டிசம்பர் 1911 வரை, பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகராகக் கல்கத்தா இருந்தது. தலைநகரை மாற்றுவதற்கான முன்மொழிவு பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு முன்வைக்கப்பட்டது என்றாலும்  வங்காளப் பிரிவினை (1905) போன்ற பல அரசியல் எழுச்சிகள் ஏற்பட்டதால், ஆங்கிலேயர், தலைநகரை விரைவில் மாற்றலாம் என முடிவு செய்தனர். அவ்வாறு அவர்கள் தேர்ந்தெடுத்த இடம் தான் தில்லி. 

1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் நாள் நடைபெற்ற டெல்லி வைஸ்ராய் மாளிகை அடிக்கல் நாட்டு விழாவில், ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்படும் என்று அறிவித்தார். மூன்று நாள்களுக்குப் பிறகு, மன்னர் புது தில்லிக்கு அடிக்கல் நாட்டினர். 1931-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது. அதை முன்னிட்டு வெளியிட்ட அஞ்சல் தலைகள் இவை. 

War Memorial Arch போர் நினைவுச்சின்னம்

இது இப்போது ‘இந்தியா கேட்’ என்று அழைக்கப்படுகிறது. முதல் உலகப் போரில் பல்வேறு இடங்களில் இறந்த 74,187 இந்திய வீரர்களின் நினைவாக இது அமைக்கப்பட்டது. 13,300 வீரர்களின் பெயர்கள் இந்த வாயிலில் பொறிக்கப்பட்டுள்ளன. தலைநகரின் குடியரசு நாள் அணிவகுப்பு இங்கிருந்துதான் தொடங்குகிறது. 

Council House 

Council House பழைய நாடாளுமன்றக் கட்டிடம். ஜனவரி 1927 இல் சட்டமன்ற அவையின் திறக்கப்பட்டது. அது முதல், இந்தியா விடுதலை அடைந்த காலம் வரை பிரிட்டிஷ் இந்தியாவின் சட்டமன்றமாகச்  செயல்பட்டது.  26 ஜனவரி 1950 வரை, இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இங்குச் செயல்பட்டது. அதன்பிறகு, 18 செப்டம்பர் 2023 வரை இந்திய நாடாளுமன்றமாகச் செயல்பட்டது. 28 மே 2023 அன்று, புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப் பட்டபின், அருங்காட்சியகமாக உள்ளது.

புரானா கிலா /பழைய கோட்டை Purana Gila / Old Fort

இந்தக் கோட்டை ஹுமாயூன் மற்றும் ஷேர் ஷா சூரி ஆகியோரால் கட்டப்பட்டது. சூரி வம்சத்தின் நிறுவனர், ஷெர்ஷா சூரி, 1540-ம் ஆண்டு ஹுமாயூனை தோற்கடித்து, கோட்டைக்கு ஷெர்கர் என்று பெயரிட்டார்; மேலும் பல கட்டமைப்புகளைச் சேர்த்தார். 

தலைமைச் செயலகக் கட்டிடம் (Secretariat Building)

இதுதான் இந்திய அரசின் நிர்வாகத்தை நடத்தும் இடம்.

Viceroy’s House

ஆங்கிலேயர் காலத்தில் வைஸ்ராய் தங்கும் மாளிகையாக Viceroy’s House இருந்தது. இப்போது இந்தியக் குடியரசுத் தலைவர் தங்குவதால் குடியரசுத் தலைவர் மாளிகை எனப்படுகிறது. இத்தாலியில் உள்ள அரண்மனைக்கு அடுத்தபடி ஒரு நாட்டுத் தலைவரின் வாழ்விடத்தில் இதுதான் பெரியது. 

1935-ம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மன்னராகப் பொறுப்பேற்று 25 ஆண்டுகள் நிறைவானது. அதன்பொருட்டு வெளியான  அஞ்சல் தலைகள். 

Rameswaram Temple Madras Silver Jubilee 6th May 1935 – இப்படி ஒரு அஞ்சல்தலை வெளியானது. அப்போது மெட்ராஸ் ராஜதானி/ சென்னை ராஜதானி இன்றைய தமிழ்நாடு, இலட்சத்தீவுகள், ஆந்திரா மற்றும் ராயலசீமை (தெலங்கானா), கர்நாடகத்தின் பெல்லாரி, உடுப்பி பகுதிகள், ஒடிசாவில் சில பகுதிகள் போன்றவை அடங்கிய பகுதியாக இருந்தது. 

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் மிகவும் புகழ் பெற்றது. இந்தியா முழுவதுமிருந்தும் பக்தர்கள் கோடிக்கணக்கில் ஆண்டுதோறும் வருகிறார்கள். கோயிலின் மூன்றாம் பிரகாரம் 1212 தூண்களுடன் கூடியது. மிகவும் அழகான கோவில்.

கேட் வே ஆப் இந்தியா (Gateway of India) 

மும்பையின் அடையாளமாக இருப்பது கேட்வே ஆஃப் இந்தியா. இது 1911-ஆம் ஆண்டு மும்பை வந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் மற்றும் ராணி மேரி இருவரையும் வரவேற்கும் பொருட்டு எழுப்பப்பட்டுள்ளது. கட்டுமானம் 1924 இல் நிறைவடைந்தது. நுழைவாயிலில், சிவாஜி மகாராஜாவின் சிலை உள்ளது. இந்த இடத்தில் இதற்கு முன், ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெண்கலச் சிலை இருந்திருக்கிறது.

உள்ளே சென்றதும் நம்மை வரவேற்பது ஆயிரக்கணக்கான புறாக்கள். மும்பை தொடர்பான அனைத்துத் திரைப்படங்களிலும் இவற்றை நாம் காணலாம். எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமென்றால், நீ ஒரு காதல் சங்கீதம், காதல் கவிதைகள் படித்திடும் நேரம் போன்ற பாடல்களைச் சொல்லலாம்.

தாஜ் மகால் Taj Mahal

தாஜ்மஹால் உத்தரப்பிரதேசத்தின் ஆக்ராவில் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது 17-ம் நூற்றாண்டில் முகலாய பேரரசர் ஷாஜகானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாகக்  கட்டப்பட்டது.

பொற்கோவில் The Golden Temple 

பொற்கோவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ளது.

சீக்கிய மதத்தின் நிறுவனர் குருநானக் 15-ம் நூற்றாண்டு, இங்குள்ள ஏரிக்கு வந்து தியானம் செய்தார். குருநானக்கின் மறைவுக்குப் பிறகு, இது சீக்கியர்களின் புனித இடமாக மாறியது. கோவில், 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது, கோவிலின் குவிமாடம் 750 கிலோ தூய தங்கத்தால் ஆனது.

1984-ம் ஆண்டில், பொற்கோவிலில் இருந்து பிந்திரன்வாலேவை அகற்ற ஆபரேஷன் புளூ ஸ்டார் தொடங்கப்பட்டது. இது பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்கள் இருவர் படுகொலை செய்ய வழிவகுத்தது.

விக்டோரியா நினைவிடம் (Victoria Memorial) 

விக்டோரியா நினைவிடம், விக்டோரியா மகாராணியின் நினைவாகக் கொல்கத்தாவில் உருவாக்கப்பட்டது. 1906-ம் ஆண்டில், அதன் அடிக்கல் ‘வேல்ஸ் இளவரசர்’ ஐந்தாம் ஜார்ஜ் நாட்டினார். 1921-ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த நினைவிடம், தற்போது அருங்காட்சியகமாக இருக்கிறது.

பரஷ்நாத் ஜெயின் கோவில்/ கல்கத்தா ஜெயின் கோவில் (Parashnath Jain Temple/ Calcutta Jain Temple)

பார்ஷ்வநாத் கோயில் கொல்கத்தாவில் 1867-ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு ஆச்சார்யா ஜின் தத் குஷால் சூரியின் (Acharya Jin Dutt Kushal Suri) கால் தடம் வழிபடப்படுகிறது.

Hsinbyume பகோடா (Mya Thein Tan Pagoda என்றும் அழைக்கப்படுகிறது) 

Hsinbyume பகோடா (Mya Thein Tan Pagoda) இன்றைய மியான்மர் அன்றைய பர்மாவின் மாண்டலே (Mandalay) என்ற ஊரில் 1816-ம் ஆண்டு கட்டப்பட்டது.

பேறுகாலத்தில் இறந்துபோன தனது மனைவி சின்பியூமை (வெள்ளை யானை ராணி) (Hsinbyume) நினைவாக இளவரசர் பாக்யிதாவால் (Bagyidaw) கட்டப்பட்டது இந்த ஈர்க்கக்கூடிய வெள்ளை பகோடாவைக் கட்டினார். மாண்டலே மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த அஞ்சல் தலை வெளியான நேரம், பர்மாவும் இந்திய அஞ்சல் தலைகளைத் தான் பயன்படுத்தியது.

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா?’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கிறதுதற்போது ‘சினிமாவுக்கு வாரீகளா – 3’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதிவருகிறார்.