்களிலும் ஆகமங்களிலும் விளக்கப்பட்டுள்ள சத்மார்க்கம்’ என்றும், ‘அய்யாவழி ஒரு தனி மதமல்ல, வேதகாலத்தில் இருந்தே இந்த புண்ணிய பூமியில் நடைமுறையில் இருக்கும் சனாதன தர்மம்’1 என்றும் கூசாமல், பொருந்தாத பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள ஆ. அரிசுந்தர மணி அவர்களின் பாராயண உரை புத்தகத்தை, மக்களிடம் சேர்ப்பிக்க கடைக்காரர்கள் முனைப்பு காட்டுகிறார்கள். சாமான்ய மக்களிடம் அய்யா வைகுண்டரின் கருத்துக்களை தவறாகக் கொண்டு சேர்ப்பது ஒரு பெரிய குற்றமாக என் அறிவுக்கு தோன்றுகிறது.

ஆ. அரிசுந்தர மணி அகிலத்திரட்டில் எதை சனாதன தர்மம் என்று சொல்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.

‘அரசர்கள் ஒருவரையொருவர் சண்டையிட்டு போரில் இறந்தால் சொர்க்கத்தை அடைவார்கள்’2 என்று அழிவுகள் நிறைந்த போருக்கு ஆதரவான மனுநீதி சாஸ்திரம் உருவாக்கிய சனாதனமும், ‘அழிவு என்னும் பேச்சை அணுப்போல் நினையாதே’3 என்ற அறத்தை முன்னிறுத்தும் அகிலத்திரட்டு வகுத்த அய்யா வழியும் எங்ஙனம் ஒன்றாகும்?

‘பிரம்மாவால் படைக்கப்பட்டவர்களில் பிராமணன்தான்* மேலானவன் என்றுரைக்கும் சனாதனம்’4 சாணார்* சாதியே முதல் சாதி என்றும், பிராமணர் சாதியே கடைச்சாதி என்றும் கூறுகின்ற அகிலத்திரட்டை எவ்வாறு ஏற்றுக்கொள்ளும்? என்பது எனக்கு விளங்காத புதிராகவே உள்ளது.

‘மூலப்பொருள் கண்ட முதல் சாதி ஆனவனோ’5

‘சாதிதனில் உயர்ந்த சாணார் அவர்களுக்கு’6

‘சாதி பதினெட்டாய்த்தாம் பிரித்தான் நீசன்

ஆதிசாதிதனிலே அமையுமையா என் கோவே

அவ்வழியில் அம்மனுவில் ஆன சான்றோர் குலத்தில்’7 போன்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளில் ‘நாடார் சாதி’ உயர்த்தி கூறப்பட்டிருப்பதைக் காணலாம்.

‘சாணாருக்குள்ளே சர்வதுமே அடக்கி

கோணாத மாயன் குருக் கொடுத்து ஈன்ற கண்ணோ’ என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் நாடார் சாதிக்கு அந்தப் புத்தகம் கொடுக்கும் முக்கியத்துவத்துக்கு சான்று பகரும்.8

‘கடைச்சாதியான கலிச்சாதியானதிலே

படைக்காமல் நம்முடைய பங்கு வம்சத்தோராய்

ஒண்ணாமது குலம்தான் உயர்ந்த தெய்வச் சான்றோரில்’9 என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளில் நாடார் சாதியை ஒன்றாவது சாதி என்றும், கலியனின் சாதி கடைச்சாதி என்றும் உரைக்கப்பட்டிருப்பதைக் காண்க!

அகிலத்திரட்டு அம்மானையில் நீசன் என்றும் கலியன் என்றும் இகழப்படுபவன், தான் அந்தணராகப் பிறக்க வேண்டும் என்று ஈசரிடம் வரம் வாங்குகிறான். அவ்வாறு அந்தணராகப் பிறந்த கலியனின் சாதியை ‘கடைச்சாதி’ என்றுரைக்கிறது அகிலத்திரட்டு. தான் பிறந்த சமூகத்தைச் (சாதியை) சார்ந்த மக்கள் பட்ட கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்த அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டி, தன் சாதியை முன்னிலைப்படுத்தி மேற்கண்டவாறு சொல்லியிருக்கக் கூடும். அகிலத்திரட்டின் இந்தக் கருத்தில் எமக்கு உடன்பாடு இல்லை.

ஒடுக்கப்பட்டவன் தன் சாதியின் பெருமைப் பேசி, தன் சாதியை உயர்த்தி சொல்லிக் கொள்வதால் சமத்துவம் உருவாகாது, மாறாக அது குழப்பத்தையே உருவாக்கும். சாதி என்பதே ஒரு கற்பனை என்ற உண்மையை உணர்ந்த ஓர் அறிவார்ந்த சமூகத்தை நோக்கியே நாம் பயணிக்க விரும்புகிறோம்.

‘பதினெண் சாதிகளும் பண்பாய் ஒரு தலத்தில்

விதி வந்தது என்று  மேவிக் குலாவி இருந்தார்

சாதி பதினெட்டும் தலம் ஒன்றிலே குவிந்து

கோரிக்குடிக்கும் ஒரு கிணற்றில்’ 10 என்றெல்லாம்கூட அதே அகிலத்திரட்டுதான் கூறுகின்றது. சாதி பற்றிய அகிலத்திரட்டின் பார்வை விளக்கமாக ஆராயப்பட  வேண்டிய ஒன்றாகும். அடுத்தடுத்த கட்டுரைகளில் ஆராய்வோம்.

இப்போது என் கேள்வி ஒன்றுதான்!

பார்ப்பனர்கள் பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள் என்றும், அவர்களே உயர்ந்தவர்கள் என்றும், இத்தத்துவமே மாறாத நிலைத்தன்மையுடையது என்றும் பறைசாற்றும் சனாதனம், நாடார் சாதியை முன்னிலைப்படுத்தி, நாடார் முதலான பதினெட்டு சாதிகளுக்கு அடைக்கலமாக விளங்குவதோடு, நம்பூதிரி பார்ப்பனர் முதலாகவுள்ள ஆதிக்க சாதிகளைச் சேர்ந்தவர்கள் செய்த கொடுமைகளைத் தட்டிக் கேட்டு, ஆதிக்கசாதியை கடைச்சாதி என்று விமர்சிக்கும் அகிலத்திரட்டினை வேதமாகக் கொண்ட அய்யா வழியை தன்னோடு இணைத்துக் கொள்ளத் துடிப்பது முரண்பாடாக இல்லையா?

ஆ. அரிசுந்தர மணி மட்டுமல்ல, இன்றைய தமிழக ஆளுநர் R.N. ரவி முதலாக, இந்துத்துவக் கொள்கைகளைக் கடைபிடிக்கும் பாஜக, ஆர் எஸ் எஸ் அமைப்புகளில்  உறுப்பினர்களாக இருக்கும் அய்யா வழி இளைஞர்கள் வரை, அய்யா வழியை சனாதனத்துக்குள் நுழைக்க மிகுந்த சிரத்தை மேற்கொள்பவர்கள் இக்கேள்விக்கான விடையை சிந்திக்க வேண்டும்.

முத்துக்குட்டியும் பரதேவதையும்

நான் அய்யா வைகுண்டர் பற்றிய எனது கட்டுரையை முகநூலில் பதிவிட்ட போது, இந்துத்துவவாதிகள் காத்திரத்தோடு எதிர்த்து, ஏற்க மறுத்த ஒரு விசயம், அய்யா வைகுண்டரும் முத்துக்குட்டியும் ஒரே மனிதர் என்ற உண்மையை! சமுதாயத்தில் உயர்சாதியினராக வரையறுக்கப்பட்ட மக்களை மட்டுமே சாதனையாளர்களாகக் காட்டியும், பார்த்தும் பழக்கப்பட்ட குறிப்பிட்ட வகுப்பினருக்கு, முற்காலத்தில் அவர்ணர்11 வகுப்பாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நாடார் என்ற சாதியில் பிறந்த ஒருவரைத் தெய்வமாக ஏற்க விருப்பமில்லை. எனவே அய்யா வைகுண்டர் மனிதனாகப் பிறந்து, வாழ்ந்து, ஆன்மீக வழியில் புரட்சி செய்து, வரலாற்றில் இடம்பெற்று இறந்தவர் என்ற உண்மையைப் பொய் என்று சொல்லத் துணிந்து விட்டார்கள். மாறாக அய்யா வைகுண்டர் கடலுக்குள் இருந்து மாயை மனிதன் போல் வந்தவர் என்ற கட்டுக்கதைகளைப் புனைந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றைய நாளில், இந்துத்துவவாதிகளும், அய்யாவழி இளைஞர்கள் பலரும் முத்துக்குட்டிதான் அய்யா வைகுண்டர் என்ற உண்மையை ஏற்க மறுப்பதற்கு மற்றுமொரு மிக முக்கியமானக் காரணங்களில் ஒன்று முத்துக்குட்டியின் மனைவி பரதேவதை!

சாமி தோப்பு பதியில், அய்யாவுக்கு இடது புறமாக அமைந்திருக்கும் திருமாலம்மாள் பள்ளியறையின் சுவற்றின் மீது காணப்படும் கல்வெட்டு.

பரதேவதை என்பவர் முத்துக்குட்டியின் முதல் மனைவி ஆவார். முத்துக்குட்டி  பரதேவதைக்கு இரண்டாவது கணவர். பரதேவதை என்ற இயற்பெயர் கொண்ட திருமாலம்மை என்பவரின் முதல் கணவர் ஊரல்வாய்மொழியை சேர்ந்தவர். தன் முதல் கணவரோடு ஏற்பட்ட பிணக்கின் காரணமாக, பரதேவதை அவரைப் பிரிந்து விட்டார். அதன் பிறகு 1825ஆம் ஆண்டு முத்துக்குட்டி பரதேவதையை இரண்டாவதாக மணந்து கொண்டார்.

‘திருமாலம்மாள் ஊரல்வாய்மொழி ஊரில் முதலில் ஒருவரை கைப்பிடித்தாலும், அக்கணவனோடு எவ்விதத் தொடர்பும் கொள்ளவில்லை’ என்று மேம்போக்காக சொல்லிச் செல்கிறார், ‘அகிலத்திரட்டு அம்மானை, மூலமும் உரையும்’ புத்தகத்தை எழுதிய நா. விவேகானந்தன்.12

‘தாமரைக்குளம் என்னும் ஊரை அடுத்துள்ள புவியூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்த திருமாலை என்னும் பெண், திருநெல்வேலிச் சீமையில் ஊரல்வாய்மொழி என்னும் கிராமத்தில் வாழ்க்கைப்பட்டிருந்தாள். கணவனிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்கு இரு குழந்தைகளுடன் வந்து விட்டாள்’ என்று விரிவாக விவரங்களை சொல்கிறது ‘அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை’ என்ற புத்தகம். தாய் வீட்டுக்கு வந்த திருமாலையை கணவன் வீட்டுக்குச் செல்லும்படி பெற்றோர் வற்புறுத்தினார்கள். திருமாலை தாய் வீட்டை விட்டு வெளியேறி, தன் உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றாள். பொன்னுமாடன்-வெயிலாள் என்னும் தம்பதியரே அவ்வுறவினர். பொன்னுமாடன் வெயிலாள் தம்பதியரின் மகன் முத்துக்குட்டி.13

அகிலத்திரட்டு அம்மானையும் பரதேவதையைப் பற்றிக் கூறுகின்றது.

‘நல்லதுதான் என்று நாட்டமுற்றுத் தேவனுந்தான்

‘பரதேவதை’யானப் பைங்கிளியைத் தான் கூட்டி

விரைவாக தேவன் விறுமாபதம் செபித்து

நின்றான் தவசு’

‘பரதேவதை’யான பைங்கிளியும் அப்போது

திரமான அம்மை சிவசக்தி பேரதிலும்’14 என்று பல இடங்களில் அகிலத்திரட்டு அம்மானையில் பரதேவதை என்ற பெயர் வருவதைக் காணலாம். அதாவது அய்யா வைகுண்டராகப் பிறப்பவன் சம்பூரணத்தேவன் என்றுரைக்கும் அகிலத்திரட்டு அம்மானை சம்பூரணத்தேவனின் இல்லாளாக பரதேவதையைச் சுட்டுகிறது. அய்யா வைகுண்டரின் மனைவி பரதேவதை என்பதற்கு இதைவிட வேறென்ன சான்று வேண்டும்?

‘வல்ல சம்பூரணனும் வாய்த்த எமலோகமதில்

பரதேவதையான பைங்கிளியும் தேவனுமாய்

மருவனைய மாதும் மன்னவனுமாய்ப் பிறக்க

உருவேற்றின அம்மை உயர்ந்த தவம் செய்திடவே’15 என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகளை உற்று நோக்கும்போது, எமலோகத்தில் பரதேவதையும் சம்பூரணத்தேவனும் (முத்துக்குட்டி), உலகத்தில் பெண்ணாகவும் (மருவனைய மாது), ஆணாகவும் (மன்னவனும்) இணையராகப் பிறக்க உயர்ந்த தவம் செய்தனர் என்னும் பொருள் கிடைக்கப்பெறுகிறது.

‘இப்படியே கன்னி ஏற்ற பரதேவதையும்

முப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடினாளே

கேட்டு அரிநாரணரும் கிளி மொழியைத்தாம் பார்த்து

மெட்டுக்கொடி இடையே மின்னிடையே நீ கேளு

உன் புருஷன் அங்கே உற்ற எமலோகமதில்

இன்புருகி வாடி ஏங்கித் தவிப்பதினால்

அவனை நீ மறந்து ஆன தெய்வப்பூரணனை

இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும்

நிறைவேற மாட்டாமல் நினைத்த அகேடு இத்தனையால்

பிற போ நீ பூமிதனில் பெரிய சான்றோர் வழியில்’16 என்ற அகிலத்திரட்டு வரிகளின் பொருள் பின்வருமாறு:

‘பரதேவதை ஒரு ஆசிரிய விருத்தம் பாடினாள். அதைக்கேட்ட நாராயணர் பரதேவதையைப் பார்த்து, எமலோகத்தில் உன் புருஷன் வாடி ஏங்கி தவித்துக் கொண்டிருக்கிறான். நீ உன் புருஷனை மறந்து, சம்பூரணத்தேவன் மீது உன் கவனம் தாவி விட்டதாலும், சம்பூரணத்தேவனோடு செய்த தவத்திலும், நிறைவு இல்லாததாலும், கேடுகள் பல நினைத்ததாலும், பூமியில் சான்றோர் வழியில் பிற!’ என்று மனிதனாகப் (முத்துக்குட்டியாக) பிறப்பதற்காக தவமிருக்கும் சம்பூரணத்தேவனுடன் சேர்ந்து தவமிருந்த பரதேவதைக்கு நாராயணர் கட்டளை இடுகிறார்.


(இதில் ‘சான்றோர்’ என்ற வார்த்தை நாடார் குலத்தைக் குறிக்கிறது)

‘இந்த தவக்குறைக்கு இன்னம் அங்கே பிறந்து

முந்த புருஷனுக்கு முன்வேலையும் கழித்து

அழுந்தத் துயரப்பட்டு அவன் ஊழியங்கள் செய்து

குளிர்ந்த மொழியற்று கூடும் சரசமற்று

எந்நேரம் உன்றனுக்கு ஏக்கமுடன் அழுந்தி

மின்னேகேள் இந்த மிகத்தேவன் உன் வழியில்

கொண்ட பச்சத்தாலே கோதையே உன்னையும்

கண்டு இச்சை கூர்ந்து கருவினையால்

கருவால் உருவாக்கி கைக்குள் வசமாக்கி

பருவா பருவமதில் பாவையே நீ இவனோடு

இருவர் ஒருவர் என இச்சை மிகக்கூர்ந்து

குருவை மறந்து கொண்டவனைத் தான் மறந்து

தாய் தகப்பன் மாமன் தமையன்தமை மறந்து

வாயிற்படி மறந்து வாழ்வை மிக மறந்து

சொந்த மனை மறந்து சுகசோபனம் மறந்து

சந்தோசம் அற்று சகலோர்க்கும் நாணமுற்று

முற்புருசன்தனக்கு மூலக்கருக்கேடு அணைத்து

இப்புருசன்தாம் எனவே எவ்வுலகும் தாமறிய

கட்டின மாங்கலியம்’17 என்ற அகிலத்திரட்டு அம்மானையின் வரிகள் பரதேவதை என்ற பெண்ணே அய்யா வைகுண்டரின் மனைவி என்பதற்கும், அய்யா வைகுண்டர் பரதேவதையின் இரண்டாவது கணவன் என்பதற்கும் உறுதியான சான்று. அவ்வரிகளின் பொருளைக் காண்போம்.

இந்த தவக்குறைக்கு இன்னும் அங்கே பிறந்து, முந்தைய (முதல்) புருசனுக்கு வேலைகள் செய்து, ஊழியங்கள் செய்து, அழுத்தமானத் துயரங்கள் பட்டு, கணவனுடைய கனிவான பேச்சுகள் இல்லாமல், சரசங்கள் இல்லாமல் துன்பப்பட்டு, ஏக்கமுடன் அழுந்தி வாழ்வாய்! அப்போது இந்த மிகத்தேவன் (சம்பூரணத்தேவன்) உன் மீது இரக்கம் கொண்டு, இச்சை கொள்வான். கருவினையால், இளமைப் பருவத்தில் நீ இவனோடு (சம்பூரணத்தேவனோடு) இச்சை கொண்டு, அந்த இச்சை இருவரும் ஒருவர் போல் என்ற நிலைக்கு வரும்! உன் குரு, கொண்ட கணவன், தாய் தகப்பன், மாமன், தமையன் ஆகியோரை மறந்து, வீட்டு வாயிற்படி தாண்டி வந்து, முதல் புருசனின் மூல (அனைத்து) உறவுகளை உதறி, இந்த புருசன்தான் புருசன் என்று உலகம் அறிய இரண்டாவது புருசன் கட்டிய மாங்கல்யத்தால், ஊராருக்கு வெட்கப்பட்டு சந்தோசமற்று வாழ்வாய்!’

‘அதாவது பரதேவதை அவளுடைய முதல் கணவனைப் பிரிந்து வந்து அய்யா வைகுண்டரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொள்வாள்’ என்பது பரதேவதைக்கு ஈசரும் நாராயணரும் கொடுத்த வரம் என்று அகிலத்திரட்டு அம்மானை கூறுகின்றது.

வரம்தான்! ஆனால் சாபம் போல் தோன்றுகிறது. பெண்களுக்கென்றால் வரத்தைக் கூட சாபமாக்கிக் கொடுப்பதுதான் மதங்களின் வேத நூல்களுடைய தாத்பரியமா? பெண்ணடிமைத்தனத்துக்கு நியாயம் கற்பிக்கும் இது போன்ற பிற்போக்கு சிந்தனைகளைத் தாங்கி வருவதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல.

எவ்வாறாயினும் அய்யா வைகுண்டர் என்னும் முத்துக்குட்டியின் மனைவி, தன் முதல் கணவனை விவாகரத்து செய்த பரதேவதை என்னும் திருமாலம்மை என்பது தெளிவு.

சாதியக் கட்டுப்பாடுகளும், பெண்களுக்கான கட்டுப்பாடுகளும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, விவாகரத்தான பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொண்ட முற்போக்குவாதி முத்துக்குட்டி என்ற அய்யா வைகுண்டர்.

அப்படிப்பட்டவரை மானத்தையும் கௌரவத்தையும் பெண்களின் கர்ப்பப்பையில் பொதிந்து காப்பாற்றிக் கொண்டிருக்கும் இந்துத்துவம் விழுங்கி செரித்து விடுமா? அது முடிகின்ற காரியமா?

சமூகக் கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிந்து விட்டு தன் மனதொத்த வாழ்க்கையைத் துணிந்து வாழ்ந்த திருமாலம்மை என்ற பரதேவதையின் தைரியத்தையும் பாராட்டியே ஆக வேண்டும்.

முத்துக்குட்டியின் வரலாற்றையும், அகிலத்திரட்டின் மேற்கூறிய கருத்து பொதிந்த வரிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, முத்துக்குட்டிதான் அய்யா வைகுண்டர் என்று சிறு குழந்தைகூட சொல்லி விடும். இந்துத்துவவாதிகள் புரியாதது போலவே நடிப்பது நகைப்புக்குரியதாகும்.

ஒருத்திக்கு ஒருவன், கற்பு, பத்தினித்தனம், புனிதம் போன்ற வார்த்தைகளால் கட்டமைக்கப்பட்ட இந்துத்துவத்தால் ‘பதினெட்டாம் நூற்றாண்டிலேயே முற்போக்கு சிந்தனையோடு, விவாகரத்தான பெண்ணை மணந்து கொண்டவர் அய்யா வைகுண்டர்’ என்ற உண்மையை ஜீரணிக்க முடியுமா என்ன? ஆனால் உலகெங்கும் பரவி விரிந்து கொண்டிருக்கும் அய்யா வழி என்ற மார்க்கத்தை தனி மதமாக உருவெடுக்க விட்டுவிட்டால், இந்து மக்களின் பெரும்பான்மை சிதறி விடுமே! இந்துக்களின் பெரும்பான்மை எண்ணிக்கையைக் காப்பாற்ற அய்யாவழியில் இந்துத்துவத்தை கலப்படம் செய்வதை விட வேறு வழி இந்துத்துவவாதிகளுக்குத் தெரியவில்லை. அதற்காகத்தான் பற்பல புரட்டு உருட்டுக்களை செய்து வருகிறார்கள்.

தொடர்ந்து புரட்டுகளின் தோலுரிப்போம்…

*சாணார், பிராமணர் போன்ற வார்த்தைகள் அகிலத்திரட்டு அம்மானை முழுவதும் ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அத்துடன் பதினெட்டாம் நூற்றாண்டில் நாடார் சாதி மக்கள் ‘சாணார்’ என்றே அழைக்கப்பட்டனர். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த அய்யா வைகுண்டரைப் பற்றிய இக்கட்டுரைத் தொடரில், சாணார், பிராமணர் போன்ற வார்த்தைகள் எழுதுவதைத் தவிர்க்க முடியவில்லை. மற்றபடி இதை எழுதுவதில் எனக்கு சிறிதும் உடன்பாடு இல்லை. பதிப்பிப்பதில் பதிப்பாளருக்கும் தர்ம சங்கடமே!

தரவுகள்

  1. அகிலத்திரட்டு அம்மானை பாராயண உரை, உரை ஆசிரியர்: ஆ. அரிசுந்தர மணி, அய்யா வைகுண்டர் நற்பணி மன்றம், அம்பலப்பதி. மூன்றாம் பதிப்பு 2016. 1 – பக்கம் எண் 5
  2. மனுநீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம், மூலமும் உரையும் முழுவதும், உரையாசிரியர் அன்னை ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா, பதிப்பாசிரியர்: விகரு ராமநாதன, ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், நான்காம் பதிப்பு 2017, 2 – பக்கம் எண் 328, 4 – பக்கம் எண் 36.
  3. பராசரஸ்மிருதி, தேசிகாச்சாரியாரால் சமஸ்கிருதத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, கெ. அனந்தாச்சாரியாரால் பதிப்பிக்கப்பட்டது, சென்னிய, ஸ்ரீ கேதன அச்சுக்கூடம் 1902, 2 – பக்கம் எண் 28(உஎ)
  4. நா. விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 1, இரண்டாம் பதிப்பு, 2006, (தமிழக அரசு நூல் உரிமைப் பதிவுத் தொடர் எண் 5231, தேதி: 26.12.2003), 5, 8 – பக்கம் எண் 162, 6 – பக்கம் எண் 284, 7 – பக்கம் எண் 408 இன்னும் சில பக்கங்கள், 14 – பக்கம் எண் 328, 396, 12 – மூல ஆசிரியர் வைகுண்ட சாமி பற்றி’ பகுதியில் (பக்கம் எண் xv), 16 & 17 – பக்கம் எண் 398.
  5. நா. விவேகானந்தன் எழுதிய ‘அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும்’ பாகம் 2, இரண்டாம் பதிப்பு, 2006, (தமிழக அரசு நூல் உரிமைப் பதிவுத் தொடர் எண் 5231, தேதி: 26.12.2003) 3- பக்கம் எண் 58, 5 – பக்கம் எண் 198 ஆம் பக்கத்திலும் சாணார் சாதி ஆதி சாதி என்று சொல்லப்பட்டிருப்பதைக் காணலாம், 9 – பக்கம் எண் 146, 147.
  6. Madras district gazetteers, TINNEVELY VOLUME 1, BY H.R.PATE, MADRAS, PRINTED BY THE SUPERINTENDANT GOVERNMENT PRESS, 1917, 11 – PAGE NO: 125 https://archive.org/details/dli.ernet.2646/page/n7/mode/2up?q=shanan
  7. பொ. முத்துக்குட்டி சாமியவர்களால் இயற்றப்பட்டு, தங்கையா அவர்களால் அச்சிலேற்றப்பட்ட அகிலத்திரட்டு அம்மானை, நான்காம் பதிப்பு, 1963 ஆம் ஆண்டு, 3 – பக்கம் எண் 205, 5 – பக்கம் எண் 65, 6 – பக்கம் எண் 115, 7 – பக்கம் எண் 165, 8 – பக்கம் எண் 66, மற்றும் சில பக்கங்கள் சாணார் சாதி ஆதிசாதி என்னும் பொருளில் வருகின்றது, 9 – பக்கம் எண் 240, 10 – பக்கம் எண் 240, 14 – 133, 161., 15 – பக்கம் எண் 159, 16 & 17 – பக்கம் எண் 161.
  8. அரிகோபால் சீடர் எழுதிய, தெட்சணத்துத் துவாரகாபதி தர்மயுக மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அகிலத்திரட்டு அம்மானை, வைகுண்டர் பதிப்பு 178, (2011) இரண்டாம் பதிப்பு, 5- பக்கம் எண் 88, 6 – பக்கம் எண் 149, 7 – பக்கம் எண் 210, 8 – பக்கம் எண் 89, 10 – பக்கம் எண் 300, 301. 14 – பக்கம் எண் 171, 204., 15 – பக்கம் எண் 202, 16 & 17 – பக்கம் எண் 205.
  9. அய்யா வைகுண்டரின் தென்பாண்டிநாட்டு வருகை, கலந்தபனை வெ.செந்தில் வேலு, சூரன்குடி அ.இன்பக்கூத்தன் ஆகிய இருவரின் கள ஆய்வில் எழுதப்பட்ட புத்தகம், முதல்பதிப்பு 2011, 13 – பக்கம் எண் 19.

படைப்பாளர்

சக்தி மீனா

பட்டதாரி, தொழில் முனைவர். பெரியாரின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டவர். பொழுதுபோக்காக ஆரம்பித்த எழுத்து, பெரியாரின் வழிகாட்டுதலில், பொதுவுடைமை சித்தாந்தம் நோக்கி நகர்ந்தது. எதுவுமே செய்யவில்லையே என்ற தன் மனக்கவலையைக் களைய, படித்துக்கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்கிறார்.