மழை வரும் போல இருந்தது. அபர்ணா சடசடவென மாடியேறி கொடியில் காய்ந்து கொண்டிருந்த துணிகளை எடுத்துக் கொண்டு கீழே வந்தாள். முன்னறை சோபாவில் போட்டுவிட்டு பால்கனிக்கு வந்தாள். சூழ்நிலை ரம்மியமாக இருந்தது. மழையைவிட மழைக்கு முந்தைய நிமிடங்கள் ரசிக்கத் தக்கவைதான். கண்களை மூடிக்கொண்டு வீசிய காற்றை அனுபவித்தாள்.

லேசாக மழைத்துளிகள் விழத் தொடங்கி வேகம் பிடித்தன. உள்ளே வந்தவள் துணிகளை மடிக்கத் தொடங்கினாள். சில நிமிடங்களில் அபர்ணாவின் அம்மா மாலினி வேகவேகமாக உள்ளே நுழைந்தாள். கைகளில் காய்கறிக் கூடை. லேசாக நனைந்திருந்தாள். உள்ளே போய் உடை மாற்றிக் கொண்டு வந்தவள் இரவுச் சமையலுக்கு காய்கறிகளை நறுக்க ஆரம்பித்தாள். 

“அப்போவே குடை எடுத்துட்டு போகச் சொன்னேனே… கேட்டியா?” என்றாள் லேசான கோபத்தோடு.

“அதான் ஓடிவந்துட்டேனே” என்று மெல்லச் சிரித்தவாறே கத்தரிக்காய்களை நறுக்கித் தண்ணீரில் போட்டுக் கொண்டிருந்தாள் மாலினி. அபர்ணா துணிகளை மடித்து உள்ளே கொண்டு போய் வைத்துவிட்டு வந்து தொலைக்காட்சியை இயக்கினாள்.

ஏதோ ஒரு சேனலில் எண்பதுகளின் பாடல்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. பாடல்களைக் கேட்டவாறே மொபைலையும் நோட்டமிட எடுத்துக் கொண்டு உட்கார்ந்தாள்.

“தென்றல் என்னை முத்தமிட்டது… இதழில் இனிக்க… இதயம் கொதிக்க… எல்லோரும் பார்க்க…” என்று லேசான ஜலதோஷக் குரலில் கிருஷ்ண சந்தர் பாடிக் கொண்டிருந்தார். அந்தக் குரலின் ஈர்ப்பு அபர்ணாவை பாடலைக் கேட்க வைத்தது. 

சட்டென்று கூடவே இன்னொரு குரலும் கேட்டது. மாலினிதான். மெதுவாகப் பாடியபடி காய்களை நறுக்கிக் கொண்டிருந்தாள். அபர்ணா அம்மாவையே ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். இந்த அம்மா புதுசு. இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் அம்மா பாடுவார் என்று தெரியாது. ஒருவேளை நான்தான் கவனிக்கவில்லையோ? யோசித்தாள்.

“ம்மா… உனக்குப் பாட வருமா? இவ்ளோ நாளா நீ பாடினதேயில்லையேம்மா. ஏன்?” 

மாலினி பாடுவதை நிறுத்தினாள். கீழேயே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். அபர்ணா மீண்டும் கேட்க, “உங்கப்பாக்கு சினிமா பாட்டுப் பாடினா பிடிக்காது அபு. அதுவும் நான் பாடினா” என்றாள் மெதுவாக.

மாலினிக்குக் கல்யாணமாகும் போது வயது வெறும் பதினெட்டுதான். அப்பா அவள் பிறந்த இரண்டாம் வருடம் விஷக் காய்ச்சலில் இறந்து போனார். பத்தாவதுக்கு மேல் படிக்க வைக்க வசதி இல்லாமல் பக்கத்தில் இருக்கும் அட்டைப் பெட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு  வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். அவளுக்கும் சேகரனுக்கும் கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து வயது வித்தியாசம். அவள் திருமணம் நடந்ததே ஒரு வித்தியாசமான அனுபவமாகச் சொல்லுவாள்.

“உங்கப்பா யார்கூடவோ போட்ட பந்தயத்துக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு தெரியுமா?” சின்ன வயசு அபர்ணா விழிகளை விரித்துக் கதை கேட்க அமர்வாள்.

அப்போதெல்லாம் அவள் வீட்டுக்கு அருகில் நிறையப் பேர் காட்டன் மில்களுக்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தனர். அவர்களில் தூரத்து உறவினனான சேகரனும் ஒருவன். அங்கே போய் பழகியதுதான் குடிப் பழக்கம். அதில் ரொம்பவே மூழ்கி விட்டான். நண்பர்களோடு சேர்ந்து குடித்துக் கொண்டிருந்த ஒருநாளில் திருமணம் பற்றிய பேச்சு எழுந்தது. 

“ஏண்டா சேகரா உனக்கெல்லாம் யாருடா பொண்ணு குடுப்பாங்க?” பாட்டிலை வாயில் கவிழ்த்துக் கொண்டு தோழன் காளிச்சாமி கேட்டான்.

“ஏண்டா எனக்கென்ன கேடு?” ஊறுகாயைத் தொட்டுக் கொண்டு சேகரன் சிரித்தான்.

“இல்ல… இப்பவே உனக்கு நாப்பது வயசாகுது. அரைக் கெழடு ஆயிட்ட. இனி பார்வை இல்லாதவன்தான் பொண்ணு குடுக்கணும். காலாகாலத்தில் கல்யாணம் ஆகலேன்னா பரதேசம் போக வேண்டியதுதான்” என்று கூட இருந்தவர்கள் போதையில் சிரித்தனர். அவர்கள் எல்லாருக்கும் திருமணம் ஆகி குழந்தை குட்டிகளோடு இருந்தார்கள். அந்தக் கூட்டத்தில் தனித்திருந்தவன் சேகரன் மட்டும்தான். அன்றைக்கு அவர்களது போதைக்கு ஊறுகாய் அவன்தான்.

கோபமும், போதையும் ஒன்றை மற்றொன்று மிஞ்சித் தலைக்கேற, “நான் நாளைக்கே கல்யாணம் பண்ணிட்டு வந்தா என்னடா பண்ணுவீங்க?” என்று ஆக்ரோஷமானான் சேகரன்.

“ம்… நீ மட்டும் நாளைக்குப் பொழுதாகறதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்டு வந்திட்டேன்னு வையி… பத்தாயிரம் ரூபாயை எண்ணி உன் கையில் குடுக்கிறேன்டா” என்றான் காளிச்சாமி. பேச்சு தீவிரமானது.

சேகரன் அந்தப் போதையிலும் ஒரு பேப்பரில் நாளை மாலைக்குள் திருமணம் செய்து கொண்டு வந்தால் காளிச்சாமி பத்தாயிரம் ரூபாய் தருவதை எழுதி சாட்சிக்குகூட இருந்த நண்பர்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு இருவருக்கும் பொதுவான ஒரு நண்பனிடம் பேப்பரை ஒப்படைத்தான். நண்பர்கள் எல்லாரும் சிரிக்க, போதை தெளிந்தவனாக நடந்தான்.

“பொண்ணு தேடிப் போறியா மாப்ள. டேய்… வெள்ளை சட்டையா போட்டுட்டுப் போடா” என்று கிண்டலாகச் சிரித்தான் காளிச்சாமி.

“அன்னிக்கு நடுராத்திரிக்கு மேல இருக்கும். எங்கம்மா வந்து என்னை எழுப்பினா. நல்லா தூங்கிட்டு இருந்தேன். முழிச்சுப் பார்த்தா ஒண்ணுமே புரியல. என்னம்மான்னு கேட்டேன். கோயிலுக்குப் போகலாம் வான்னு கூப்ட்டா. கூட என் அண்ணனும் நிக்கிறான். என்ன திடீர்னு கேட்டா, வேண்டுதல்ங்குறாங்க ரெண்டு பேரும். எழுந்து குளிச்சிட்டு, இருக்குறதுலயே நல்லதா இருக்குற ஒரு புடவையை எங்கம்மா கட்டச் சொல்றா. வழக்கமா தாவணிதானே போடுவேன்னு சொன்னேன். புடவை கட்டுன்னு சொல்லி இருள் பிரிஞ்சும் பிரியாமயும் இருக்கிற நேரமா கிளம்புறோம்.”

அபர்ணாவின் முன் அந்தச் சம்பவம் காட்சியாக விரிகிறது.

கொஞ்சம் தொலைவில் இருக்கும் சிவன் கோயிலுக்கு அழைத்துப் போனார்கள் மாலினியை. அங்கே போய் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது அவள் கழுத்தில் மாலை போடப்பட்டது. என்ன ஏதென்று புரியாமல் விழித்துக் கொண்டிருக்கும்போதே பக்கத்தில் இருந்த அம்பாள் சன்னதிக்கு அழைத்துச் செல்லப்பட்டாள். 

“அம்மா… எ… எ… என்ன இது? என்ன நடக்குது இங்க?” மனசுக்குள் பயம் புகைமூட்டம் போட்டதில் வார்த்தைகள் திக்கித் திணறி வந்தன. மாலையும் கழுத்துமாக அருகில் வந்து நின்ற சேகரனை அப்போதுதான் பார்த்தாள். ஏதோ புரிந்தது.

“எல்லாம் அப்புறம் பேசிக்கலாம். தம்பி தாலியைக் கட்டுங்க” என்கிற குரலுக்குக் கட்டுப்பட்டு சேகரன் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகள் போட்டான். கண்மூடித் திறக்கும் நேரத்தில் கல்யாணம் முடிந்து விட்டது.

“நேத்து ராத்திரி நம்ம சேகரன் தம்பி வந்து ரொம்ப அழுதுச்சு. அத்தை எனக்கு யாருமே பொண்ணு தர மாட்டேங்குறாங்க. நீயும் தரலேன்னா நான் எங்காவது போய் செத்துருவேன்னு அழுதுச்சு. கல்யாண செலவெல்லாம் நானே பாத்துக்கிறேன்னு சொல்லுச்சு. நம்ம பையனுக்கு நாமளே எப்படி இல்லேன்னு சொல்றது?” என்கிற அம்மாவை இடைமறித்தான் அண்ணன்.

“நான் அடுத்த வாரம் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேரணும். அதுக்கு அஞ்சாயிரம் டெபாசிட் கட்டணும். மாமா தர்றேன்னு சொன்னாரு” என்றவனை இடைமறித்தாள் மாலினி. 

“ஆக மொத்தம் என்னை வித்துட்டீங்கன்னு சொல்லுங்க. அப்பா இருந்திருந்தா இந்த மாதிரி பண்ணியிருப்பீங்களா? இனிமேல் என் மூஞ்சிலயே முழிக்காதீங்க” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சேகரனின் பின்னால் போனாள். இன்றுவரை பிறந்த வீட்டுடன் தொடர்பு இல்லை. அவள் அம்மாவின் சாவுக்குக்கூட மாலினி போகவில்லை.

சொன்னபடியே காளிச்சாமி மறுநாள் மாலையிலேயே பத்தாயிரத்தை எண்ணிக் கொடுத்தான். ஐந்தாயிரத்தை மாலினியின் அண்ணனுக்குக் கொடுத்தான் சேகரன். அவன் வீட்டில் யாரும் இந்தத் திருமணத்தை ஆதரிக்கவில்லை. வெளியே வாடகைக்கு வீடு பார்த்தான்.மீதமிருந்த பணத்தில் கல்யாணச் செலவுகள் போக மிஞ்சிய சொற்பத் தொகையைக் கொண்டு வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.

வயது வித்தியாசம் அதிகமாக இருந்தது கல்யாணம் பண்ணும் போது சேகரனுக்குத் தெரியவில்லை. போட்ட சவாலில் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. இப்போது மாலினியின் வயது உறுத்தியது. அதனால் மேலும் குடிக்கத் தொடங்கினான்.

மாலினி குடும்பச் செலவுகளைச் சமாளிக்கத் தானும் வேலைக்குச் செல்வதாகச் சொன்னதும் உடனேயே தடுத்துவிட்டான். “வேணாம். நீ வீட்லயே இரு.” அவள் பதில் பேசவில்லை. பேசவும் விரும்பவில்லை. தலையெழுத்தை நொந்து கொண்டு அடங்கிவிட்டாள்.

அவளுக்குக் கருகருவென்று நீளமான, அடர்த்தியான கூந்தல். விரித்து விட்டால் மயில் தோகை மாதிரி முதுகில் புரளும். இறுக்கிச் சடைப் பின்னி, தலையில் மல்லிகையும் கனகாம்பரமும் கலந்து வைத்துக் கொள்வாள். தாழம்பூ சடைப் பின்னி அலங்கரித்துக் கொள்வாள்.

“என்னடி இது? சடையைத் தொங்கவிட்டுட்டு தே..யா மாதிரி அலையுற? பின்னல் போடாதே” என்று உத்தரவிட்டான். அன்றிலிருந்து மாலினி ஏனோதானோவென்று ஒரு கொண்டை போட்டுக் கொள்வாள். பூ வைப்பது மறந்தே போய்விட்டது. 

நல்ல சேலை உடுத்துவது, முகத்துக்கு பவுடர் பூசுவது, வெளியே நல்லது கெட்டதுக்கு போவது என்று எதற்குமே அவன் அனுமதித்தது இல்லை. அந்த வீட்டுக்குள்ளேயே இருந்தாள். அக்கம் பக்கத்தில் இருக்கும் பெண்களிடம்கூடப் பேசத் தடை விதித்தான். அவன் இல்லாத சமயத்தில் இரண்டொரு வார்த்தைகளோடு அவர்கள் நகர்ந்து விடுவார்கள்.

சேகரனின் நண்பர்கள் அவ்வப்போது அவர்களின் வயது வித்தியாசத்தைக் குறித்துப் பேசும் நாட்களில் போதை தலைக்கேறி வருவான் சேகரன். மாலினியை அவனுக்குப் பிடிக்காமலே போனது.

அபர்ணா பிறந்த பிறகு அவளிடம் மட்டும் கொஞ்சம் தணிந்து போனான் சேகரன். தன்னைப் போல் இல்லாமல் மகளைப் படிக்க வைப்பதில் முனைப்பு காட்டினாள் மாலினி. அபர்ணாவும் ஆடை வடிவமைப்பு படித்துவிட்டு, சுயமாக ஒரு ‘பொட்டிக்’ வைத்து சொந்தக் காலில் நிற்பதோடு நிறையப் பெண்களுக்கு ஆடை வடிவமைப்பு கற்றுக் கொடுக்கவும் செய்தாள்.

இப்போது அறுபத்தி எட்டு வயதில் அவர்களுக்கென்று சொத்து எதுவும் சேர்த்து வைக்காமல் மாரடைப்பில் போய்ச் சேர்ந்தான் சேகரன். இறந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அம்மாவுக்குப் பாடவரும் என்று இப்போதுதான் அபர்ணா தெரிந்திருக்கிறது.

“ஏம்மா நீ பாடுவேன்னு சொல்லவே இல்லையே” ஏக்கத்துடன் கேட்டாள் அபர்ணா.

“ப்ச்… சொல்லி என்னடா பண்ண? அதெல்லாம் மறந்தே போச்சு. நல்ல துணி உடுத்த, மேக்கப் பண்ண எல்லாம் மறந்து போச்சு போ” என்றாள் மாலினி சலிப்பாக.

“வா சாப்பிடலாம்” என்றவாறே டேபிள் மீது கத்தரிக்காய் வதக்கல், சோறு, ரசம் என்று எடுத்து வைத்தாள் மாலினி. இருவரும் ஏதேதோ யோசனையில் மௌனமாகச் சாப்பிட்டார்கள். 

காலையில் பார்த்த விஷயம் மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. அம்மாவிடம் கேட்கலாமா? வேண்டாமா? என்று தவித்தாள். என்ன செய்வது? அப்பா இறந்து ஆறு மாதங்கள்தான் ஆகிறது. அதற்குள் எப்படிக் கேட்பது? குழம்பினாள். விஷயம் இதுதான். அப்பாவின் பழைய ஒளிப்படங்கள் ஏதாவது இருந்தால் அதை எடுத்துப் புதுப்பித்து, சட்டமிட்டு வீட்டில் மாட்டி வைக்கலாம் என்று தோன்ற, நாற்காலியைப் போட்டு ஏறி பரணில் இருந்த பழைய பெட்டியை இறக்கி வைத்துக் குடைந்து கொண்டிருந்தாள். பெட்டியில் ஏதேதோ கிடக்க அந்தக் கடிதம் அவள் கையில் கிடைத்தது. 

அது அவள் அம்மாவைப் பற்றி அப்பாவுக்கு யாரோ ‘உண்மை விளம்பி’ எழுதிய மொட்டைக் கடிதம். கிட்டத்தட்ட இருபத்தி நான்கு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டிருந்ததைத் தேதி சொன்னது. அதன் சாராம்சம் இதுதான். அவன் மனைவி யாரோ ஒரு இளம் வாலிபனுடன் பழகுகிறாள். இருவரும் அவ்வப்போது சந்தித்துப் பேசிக் கொள்கின்றனர். நிலைமை கைமீறிப் போவதற்குள் விழித்துக் கொள்ளுமாறு அவளது அப்பாவை அறிவுறுத்தி இருந்தான் ஒருவன்.

படுக்கையில் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள் அபர்ணா. பக்கத்தில் திரும்ப, அம்மாவும் தூங்காமல் இருந்தாள்.

“அம்மா… ஒண்ணு கேக்கட்டா? கோவிச்சிக்க மாட்டியே?” மெல்ல பீடிகை போட்டாள்.

“அப்ப கோபம் வர்ற மாதிரி ஏதோ கேட்கப் போறேன்னு சொல்லு.”

“நீ…நீ… யாரையாச்சும் லவ் பண்ணியிருக்கியா?” 

மாலினி அமைதியாகப் படுத்திருந்தாள். மீண்டும் அபர்ணா வற்புறுத்திக் கேட்கவே, “தூங்கு பேசாம. எனக்குத் தூக்கம் வருது” என்றவாறு மறுபக்கம் புரண்டு படுத்துக்கொண்டாள். தூங்கியும் போனாள். அபர்ணா யோசனையோடு நெடுநேரம் விழித்திருந்தாள். விடியற்காலையில் கண்ணயர்ந்தாள்.

மறுநாள். காபியோடு இருவரும் பால்கனியில் நாற்காலிகளில் அமர்ந்திருந்தார்கள். அபர்ணா நேற்றிரவு பெய்த மழையின் துளிகள் தொட்டிச் செடிகளின் இலைகளில் அங்கங்கே முகப்பருக்கள் மாதிரி ஒட்டிக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

மாலினியும் மௌனமாகவே அமர்ந்திருந்தாள். உள்ளே டிவியில் ’பூ வாடைக் காற்று…வந்து ஆடை தீண்டுமே… முந்தானை இங்கே குடையாக மாறுமே…’ என்று சிணுங்கிக் கொண்டிருந்தது. அம்மா அதிகமாக கிருஷ்ண சந்தர் பாட்டுகளையே கேட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.

“அம்மா… நேத்து நைட்டு நான் கேட்டதுக்கு நீ பதிலே சொல்லலையே?”

மாலினி மெல்ல அவள் பக்கம் திரும்பினாள்.

“என்னடி சொல்லச் சொல்றே? அதெல்லாம் முடிஞ்சு போன கதை.”

“அப்போ… விஷயம் இருக்கு. சொல்லு… சொல்லு” என்று கால்களை மடித்து அமர்ந்து கொண்டு அம்மாவையே பார்த்தாள்.

“அது என் கல்யாணத்துக்கு முந்தி, நான் வேலைக்குப் போனப்போ, அவர் அங்கே சூபர்வைசரா இருந்தாரு. அவர்தான் என்னை முதல்ல லவ் பண்றதா சொன்னாரு. எங்களுக்குத் தூதே இந்த சினிமா பாட்டுகள்தான். அதுலயும் கிருஷ்ணசந்தர் பாட்டுகள்னா எங்க ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிக்கும். அவருக்கு ஒரு தங்கச்சி இருந்துச்சு. அவங்க கல்யாணத்தை முடிச்சிட்டு எங்க வீட்ல வந்து பொண்ணு கேக்குறதா சொன்னாரு. அதுக்குள்ள உங்கப்பா முந்திகிட்டாரு” மாலினி எங்கோ பார்த்துக் கொண்டே சொன்னாள்.

“சரி, இந்த விஷயம் அப்பாவுக்கு…” முடிக்காமல் தயங்கினாள் அபர்ணா.

“அந்த லெட்டரைப் படிச்சியாக்கும்” என்று மாலினி மெல்லப் புன்னகைத்தாள்.

“அதுக்கப்புறம்தான் என் வாழ்க்கை நரகமாச்சு. அதுக்கு முன்னாடி மட்டும் நல்லா வாழ்ந்துடல. அதிக வயசு வித்தியாசம் அவர் மனசுல ஊகா முள்ளா உறுத்திட்டே இருந்துச்சு. அவரோட பிரெண்ட்ஸ் கிண்டல் செய்யும் போதெல்லாம் அந்தக் கோபத்தை என்கிட்ட காட்டுவாரு. அடி உதைன்னு…” லேசாகக் கலங்கிய கண்களை துடைத்துக் கொண்டாள்.

“அவரோட பிரெண்டுக யாரையும் வீட்டுக்கு வர அனுமதிக்க மாட்டாரு. எப்பவும் சந்தேகக் கண்ணோடவே திரிவாரு. கல்யாணமான கொஞ்ச நாள்லயே நான் அதைப் புரிஞ்சுக்கிட்டேன். ஒருநாள் தண்ணீர்ப் பிடிக்கப் பக்கத்து தோட்டத்துக்குப் போனேன். வழியில் அவரைப் பார்த்தேன். எங்க காதல் முறிவுல அவர் ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு. அவரு தங்கச்சிக்குக் கல்யாணம் ஆயிருச்சு. சந்தோஷமா இருக்கியான்னு கேட்டாரு. ஆமான்னும் சொல்ல முடியல. இல்லைன்னும் சொல்ல முடியல. மெதுவா தலையசைச்சேன். புரிஞ்சிக்கிட்டாரு. இனிமே உன்னைப் பார்க்க வரமாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு. அதைப் பார்த்த எவனோ மொட்டைக் கடிதாசு எழுதிப் போட்டுட்டான். அன்னிலேருந்து எல்லா விஷயத்துக்கும் தடை.”

மீண்டும் மௌனம் வந்து அவர்களுடன் அமர்ந்து கொண்டது.

“அம்மா, இப்போ அவரு எங்க இருக்காருன்னு தெரியுமா?” 

“எதுக்கு? அவரைத் தேடிக் கண்டறியப் போறீயா?”

“ஆமாம்மா. அவரு உன் ஞாபகத்துலயே இருந்தா?” 

“ஏண்டி இது என்ன சினிமாவா? இருபத்தாறு வருசமா காதலிச்ச பொண்ணையே நினைச்சிட்டு, தாடி வளர்த்துட்டு தேவதாஸா திரிய? அவரைப் பத்தி மறுபடியும் நான் விசாரிக்கவேயில்லை. அதுக்கு எனக்குத் தேவையுமில்லை.”

“நான் வேணும்னா சோஷியல் மீடியாவுல தேடட்டுமா? அவரு பேரென்ன?” அபர்ணா ஆர்வமானாள்.

“நான் ஒண்ணு சொல்லட்டுமா? எனக்கே எனக்குன்னு இந்த ஆறுமாசமாதான் வாழ்ந்துட்டு வரேன். சாராய வாடை இல்லாம, கெட்ட வார்த்தை , வசவுகளைக் கேட்காம நிம்மதியாகத் தூங்குறேன். மதியம் தூங்கினா உங்கப்பாக்குப் பிடிக்காதுன்னு தூங்கவே மாட்டேன். சும்மாவாவது கொட்டு கொட்டுன்னு முழிச்சிட்டு உக்காந்திருக்கணும். இப்ப நினைச்ச நேரம் தூங்குறேன். பிடிச்சா சமைக்கிறோம். இல்லேன்னா ஆர்டர் போட்டுட்டு ஃப்ரீயா இருக்கோம். வெளியே தெருவுல போறேன். என்னால முடிஞ்ச உதவிகளை அடுத்தவர்களுக்குச் செய்யறேன். இதுவரைக்கும் யாராவது ஒருத்தர் பேரோடதான் அடையாளப்படுத்தப்பட்டேன். இன்னாரோட பொண்ணு, இன்னார் மனைவின்னு. இப்ப… மாலினி ஆண்ட்டினா எல்லாருக்கும் தெரியுது” என்று மூச்சு விடாமல் பேசிய அம்மாவை அபர்ணா இடைமறித்தாள்.

“அம்மா, வாழ்க்கை முழுசும் இப்படியே இருந்துடுவியா? உன்னோட காதல் இனியாச்சும் ஜெயிக்கணும்ல.”

“கல்யாணம் பண்ணாத்தான் காதல் ஜெயிக்குமா அபு? அது ஒரு ஃபீலிங் அவ்வளவுதான். அந்த வயசுல அந்த ஃபீல் வந்துச்சு. அது இன்னும் அப்படியே இருக்குமா? இருந்தா இருக்கட்டும். இல்லேன்னாலும் தப்பு இல்ல. நான் உன்னை நினைச்சிட்டே என் வாழ்க்கையை அழிச்சுக்குறேன்னு சொல்றதை நாம ஆதரிக்கக் கூடாது. அது மட்டுமல்லாம அந்தக் காதல் கல்யாணத்துக்கு அப்புறம் காணாமப் போயிடுச்சுன்னா?”

“அப்போ மறுமணம் வேண்டாம்னு சொல்றீயாம்மா? மிச்ச வாழ்க்கையையாவது நீ சந்தோஷமா கழிக்க வேணாமா?” என்று அபர்ணா தயக்கத்தோடு கேட்டாள்.

“கல்யாணம் பண்ணாத்தான் சந்தோஷமாகக் கழிக்க முடியும்னு யார் சொன்னது அபு? மறுமணம் பண்றவங்க பண்ணட்டும். தப்பே இல்ல. காதலோடயோ, காதல் இல்லாமயோ என்னோட வாழ்க்கையோட திசையை முடிவு செய்யுற உரிமைதான் எனக்கு வேணும். யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லாமல் முடிவு எடுக்குற சுதந்திரம் எனக்கு இருக்கு. அதுவே எனக்குப் போதும். மறுபடியும் ஒரு கமிட்மெண்டுக்குள்ள மாட்டிக்குற அவஸ்தை எனக்கு வேணாம். இப்பத்தான் ஒரு கூண்டில் இருந்து விடுதலையாகி வந்திருக்கேன். மறுபடி இன்னொரு கூண்டுக்குள்ள அடைபட இஷ்டம் இல்லை” என்று மாலினி எழுந்தாள்.

“இன்னொருத்தருக்காக நான் மறுபடி வாழ முடியாதுடா. எனக்கே எனக்காகக் கொஞ்சம் வாழ்ந்துட்டுப் போறேனே. டிபன் ரெடி பண்றேன். பதினோரு மணி்க்கு இந்த ஏரியா சமூக ஆர்வலர் குழுவுல ஜாய்ன் பண்ணப் போறேன். நீயும் வர்றீயா?” கருநாகப் பாம்பாக நீண்டிருந்த பின்னலைப் பின்னால் தள்ளிவிட்டு நடந்தாள் மாலினி.

படைப்பாளர்

கனலி என்கிற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரைப் பயன்படுத்துகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?’ , ‘அவள் அவன் மேக்கப்’ , ’இளமை திரும்புதே’ ஆகிய நூல்களாக வெளிவந்திருக்கின்றன.

             *