அன்பிற்குரிய ஆண்களே! நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? உள்ளுக்குள் எந்தவித பதைபதைப்பும் இல்லாமல் உள்ளபடியே நலமாக இருக்கிறீர்கள்தானே? ஆம் எனில் மகிழ்ச்சி.

பெண்களாகிய நாங்கள் இப்போது நலமாக இல்லை. ‘இப்போது’ என்று குறிப்பிடக் காரணம் இந்த காலகட்டத்தைக் குறித்துதான். தொழில்நுட்பமும் அறிவியலும் இவ்வளவு முன்னேறி இருக்கிற இந்தக் காலகட்டத்திலும் நாங்கள் நிறைவான மகிழ்ச்சியாக இல்லை. பாதுகாப்பு உணர்வோடு இல்லை. எந்த நேரத்திலும் நாம் வயதுபேதம் பார்க்கப்படாமல் எவரோ ஒருவரால் தாக்கப்படலாம் அல்லது நமக்கு ஏதேனும் பிரச்சனை வரலாம் என்று தோன்றுகிறது. பார்க்கிற அத்தனை செய்திகளும் மனிதர்கள் மீதான நம்பிக்கையையும் மதிப்புகளையும் முற்றிலுமாக மாற்றிவிடுகின்றன. உறவுகளின் மீதான உறவுமுறைச் சொற்களின்மீதான நம்பிக்கை சிதைந்துள்ளது. உறவுமுறை கடந்து வெறும் எதிர்ப்பாலினத்தவராக மட்டுமே பார்க்கிற பார்வை அதிகரித்துள்ளது.

நன்கு படித்து, நல்ல பணியில் இருக்கிற பெண்களுக்குமே சக ஆண்களை  எதிர்கொள்ள அச்சமும் பதட்டமுமாக இருக்கிறது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் துணிந்தவர்போல் நிமிர்ந்து செல்கிறோம். அவ்வளவே.

நன்றாக நிம்மதியாக ஆழ்ந்த உறக்கத்துக்கு மனம் சென்று பல நாள்கள் ஆகிவிட்டதாகப் பல தோழிகள் சொல்வதைக் கேட்க முடிகிறது. வீட்டிலேயே இருந்தாலும் ஒருவித பாதுகாப்பின்மையை மனம் உணர்கிறது.

 முன் எப்போதும் இல்லாத அளவுக்கு ஆண்பிள்ளைகள் பலரும் போதைப் பொருள்களை நுகரத் தொடங்கியுள்ளனர். பதின்களின் பிற்பகுதியில் வரக்கூடிய தீய பழக்கங்கள் பலவும் இப்போது பத்துவயதுக்கு உள்ளாகவே வந்துவிடுகிறது. சிகிரெட் போன்றவையெல்லாம் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு பிள்ளைகள் மத்தியில் போதைப்பழக்கம் பெருகியுள்ளது. இவைதான் என்று சொல்லிவிட முடியாத அளவுக்கு விதவிதமான பொருள்களை போதைக்காகப் பயன்படுத்துகின்றனர்.

சும்மா முயற்சி செய்து பார்க்கலாமே என்பதற்காகவும் நண்பர்களின் வற்புறுத்தலாலும் பல பிள்ளைகளுக்கு நம் கற்பனைக்கே எட்டாத பழக்கங்கள் வந்துள்ளன. இவற்றை எதிர்த்து வெளியே பேசவும் எழுதவும் முடிவதில்லை. இதுகுறித்துத் தொடர்ந்து இயங்குகிறவர்களுக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வருகின்றன.

‘எல்லாவற்றையும் ஒரே நாளில் நிறுத்தணும்’ என்பதெல்லாம் சினிமாக்களுக்கு நன்றாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் நம் கையில் இருக்கிற வாய்ப்பை விட்டுவிட்டு, யாரோ வந்து மாற்றட்டும் என எதிர்பார்ப்பது நியாயமல்ல. மாற்றத்தை நம்மைச் சுற்றி நாமே தொடங்க முயற்சிப்போம்.

பிள்ளைகளின் உணவுப் பழக்கத்தையும் நட்பு வட்டத்தையும் கவனியுங்கள். எந்நேரமும் கைபேசி உலகிலேயே வாழும் பிள்ளைகளின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தால் அதுகுறித்து நிதானமாக அவர்களிடமே பேசுங்கள். அதட்டாமல் அழுது பெரிதாக்கி மிகைப்படுத்தாமல் நிதானமாகக் கேளுங்கள்.

அவர்களின் பதில்களை ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் உடனே பதில் சொல்லவேண்டும் என்றில்லை. ஆனால் எல்லாவற்றையும் கேளுங்கள்.

‘அவங்க’ ‘இவங்க’ என்று சொல்லாமல் யாரையேனும் பள்ளிப் பருவத்தில் ‘அவரு’ என்று சொன்னாலேகூட அம்மாவும் அப்பாவும் முறைப்பார்கள். ஆனால் இப்போது அவ்வளவு இயல்பாகக் கெட்ட வார்த்தைகள் பிள்ளைகள் மத்தியில் புழங்கப்படுகிறது. கெட்ட வார்த்தைகள் ‘கேட்ட’ வார்த்தைகள் என்று சொல்லப்படுகிறது. அவர்கள் கேட்ட வார்த்தைகளையே பேசுகிறார்கள். அப்படியெனில் அது அவர்கள் வீட்டிலும் நட்பு வட்டத்திலும் அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ள சூழலில் உள்ளவர்களால் ஏதோ ஒரு நேரத்தில் சொல்லப்படுகிறது. பிள்ளைகள் வளர வளர நாம் பேசும் கெட்ட வார்த்தைகளின் எண்ணிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கத் தொடங்க வேண்டும். பேசுகிற சொற்களில் பலவும் பெண்களை இழிவுபடுத்தியே உருவாக்கப்பட்டுள்ளன. எங்கோ எவரோ அழுத்தமாகச் சொன்ன கெட்ட வார்த்தையைக் கேட்டு வந்த பிள்ளைகள் அதே சொற்களை அதே அழுத்தம் குறையாமல் சக மாணவரிடம் சண்டையின்போது சொல்கிறார்கள்.

‘அம்மாவைப் பற்றித் தப்பா பேசுறான்’ என ஒருவரை ஒருவர் அடித்து மீள்வதைக் கையாள்வதே வகுப்பில் சிரமமாக இருக்கிறது.

அப்பாக்களும் அண்ணன்களும் நண்பர்களும் உங்களுடன் இருக்கும் சக ஆண்களைக் கவனியுங்கள். விளையாட்டாகத் தொடங்கிய ஏதோ ஒரு பழக்கம்தான் ஒருவரது வாழ்வையே மாற்றிவிடுகிறது. அது உங்கள் கண்முன் நடக்கும்போது கடந்துபோகாதீர்கள். கொஞ்சம் அக்கறையோடு உடனிருப்போரிடம் பேசுங்கள். ‘கூல் லிப்’ போன்ற போதைப்பொருளின் அறிமுகம் இல்லாத பதின்வயதுப் பிள்ளைகளே குறைவு எனலாம். அந்த அளவிற்குப் பிள்ளைகளின் கைகளுக்கு அவை எளிதாகக் கிடைக்கின்றன.

தந்தைபோல் அறத்தையும் நல்லதையும் கற்றுத்தருகிற சிறந்த தோழன் வேறுயாரும் இருக்கமுடியாது. எந்நேரமும் அறிவுரை சொல்கிற அம்மாக்களின் குரல்களைவிட எப்போதாவது தோள்மீது கைபோட்டுப் பேசும் அப்பாக்களின் குரல்களுக்கு வலிமை அதிகம். பிள்ளைகளின் முதல் ஹீரோ நீங்கள்தான். அதனால் உங்களை முதலில் நீங்கள் மதியுங்கள். உங்கள் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்துங்கள்.

முந்தைய நாள் இரவு வீட்டில் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை. கோபித்துக்கொண்டு அப்பா வீட்டைவிட்டுச் சென்றுவிட்டார். திரும்பவில்லை.  கலங்கிய கண்களுடன் மறுநாள் காலை உணவுகூட உண்ணாமல் அப்பாவை எண்ணிக் கலங்குகிற பிள்ளைகளை வகுப்பறைகளின் சுவர்கள் கவலையோடு பார்க்கின்றன. இந்த மனநிலையோடு பள்ளிக்கு வருகிற பிள்ளைகள் எப்படிக் கவனிப்பார்கள்? எதைக் கற்பார்கள்?

சண்டைகளும் பிணக்குகளும் இயல்புதான். ஆனால் உறவின் பிடிப்பு அறுபடும் அளவுக்கு சிறிய விஷயங்களுக்கே உச்சபட்ச நிலைக்குச் செல்வது குழந்தைகளின் ஆளுமையைப் பாதிக்கும் என்பதைத் தயவுசெய்து மனத்தில் வையுங்கள்.

சண்டையின்போது குரல் உயர்த்தாத; சாப்பாட்டுத் தட்டினைத் தூக்கி எறியாத; கோபத்தில் கெட்ட வார்த்தைகள் பேசிடாத; தீய பழக்கங்களுக்கு ஆட்படாத; பிறரை ஏமாற்றாத ஒரு நபராக ஓர் அப்பா இருந்துவிட்டால் அவரைப் பார்த்து வளர்கிற அவரது பிள்ளை எவ்வளவு நம்பிக்கை உணர்வைப் பெறக்கூடும் என்பதைச் சிந்தியுங்கள்.

வீட்டில் அம்மாவும் அப்பாவும் வேலையைப் பகிர்ந்து செய்வதைப் பார்த்து வளர்கிற ஆண்பிள்ளைகள் பெண்களை மதிக்க வேண்டும் என்பதை அப்பாவின் நடத்தைவழி கற்கின்றனர். அது அவர்களுக்குச் சொல்லாக அல்லாமல் செயலாக நினைவில் நிற்கும்.

வரதட்சணை வாங்குவதை இழிவென நினைக்கிற அப்பாக்களைப் பார்க்கிற பிள்ளைகள் எத்தனை பெரும் நம்பிக்கையுடனும் மதிப்புடனும் வளர்வார்கள் என்பதை எண்ணிப்பாருங்கள்.

அன்புள்ள அப்பாக்களே! உங்கள் பிள்ளைகளைக் கவனியுங்கள். அவர்களோடு உரையாடல் நிகழ்த்துங்கள். மதிப்பெண், வகுப்புகள், பாடங்கள் கடந்து வாழ்க்கை குறித்துப் பேசுங்கள். சக பெண்ணை வகுப்பிலும் வேலையிலும் வாழ்விலும் எப்படி நடத்த வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்.

பெண் பிள்ளைகளின் அப்பாக்கள் கண்காளிப்பாளராக இல்லாமல் கொஞ்சம் கனிவோடு இருங்கள். ‘கொஞ்சம் சலுகை கொடுத்தால் உடனே மகள் நம்மை ஏமாற்றிவிடுவாள். அதனால் கடுமையாகவே இருப்போம்’ என்கிற பழைய பொய்க்கதைகளை நம்பி ஏமாறாதீர்கள். அவள் உங்கள் மகள். அவளை நீங்கள் நம்பாவிட்டால் வேறு யார் நம்புவார்கள்? அவளுக்கு நீங்கள் தைரியத்தைப் பழக்காவிட்டால் வேறு யார் பழக்குவார்கள்? வேலையிலோ திருமண வாழ்விலோ ஏதேனும் தவறு நேர்ந்துவிட்டால் அதுமட்டுமே வாழ்வல்ல என்பதைச் சொல்லிச் சொல்லி பிள்ளைகளை வளர்த்திடுங்கள்.

கல்வியையும் துணிவையும்விட வேறு எந்த சிறந்த சொத்தை நம் பிள்ளைகளுக்குக் நம்மால் கொடுத்திட முடியும்?

எதையும் எதிர்கொள்ளும் உறுதியோடு பெண்பிள்ளையையும் எவருக்கும் இடையூறு செய்யாத ஆண்பிள்ளையையும் வளர்த்திட அப்பா எனும் மனிதரின் பங்கு இங்கு மிகத் தேவை. அதைப் புரிந்து செயல்படுங்கள்.

‘பிள்ளைக்காகவே உழைக்கிறேன்; பிள்ளைக்காகவே ஓடுகிறேன்’ என நீங்கள் ஓயாது ஓடினால் தந்தையாக நீங்கள் செய்ய வேண்டியதை எப்போது செய்வது. அதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஓடுவதும் ஓயாது உழைப்பதும் அவையத்து முந்தி இருப்பச் செய்யத்தானே! அதைத் தவறாது செய்யுங்கள். பேசுவோம்.

(தொடரும்)

படைப்பாளர்

பா. ப்ரீத்தி

தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ்நாடு அரசின் தமிழ்ப் பாடநூல் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றியுள்ளார். பேறுகாலம் குறித்த இவரது அனுபவப் பகிர்வை ‘பிங்க் நிற இரண்டாம் கோடு’ என்கிற புத்தகமாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.