நீர்க்கட்டிகள் என்கிற வார்த்தை வளரிளம் பருவம் முதல் நடுத்தர வயதுடைய பெண்கள் வரை பிரபலம் ஆன ஒரு வார்த்தை.பிரபலமான வார்த்தை என்கிற அதே வேளையில் இந்தப் பெண்களுக்கு உயிரச்சத்தைக் கொடுக்கும் வார்த்தையாகவும் இது உள்ளது. நீர்க்கட்டி வந்தால் அது புற்றுநோய் கட்டியாக மாறிவிடுமோ, நீர்க்கட்டி வந்தால் குழந்தை பிறக்காதோ போன்ற அச்சமே அவர்களின் நிம்மதியைக் கெடுத்து விடுகிறது. இது உளவியல் ரீதியான மன அழுத்தத்தையும் கொடுக்கிறது (நோய் அல்ல. நோய் மீதான பயம்). இந்த அச்சத்தின் பொருட்டே மருத்துவரை நாடிச் செல்லும் பெண்கள் அதிகம்.

நீர்க்கட்டி என்று பொதுவாகச் சொல்லப்படும் பிரச்னை என்பது PCOD (Poly cystic ovarian Disease) என்கிற நோய். இது ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துவதால் நோய் உருவாகிறது.

பெண்களின் கருப்பையில்

(சினைப்பை)  ஈஸ்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் அதிகம் சுரக்கும். ஆண்ட்ரோஜன் குறைவாகச் சுரக்கும். இது இயல்பு. ஆனால், நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு இந்த ஆண்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும்.

‘ஆண்’ட்ரோஜன்   ’ஆண்’ ஹார்மோன்கள்.

அதனால் ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாக உள்ளதால் நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போன்ற உடல்வாகு ஏற்படுகிறது.

உதாரணமாகத் தாடி மீசை வளர்தல், மாத சுழற்சி உதிரப்போக்கு சரியாக வராமல் இருத்தல் போன்றவை.

நீர்க்கட்டி உள்ள பெண்களுக்கு அவர்களின் கணையத்தில் இன்சுலின் சுரப்பு சரியாக இருக்காது. சுரப்பு இருந்தாலும் இன்சுலின் எதிர்ப்பு நிலை என்கிற நிலை ஏற்படும். இந்த இன்சுலின் எதிர்ப்பு நிலை ஏற்படுவதால் பெரும்பாலான பெண்கள் உடல் பருமன் பெறுவர். இயல்பாகவே எல்லாருக்கும் தோலுக்கு அடியில் கொழுப்பு இருக்கும். இது இயற்கை. ஆனால், உடல் பருமன் ஏற்படும் போது தோலுக்கு அடியில் இருக்கும் கொழுப்புப் படலத்தின் தடிமனும் கூடுகிறது.

இது இறுகி கடின தன்மையோடு இருக்கும். இந்தக் கொழுப்பும் ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண் ஹார்மோனை அதிகமாக வெளியேற்றும். அதனால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு கணிசமாக கூடுகிறது உடலில்.

இதன் அளவு கூடுவதால் கருப்பையில் கருக்குமிழிகளைத் தூண்டும் ஹார்மோன் குறைவாகச் சுரக்கிறது.

இதன் விளைவாகக் கருக்குமிழிகள் வளர்ச்சி பெற முடியாமல் போகிறது. கருக்குமிழிகளின் வளர்ச்சி குன்றுவதால் கருமுட்டை வெளிவர முடியாமல் போகிறது.

தீர்வு:-

1) உடல் பருமனைக் குறைக்க வேண்டியதும் இன்சுலின் எதிர்ப்பு நிலையைச் சரிசெய்ய வேண்டியதும் முதல் பணி. இன்சுலின் நிலையைச் சரிசெய்யவும் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்தல் வேண்டும்.

2) உடற்பயிற்சியும் உணவுக்கட்டுப்பாடும் அவசியம்.

3) கடினமான தேகப் பயிற்சி வேண்டாம். மிதமான நடைப்பயிற்சியைத் தினமும் 40 நிமிடங்கள் மேற்கொண்டால் போதும்.

4) உடல் எடையைக் குறைக்க வேண்டி பட்டினி இருத்தல் கூடாது. உண்டி சுருக்குதல் யாருக்கும் அழகல்ல. உடல் உழைப்பிற்கேற்ற உணவு, உணவிற்கேற்ற உடல் உழைப்பு இதுதான் தாரக மந்திரம்.

5) இதற்கென சில மருந்துகள் உண்டு. மருத்துவரின் நேரடி ஆலோசனைக்குப் பின்பே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம்பிக்கை:-

  1. நீர்க்கட்டிகள் எனப்படும் PCOD ஒருபோதும் புற்றுநோயாக மாறாது. அதனால் இது புற்றுநோயாக மாறுமோ என்கிற மனக்கவலை வேண்டாம்.
  • குழந்தையின்மைக்கு இது ஒரு முக்கியக் காரணமாக இருந்தாலும் இன்றைய அறிவியல் மருத்துவ வளர்ச்சியில் இதற்கான தீர்வுகள் நிறைய உள்ளது. மகப்பேறு மருத்துவரின் ஆலோசனையையும் நவீன மருத்துவ சிகிச்சையையும் பெற்று  இந்நிலையில் இருந்து மீள்தல் சாத்தியமே.

படைப்பாளர்:

மருத்துவர் அனுரத்னா. இவர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியாற்றுகிறார். ஓய்வு நேரங்களில் விளிம்புநிலை மக்களை அவர்கள் இருப்பிடத்துக்கே தேடிச்சென்று மருத்துவ உதவி வழங்குகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலமாக சமூகத்தில் அறிவியல் சிந்தனைகளை பரப்பிவருகிறார். பெண்கள் மற்றும் இதர ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் போராட்டங்களில் பங்குகொள்கிறார். மனிதி அமைப்பின் உறுப்பினராக உள்ளார். கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். 2012ம் ஆண்டு வெளிவந்த “மனிதநேய மாமுனிவர்” என்ற நூலின் ஆசிரியர்.