மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமில்லையென்று தோன்றினாலும் மிகத்தீவிரமான ஒரு சிக்கல் குறித்து இன்று பேசலாம் என்று தோன்றியது. தமிழ் பட்டிமன்ற வடிவில் சொல்வதென்றால் ’செய்யறிவு (AI – Artificial Intelligence) வரமா சாபமா’ என்பதுதான் தலைப்பு.

பட்டிமன்ற நடுவராக இருந்தால் கண்டிப்பாக ஏஐ வரமே என்று சொல்லி அணு ஆயுதத்தை எடுத்துக்காட்டாக்கி கண்டுபிடிப்புகள் எந்நாளும் சாபமல்ல அதைத் தவறாகப் பயன்படுத்தும் மனிதன் தான் மகத்தான சல்லிப்பயல் என்று முடித்துவிடலாம். ஆனால் விஷயம் அப்படி எளிதாகக் கடந்து விடக்கூடிய சிக்கல் அல்ல.

’அப்படி என்னங்க உலகமா அழிஞ்சிரப்போகுது’ என்று கேட்கிறீர்களா?

உலகம் அழிவதென்றால் என்ன? இயற்கை சீற்றத்தால் மண்ணும் மரமும் சரிவதா? எத்தனையோ ஆயிரக்கணக்கான காடுகள் அழிந்துவிட்டன நதிகள் காணாமல் போய்விட்டன பனி மலைகள் மறைகின்றன. ஏன் இனங்களே இல்லாமல் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதற்கெல்லாம் உலகம் அழிகிறதென்று நாம் பெரிதாக அலட்டிக்கொள்வதில்லையே. ஒரு துணுக்குச்செய்தியாக அதைக்கடந்து விடுகிறோம். நமக்கு உலகம் அழிவதென்றால் நாம் அழிதல் அதாவது மானுடம் அழிவது. நம்மைப்பொருத்தவரை மனிதன் இல்லாவிட்டால் உலகமில்லை. சரி, மானுடம் அழிவதென்றால் என்ன? மனிதர்கள் இறப்பதா? வெறும் உடல் உயிர் அழிவது அழிவென்றால் அறிவு அழிவதை என்னவென்று சொல்வீர்கள்?

ஆம், ஏஐ மூலமாக நாம் மெல்ல மெல்ல தொலைத்துக் கொண்டிருப்பது நமது அறிவை, நமது சிந்தனைத்திறனை(cognitive skills), நமது படைப்பாற்றலை.

AI isn’t just taking over work—it’s taking over thought and at great speed.

’எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் பழமைவாதிகள் இப்படி ஏதாவது சாக்கு சொல்வது வழக்கம்தான். நீங்கள் புதுமைகளுக்கு எதிரியா? உங்களுக்கு ஏஐ உதவவில்லையா’ என்று கேட்கிறீர்களா?

ஒரு கணினிப்பொறியாளராக, தொடர்ந்து புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திப்பார்க்க முயற்சிக்கும் நுகர்வாளராக, ஒரு பயனர் அனுபவ நிபுணராக என்று பலவழிகளில் எனக்குச் செய்யறிவு பெருந்துணை செய்கிறது என்பதே உண்மை. கார்ப்பரேட் பேச்சு வழக்கில் சொல்வதானால் செய்யறிவு எனது வேலை நேரத்தை/பணிச்சுமையை 5x குறைத்திருக்கிறது. ஒரு சிறுதொழில் நிறுவனராக என் வேறுபல சிக்கல்களுக்கான பெரும் வடிகாலாகவும் அது இருக்கப்போகிறது. பிறகு ஏன் இப்படிச்சொல்கிறேன் என்கிறீர்களா? காரணம் நமது அடிப்படைச் செயல்திறன் தொலையும் வேகம்.

’அப்ப ஏஐ வேண்டாமா?’ ‘ கண்டிப்பாக வேண்டும்.’ ’என்ன தாங்க சொல்றீங்க?’ என்று கேட்கிறீர்களா?

சுருக்கமாகச்சொன்னால் செய்யறிவு வளர்வது சிக்கலல்ல, செய்யறிவால் நாம் குறுகுவதுதான் சிக்கல். எல்லாக் கண்டுபிடிப்புகளும் மனிதனுக்கு உதவுவதும் அல்லாததும் பயன்பாட்டைப்பொருத்துத்தான். கணினியை நினைத்துப்பாருங்கள். அது வந்தபோது கூடப் பெரும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் கம்ப்யூட்டர்களும் இன்னபிற இயந்திரங்களும் மனிதனின் வேலையைச் சுலபமாக்கியதன்றி வாழ்க்கை தரத்தையே மாற்றியமைத்தன. புதிய துறைகளையே உருவாக்கின. அதே போலத்தான் செய்யறிவு செய்யப்போகிறது. நம் வாழ்க்கை முறையில் நுகரும் கலாச்சாரத்தில் என்று எல்லா வகையிலும் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை உருவாக்கப்போகிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அதே வேளையில் அதைப்பயன்படுத்தும் நம் திறன் மற்றும் பொறுப்பு குறித்தும் மறந்துவிடக் கூடாது. கேல்குலேட்டர் திறன்பேசிகளில் வந்தபிறகு பலரும் கணக்குப்போடுவதை மறந்துவிட்டோம் அல்லது வேகம் குறைந்துவிட்டோம். எத்தனை பேருக்குப் பத்து அலைபேசி எண்களுக்கு மேல் நினைவிருக்கிறது. அப்படித்தான் செய்யறிவும் நம் பணியை இலகுவாக்குகிற வேளையில் நம் திறனைக் குறைக்கத் தொடங்கியிருக்கிறது.

’ஏங்க இதெல்லாம் ஒரு பிரச்சனையாங்க? ஏஐ எத்தைகைய பெரும் சிக்கல்களுக்கும் சவால்களுக்கும் பதில் தருகிறது’ என்கிறீர்களா?

ஆம், உண்மை தான். சிக்கலின் ஆதாரப்புள்ளியும் அது தான்.

We want solutions fast and we dont want to spend time experimenting and solving issues. பரிசோதனை செய்வதற்கும், சிக்கல்களைச் சமாளிப்பதற்கும் நேரம் வேண்டாம்; ஆனால் தீர்வு மட்டும் வேண்டும் நமக்கு. அங்கேதான், அறிவு அழிக்கப்படத் தொடங்குகிறது. அதெல்லாம் சும்மா chatgpt பயன்படுத்துவதாலெல்லாம் அறிவு அழியாது என்று உண்மையாகவே நீங்கள் நம்புகிறீர்களா?

படம்:Times Higher Education

அறிவின் 6 படிநிலைகளாக (bloom’s taxonomy) சொல்லப்படுவன:

1. நினைவு (remember)

2. புரிதல் (understand)

3. பயன்பாடு (apply)

4. ஆய்வு (analyse)

5. மதிப்பீடு (evaluate)

6. புதுமை (create)

இதில் முதல் படி – நினைவு. நினைவு என்பது வெறும் தகவல் பெட்டகமல்ல அது ஒரு நெட்வொர்க் என்கிறார்கள். அதாவது புதிய தகவல் கொண்டு ஏற்கனவே இருக்கும் பழைய தகவலைக்கண்டடைந்து பொருளுணர்தல். அறிவின் அடிப்படைத் தளமே அது தான். நமக்கு அதுவே இப்போது முடிவதில்லை. அதையே அவுட்சோர்ஸ் செய்கிறோம்.

இதனால் என்ன ஆகும்? அறிவின் அடுத்த நிலையான புரிதல் தட்டையாகும். கற்றலும் தட்டையாகும். ஒன்றைப்புரிவதற்கு அதை நன்றாக அறிந்திருக்க வேண்டுமில்லையா? அடுத்த படி பயன்பாடு. ’கற்றபின் நிற்க அதற்குத்தக’ என்று படித்திருக்கிறோமா. இங்கே கற்றல் தட்டையாகும்போது பயன்பாடும் பயனற்றதாகிறது. கற்றதை நினைவில் வைத்துத்தான் ஒரு சிக்கலுக்கான தீர்வைக் கண்டடைய முடியும். கற்றலும் புரிதலும் மெலிதாகிறபோது தீர்வு கண்டடைய பொறுமை இருக்குமா? அதற்கும் வேகமாகச் செய்யறிவை நாடிவிடுவோம். சட்டெனச்சொல்லுங்கள் இப்போதே பெரும்பான்மை தேடல்களில் இந்த நிலையை அடைந்துவிட்டீர்கள் தானே? எல்லாவற்றுக்கும் “hey chatgpt, hey alexa” தானே?

இந்த நிலை தொடர்ந்தால் அதாவது சின்னச்சின்ன தீர்வுகளுக்குக்கூட செய்யறிவைத்தேடும் நிலை தொடர்ந்தால் என்ன ஆகும்? சிந்திக்கவேண்டுமென்ற அடிப்படை எண்ணம் கூட இருக்காது. அதனால் என்ன ஆகும்? செய்யறிவு தந்த தீர்வே சிறப்பு என்று அப்படியே நம்புவோம். அந்தப் பதில்/தீர்வு ஏன் எப்படி வந்ததென்று தெரியாது (இன்றைய Vibe coding யார் வேண்டுமானாலும் ஒரு மென்பொருளையே செய்யறிவிடம் உருவாக்கி வாங்கிவிட முடியும். ஆனால் அடிப்படை அ,ஆ கூடத்தெரியாது. ஏதாவது சிக்கல் இருந்தால் debug பண்ணத்தெரியாது. சிக்கல் இருப்பதே தெரியாது.)

இந்த முதல் மூன்று நிலைகளிலேயே நாம் செய்யறிவிடம் சிக்கிவிட்டால் நான்காவது: ஆய்வு – அதெல்லாம் வாய்ப்பே இல்லை. அதுதான் மொத்தமாக மூளையை அவுட்சோர்ஸ் செய்தாகிவிட்டதே!

ஐந்தாவது: மதிப்பீடு – ஒரு தகவல் அல்லது தீர்வைச் சீர்தூக்கிப்பார்க்கத் தேவையான அடிப்படைத்திறன் எல்லாமே குறைந்துபோன நிலையில் செய்யறிவு கொடுக்கும் தீர்வே சிறப்பு என்று தேங்கி நின்றுவிடுவோம். ஏற்கனவே இந்தச் சீர்தூக்கிப்பார்க்கும் பழக்கமெல்லாம் விட்டுப்போய்ப் பலகாலமாகி விட்டது. யார் என்ன சொன்னாலும் நம்பும் வாட்ஸப் வாழ்க்கைக்கு ஏற்கனவே பழகிவிட்டோம்.

ஆக இவைகளெல்லாம் போய்விட்டால் இறுதிப்படியான புதுமை/படைப்பாற்றல் எப்படி இருக்குமென்று நினைக்கிறீர்கள்?

எதிலுமே தனித்துவம் இருக்காது.

இப்படியே போனால் என்ன ஆகும்? பின்னால் ஒரு எளிய சிந்தனையைக்கூட மனதுக்குள் கோக்கத்தெரியாத நிலை வந்துவிடும். தனக்கென ஒரு குரல் இருக்கிறது என்பதே தெரியாத நிலை ஏற்படும்.

ஒரு விஷயம் தோன்றுகிறது. அதை எப்படி எடுத்துச்சொல்வது என்று போராடுகிறோம் பாருங்கள்! ‘என்ன சொல் பயன்படுத்துவது, எப்படி அழகாக்குவது,’ இந்த இயல்பான செயல்தான் brain building. இதைத்தான் இழந்துவிடக்கூடாதென்கிறேன். ஏற்கனவே ஒருபுறம் கட்டற்ற ஸ்வைப் கலாச்சாரத்தால் brain rot ஆகிக்கொண்டிருக்கிறோம்.

இவ்வளவு நீளமாகப் பேசி என்ன தான் சொல்ல வர்றீங்க… என்று இன்னும் நீங்கள் கேட்பீர்களானால்:

அறிவின் ஆறு படிநிலைகளையும் எப்போதும் உயிர்ப்போடு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறேன். உங்கள் அறிவைப்பயன்படுத்துங்கள்; செய்யறிவை உதவிக்கு ‘மட்டும்’ வைத்துக்கொள்ளுங்கள் என்கிறேன்.

ஒன்றைத்தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். செய்யறிவு ஒன்றும் உண்மையான அறிவாளி அல்ல. அது தனக்குக்கொடுக்கப்பட்ட தரவுகளை மட்டும் வைத்துச் சிந்திப்பது போலச்செய்யும் mimicry artist. அதற்கு complex reasoning எல்லாம் வராது. அதை அந்தளவிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் அறிவோடு எப்போதும் தொடர்பிலிருங்கள். சிந்தப்பது அழகு. உடற்பயிற்சி போலச் சிந்தனைப்பயிற்சியும் தேவை. எப்போதும் அதைக் கைவிடாதீர்கள். பிள்ளைகளோடு தொடர்ந்து உரையாடுங்கள். அறிவின் மகத்துவம் சிந்திப்பதன் அழகு அதன் வெகுமதி பற்றித் தொடர்ந்து சொல்லுங்கள்.

தீர்வுகள் முக்கியமல்ல போராட்டங்கள்தான் முக்கியம்.

அழகிய அவுட்புட் அவசியமல்ல தப்பும் தவறுமாயினும் அவுட்புட் உங்களுடையதாக இருப்பது அவசியம்.

எனது டைனோசர் சிறுகதையில் வரும் ஒரு சொற்றொடர் “எங்களால் நீங்கள் யோசித்துச்செய்யும் எதையும் செய்துவிட முடியும், யோசியாமல் செய்வதைத்தான் செய்ய வரவில்லை.”

மனித மூளை மகத்தானது. அதை வீணடித்துக் கோமாவுக்குள் தள்ளிவிடாதீர்கள். அது தான் மனித உலகின் அழிவு.

டிஸ்கி: ஒரு சாமானியளின் பார்வையில் சாமானியருக்காக.

படைப்பாளர்

மாயா

கணினிப் பொறியாளர். வரலாறு, அறிவியல்மேல் தீராக் காதல் கொண்டவர். அறிவியல் புனைகதைகளை தமிழில் எழுதும் சொற்பமான பெண்களில் ஒருவர். வரலாற்றுப் புதினங்களும் அறிவியல் புனைவுகளும் எழுதியுள்ளார். அமேசான் பென் டு பப்ளிஷ் போட்டியில் பங்கேற்று யூனிட் 109 மூலம் பலரின் கவனம் ஈர்த்தவர்.