குழந்தை பிறந்த ஏழாம் நாளிலோ அல்லது ஒரு மாதத்திற்குள்ளேயோ குழந்தைக்குப் பெயர் சூட்டிவிடுவது அன்றும் இன்றும் உள்ள வழக்கம். ஆலிம் சாகிப் (பேச்சு வழக்கில் ஆலிம்சா) வந்து குரான் வசனங்களை ஓதி, குழந்தையின் நாவில் மூன்று சொட்டுத் தேனைத் தொட்டு வைத்து மூன்று முறை குழந்தையின் பெயரைத் தெளிவாக உச்சரிப்பார். அதன்பின் உறவுகள் ஒவ்வொருவராகக் குழந்தையைக் கையில் வாங்கி நெற்றியில் முத்தமிட்டு அப் பெயரைச் சொல்லி அழைத்து மகிழ்ந்து கொள்வார்கள்.

இப்போதெல்லாம் ஊரில் பிள்ளைகளுக்குச் சூட்டப்படும் விதவிதமான பெயர்களை உச்சரிக்க யாரும் அவ்வளவு சிரமமப்படுவதாகத் தெரியவில்லை. அஸ்லினா, மர்ஸியா, அஃப்ரா, ஜுமானா, ஹஃப்ஸா, வஸீஃபா, வஃபீஃகா, ஷஃபீஃகா, இப்படி ஷ, ஸ, ஹ வெல்லாம் எல்லோர் வாயிலும் எளிதாகவும், இன்னும் சொல்லப் போனால் சரியாகவும் புகுந்து வெளிவந்துவிடுகிறது. தஸ்னீம். தஸ்லீம், நஸ்ரின், ஷபானா போன்ற பெயர்கள் எண்பதுகளிலிருந்தே ஊரில் புழங்கத் தொடங்கிவிட்டன. எங்கள் குடும்பத்தில் எங்களின் பெண்குழந்தைகளுக்கு வரிசையாக நஸ்ரின், ஆஃப்ரீன், ஜஃப்ரீன் என்று வைத்தாயிற்று. அடுத்ததாய்ப் பிறந்த என் மகளுக்கு என்ன பெயர் வைக்கலாம் என நாங்கள் யோசித்த பொழுது, எங்கள் மச்சி மகன், “பேசாம சூப்பர்ரின்னுன்னு வச்சிருங்க மாமி” என்றது நினைவுக்கு வருகிறது.

இது இப்படியிருக்க , அந்தக் காலத்திலோ புதிது புதிதாய்ப் பெயர் வைக்கவேண்டும் என்று ரொம்பவெல்லாம் யோசித்துச் சிரமப்படாமல், ஏரலின் ஏழு தெருக்களிலும் வாழ்ந்த பெண்களுக்கு மொத்தமே ஏழோ எட்டோ பேர்களிலேயே சமாளித்து விட்டதாய்த் தோன்றும் எனக்கு. ஆயிஷா, மரியம், கதீஜா, சுலைகா இப்படி நான்கைந்து பெயர்களோடு பீவி, பேகம், நிஸா, உம்மாள் போன்ற பின்னொட்டுகளைச் சேர்த்துக் கொண்டால் போதுமாக இருந்திருக்கிறது அவர்களுக்கு.

பெயர்களிலேயே பேர்பெற்ற பெயர் என்றால் அது ஃபாத்திமாதான். முகம்மது நபி (ஸல்) அவர்களின் அருமை மகளான ஃபாத்திமாவின் பெயரைத் தம் பெண்களுக்குச் சூட்டி மகிழ்வது இன்றளவும் முஸ்லிம்களிடம் தொடர்வது. ஃபாத்திமாவுடன் முத்து, கனி போன்ற தமிழ்ப் பெயர்களை இணைத்துக் கொள்ளும் வழமையும் இருந்தது. ஃபாத்திமுத்து, ஃபாத்திமாக்கனி என்று. பெண்ணுக்குச் சூட்டியதுதான் தமிழ்க்கனி. யூசுஃப் கனி, இப்றாகிம் கனி போன்ற ஆணுக்குரிய பெயர்களில் ‘கனி’ வளமை என்ற பொருள்படும் அரபுச்சொல்லாகும்.

அன்று தெருவுக்குத் தெரு ஏழெட்டு ஃபாத்திமாவாவது இருந்தார்கள். ஒரு வீட்டில் மனைவி, மகள், மருமகள் என மூன்று ஃபாத்திமாக்கள் இருக்க, அந்த வீட்டு அப்பாவிடம் (தாத்தாவைத்தான் அப்பா என்பது), மூணுபேரும் நீங்க யாரைக் கூப்பிடுறீங்கன்னு எப்படிக் கண்டுபுடிப்பாங்க என்று கேட்கப்பட்டதாம். ‘எலா பாத்துமா’ன்னு சத்தமாக் கூப்புட்டா அவொ ; ‘எம்மா பாத்துமா’ன்னு கொஞ்சம் தணிவாக் கூப்புட்டா மொவொ ; ‘பாத்துமா’ன்னு நடுத்தரமாக் கூப்புட்டா மருமொவொ என்றாராம் அப்பா.

முகம்மது நபி ஸல் அவர்களின் பெயரையும் அவர்களின் குடும்பத்தினரான அலி, ஹசன், ஹுசைன் ஆகியோரின் பெயர்களையும் ஆண்களுக்குச் சூட்டுவது எங்குமுள்ள வழக்கம். அப்பெயர்களோடு ஃபாத்திமாவை இணைத்துப் பெண்களுக்குச் சூட்டுவது எங்க ஊர்ப் பழக்கம் . மஹ்மூது ஃபாத்திமா, அலி ஃபாத்திமா, ஹசன் ஃபாத்திமா, ஹுசைன் ஃபாத்திமா என்று. இதைப்போலவே பீர் ஃபாத்திமா ,செய்யது ஃபாத்திமா, ஜவஹர் ஃபாத்திமா, கசாலி ஃபாத்திமா , மொகுதும் ஃபாத்திமா, மொய்தீன் ஃபாத்திமா என்ற பெயர்களிலும் ஃபாத்திமாவுக்கு முன் உள்ளவை ஆணுக்குரிய பெயர்கள். இந்த எல்லாப் பெயர்களிலுமே எனக்கு ஏரலில் பூமா, மாமி, சாச்சி, மூமா, வாப்புமாக்கள் இருந்தார்கள்.

இந்தப் பெயர்களுமே அவர்களுக்கு ஆலிம்சா நாவில் தேன் தொட்டு வைத்துப் பெயர் சூட்டும் போதும், அப்புறம் ஆலிம்சா நிக்காஹ் செய்துவைக்கும்போது மணமகள் இன்னார் என்று சொல்லும் போதும்தான் முழுமையாக உச்சரிக்கப் பட்டிருக்கும். இதைத்தவிர வாழ்நாள் முழுதும் அவர்கள் அழைக்கப்பட்டதென்னவோ மம்மாத்து, அலிவாத்து, அசம்பாத்து, ஒசம்பாத்து, பீராத்து, செய்துபாத்து, ஜவ்ராத்து, மோராத்து, மெய்ம்பாத்து என்றுதான். அப்படியேதான் ஆயிஷாவும் கதீஜாவும், ஐசா, கர்சா என ஆகியிருத்தார்கள்.

தலையில் சுருண்டிருந்த சணல்போன்ற முடியோடும் கைகளில் சுருண்டிருந்த சணல் நிறத்துத் தோலோடும் கட்டிலில் குனிந்து அமர்ந்து தானாகச் சிரித்துக் கொண்டிருந்த என் பூட்டிப் பெத்தா (வாப்பும்மாவின் ம்மா) கதீஜா ஃபாத்திமாவை கச்சிவாத்துப் பூட்டி என்று நாங்கள் அழைத்த வெளிறிய சணல் போன்ற ஞாபகம் இருக்கிறது. கதீஜா கச்சியானதைத் தெரிந்து கொண்டது போல எனக்கு இன்னுமே புரிபடாத ஒரு பெயர் உண்டு.சேலாமலி என்ற பெயர்தான் அது. அலி என்று முடிகிறது சரி. அதற்கு முன்னால் உள்ளது என்ன சேர்மானம் என்று இன்றுவரை தீர்மானமில்லை!

பல நூறு ஆண்டுகளுக்கு முன் இங்கு மக்களோடு மக்களாக வாழ்ந்து அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துரைத்து மக்களின் அன்பைப் பெற்ற இஸ்லாமிய மகான்களை இறை நேசர்கள் , அரபு மொழியில் அவ்லியாக்கள் என்போம். அவ்லியாக்களின் அடக்கஸ்தலமே தர்காக்கள் எனப்படுகின்றன. நாகூர் மீரான், தக்கலை பீர் முகம்மது, ஏர்வாடி இபுறாகிம் ஷா, ஏரலுக்கு அருகிலுள்ள பொறையூர் ஷேக் சிந்தா மதார் முதலிய புகழ்பெற்ற இறைநேசர்களின் பெயர்களைத் தம் ஆண் குழந்தைகளுக்குச் சூட்டும் வழமை பொதுவாக எல்லா முஸ்லிம்களிடத்தும் காணப்படுவது. எங்க ஊரில் நாகூரும்மா, மீராம்மா, பீரம்மா, இபுறாகிம்மாள், சிந்தாம்மா, சிந்தாக்கனி, மதார் ஃபாத்திமா என்று பெண்கள் இருந்தனர்/இருக்கின்றனர் . இன்னும் சம்சு நிஷா, சம்சுக்கனி, சம்சு இபுறாகிமாள் என்ற பெயர்களையும் சொன்னால் ‘சம்சுன்னா ஆம்பிளப் பேரு இல்லயா அப்போ’ என்று கூடத் தோன்றும் உங்களுக்கு.

என் வாப்பாவின் வாப்பாவுக்கு மூன்று சகோதரர்கள். அந்த நான்கு பேருக்குமாக ஒன்பது குழந்தைகள். அவர்களில் ஏழு பேர் ஆண்கள். இரண்டே இரண்டு பெண்கள் , அதாவது எனக்கு மாமிகள். பெரிய மாமிக்கு இபுறாகிம்மாள் எனப் பெயர் வைத்தாயிற்று. சின்ன மாமிக்கு என்ன பெயர் வைப்பது? இதெல்லாமா ஒரு கவலை, இபுறாகிம்மாளே நல்லாத்தானே இருக்கு பிறகென்ன என்று அவருக்கும் ஓரெழுத்துகூட மாற்றாமல் அதே இபுறாகிம்மாளை வைத்துவிட்டார்கள். சின்ன மாமி பிறக்கும்போது வீட்டில் உள்ளவர்களுக்கு அப்படி என்னதான் தலைபோகிற வேலை இருந்ததோ தெரியவில்லை!

ஆஷா பரி என்றொரு சாச்சி இருக்கிறார் ஊரில். ஆங்கில காட்பரி, பிளாக்பரி, ப்ளூபரி போல ஏரலில் எப்படி ஆஷாபரி என்று நினைக்க வேண்டாம். ஆயிஷா ஃபரீதாவைத்தான் ஆங்கிலேயராக்கி விட்டார்கள் ஏரலூரார்கள்.

ஆங்கிலேயர் என்றவுடன் நினைவு வருகிறது…

https://www.thehindu.com/society/history-and-culture/the-story-behind-campellabad-and-patemanagaram-in-thoppur/article19414617.ece

தாமிரபரணி ஆற்றின் ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடகால் மூலமும் தென்கால் மூலமும் இரண்டு வாய்க்கால்கள் பாசனவசதிக்காக வெட்டப்பட்டுள்ளன. இதில் ஏரல் வடகால் வாய்க்கால் வழியில் அமைந்துள்ளது. இதே வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள இன்னொரு சிறிய ஊர் சுங்கநாதபுரம் . இதனை அடுத்த தோப்பூர்தான் எங்க மூமாவுடைய (அம்மாவின் அம்மா) ஊர். தோப்பூரில் பல வருடங்களுக்கு முன் வந்த ஒரு பெரு வெள்ளத்தில் தங்கள் வீடு வாசல்களை இழந்த தோப்பூர் முஸ்லிம்களுக்கு அன்றைய ஆங்கிலேய சப் கலெக்டர் பேட் (Pate), மற்றொரு பகுதியில் நிலம் வழங்கி குடியிருப்புகளை அமைத்துக் கொள்ள வகை செய்தாராம். அப்படி உருவான ஊர்தான் ஏரலின் அருகிலுள்ள பேட்மாநகரம்.

ஏரலுக்குப் பக்கத்திலுள்ள கேம்பலாபாத் என்ற ஊரும் கேம்பெல் (Campbell) என்ற ஆங்கிலேய அதிகாரியால் முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டதுதான். இந்த விவரங்களைப் பின்னாளில் எங்க மாமாவும் வாப்பாவும் சொல்லக் கேட்டிருக்கிறேன். பேட், கேம்பெல் என்ற பெயர்களைத் தனியாக அறிந்திராத சிறுவயதில் கேம்பலாபாத், பேட்மாநகரம் இரண்டும் முஸ்லிம்களுக்குத் தொடர்புடைய பெயர்களாகவே பதிந்திருந்தன. இதைப்போல பாளையங்கோட்டை பக்கத்தில் உள்ள ‘பரக்கத் மாநகர்’ என்ற ஊர்ப் பெயரும் எப்போதாவது காதில் விழும்.

Wikimapia

பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் எங்க ஜமி மச்சி ஏதோ பேச்சுக்கிடையில் அங்க பர்கிட் மாநகர்ல… என்று குறிப்பிடும்போதுதான் அவர் ஏரல் மக்கள் சொல்லும் பரக்கத்தைத்தான் ‘பர்கிட்’ என்கிறார் எனப் புரிந்தது. அதன் பின்புதான் இவ்வளவு காலமாக இங்கிலீஷ்கார பர்கிட் (Burkitt) ஏரல்காரர்கள் வாயில் பரக்கத்தாக நுழைந்திருக்கிறார் என்பதும் புரிந்தது. 1923ஆம் ஆண்டு நெஹ்ல்லை கான்சாபுரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்து அம்மக்களுக்கு புதிய குடியிருப்புப் பகுதியை அப்போதைய ஆட்சியர் ஆர்.ஆர். பர்கிட் வழங்க, அவர் பெயரை ‘பர்கிட் மாநகரம்’ என மக்கள் அப்பகுதிக்கு வைத்தனர். நம் ஏரலூரார்கள் அதையும் ‘பரக்கத் மாநகர்’ ஆக்கிவிட்டனர்!

ஸ்ரீவைகுண்டம் வடகால் வாய்க்கால் பற்றிச் சொன்னேனில்லையா? வாய்க்கால் கரையிலேயே ஏரலுக்கு மேல்புறமாக மங்கலக்குறிச்சி உள்ளது. அதையடுத்து சவுராமங்கலம் என்று ஒரு சிறு ஊரைச் சொல்வார்கள். நானும் சபுறா என்ற முஸ்லிம் பெயரைத்தான் பேச்சு வழக்கில் சவுரா எனச் சொல்கிறார்கள் என்று நினைத்திருந்தேன். அப்புறம் ஒரு நாள் எங்க மாமா சொல்லும் போதுதான் தெரிந்தது அது சபுறாவுமில்லை, சவுராவுமில்லை ‘சிவராம’மங்கலம் என்று. நல்லாச் சொன்னாங்களே பேரை !

இங்கு தமிழ்நாட்டில் முஸ்லிம்களிடையே ராவுத்தர், மரைக்காயர், லெப்பை போன்ற பிரிவுகள் உள்ளன. லெப்பை பிரிவினர் தந்தையை ‘வாப்பா’ என்றும் ராவுத்தர்கள் ‘அத்தா’ என்றும் அழைப்பதைக் கொண்டு இருவரையும் வாப்பா வீட்டுக்காரங்க, அத்தா வீட்டுக்காரங்க என்று குறிப்பிடுவதுண்டு. வாப்பா வீட்டில் வாப்பும்மா, காக்கா, லாத்தா, பூமா என்று அழைக்கும் உறவுகளை அத்தா வீட்டில் அத்தம்மா, அண்ணன், அக்கா, பெரியம்மா என்று அழைப்பர். எங்க வாப்புமா வாழ்க்கைப் பட்டது வாப்பா வீட்டில் என்றால் அவருடைய இரண்டு தங்கைகளான என் சின்ன வாப்புமாக்களைக் கட்டிக் கொடுத்தது அத்தா வீட்டில். அதேபோல என் வாப்பாவுடைய மாமியின் கணவர் வீடும் அத்தா வீடு.

லெப்பை ராவுத்தர் பிரிவுகள், சாதிகளைப் போன்ற மிகத் திட்டவட்டமான வரையறை கொண்டவை அல்ல. அப்போதிருந்தே திருமணங்கள் மிகச் சாதாரணமாக எந்தப் பிரிவினருடனும் நடந்து வந்திருக்கின்றன என்பதைச் சொல்லவே இவற்றைக் குறிப்பிட்டேன்.

என் வாப்பாவின் பெயர் செய்யது சகாபுதீன். ஆனால் வட மாநிலங்களிலும் கர்நாடகாவிலும் சையத் (Syed) என்பது முஸ்லிம்களின் ஒரு பிரிவு போலும். எங்கள் பெரிய மகளின் திருமண நிச்சயத்துக்காக மைசூரிலிருந்து எங்கள் சம்பந்தி சையத் சமியுல்லாவுடன் அவருடைய உறவினர்கள் எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் யாருக்குமே தமிழ்நாட்டில் சென்னையைத் தவிர வேறு ஊர்களைத் தெரியாது. சம்பந்தியின் தங்கை ஒருவரிடம் நான் என் வாப்பாவை அறிமுகப்படுத்த , வாப்பாவும் அவரிடம் “நான் செய்யது சகாபுதீன்” (I am Syed Sahabudeen) என்று சொல்ல, அவர், “நீங்கள் சையதா?” ( Are you Syed?) என்று ஆர்வமாகக் கேட்டிருக்கிறார். எங்க வாப்பாவும், “ஆமா நான் செய்யது சகாபுதீன்தான்” (Yes, I am Syed Sahabudeen) என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார். அவரும் “அப்படியா சரி சரி” எனச் சிரிக்க, நானும் கணவரும் நொடிப்பொழுதில் ‘ஏரல் செய்யது வாப்பா’, ‘மைசூர் சையத்’ ஆகிவிட்ட விந்தையைப் பார்த்துச் சிரித்துக் கொண்டோம்.

படைப்பாளர்

ஜமீலா

54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.