அந்த மூன்று சம்பவங்கள்
அன்று அந்த வீதி முழுக்க அது தான் பரபரப்பான பேச்சாக இருந்தது. அந்தத் தெருவின் சுவர் முழுக்க “ஏ.ஆர்” என்ற இனிஷியல் கண்ட இடத்திலும் கரிக்கட்டை கொண்டு எழுதப்பட்டிருந்தது. இப்போதெல்லாம் காதலிக்கும் ஆணும், பெண்ணும் தங்களின் காதலின் அடையாளத்தை மரங்களிலும், சுவர்களிலும் கல்வெட்டுக்களாக அவர்களாகவே எழுதி விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். 1980களில் காதலிப்பதை யாருக்கும் தெரிந்திடாமல் பார்த்துக் கொள்வார்கள். தூரத்துப் பார்வையும், காதல் கடிதங்களும் தான் மனதைச் சுமந்து சென்று இதயங்களை இடம் மாற்றித் துடிக்க வைத்தது.
அந்தத் தெருவில் இருந்த அருண் அண்ணாவும், அவர்கள் வீட்டுக்கு எதிரில் இருந்த ரதி அக்காவும் காதலித்தார்கள். தண்ணீர் எடுக்கவும், காட்டுக்கும் அருண் அண்ணாவின் வீட்டின் வழியாகத்தான் ரதி அக்கா செல்வார். காலை நேரத்தில் அந்தத் தெருவில் அருண் அண்ணாவோடு விளையாடிய வாண்டுகளுக்கெல்லாம் அவர்கள் பார்வையில் பேசிக் கொள்வது இன்றைய வாட்ஸாப் ஸ்டேட்டஸ் மாதிரி. தனிமையில் இருக்கும் போது இவர்களைப் பற்றி சுவாரஸ்வமாகப் பேசிக் கொள்வார்கள்.
இதை எல்லாம் பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்த சில்வண்டுகளான வாண்டுகளுக்கு அல்வாக் கிடைத்தது மாதிரி ஒன்று கிடைத்தது. ரதி அக்கா அருணுக்கு எழுதிய காதல் கடிதத்தை கீதாவிடம் கொடுத்து அருண் அண்ணாவிடம் கொடுக்கச் சொல்ல, கீதாவின் வழியாகவே அருணின் கடிதம் ரதிக்கு சென்றது. இரண்டு கடிதங்களையும் பண்டமாற்று செய்த வாண்டுகளுக்கு இந்த ரகசியத்தை வெளிப்படுத்த ஆசை. மறைமுகமாக இதை ரசித்தாலும், காதலிப்பது தப்பு தானே என்று இவர்களுக்குள்ளாக முடிவு செய்தனர். இதன் விளைவு தான் கீதாவும், சுற்றிலும் உள்ள வாண்டுகளும் கரிக்கட்டையில் சுவர் முழுக்கக் கிறுக்கியது. அருண் ரதி என்பதற்கான சுருக்கம் தான் அந்த ஏ.ஆர்.
கிராமங்களில் இது போன்ற விஷயங்கள் வரும் போது சம்பந்தப் பட்டவர்களை பாதிக்காத அளவில் அந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுவார்கள். கடைசியில் காதலர்களை விட, இந்த விஷயத்தை விளம்பரம்படுத்திய வாண்டுகள் மாட்டிக் கொண்டனர். அவரவர் வீட்டில் வழக்கம் போல அடிக்கவில்லை. இந்த விஷயம் அந்த இருவீட்டையும் எப்படி பாதிக்கும் என அட்வைஸ் செய்தார்கள். இன்னொரு முறை இது போல நடந்தால், தூக்கில் கட்டித் தூக்கிடுவோம் என பாட்டியும் தாத்தாவும் சொன்ன வார்த்தை கீதாவை மொத்தமாக மாற்றியது. இனி எந்தக் காலத்திலும் காதலிப்பதைப் பார்க்கவோ, பேசவோ, கேட்கவோ கூடாது என மனதைப் பூட்டினாள். கடைசியில் முதல் நாள் எழுதியதை எல்லாம் தண்ணீர் ஊற்றி அழித்தார்கள். அருணுக்கு சொந்த அத்தை பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார்கள். ரதி அக்காவுக்கும் வேறு இடத்தில் திருமணம் நடந்தது.
கீதாவுக்கு என்று ஒரு உண்டியல் இருந்தது. வீட்டுக்கு வரும் விருந்தினர் கொடுக்கும் பணத்தை கீதா அந்த உண்டியலில் போட வேண்டும். வருடப் பிறப்பு, பிறந்த நாள் என தாத்தாவும் பாட்டியும் கொடுக்கும் பணமும் உண்டியலில் போட்டு வைப்பாள். கீதா மூன்றாம் வகுப்பில் படிக்கும் காலத்திலிருந்து இந்த சேமிப்புப் பழக்கம் தொடர்ந்தது. அவள் ஐந்தாம் வகுப்பு வந்த போது, தாத்தாவும், பாட்டியும் கீதாவுக்கு காது குத்த வேண்டும் என முடிவு செய்தார்கள் அவளுக்கு காது குத்த தோடு வாங்குவதற்காக அந்த உண்டியலை உடைத்தார்கள். ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு மேல் இருந்தது. ஒரு பவுனில் ஜிமிக்கியுடன் தோடு வாங்கிக் காது குத்தினார்கள். அந்த கிராமத்தில் அவ்வளவு பெரிய தோடு காது குத்துவதற்காக யாரும் வாங்கியதில்லை.
அந்தத் தோடு கீதாவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அழகாகவும் இருந்தது. தாத்தா எப்போதும் எதை வாங்கினாலும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைப்பார். அவர் கேரளா மாடல் டிசைனை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்த டிசைனில் அதுவரை அந்த ஊரில் யாரும் தோடு போட்டதில்லை.
பலரும், ‘இதெல்லாம் என்ன டிசைன்?’ எனப் பழித்தார்கள், ‘உனக்கு இந்தத் தோடு நன்றாகவே இல்லை’ எனச் சொன்னார்கள். சின்ன வயதில் இருந்தே இது போல மற்றவர் கருத்துகளை கீதா பெரிதாக எடுத்துக் கொள்ளமாட்டாள். தனக்குப் பிடித்திருந்தால் போதும், அதில் உறுதியாக இருப்பாள். அந்தத் தோடு அணியும் போதெல்லாம் தன் தோடு மிகவும் ஸ்பெஷல் என மனதில் மகிழ்ந்தாள்.
தோடு வாங்க உண்டியல் உடைக்கப்பட்ட பின், அதே உண்டியலில் மீண்டும் சேமிப்பு தொடர்ந்தது. இப்போது கீதா வளர்ந்திருந்தாள். தினமும் பள்ளி செல்லும் போது வீட்டிலிருந்து பத்துப் பைசா கொடுப்பார்கள், சில நாட்கள் 25 பைசா கொடுத்து அனுப்புவார்கள். பள்ளியின் இடைவேளைகளில் ஸ்னாக்ஸ் வாங்கிச் சாப்பிட இந்த பைசா செலவாகும். சில நாட்களில் பம்பாய் மிட்டாய் வாங்கக் காசிருக்காது. பள்ளிக்கு முன் கடை வைத்திருப்பவர்கள் கடன் கொடுப்பார்கள். கடன் அதிகம் ஆகிவிட்டால், கீதா வீட்டில் பாட்டிக்குத் தெரியாமல் உண்டியலில் உள்ள காசை எடுத்து வந்து கடனைக் கட்டுவாள். சில மாதங்கள் இப்படியே போனது. உண்டியலில் அவ்வப்போது கீதா பணத்தை எடுத்ததால் உண்டியலில் கொஞ்சம் தான் காசு இருந்தது.
ஒரு நாள் பாட்டிக்கு சந்தேகம் வர உண்டியலை எடுத்து எண்ணிப் பார்த்தார் நூறு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும் தான் இருந்தது. கீதா, ‘நான் தான் எடுத்தேன் பாட்டி’, என ஒத்துக் கொண்டாள். பாட்டி சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம் சாட்டைவார் அடியில் வெளுத்து விடுவார். பெரிய பிரச்னைகள் தத்தாவின் காதுகளுக்குச் செல்லும். இயல்பாகவே தாத்தாவுக்கு கீதாவின் மேல் பாசம் இருந்தது. அதிகமாக அடிக்க மாட்டார். அவள் அழகாகக் கோலம் போடுவதும், நன்றாகப் படிப்பதும் அவருக்கும் பிடிக்கும்.
தாத்தாவும் பாட்டியும் எல்லா விஷயத்திலும் பொறுப்பாக இருந்தார்கள். ஊருக்குள் அவர்களுக்கென்று நல்ல பெயர் இருந்தது. அதன் காரணமாக அவர்கள் மீதான பயமும் மரியாதையும் இருந்தது. ‘வெங்கடாசலம் வீட்டுப் பேத்தி’, என்றால் எல்லாரும் மரியாதையுடன் பழகினார்கள். அவர்கள் வளர்த்திருந்த மரியாதை, அவர்கள் வார்த்தையின் மதிப்பைக் கூட்டியது. ‘இனிமேல் எந்தக் காலத்திலும் திருட மாட்டேன்’, என பாட்டி சத்தியம் செய்யச் சொன்னார்கள். ஆம்… அவள் அன்றிலிருந்து பொய் சொல்வதையும் தவிர்த்தாள். பொய் சொன்னால் தானே நாம் அதை உண்மை என்று நிரூபிக்க சத்தியம் செய்ய வேண்டும்?
கீதா தன்னிடன் உள்ள ஏதாவது ஒரு கெட்ட பழக்கத்தை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்தால் அதைத் தொடர்ந்து செயல்படுத்தி தன்னை மாற்றிக் கொள்ளுவாள். அந்த ஒரு வருடம் எந்தக் காரணத்துக்காகவும் பொய் சொல்லக் கூடாது என அதை செயல்படுத்திப் பார்த்தாள். நன்றாகத்தானே உள்ளது. பயம் இல்லாமல் இருக்கலாம். தேவைப்படும் போது தாத்தாவிடமே பணம் கேட்டு வாங்கிக் கொண்டாள். ஏழாம் வகுப்புக்கு மேல் படிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.
கீதா பார்ப்பதற்கு குட்டியாக கருப்பாக இருப்பாள். கிராம பள்ளிக் கூடத்தில் அவளது திறமைக்கு மதிப்பிருந்தது. இவள் நன்றாகப் படித்து பெரிய ஆளாக வருவாள் என்ற நம்பிக்கையை தாத்தா வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் பேசும் விஷயங்களின் வழியாகப் பதிவு செய்தார். அவள் தனக்குள் புது மனுஷியாக உருவாவது போல உணர்ந்தாள்.
கீதாவின் பயணம் தொடரும்…
முந்தைய பகுதி:
படைப்பு:
யாழ் ஸ்ரீதேவி
20 ஆண்டுகாலம் பத்திரிகையாளராகப் பணியாற்றி வரும் ஸ்ரீதேவி யாழினி, பெண்களுக்கான தொடர்கள், கட்டுரைகள், நேர்காணல்களை தொடர்ந்து எழுதி வருபவர். தினகரன், காலைக்கதிர், விகடன் போன்ற நிறுவனங்களில் செய்தியாளராகப் பணியாற்றியவர். தேர்ந்த பேச்சாளர், கட்டுரையாளர், கவிஞர், எழுத்தாளர். ‘செல்லமே’ என்ற குழந்தை வளர்ப்பு வழிகாட்டி நூலையும், பாலியல் விழிப்புணர்வு தொடர்பாக ‘கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு’ நூலையும் எழுதியுள்ளார்.