வெளியூரோ வெளிநாடோ சென்றால் ஹோட்டலில் தங்குவார்கள், அது என்ன ஹாஸ்டல் என்று கேட்கிறீர்களா? இந்த ஹாஸ்டல்கள் பெரும்பாலும் சோலோ ட்ராவெல்லர்ஸ் எனப்படும் தனியாகப் பயணிப்பவர்களுக்காக உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறை. குடும்பம் மற்றும் நண்பர்களுடன்கூட நீங்கள் இங்கே தங்கலாம். ஹோட்டலைப் போல ஓர் அறைக்கு ஒருவர் அல்லது இருவர் தங்குவது அல்ல; இங்கே ஒரே அறையில் நான்குபேர் அல்லது ஆறுபேர் தங்கலாம். பங்க் பெட்ஸ் (bunk beds) எனப்படும், ஒரு படுக்கையின் மேல் இன்னொரு படுக்கை இருக்கும் வகை அமைப்புடன் அறைகள் அமையப்பட்டிருக்கும். இத்தகைய ஹாஸ்டல்களில் தங்கும் பயணிகள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். அவர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை என அனைத்திலும் வித்தியாசம் இருந்தாலும், அத்தனை பேரையும் சந்திப்பது, பழகுவது என்பது ஒரு தனித்துவமான அனுபவமாக இருக்கும். மனிதர்களைப் புரிந்துகொள்ளவும், உலகம் எப்படி ஒவ்வொரு கோணத்திலும் இயங்குகிறது என்பதை உணரவும் இந்த ஹாஸ்டல்கள் ஒரு சிறந்த வாய்ப்பைத் தருகின்றன.

ஐரோப்பா முழுவதுமே இத்தகைய ஹாஸ்டல்கள், பயணிப்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றன. நான் தங்கி இருந்தது, கிளின்க் நூர்ட் என்னும் ஹாஸ்டல். என்னுடன் சேர்ந்து, மெக்ஸிகோவில் இருந்து வந்த ஒருவர், ஜெர்மனியிலிருந்து வந்த ஒருவர், டொமினிக்கன் ரிபப்ளிக்கில் பிறந்து வளர்ந்து தற்போது சுவிட்சர்லாந்தில் பணியாற்றும் ஒருவர் என்று மொத்தம் நான்கு பேர் தங்கி இருந்தோம். நான்கு விதமான மொழிகள், வெவ்வேறு வகையான வாழ்க்கை முறைகள், கலாச்சாரங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும், ஒருவரை இன்னொருவர் தொந்தரவு செய்யக் கூடாது என்கிற புரிதல் எங்களுக்கு இருந்தது, எனக்கே ஆச்சரியமாக இருந்தது, இரவில் சீக்கிரம் தூங்கிவிடும் பழக்கமுடைய என்னைத் தொந்தரவு செய்யாமல், அவர்கள் லேட்டாக வந்தாலும், அறையின் விளக்கைப் போட்டு என் தூக்கத்தைக் கெடுக்க விரும்பாமல், மொபைல் போனின் வெளிச்சத்திலேயே தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொண்டது எனக்கே மிகவும் வியப்பாக இருந்தது. இப்படி ஓர் அணுகுமுறையைச் சில நேரத்தில் நம் குடும்ப உறுப்பினர்களிடம்கூடக் காண முடியாது.

தனியாகப் பயணம் செய்யும் போது பெண்களின் முக்கியமான கவலை பாதுகாப்பைப் பற்றியே இருக்கும். இந்த ஹாஸ்டல்கள் அந்த அச்சங்களைத் தீர்க்கும் வகையில் மிகுந்த பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அறைகளுக்கான சாவிகள் புளூடூத் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படும். தங்கி இருப்பவர்கள் தங்கள் மொபைல் போனின் வழியாகவே அறையைத் திறக்க முடியும். இது வெளிநபர்கள் யாரும் அறைக்குள் நுழைய முடியாதபடி பாதுகாப்பை உறுதிசெய்கிறது. தனிப்பட்ட எல்லைகளை மதிக்கும் இயல்பு கொண்ட மனிதர்களை இந்தப் பயணத்தின் போது நான் கண்டுகொண்டது அரிய அனுபவமாக இருந்தது.

நான் தங்கி இருந்த ஹாஸ்டலில் நாமே சமைத்துக் கொள்ளும் வசதி இல்லை என்றாலும், வெந்நீர் ஊற்றினாலே சுலபமாகத் தயார் செய்யக்கூடிய ரெடிமேட் உணவு வகைகளுக்குத் தேவையான வசதிகள் இருந்தன. ப்ரெட் டோஸ்ட் செய்வதற்கான உபகரணங்களும் பொதுவாகப் பயன்படுத்த கிடைத்தன. இதுவே எனக்குப் போதுமானதாக இருந்தது. நான் இங்கிருந்தே கப் நூடுல்ஸ், புட்டுப் பொடி, சர்க்கரை ஆகியவற்றைக் கொண்டு சென்று இருந்ததால், என்னுடைய காலை உணவு யூரோக்களின் செலவில்லாமல் முடிந்தது.

தங்குவதற்கான வசதி மட்டும் அல்லாமல், பொழுதுபோக்கத் தேவையான போர்டு கேம்ஸ்களும் இங்கே உள்ளன. சிறிய அளவிலான நூலகமும் உள்ளது. ஒவ்வொரு மாலையும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சியும் நடத்தப்படும். இசை நிகழ்ச்சிகள், நகைச்சுவை நிகழ்ச்சிகள், தனியாகப் பயணிப்பவர்கள் ஒருவரை இன்னொருவர் அறிந்து கொள்ள உதவும் சோலோ ட்ராவெல்லர்ஸ் மீட் என்று சக மனிதர்களுடன் பழகி, அவர்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகம்.

இத்தகைய ஹாஸ்டல்களை முன்பதிவு செய்யும் முன், அதற்குமுன் அங்கு தங்கி இருந்தவர்களின் மதிப்பாய்வுகளை நிச்சயமாகப் பார்க்க வேண்டும். ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற பல சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள், பின்னூட்டங்கள் ஆகிய அனைத்தையும் ஆராய்ந்த பிறகே, நான் அந்த ஹாஸ்டலைத் தேர்ந்தெடுத்தேன்.

காலை உணவை முடித்துக் கொண்டு ஊர் சுற்றக் கிளம்பினேன். முதலில் நான் தேர்ந்தெடுத்தது, டாம் ஸ்கொயர் என்னும் நகரின் மத்தியப் பகுதி. படகில் ஏறி ஆற்றைக் கடந்து ஆம்ஸ்டர்டாம் சென்ட்ரலை வந்தடைந்து, டிராம் ஏறி இரண்டே நிறுத்தங்களில் டாம் ஸ்கொயர் நிறுத்தத்தை வந்தடைந்தேன். அங்கிருந்து நடந்தால் ஒரு நானூறு மீட்டர் தொலைவில் டாம் ஸ்கொயரை அடையலாம் என்று கூகிள் வழி காண்பிக்க, வழி எங்கும் இருந்த கடைகளையும், பல்வேறு நாட்டு உணவகங்களையும் வேடிக்கைப் பார்த்தவாறே நடக்க ஆரம்பித்தேன்.

டாம் ஸ்கொயர் என்பது பதிமூன்றாம் நூற்றாண்டில் ஆம்ஸ்டெல் நதியின் மீது எழுப்பப்பட்ட ஓர் அணைக்கட்டு. ஆம்ஸ்டெல் நதியின் டாம் என்பதால் தான் ஆம்ஸ்டர்டாம் என்று அந்த நகரத்துக்குப் பெயர் வந்தது. ஒரு காலத்தில், ஆம்ஸ்டர்டாமின் முக்கியமான வர்த்தக மற்றும் சந்தைக்கான இடமாக இருந்தது. ஆற்றின் ஓரமாக அமைந்திருந்ததால், பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது. நதி என்கிறீர்கள், அணை என்கிறீர்கள் அதற்கான சுவடையே அங்கே காணோமே என்று கேட்கிறீர்களா? நகர மயமாக்கத்தின் விளைவாக ஆற்றுப்பாதைகள், காலப்போக்கில் மறைக்கப்பட்டன அல்லது மாற்றி அமைக்கப்பட்டன. சாலைகள், கட்டிடங்கள், மக்களின் வசிப்பிடங்கள் ஆகியவற்றால் ஆறுகள் வாய்க்கால்களாக மாறிவிட்டன. நகர வளர்ச்சியின் ஒரு கட்டமாக மூல ஆற்றின் பாதை மறைக்கப்பட்டு, நிலம் மேடாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் இன்றும் ஆம்ஸ்டெல் நதி டாம் ஸ்கொயருக்கு அடியில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

டாம் ஸ்கொயர் நகரின் முக்கியப் பகுதியாக மாறியதால், பல்வேறு காரணங்களுக்காக மக்கள் பல்வேறு காலக்கட்டங்களில் அங்கே கூடத் தொடங்கினர். பல எதிர்ப்புப் பேரணிகள், சுதந்திரப் போராட்டக் குரல்களுக்கு ஏற்ற இடமாக டாம் ஸ்கொயர் இருந்தது. இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி சரணடைந்த பிறகு, அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காக மக்கள் டாம் ஸ்கொயரில் ஒன்று கூடினர். ஜெர்மானிய ராணுவம்முற்றிலும் நாட்டை விட்டு வெளியேற்றப்படாத நிலையில், மக்கள்மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், ஒரு கட்டிடத்தின் மேல் இருந்த ஜெர்மானிய சிப்பாய்கள் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப்பின், போரில் உயிர் நீத்தவர்களின் நினைவாக அங்கே ஒரு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது. அதுதான் நாம் இன்று பார்த்துக் கொண்டிருக்கும் உயரமான பாறைக் கம்பம். போரின் வலி, எதிர்ப்புப் போராட்டங்களின் வலிமை, அமைதிக்கான நம்பிக்கையாக இது இன்றும் உயர்ந்து நிற்கிறது.

ஒவ்வொரு வருடமும் மே 4ஆம் தேதி தேசிய நினைவுநாளில் இங்கு அஞ்சலி நிகழ்வு நடத்தப்படுகிறது. முக்கிய அரசியல் அறிவிப்புகள், அரச குடும்ப நிகழ்வுகள், தேசிய விழாக்கள் போன்றவை இங்கு நடைபெறும்.

நான் சென்றிருந்தபோது, பாலஸ்தீனத்திற்கு ஆதரவானப் பதாகைகளுடன் அங்கே ஒருவர் தனியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். மற்றபடி அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் டூரிஸ்டுகள் என்பதால், போட்டோ எடுப்பதும் சுற்றிப் பார்ப்பதுமாக இருந்தனர்.

டாம் ஸ்கொயருக்கு நேர் எதிரே, நெதர்லாந்து மன்னரின் அரண்மனை உள்ளது. இது இப்போது அவர்களின் வசிப்பிடமாகப் பயன்படுத்தப்படா விட்டாலும் தற்போது அரசு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது. உள்ளே சென்று சுற்றிப் பார்ப்பதற்கும் பொதுமக்களுக்கு அனுமதி உண்டு.

தொடரும்)

தரங்கிணி

எல்சீவியர் என்னும் தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். வாசிப்பில் நாட்டம் உடையவர். பெண்ணியம் சார்ந்த சமூக முன்னெடுப்புகளில் பங்களிப்பதில் ஆர்வம் உடையவர்.