இளையராஜா சுவாமிநாதன் 19 ஏப்ரல் 1979ம் ஆண்டு கும்பகோணத்தை அடுத்த சிற்றூர் ஒன்றில் பிறந்தார். கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறு வயது முதலே ஓவியத்தில் பெரும் ஆர்வம் இருந்தது. 2001ம் ஆண்டு கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரியில் கவின் கலை இளங்கலைப் பட்டமும், 2003ம் ஆண்டு சென்னை கவின் கலைக் கல்லூரியில் கவின் கலை முதுகலைப் பட்டமும் பெற்றார். ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர், கத்தி, ஆக்ரிலிக், பிரின்ட் மேக்கிங் மற்றும் புகைப்படக் கலையில் ஆர்வம் கொண்டவர்.
1996 முதலே ஓவியக் கலை கேம்ப்கள், போட்டிகள், ஓவியக் கண்காட்சிகளில் பங்கு கொள்ளத் தொடங்கினார். பல போட்டிகளில் பரிசுகளும், பணமுடிப்புகளும் வென்றிருக்கிறார். விகடன், குமுதம், குங்குமம் என தமிழ் நாட்டின் முன்னணி இதழ்களில் இவரது ஓவியங்கள் இடம்பிடித்தன. இவரது சிறப்பு- நியோ ரியலிச (neo realism) ஓவியங்கள். தத்ரூபமாக புகைப்படத்தில் உள்ள காட்சி போல ஓவியம் தீட்டுவதில் வல்லவர். இந்தப் பாணியை ‘ஹைப்பர் ரியலிசம்’ என்று சொல்வோரும் உண்டு. இந்தப் பாணி மேல் விமர்சனம் சொல்வோரும் உண்டு.
சரி, ஹெர் ஸ்டோரீஸ் பக்கத்தில் ஏன் இளையராஜாவுக்கு இவ்வளவு நெடிய பதிவு? தெற்கத்திய பெண்களின் நவீன ஓவியங்களை ரியலிச முறையில் தீட்டிய முன்னோடியான ரவி வர்மா தொடங்கி பல்வேறு ஓவியர்கள் அவர்களை வெள்ளைத் தோல் கொண்டவர்களாகவே நிறுவி வந்திருக்கிறார்கள். மற்ற ஓவியர்கள் அவ்வப்போது ஒன்றிரண்டு ஓவியங்களில் கறுப்பு மற்றும் மாநிற சருமம் கொண்டப் பெண்களை காட்சிப்படுத்தி இருந்தாலும், முழுக்க முழுக்க திராவிட நிறம் கறுப்பு என்பதை நிறுவியவை இளையராஜாவின் ஓவியங்கள் தான்.
2009ம் ஆண்டு பெங்களூரு நகரின் அப்ஸ்டிராக்ட் ஆர்ட் காலரியில் இளையராஜா தீட்டிய 22 திராவிடப் பெண் ஓவியங்கள் ” Painting Exhibition on Dravidian Women” என்ற தலைப்பில் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த ஓவியக் கண்காட்சியை நேரில் கண்டு ரசித்த சந்தோஷ் குரு என்பவர், “தமிழ் நாட்டில் கிராமத்தில் உள்ள பெண்கள் அன்றாட வாழ்க்கையின் சில நொடிகளை, ரியலிஸ்டிக்காக வரைந்துள்ளார். ஆம்ஸ்டர்டாமில் நான் பார்த்த ரெம்ப்ரான் (Rembrandt) வரைந்த ஓவியங்கள் போல இவருடைய ஓவியங்களும் ரியலிஸ்டிக்காக இருந்தது. உலை வைப்பதற்காக அடுப்பூதும் பெண், முற்றத்தில் அமர்ந்து பூ கட்டிக்கொண்டிருக்கும் சிறுமி, தன் சிறு குழந்தையினை ஜன்னல் அருகில் வைத்துக்கொண்டு பராக்கு பார்த்துக்கொண்டிருக்கும் அம்மா, பட்டுப்புடவை கனகாம்பரப் பூ அணிந்துகொண்டு படத்துக்குப் போஸ் கொடுப்பது போன்ற பெண் என சாதாரண வாழ்வின் நொடியினை அருமையாக ஓவியத்தில் வரைந்திருந்தார்”, என எழுதியிருக்கிறார்.
திராவிட வண்ணம் கறுப்பு என்று சமூகம் குரல் கொடுக்கத் தொடங்க பல்லாண்டுக்கு முன்பே ஒரு ஓவியர் தன் ஓவியங்களில் கறுப்பு நிறப் பெண்களை முன்னிறுத்தி வரைந்திருக்கிறார். போலவே 2008ம் ஆண்டு இலங்கைத் தமிழருக்காக நிதி திரட்டிய கண்காட்சியிலும் பங்கேற்றார்.
வெறும் கறுப்பு வண்ணத்தில் கிராமத்துப் பெண்களைக் காட்சிப்படுத்தியதற்காக மட்டுமே இளையராஜாவைக் கொண்டாட வேண்டுமா? இல்லவே இல்லை. பெண்களை வெறும் போகப்பொருளாக ஓவியக் கலையும் கட்டமைத்திருந்த சூழலில், தான் வரைந்த பெண்களை அணிந்திருந்த ஆடைக்கு ஒப்ப கண்ணியமாகக் காட்சிப்படுத்தியிருப்பதை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவரது பெரும்பான்மை ஓவியங்கள் சேலை, பாவாடை சட்டை, தாவணி என்று பாரம்பரிய உடைகள் உடுத்திய பெண்களை பிரதிபலிக்கின்றன; விரசமோ, ஆபாசமோ துளியும் இல்லாமல். பெண்களை சந்தைப்படுத்தாமல், அவர்களது சுயத்தை, அன்றாடத்தைக் காட்சிப்படுத்திய இளையராஜாவை எவ்வளவு போற்றினாலும் தகும்.
” ஆயில் பெய்ன்ட்டிங் அல்லது ஆக்ரிலிக் கொண்டு ரியலிச, நேச்சுரலிச ஓவியங்கள் வரைவது தன வாடிக்கையாக ஓவியர்கள் செய்வது. இவை மாற்றங்கள் செய்ய வசதியானவை. ஆனால் நீர்வண்ண ஓவியங்கள் அப்படி அல்ல. முந்தைய ஸ்ட்ரோக் காயுமுன் அடுத்த ஸ்டெப் என்ன என்பதை மனதில் வைத்துக்கொண்டே வரைவது தான் வண்ணங்களுக்கு இடையேயான ‘டிரான்சிஷனுக்கு’ உதவும்”, என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அவரது பெரும்பாலான ஓவியங்கள் சவால் நிறைந்த வாட்டர் கலர்கள் என்பது தான் கூடுதல் சிறப்பு!
” இவரது தத்ரூப பாணியை பலர் பின்பற்றத் தொடங்கினார்கள். இந்தியப் பெண்களை தனக்கே உரிய தனி பாணியில் வரையத் தொடங்கியவர் இவர். அம்மா, மகள், அம்மா மகன் என்று குடும்பங்களாக வரைந்த முன்னோடி இவர். கலாச்சார ரீதியாகவும் விளக்கு மாடம், பூக்கட்டுவது என ஏதோ ஒரு கிராமப்புற வாழ்வியலை இவரது ஓவியங்கள் கட்டாயம் காட்டும்”, என்றும் ஓவியர் ரம்யா சதாசிவம் சொல்கிறார்.
” என்னுடைய ஓவியங்கள் அதிகம் பெண்களை முன்நிறுத்தித் தான் இருக்கும். அதற்குக் காரணம் நான் வாழ்ந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறைதான்”, என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் இளையராஜா. ” எங்க குட்டியப்பா (இப்படித்தான் அந்தக் குடும்பப் பெண்கள் அவரை அழைக்கிறார்கள்) சிறுவயது முதலே எங்கள் வீட்டுப் பெண்களுடன் மிக இணக்கமாகவே இருப்பார். எங்களோடே வளர்ந்தவர் அவர். பெண்களின் நுண் உணர்வுகளைக்கூட சட்டென புரிந்துகொள்ள அவரால் முடியும்”, என்று அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் கூறுகிறார்.
” ஆடு மாடு ஓட்டிக்கொண்டு போகும் சிறுமியின் ஓவியத்தை வரைய என் வீட்டுக்கு எதிரில் இருந்த சந்து தான் கேன்வாஸ். பல வண்ண லேயர்களில் தெரியும் இந்தச் சுவரில் சாய்ந்தாற்போல அந்தச் சிறுமியை வரைந்தேன். அதே போல எங்கள் தெருவிலிருக்கும் பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்து ஏ.கே.எஸ். தாத்தாவின் வீடு எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். என்னுடைய பல ஓவியங்கள் அந்த வீட்டைப் பின்புலமாகக் கொண்டு வரையப்பட்டவை”, என்றும் இளையராஜா குறிப்பிட்டுள்ளார். அவரது பல ஓவியங்கள் அவர் அன்றாடம் பார்த்த. பேசிப்பழகிய பெண்கள் என்பது தன ஆச்சர்யமாக இருக்கிறது. ஆடு மேய்க்கும் சிறுமி, எதிர்வீட்டு நிம்மி, மாமா மகள், சித்தப்பா மகள் என இவரது ஓவியங்களின் பேசுபொருள்கள், உணர்வுகள் அவர் அன்றாடம் பார்த்துப் பழகியவர்கள். அதனால் தானோ என்னவோ, அவரது ஓவியங்களில் அந்த உணர்வுகள் கம்பீரமும், கண்ணியமும் தாங்கி நிற்கின்றன.
இளையராஜாவின் வழிகாட்டியாக இருந்து, அவரை கவின் கலைக் கல்லூரிக்குள் கொண்டு செலுத்தியவர் கும்பகோணம் டவுன் ஹால் பள்ளியில் ஓவிய ஆசிரியர் துரை என்று சொல்கிறார் அவரது மற்றொரு ஓவிய ஆசிரியர் அமுதா. ஒரு நாளைக்கு 50 போர்ட்ரெய்ட் ஓவியங்கள் வரை கல்லூரிக் காலங்களில் இளையராஜா வரைவார் என்றும் அதனால் தான் அது தான் பின்னாளில் அவர் பல ஓவியங்கள் வரைய முடிந்தது என்றும் அவருடன் படித்த மாணவர்களும், முன்னாள் கல்லூரி முதல்வரும் கூறுகிறார்கள். விவசாயக் குடும்பத்திலிருந்து, எளியப் பின்புலம் என்று எளிமையானப் பின்னணி கொண்டவர் இந்த உயரத்தை எட்ட அவரது கடும் விடாமுயற்சி தான் காரணம் என்றும் அவரது கல்லூரி முதல்வர் சொல்கிறார்.
” எனக்கு எல்லாமே வரைய வரும். யார் என்ன சொன்னாலும் அதை நாம் செய்வோமே என்று எட்டு ஆண்டுகள் என் பயணம் அப்படியே போனது. நாம் செய்வதை இந்த உலகம் எப்போது ஏற்கும்? எனக்கான களம் எது என்று யோசிக்கத் தொடங்கினேன். எனக்கான பாணியை ஆர்ட் காலரிகளில் கேட்கும் போது தான் சுயதேடல் ஆரம்பித்தது”, என்று இளையராஜா பின்னாளில் தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். அப்படித்தான் ‘ஃபிகரேட்டிவ் பெய்ன்டிங்குகள்’ (Figurative paintings) மேல் இளையராஜாவின் கவனம் குவிந்தது. அந்தப் பாணியைக் கைக்கொண்டு 2003ம் ஆண்டு ‘எண்ட்லெஸ்’ என்ற பெயரில் தன் முதல் ஓவியக் கண்காட்சியை வைத்தார்.
” பார்த்திபன், சிம்புதேவன் (23ம் புலிகேசி படத்தின் இயக்குனர்) ஆகிய இரு இயக்குனர்களும் எங்களைப் போன்ற கிராமத்து இளைஞர்களின் கண்காட்சியை ஊடகத்தின் கவனத்துக்குக் கொணர்ந்தவர்கள். அதன் மூலம் எங்களுக்கு பலரது அறிமுகம் கிடைத்தது. ஒரு படைப்பாளிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை விதைக்க வல்லது அவரது ஓவியங்களை பணம் தந்து பிறர் வாங்கும் போதுதான்”, என்றும் பதிவு செய்திருக்கிறார் இளையராஜா.
” பெண்கள் சார்ந்த ஓவியங்களை முன்னோடிகள் யார் வரைந்தார்கள் என்று பார்த்தேன். கல்கத்தாவின் சஞ்சய் பட்டாச்சாரியா, விகாஸ் பட்டாச்சாரியா ஆகியோரின் படைப்புகள், மும்பையில் ஜான் ஃபெர்னாண்டெஸ் என்று என்னைச் சுற்றி இருந்த ஓவியர்களின் தாக்கம் என் படைப்புகளில் இருந்துகொண்டே தான் இருந்தது. அடுத்தவர்களின் தாக்கத்திலிருந்து விடுபடவே எனக்கு பத்தாண்டு ஆனது. அன்றாட வாழ்வில் பெண்கள் – அம்மாவும் குழந்தையும், மீனவப் பெண்கள் என பெண் சார்ந்து ஓவியர் ஆன்டனி தாஸ் ஏற்கனவே ஓவியங்கள் வரைந்திருந்ததை அறிவேன். எனக்கான பாணியில் நான் சந்தித்த, பார்த்த பெண்களை ஏன் பதியக்கூடாது? இது போன்ற கிராமத்துப் பெண்களை யாரும் அதிகம் ஓவியமாக தீட்டியதில்லையே, நாம் ஏன் செய்யக்கூடாது என்று சிந்தித்தேன்.”
” கண்ணுக்கெதிரே பார்த்து உணர்ந்த விஷயங்களைப் பதியவைக்காமல், நமக்குத் தெரியாத விஷயங்களை ஏன் தேடவேண்டும் என்று யோசித்தேன். ஒரு ஓவியத்தின் மதிப்பு அந்த ஓவியனின் அனுபவம் தான். அவன் எத்தனை ஆண்டுகள் அந்த படைப்புலகில் இருந்திருக்கிறான் என்பதைப் பொறுத்து தான் அவனது ஓவியம் மதிப்பிடப்படும். படைப்புக்கான மரியாதை கிடைக்கும். என்னைப் பொறுத்தவரை என் எல்லா ஓவியங்களும் ஒன்று தான். வியாபார விஷயத்தில் மட்டும் தான் கூடுதல் குறைவு என்று பார்க்கப்படுகிறது. நமக்கான வரவேற்பையும், அடுத்த தளத்துக்கு நம்மைத் தள்ளுவது என்பதே படைப்பை ஒருவர் வாங்கும்போது தானே? பொருளாதார ரீதியான வெற்றி தானே ஒருவரை வெற்றிகரமான ஓவியராக இங்கே மாற்றுகிறது? “, என்ற கேள்வியை முன்வைக்கிறார்.
பெங்களூருவில் ஒரு சிறப்புக் குழந்தை இளையராஜாவின் ஓவியத்தை ஐபேடில் பார்த்து அதனுடன் பேசத் தொடங்கியதை தன் வாழ்வில் தனக்குக் கிடைத்த மிக அற்புத விருது என்று இளையராஜா சொல்லியிருக்கிறார். இன்னும் ஆழமாக, இன்னும் உணர்வு ரீதியாக, உண்மையுடன் வரைய இந்த சம்பவம் உத்வேகம் தந்தது என்றும் கூறியிருக்கிறார்.
” பிறர் தேவைக்கு வரைவது ஒன்று, பிறர் தேவை எதுவாக இருக்கும் என உணர்ந்து வரைவது மற்றொன்று, நமக்கு மட்டுமே பிடித்ததை வரைவது ஒன்று. இந்த மூன்று வகைமைகளுக்குள் ஒரு ஓவியன் வரைவது வந்துவிடும். இதில் நாம் யாராக செயல்படுகிறோம் என்பது தான் ஒரு கலைஞனின் வெற்றியை நிர்ணயிக்கும். பெங்களூருவில் சித்ர சந்த்யா என்ற சாலையோர கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நடக்கும். அங்கு தன என் வாழ்க்கையும் தொடங்கியது. இது போல எங்கெல்லாம் படைப்புகளை எல்லாம் வைக்க முடியுமோ அங்கெல்லாம் இது போன்ற கட்டணமில்லா ஷோக்களில் எல்லா படைப்பாளரும் வைக்கத் தான் வேண்டும். அங்கு ஓவியங்களை வைப்பதில் குறைவு எதுவுமில்லை.”
” பெண் என்ற பொருண்மையில் தான் என் ஓவியங்கள் இன்றுவரை இருக்கின்றன. 2003ம் ஆண்டு சென்னை ஆர்ட் காலரி ஒன்றில் என் 2X2 ஓவியத்தை 5000 ரூபாய்க்கு விற்றேன். இன்று அதே அளவு ஓவியம் லட்ச ரூபாய்க்கு விற்கிறது. ஓவியங்கள் விற்றாலும், விற்காவிட்டாலும், நம் முயற்சியை தடையில்லாமல் செய்துகொண்டே இருக்கவேண்டும். எனக்கு எட்டு ஆண்டுகள் ஆனது; உங்களுக்கு கூடவும் இருக்கலாம், குறையவும் இருக்கலாம்.”
உண்மைக் கலைஞருக்கு மரணமில்லை.
படைப்பு:
நிவேதிதா லூயிஸ்
எழுத்தாளர், வரலாற்றாளர். Her Stories இணை நிறுவனர், ஹெர் ஸ்டோரீஸ் இணைய இதழ் ஆசிரியர்.