என் ஆசிரியர் ஒருவர் அடிக்கடி சொல்வார்: “மனிதர்களாலானாலும் எந்த உயிரினமானாலும் அதற்கு இருக்கிற அடிப்படை நோக்கங்கள் மூன்றுதான்…நன்றாக சாப்பிடவேண்டும், நன்றாக உறங்கி ஓய்வெடுக்க வேண்டும், அடுத்த தலைமுறையை உருவாக்கிவிட்டு இறந்துவிடவேண்டும்”. பள்ளிப்பருவத்தில் அவர் சொல்வதைக் கேட்டு சிரிப்பாகவும், வாழ்க்கை அவ்வளவுதானா என்று வியப்பாகவும் இருக்கும். இப்போது கிடைத்திருக்கிற புரிதலை வைத்து, இந்த வாக்கியத்தில் “பெரும்பாலும் மூன்று நோக்கங்கள்தான்” என்பதை மட்டும் சேர்த்துக்கொள்வேன். மற்றபடி அவர் சொன்னது உண்மைதான்.

அடுத்த தலைமுறையை உருவாக்கும் இனப்பெருக்கத்துக்காகப் பல உயிர்கள் மிகப்பெரிய விலை தரவேண்டியிருக்கிறது. கடலிலிருந்து நெடுந்தூரம் பயணித்து நன்னீருக்கு வரும் சால்மன் மீன்கள் இனப்பெருக்கம் முடிந்ததும் கடலுக்குத் திரும்ப முடியாமல் சோர்ந்துபோய் இறந்துவிடுகின்றன. இனப்பெருக்க வயது வந்த உடன் ஒரே ஒரு முறை இணைசேர்ந்துவிட்டு இறந்துவிழும் பாலூட்டிகள் உண்டு. முட்டைகளை அடைகாத்து இரவு பகலாகப் பாதுகாத்து, குஞ்சுகள் வெளியில் வந்த உடனே இறந்துவிடும் விலங்குகள்கூட உண்டு.

ஆனால் இணை சேர்ந்த அடுத்த நொடி இரையாகும் விலங்குகளை சந்திக்கப்போகிறோம்.

இரையாக இந்த விலங்குகளை உண்பது வேறு யாருமல்ல, அந்த இணை விலங்கேதான்!

பாலியல்சார் தன்னினம் உண்ணுதல் (Sexual cannibalism) என்று இதை அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். ஒரு பெண் விலங்குடன் இணைசேர்ந்துவிட்டு சோர்ந்து போயிருக்கும் தருணத்தில் வேறு ஒரு பெண் விலங்கைப் பார்த்தால்  புரதச்சத்துக்காகவும் ஆற்றலுக்காக அதைத் தின்றுவிடக்கூடிய ஆண் விலங்குகள் உண்டு. ஆனால் அது மிகவும் அரிதானது. இணைசேர்வதற்கும் அதற்கும் நேரடியான தொடர்பும் கிடையாது. பாலியல் தன்னினம் உண்ணுதல் பண்பு பெண் விலங்குகளிடமே அதிகமாகக் காணப்படுகிறது. குறிப்பாக, பூச்சியினங்களில், பெரும்பாலும் சிலந்தி வகைகளின் பெண்கள் இந்தப் பண்பு கொண்டவை.

இரு உதாரணங்களைப் பார்க்கலாம்.

கும்பிடு பூச்சி

கும்பிடு பூச்சி அல்லது பெருமாள் பூச்சி அல்லது தயிர்க்கடைப் பூச்சி (Praying mantis) என்ற ஒருவகைப் பூச்சி நாம் அனைவரும் அறிந்ததுதான். இந்த இனத்தின் பெண்களுக்கு இந்தப் பண்பு உண்டு. இணை சேர்ந்த உடனேயே ஆண்பூச்சியை இது சாப்பிடத் தொடங்கிவிடும். முதலில் தலையைத் உண்டுவிட்டு, மீதி உள்ள உடல் பாகங்களை உண்ணும். திகில் திரைப்படங்களில் வைக்கும் அளவுக்கு இன்னொரு காட்சியும் இங்கு அரங்கேறும் – சில நேரம் இணைசேரத் தொடங்கிய உடனேயே பெண் பூச்சி தலையைத் தின்றுவிடும், அப்போதும் மிச்சமிருக்கிற உடலால் இயங்கி உயிரணுக்களைப் பெண் உடலில் சேர்த்துவிட்டே ஆண் பூச்சி இறக்குமாம்!

கும்பிடு பூச்சிகளைப் பொறுத்தவரை, 50-60% இணைசேரும் நிகழ்வுகளில் ஆண்பூச்சி இறந்துவிடுகிறது. ஆண் பூச்சியைத் தின்றபிறகு பெண்பூச்சி முட்டையிட்டால், குஞ்சுகளின் விகிதம் 40% அதிகரித்திருக்கிறது எனவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆணை உண்ணும் பெண் கும்பிடு பூச்சி

ப்ளாக் விடோ சிலந்தி (Black Widow spider) – தமிழில் இதை மொழிபெயர்த்தால் கறுப்பு விதவை சிலந்தி என்று வருகிறது. இப்போதைக்கு இந்தப் பெயரையே வைத்துக்கொள்ளலாம். பெண் சிலந்தி ஆண் சிலந்தியைத் தின்றுவிடும் இயல்புடையது என்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜீரண வேதிப்பொருட்களை இரையின் உடலில் செலுத்தி, வெளியிலேயே இரையை செரித்து, வெறும் சத்துநீரை மட்டும் உறிஞ்சிக்கொள்ளக் கூடிய இந்த சிலந்திகள், ஆண் பூச்சியையும் அந்த முறையிலேயே கொல்கின்றன. பாம்புகளை விட பலமடங்கு நச்சுத்தன்மை கொண்ட விஷம் இவற்றின் உடலில் உண்டு. மனிதர்களை இது அதிகம் கொட்டுவதில்லை என்பது ஒரு ஆறுதல்.

கறுப்பு விதவை சிலந்தி

பெரும்பாலும் இந்தப் பண்பு உள்ள விலங்கினங்களில், ஆண் விலங்குகளுக்கும் பெண் விலங்குகளுக்கும் உடல் ரீதியாக மிகப்பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கும். இதை Sexual dimorphism என்று அழைக்கிறார்கள். பாலியல்சார் தன்னினம் உண்ணும் பண்பு உள்ள பெண் விலங்குகள் அளவில் பெரியவையாகவும் பலசாலிகளாகவும் இருக்கும். அதனால் இவற்றால் ஆண் விலங்குகளை எளிதில் கொன்று உண்ண முடிகிறது. இவ்வாறு இணையை உண்ணும் பண்பு எதற்காக ஏற்பட்டது என்று தேடிய அறிவியலாளர்கள், சில கருதுகோள்களை முன்வைக்கிறார்கள்.

உணவுத் தகவமைப்பு : இனப்பெருக்கம் முடிந்ததும் இணையை உண்ணும் பெண் விலங்குகளுக்கு உடனடியாகப் புரதச்சத்து கிடைக்கிறது. உதாரணமாக, இணையை உண்டபிறகு முட்டையிடும் பெண் கும்பிடுபூச்சிகள், 40% அதிகமான மஞ்சள் கருவை உருவாக்குகின்றன. இனப்பெருக்கம் நடந்த பிறகு, ஆண்விலங்கின் மதிப்பு இணை என்பதிலிருந்து இரையாக மாறிவிடுகிறது. முட்டைகளின் ஊட்டத்துக்காக ஏற்பட்ட பரிணாமம் இது.

தொடரும் மூர்க்கம்: இயல்பாகவே பெண் விலங்குகள் மூர்க்கமானவையாக இருக்கும் இனங்களில், இந்த மூர்க்கத்தனம் இணைசேரும்போதும் தொடர்கிறது, பரிணாம ரீதியாகப் பார்த்தால் இதற்குப் பயன்கள் இல்லை. ஆனால், லார்வா புழு படிநிலையின்போது பாதுகாப்புக்காக இந்த மூர்க்கம் தேவைப்படுகிறது, அதுவே வளர்ந்து பூச்சியானபின்னும் தொடர்கிறது, தவிர்க்க முடியாத பரிணாம எச்சம் இது. இதுபோன்ற பண்புடைய பூச்சியினங்களில், பெண் விலங்குகள் அருகில் வரும்போது இறந்துபோனதாக நடிப்பது உட்பட,  ஆண் விலங்குகள் எல்லா யுத்திகளையும் பயன்படுத்தி உண்ணப்படாமல் தப்பிக்கின்றன.

சரியான இணையைத் தேர்தெடுப்பதற்குப் பெண் பூச்சிகளின் யுத்தி இது, பெண்பூச்சிகள் தவறுதலாக ஆண்பூச்சிகளை உண்டுவிடுகின்றன என்றும் சில கருத்துக்கள் உண்டு. அவை பெரிதாக நிரூபிக்கப்படவில்லை.

இணையை உண்ணும் பண்புள்ள சில பெண் விலங்குகள், அதற்குப் பிறகு இணைசேர்வதில்லை என்பதால், ஆண் விலங்குகளின் மரபணுக்கள் சரியான வகையில் ஒரு பெண் விலங்கின் உடலுக்குள் சென்று சேர்ந்துவிடுகின்றன, முட்டையின் தரம் அதிகரிக்கும்போது குஞ்சுகளும் வலுவாக வளரலாம். ஆகவே அந்த குறிப்பிட்ட இனங்களில் உள்ள ஆண் விலங்குகளுக்கு இது சாதகமான பண்பாகவே இருக்கிறது. மற்ற ஆண் விலங்குகளுக்கு இது ஒரு பெரிய நஷ்டம்தான். ஆனாலும் இந்தப் பண்பு பரிணாம வளர்ச்சியில் தொடர்வது ஏன் என்பது விஞ்ஞானிகள் கேட்கும் ஒரு முக்கியமான கேள்வி. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

femme fatale

மீண்டும் கறுப்பு விதவைக்குத் திரும்புவோம் – அதென்ன கறுப்பு விதவை?! நச்சுத்தன்மை கொண்ட சிலந்தி/இனப்பெருக்கம் செய்துவிட்டுத் தன் இணையை உண்ணும் பெண் சிலந்தி போன்ற அடுக்குகளை சேர்த்துப் பார்த்தால் இந்தப் பெயர் எந்த மனநிலையிலிருந்து வந்திருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம். பெயர் மட்டுமல்ல, இதுபோன்ற பண்புகளை விவரிக்கும்போதும் பல அறிவியல் கட்டுரைகளில் ஆண்மைய மொழியே பயன்படுத்தப்படுகிறது. விலங்குகளை மனிதர்களாகவே பாவிக்கும் தன்மையால் (மனிதப்பண்பேற்றம் -Anthropomorphism) இதுபோன்ற சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.பாலினம் சார்ந்த ஆராய்ச்சிகளில் மனிதப்பண்பேற்றம் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான மிகச்சிறந்த உதாரணம் இது.

ஆண்களை அழகால் வசியப்படுத்தி, பணம் அல்லது உடல் தேவை முடிந்தபிறகு கொன்றுவிடும் பெண் கதாபாத்திரங்களான Femme Fatale பற்றிய கதைகள் கிரேக்க பொற்காலம் தொடங்கி ஜேம்ஸ் பாண்ட் படங்கள் வரை இன்றும் தொடர்கின்றன. இணையை உண்ணும் பெண் பூச்சிகளையும் அதே போன்ற ஒரு பார்வையில் வைத்துப் பேசும் பண்பு பல அறிவியல் கட்டுரைகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. இரையை உண்ணும் பெண் விலங்குகளை “ஆபத்தான”, “அடங்காத பசியுள்ள” போன்ற விவரணைகளுடனே கட்டுரைகள் குறிப்பிடுகின்றன. “நமது மரபுசார்ந்த சில பொதுவான தேய்வழக்குகளை வைத்தே விலங்குகளின் உலகத்தையும் நாம் புரிந்துகொள்கிறோம், அதனால் வந்த விளைவு இது” என்று குறிப்பிடுகிறது இதுகுறித்து வந்த ஒரு விமர்சனக் கட்டுரை.

ஆண் பூச்சியை உண்ண முயலும் பெண் சிலந்தி

விலங்குகளின் உலகில் பரிணாம ரீதியாக இது ஏற்றுக்கொள்ளப்படுகிறது, ஆண் பூச்சிகள் தியாகிகள் அல்ல, இணையைத் தின்னும் பெண் பூச்சிகள் யட்சிகளோ மோகினிகளோ அல்ல. அது வேறு உலகம் என்பதைப் புரிந்துகொண்டால்தான் இதில் தேவையற்ற பாலின ஏற்றத்தாழ்வுகளைப் புகுத்தாமல் இருக்க முடியும்.

“என் இணையை நான் என் அழகால் வசியப்படுத்தி அவன் தலையைத் தின்னப்போகிறேன்” என்று பெண்பூச்சி நினைப்பதில்லை. “என்னவளுக்காக என் உயிரையும் தருவேன்” என்று கண்ணீருடன் ஆண்பூச்சி தலையைக் கொடுப்பதும் இல்லை. இவை நம் கற்பிதங்கள்தான்.

சில விலங்குகளுக்கு இணைசேர்வதே இறுதி லட்சியம், சில விலங்குகளுக்கோ இணை சேர்வதே ஒரே லட்சியம் – அப்படியானால் உணவு எப்படிக் கிடைக்கும்?? அந்த விலங்கு எப்படிப் பிழைக்கும்??

பேசுவோம்…

தொடரின் முந்தைய பகுதி:

படைப்பு:

நாராயணி சுப்ரமணியன்

கடல் சார் ஆய்வாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் என்ற பன்முக ஆளுமை இவர். தமிழ் இந்து உள்ளிட்ட முன்னணி இதழ்களில் சூழலியல், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து தொடர்ச்சியாக எழுதி வருபவர்.