பெண்களுக்கென்றே பிரத்யேகமாக ஏற்படும் புற்றுநோய்களில் மிக முக்கியமான இரண்டு, மார்பகப் புற்றுநோயும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயும். இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால்தான் அதிக இறப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெண்களைப் பாதிக்கும் இந்தப் புற்றுநோய்களுக்குத் தீர்வு காணும் வகையில் உலகெங்கும் பல ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு நோய் வந்த பிறகு அதைக் குணப்படுத்துவதைவிட அந்த நோய் வராமல் காப்பதுதான் சாமர்த்தியம். புற்றுநோய்களைப் பொறுத்தவரையில் அது வருவதற்கான காரணிகள் என்று பலவற்றைக் கூறலாம். அதில் ஒன்றுதான் புற்றுநோய்களை உண்டாக்கும் வைரஸ்கள். இந்த வகை வைரஸ்களை ஆங்கிலத்தில் Oncogenic viruses என்பார்கள்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முக்கியக் காரணியாகக் கருதப்படும் மனித பாபிலோமா வைரஸின் (Human papillomavirus) சுருக்கமே HPV. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. உலகெங்கும் தற்போது வெளியாகியிருக்கும் தடுப்பூசிக்கான அட்டவணைகளில் HPV தடுப்பூசியும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதன் மூலம் மனித பாபிலோமா வைரஸால் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயில் இருந்து காத்துக் கொள்ள முடியும். வேறு சில காரணிகளால் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை இதனால் தடுக்க முடியாது என்றாலும் உலகெங்கும் உள்ள 70% கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்களுக்கு இந்தக் குறிப்பிட்ட வைரஸ்தான் காரணம் என்பதால் இந்தத் தடுப்பூசி அந்த வகை புற்றுநோயிலிருந்து பெண்களைக் காக்க உதவுகிறது.
எந்த ஒரு தடுப்பூசியாக இருந்தாலும் அதைக் குறிப்பிட்ட வயதுக்குள் எடுக்க வேண்டும் எனப் பரிந்துரைகள் இருக்கிறது. பெரும்பாலான தடுப்பூசிகளைப் பதினெட்டு வயதிற்குள் எடுப்பதற்கு காரணம், இளம் வயதில் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதுதான். இது தவிர ஒரு தடுப்பூசியை எத்தனை முறை எடுத்துக் கொள்ள வேண்டும்? முதல் முறைக்கும் இரண்டாம் முறைக்கும் இடையில் எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதும் நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
இதுவரை ஆறு HPV தடுப்பூசிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டு உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. 2022இல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி 9 வயது முதல் 14 வயது வரை உள்ள பெண் குழந்தைகள் இந்தத் தடுப்பூசியை ஒருமுறை எடுத்துக் கொள்ள வேண்டும். 15 வயதிலிருந்து 20 வயதிற்குட்பட்டவர்கள் ஒன்று அல்லது இரண்டு முறை இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம். 21 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாத இடைவெளியில் கட்டாயம் இரண்டு முறை எடுக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்களும் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் இந்தத் தடுப்பூசியை மருத்துவ ஆலோசனையோடு மூன்று முறை எடுக்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் இந்தத் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளக் கூடாது. பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே இந்தத் தடுப்பூசியை ஆண் பெண் இருவருமே எடுத்துக் கொள்வது நல்லது. மனித பாபிலோமா வைரஸால் கழுத்து, தொண்டை போன்ற பகுதிகளில் ஏற்படக்கூடிய புற்றுநோயிலிருந்தும் இந்தத் தடுப்பூசி காக்கும் என்பதால் ஆண் பிள்ளைகளும் இதை எடுத்துக் கொள்வது அவசியம்.
கார்டசில் 9 (Gardasil 9) தடுப்பூசி அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்பவரின் வயதைப் பொறுத்து இந்தத் தடுப்பூசியை எத்தனை முறை எடுத்துக் கொள்வது என்கிற எண்ணிக்கை அளவு மாறுவதால் முறையான மருத்துவ ஆலோசனையோடு இதை எடுத்துக் கொள்ள வேண்டும். முதல் முறை எடுத்துக் கொண்ட பிறகு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். ஏற்கெனவே சில மருந்துகளுக்கு ஒவ்வாமை உள்ளவர்கள் இந்தத் தடுப்பூசியை எடுத்துக் கொள்வதற்கு முன் உரிய பரிசோதனை மேற்கொள்வது முக்கியம்.
பேப் டெஸ்ட் (pap test) மற்றும் எச்பிவி டி.என்.ஏ டெஸ்ட் (HPV DNA test) தான் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டறியும் மருத்துவப் பரிசோதனை முறைகள். இந்த பேப் டெஸ்ட் மூலம் கர்ப்பப்பை வாய் செல்களில் ஏதேனும் மாற்றமிருக்கிறதா என்பதைக் கண்டறிந்து புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அறிய முடியும். எச்பிவி டி.என்.ஏ டெஸ்ட் மூலம் செல்களில் எச்பிவி வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து முன்கூட்டியே சிகிச்சை அளிக்க முடியும். கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் சராசரி வயது ஐம்பதாக இருந்தாலும் சில ஆண்டுகள் இடைவேளையில் 21 வயதிலிருந்தே பேப் டெஸ்ட் எடுத்துக் கொள்வது அவசியம். புற்றுநோய் வருவதற்கு முன்பாகவே அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வதால் இது மிகவும் பரிட்சயமான பரிசோதனை முறையாகக் கருதப்படுகிறது. எச்பிவியால் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய், ஒரு பால்வினைத் தொற்று என்பதால் பாதுகாப்பான உடலுறவு மற்றும் தனிப்பட்ட சுகாதாரம் போன்றவை இந்தத் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்.
இது தவிர பெண்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான புற்றுநோய் என்றால் அது மார்பகத்தில் ஏற்படும் புற்றுநோய்தான். இந்தப் புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பேப் டெஸ்ட் போன்ற பரிசோதனைகளை மருத்துவமனைக்குச் சென்று செய்து கொள்ளும் அவசியமில்லை. வீட்டிலேயே மார்பக சுய பரிசோதனை செய்வதன் மூலம் மார்பகத்தில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். மார்பகத்தில் ஏற்படும் கட்டி, எலியைப் போல உருண்டோடும் breast mouse கட்டிகள், மார்பகத்தைச் சுற்றி ஏற்படும் செதில்கள், மார்பகத்தைச் சுற்றி இருக்கும் பகுதி சிவந்து இருத்தல், இரு மார்பகங்களும் வழக்கத்துக்கு மாறாக ஒன்றோடு மற்றொன்று ஒப்பிட்டுப் பார்க்கையில் வித்தியாசமான அளவில் இருப்பது, மார்பு காம்புகளில் ஏற்படும் மாற்றங்கள் போன்றவை அனைத்தும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள். சுய பரிசோதனை செய்யும் போது இதில் ஏதேனும் அறிகுறிகள் தெரிகிறதா என்று பார்க்க வேண்டும். ஒரு வேளை ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
2022 தரவின்படி உலகெங்கும் இருக்கும் 157 நாடுகளில் பெண்களைப் பாதிக்கும் மிக முக்கியமான புற்றுநோய்களில் இந்த மார்பகப் புற்றுநோயிக்குதான் முதலிடம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. குடும்பத்தில் யாருக்கேனும் மார்பகப் புற்றுநோய் இருந்தால் அது அடுத்த தலைமுறையினரையும் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆனால், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்குக் கட்டாயமாக அது மரபணுக்கள் வழியாகத் தன் குடும்பத்தினரிடம் இருந்துதான் வந்திருக்கும் என்பது கட்டாயமில்லை. மார்பகத்தில் இருக்கும் பால் குழாய்கள் சார்ந்த பகுதிகளில்தான் இந்தப் புற்றுநோய் ஏற்படுவதால் இது 99 சதவீதம் பெண்களையே பாதிக்கிறது. ஒன்று அல்லது அதற்கும் குறைவான சதவீதத்தில்தான் அது ஆண்களைப் பாதிக்கிறது. அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சுய பரிசோதனை முறையையே ஆண்களும் பின்பற்றலாம்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைப்பதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு இனப்பெருக்க ஆரோக்கியமும் முக்கியம். இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியமும் சுகாதாரமும் ஆண்-பெண் இருவருமே கடைப்பிடிக்க வேண்டியவை. பெண்களுக்கு 35 வயதிற்கு மேல் ஏற்படும் மெனோபாஸ், நாற்பதுகளின் பிற்பகுதியில் ஏற்படும் புற்றுநோய்கள், கருப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் போன்றவை ஏற்படாமல் இருக்க இதுபோன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றுவதோடு, அதைப் பற்றி வெளிப்படையாக மருத்துவரிடமும் மற்றவர்களிடமும் கலந்துரையாடுவது இன்றியமையாத ஒன்று. தன்னுடல் பற்றிய எந்தத் தயக்கமும் கூச்சமும் ஆண், பெண் யாராயினும் இருத்தல் கூடாது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இது போன்ற விழிப்புணர்வும் வெளிப்படையாக பேசும் சூழலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
(தொடரும்)
படைப்பாளர்:
வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகிற்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech Genetic Engineering) பயின்று, தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech Computational Biology) பயின்று வருகிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’ தொடர், ஹெர்ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கிறாது.