எப்போதுமே நம்முடைய சிறுபருவத்து நினைவுகள் நமக்கு இனிமையானவை. நமக்கென கடமைகளும் கவலைகளும் இல்லாது பெற்றோர் கவனிப்பில் முழுதும் நம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு துள்ளித் திரிந்த சிறுபருவத்து நினைவுகள் நம் மனதில் பசுமையாகத் தங்கிவிடுபவை.
அதனால்தானோ என்னவோ அப்போது திரைப்படங்களுக்குச் சென்ற நினைவுகளும் அதேபோன்றே பசுமையாயுள்ளன. இருபத்தெட்டு பைசா தரை டிக்கெட்டுக்கும் ஐந்து பைசா முறுக்கு வாங்கித் தின்பதற்கும் என முப்பத்து மூன்று பைசாக்களை ம்மாவிடம் கெஞ்சி வாங்கி, ஏரலின் ஒரே தியேட்டரான சந்திரா டாக்கீஸுக்கு சனிக்கிழமை மதியக் காட்சிக்கு நண்பர்களுடன் சென்று பார்த்தவைதான் எத்தனை படங்கள்! படங்களின் கதையோ விவரங்களோ மனதில் பதியாவிட்டாலும் சில காட்சிகள் – குறிப்பாகச் சில பாடல்களில் கதாநாயகிகள் அணிந்து வந்த வண்ணச்சேலைகளும் அவற்றின் சமிக்கிகளும் இன்றும் நினைவில் மின்னுபவை. அல்லது அன்று ஏரலின் மணப்பெண்களைத் திருமணத்தின்போது அதேபோன்ற சமிக்கிச் சேலைகளில் பார்த்த நினைவாலும் அவை மறையாதிருக்கின்றனவோ என்னவோ.
ஆரஞ்சு பச்சை நிறங்களில் சமிக்கிச் சேலை அணிந்து முழுக்கக் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்த அன்றைய ‘பொண்ணு’களின் எழிற்கோலம் இதோ கண்முன் எழுகிறது. நெற்றிப் பக்கம் அழகழகாக முடியைச் சுருட்டி வைத்து அலங்காரமாகக் கொண்டை போட்டு ‘பொண்ணு ஜோடிக்க’வென்றே திறமையான சாச்சிகளும் மாமிகளும் இருந்தனர். கொண்டை போட்டு அதைச் சுற்றித் தலை நிறையச் சூடிய மல்லிப்பூவைச் சிறிது மறைத்தும் சிறிது காட்டியும் தலையிலிருந்து முதுகு வழியே இடை வரை அருவியென இறங்கும் மணப்பெண் சூடிய வெள்ளை வலை. இரண்டு நாற்காலிகளை ஒன்றாகப் போட்டு அவற்றின் மேல் ஏதேனும் ஒரு நல்ல சேலையைப் போர்த்தி அழகுபடுத்தி விட்டால் அதுவே மணமக்கள் அமரும் இருக்கை. அதில் ஒன்றில் ‘பொண்ஜோடனை’ செய்யப்பட்டு உட்கார்ந்திருப்பாள் மணப்பெண், கைப்பற்ற வரப்போகும் மணாளனுக்காக.
வீட்டில்தான் திருமணம் நடந்தது; வீடும் ஓட்டு வீடாகத்தான் இருந்தது; எனவே சூழ்ந்திருக்கும் உறவுகளிடையே அமர்ந்திருக்கும் அவளுக்கு வியர்க்காது விசிறி விடவும், வியர்த்திருக்கும் முகத்தைத் துடைக்கவும் அருகில் நின்றிருப்பாள் தோழி. குனிந்திருக்கும் மணமகளின் முகத்தை நாடியைப் பிடித்துத் தோழி நிமிர்த்தி நிமிர்த்தி விடுவதும் மணப்பெண்ணோ மீண்டும் மீண்டும் தலை குனிந்து கொள்வதும் சுவையான காட்சிகள்.
மணமகளின் வீட்டு வாசலில் போடப்பட்டிருக்கும் பந்தலின் கீழ் பாய் விரித்து அதன்மேல் ஜமுக்காளம் விரித்து , சாய்ந்து கொள்ள இரு தலையணைகளைத் திண்டாக வைத்து , கோட்டு தொப்பி பூமாலையுடன் மண்டிபோட்டு அமர்ந்திருப்பார் மணமகன். மணமகன், மணமகள், இருவருடைய பெற்றோர், அவர்களுடைய முகவரி, மணமகன் பெண்ணுக்கு வழங்கும் மஹர் எனப்படும் மணக்கொடை, திருமணத்தின் சாட்சிகள் ஆகிய விவரங்களை ஊரார் முன்னிலையில் தெளிவாகக் குறிப்பிட்டு, மணமகளின் ஜமாத்தைச் சார்ந்த பள்ளிவாசல் பதிவேட்டில் பதிவதை நிக்காஹ் எழுதுவது என்போம். இதன்பின் மணமகள் தரப்பிலிருந்து அழைக்கப்பட்டிருக்கும் ஆலிம் ஒருவர் இந்த மணமகளை இப்படியாக நான் உங்களுக்குத் திருமணம் செய்து தருகிறேன். நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா என மணமகனிடம் சம்மதம் கேட்க, அவரும் ஒப்புக்கொண்டேன்; ஏற்றுக்கொண்டேன் என பதில் மொழிவார். நிக்காஹ் பதிவேட்டில் கையெழுத்திடுவார். பின், மணமகளின் தாய்மாமா சின்னவாப்பா பெரியவாப்பா போன்றவர்கள் மணமகளிடம் சென்று மணமகன் தந்த மஹரை அவளிடம் தந்துவிட்டு பதிவேட்டில் அவளுடைய கையெழுத்தையும் சம்மதத்தையும் பெற்று வருவார்கள்.
இதன்பின் கட்டுக்கழுத்தியான ஒரு மூத்த சுமங்கலி மணமகளுக்குத் தாலி அணிவிப்பார். தாலியை ‘டீக்கா’ அல்லது ‘பூசந்தரம்’ என்று சொல்வோம். பிறை வடிவ அல்லது வட்ட டாலரில் நட்சத்திரமும் பூக்களும் பொறித்து அது கருகமணி கோர்க்கப்பட்ட தங்கச் சங்கிலியில் இணைந்திருப்பது டீக்கா. உருளை வடிவ டாலரில் பவளங்களும் கருப்பு மணியும் இணைத்து தங்கச் சங்கிலியில் கோர்ப்பது பூசந்தரம். பெண்ணுக்குத் தாலி கட்டியதும் ம்மா, மூமா, வாப்புமா, பூமா, மாமி, சாச்சி, லாத்தா, மச்சி என்று ஒருவர் பாக்கியில்லாமல் வந்து அவளை நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்திச் செல்ல வெற்றிலை மணக்க (சில சமயம் புகையிலையும்கூட) வீற்றிருப்பாள் பெண்.
இதனுடன் திருமணத்துக்கான துஆக்கள் எனப்படும் பிரார்த்தனைகளையும் ஃபாத்திஹா என்ற இறை வசனங்களையும் ஓதி முஹம்மது நபி ஸல் அவர்களைப் புகழும் ஸலவாத்தினைச் சொல்லி ஆலிம் நிக்காஹ்வை நிறைவேற்றி வைப்பார். இனி உறவினர் ஒவ்வொருவராக வந்து மாப்பிள்ளைக்கு ஸலாம் கூறி, அவரை ஆரத் தழுவி (முலாக்காத் செய்து) மாப்பிள்ளைக்கு வாழ்த்துரைப்பார்கள். மாமனார் மருமகனுக்கு மோதிரம் அணிவிக்கும் பழக்கமும் அன்றிருந்தது. மணமகளைச் சந்திக்க வீட்டினுள் நுழையப் போகுமுன் முதலில் மணமகளின் சகோதரன் மச்சானின் கால்களில் சிறிது பன்னீர் தெளித்து வரவேற்க, மச்சான் மச்சினனுக்கென தயாராக வைத்திருக்கும் மோதிரத்தைப் போட்டுவிடுவார். பின்னர் மணமகளின் மூமாவோ மாமியோ மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்க, மாப்பிள்ளை அவர்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு (ஒருவழியாக!) வீட்டிற்குள் நுழைவார்.
இப்படியாக மாப்பிள்ளையை மணமகளைச் சந்திக்க அழைத்து வந்து அருகில் அமரச் செய்து மணமகளின் அப்பா(தாத்தா) அல்லது தாய்மாமா அவளின் வலக்கையை மணமகனின் வலக்கையில் பிடித்துக் கொடுப்பார்கள். கைபிடித்துக் கொடுத்து விட்டு ஃபாத்திஹா ஓதியபின் மணமகன் பிடித்த கையை எடுத்து விடுவார் மனமில்லாமலே… இதனோடு கணவன் மனைவி என்ற புதிய பந்தத்துக்குள் நுழைந்திருக்கும் அவ்விருவரையும் பாலும் பழமும் ஊட்டி இனிமையுடன் இல்லறத்துக்கு வரவேற்பார்கள், இல்லறம் என்பதனைப் புரிந்து கொண்டிருக்கும் சற்று வயதான பெண்கள்.
இந்நேரம் வெளியே சாப்பாட்டுப் பந்திக்கான ஏற்பாடுகள் தொடங்கிவிடும். அப்போது எங்கள் ஊரிலும் சுற்றியுள்ள ஊர்களிலும் வழக்கத்திலிருந்த ‘ஸஹன்’ சாப்பாடு பற்றி இங்குக் குறிப்பிட்டே ஆக வேண்டும். ஊரில் அப்போதெல்லாம் திருமணமாகட்டும் மற்ற விருந்துகளாகட்டும், ஸஹன் சாப்பாடு மட்டுமே வழக்கத்திலிருந்தது. தனித்தனியே வரிசையாக அமர்ந்து இலை போட்டுப் பரிமாறுவது அப்போது கிடையாது. ஸஹன் என்ற துருக்கிய மொழிச்சொல் தட்டையான அகன்ற சமையல் பாத்திரம் எனப் பொருள்படுகிறது. தமிழ் முஸ்லிம்களிடையே அதுவே அகன்ற தட்டில் உண்ணும் பண்பாட்டைக் குறிப்பிடுகிறது எனப் புரிந்து கொள்ளலாம்.
எனாமல் பூசிய வண்ணப்பூப்போட்ட அல்லது எவர்சில்வரிலான ஒரு அகலமான தட்டு; அதில் சோறு இடப்பட்டிருக்கும்; அதைச்சுற்றி நான்குபேர் அமர்ந்து அந்த ஒரே தட்டிலிருந்து எடுத்து உண்பதுதான் ஸஹன் சாப்பாடு. நான்கு பேருக்குத் தேவையான இறைச்சியும் ஆணமும் ஒரு கோப்பையிலும், அதற்குத் துணையான பருப்புக்கத்திரிக்காய் ஒரு கோப்பையிலும் தருவார்கள். கூடவே புளியாணம் என்ற ரசம் மற்றொரு கோப்பையில். ஒரு ஸஹனில் சேர்ந்து அமரும் நால்வரும் தெரிந்தவர்களாகவே இருப்பார்கள் என்பதில்லை.
ஏரலிலிருந்து ஆத்தூர், குரும்பூர், ஆழ்வார் திருநகரி எனப் பக்கத்து ஊர்தான் மணமகளின் ஊர் எனில், அங்குதான் திருமணம் நடக்கும். அப்போது அந்த ஊரினருடனும் சஹனில் சேர்ந்து உட்கார வேண்டியிருக்கும். நால்வர் கூடி அமர்ந்து பகிர்ந்து உண்ட தனித்துவமிக்க பண்பாடு அது. அம்முறையில் உண்டு பழக்கம் இல்லாத இந்தத் தலைமுறையினருக்கு ஸஹன் சாப்பாடு என்பதைப் புரிந்து கொள்வது சற்றுக் கடினம்தான். திருமணங்கள் மண்டபத்தில் நடக்கத் தொடங்கியபோது அங்கு ஸஹன்களின் தேவையும் இல்லாமல் போனது. இன்று அந்தப்பழக்கம் கிட்டத்தட்ட நின்று போய்விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். திருமண வீடு அளவில் சிறியதாக இருந்தால் பக்கத்து வீட்டையோ எதிர் வீட்டையோ சாப்பாட்டுக்காகப் பயன்படுத்திக் கொள்வார்கள். முற்றத்தில் போடப்பட்டிருக்கும் பந்தலில் சாப்பாட்டுப் பந்தி பரிமாறுதல் அப்போது வழக்கத்துக்கு வந்திருக்கவில்லை. பின்னரும் கூட ஆண்கள் பந்தலில் அமர்ந்து உண்பதும், பெண்களுக்கு வீடுகளுக்குள் பரிமாறுவதுமாகத்தான் தொடர்ந்தது. அதற்குப் பின்னர் 90களில்தான் பெண்கள் பந்தியும் பந்தலில் நடந்தது.
சரி, இதெல்லாம் இருக்கட்டும். திருமணத்துக்கு வந்தவர்கள் இங்கே களறி விருந்து உண்டு கொண்டிருக்கையில் அங்கே மணமக்களை பாலும் பழமும் உண்ணச் செய்துவிட்டு வந்தோமே , அவர்கள் என்னவானார்கள் என்று எட்டிப் பார்த்துவிடலாம் என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆனால் இப்போது அவர்களைப் பார்க்க இயலாது என்றே நினைக்கிறேன். ஆம் திருமண வீட்டின் இத்தனைக் களேபரத்தின் நடுவிலும் மணமக்களைச் சற்றுத் தனியே மணவறைக்கு அனுப்பும் பழக்கம் இருந்தது அன்று. மணவறை என்றால் பூ அலங்காரம் செய்யப்பட்ட கட்டிலைக் கொண்ட ஒரு பெரிய அறையாக்கும் என்றெல்லாம் கற்பனையில் இறங்கிவிட வேண்டாம். வீடோ சிறிது. அதில் நல்ல காலத்திலேயே அறை என ஒதுங்கி ஒன்று இருக்காது. திருமண நாளின் அத்தனை உறவுக் கூட்டத்தில் தனியறைக்கு எங்கே போகவாம்?
அதனால் என்ன செய்தார்கள் என்றால் சுவரில் ஆணியடித்துக் கயிறு கட்டி மணமக்கள் அமர்ந்திருக்கும் நாற்காலி வரையிலான இடத்தைச் சுற்றி கயிற்றில் சேலைகளைக் கட்டி மறைத்திருப்பார்கள். அந்த மணவறையில் மிஞ்சிப் போனால் ஒரு அரைமணி நேரம்தான் தனிமை, பிறகு மதிய உணவு உண்ண அழைத்து விடுவார்கள் இருவரையும். அதற்கிடையில் இருவரும் என்னதான் பேசுவார்களோ என்னதான் பழகுவார்களோ என்ற குறுகுறுப்பு அன்றைய பதின்பருவத்தைத் தொடவிருக்கும் சிறுமிகளுக்கு இயல்பாகவே இருக்கும்தானே? தோழிகளோடு சிரித்துக்கொண்டு அங்கு நின்றிருக்கும் சிறுமிகளைத் துரத்திவிட ஒரு சாச்சியோ பூமாவோ நின்று கொண்டிருப்பார் காவலாக. மணவறைக்கு அனுப்பப்பட்ட மணமக்கள் தயங்கினார்களோ தவித்தார்களோ மருகி மருகித்தான் நின்றார்களோ , அது அவர்கள் பாடென அவர்களை அங்கேயே விட்டுவிட்டு நகர்ந்து கொள்வோம் நாம்.
திரைப்படங்கள் பார்க்கச் சென்றது பற்றியல்லவா சொல்லிக்கொண்டிருந்தேன் முதலில் ? சமிக்கியுடுத்திய மணப்பெண்கள் மினுங்கி மினுங்கி எங்கோ கூட்டிச் சென்று விட்டார்களே என்னை…
ஏரலில் முஸ்லிம் பெண்களுக்கு பருவமடையும் வரைதான் திரையரங்கிற்குச் செல்லும் அனுமதியிருந்தது. அதன்பின் முஸ்லிம் பெண்கள் திரையரங்கு செல்ல முடியாது. ஆனால் உள்ளூர்ப் பெண்களுக்கு மட்டுமே இந்தக் கட்டுப்பாடு. அதனால் இப்போதும் இருக்கும் ஏரலின் ஒரே திரையரங்கான சந்திரா டாக்கீஸுக்குத்தான் சென்று படம் பார்க்க முடியாதே தவிர, வெளியூர்களுக்குச் சென்றால் திரையரங்குகளுக்குச் செல்வதற்குப் பெண்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அதனால் வெளியூரிலிருக்கும் உறவினர் வீடுகளுக்குச் செல்பவர்கள் அந்த வாய்ப்பில் படங்களுக்கும் சென்று வருவார்கள். பேட்மாநகரம், கேம்பலாபாத், ஆழ்வார்திருநகரி போன்ற ஊர்களிலிருக்கும் உறவினர் வீடுகளுக்குச் செல்கையில் அப்படியே ஸ்ரீவைகுண்டம் ஜவஹர் தியேட்டரில் ஒரு படம் பார்த்துவிட்டு வந்துவிடுவதுண்டு. அதேபோலவே இந்தப் பக்கம் ஆத்தூரிலும் ஆறுமுகநேரியிலும் உள்ள திரையரங்குகளையும் ஒதுக்கிவிடுவதில்லை. இரண்டு பெருநாள்களுக்கும் மறுநாள் தெருப் பெண்கள் தலைக்கு இவ்வளவென காசு பிரித்து வேன் ஏற்பாடு செய்து ஆத்தூருக்குச் சென்று படம் பார்த்து வருவது அவர்களுக்கான ஒரு பொழுதுபோக்கு. வீட்டிலுள்ள வயதானவர்கள், ‘நோம்பு புடிச்ச நன்மையெல்லாத்தயும் இந்த மாயப் படத்துல போய்த் தொலக்கிறியளே’ எனப் புலம்பினாலும் அதையெல்லாம் ஒரு காதில் வாங்கி மறுகாதில் வெளியேற்றிவிட்டு வேனுக்கு விரைவார்கள் பெண்கள்.
சிறிது காலம் கழித்து ஊரில் தொலைக்காட்சி வசதியும் வீடியோ டெக்குகள் வாடகைக்கு எடுத்துப் போட்டுப் பார்க்கும் வசதிகளும் வந்த பிறகு, படங்கள் பார்ப்பதற்கு வெளியூர்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் போனது. மாலையில் வீடியோ டெக் வாடகைக்கு எடுத்து ஏதாவது ஒருவர் வீட்டில் கூடி இரவு விழித்திருந்து இரண்டு மூன்று படங்கள் பார்த்துவிட்டுக் கலைவது எனப் படம் பார்த்தல் தொடர்ந்தது. இப்படி வேன் பிடித்து படங்களுக்குச் செல்லும் காலங்களிலும், வீடுகளில் வீடியோ போட்டுப் பார்க்கும்போதும், எங்க மோராத்து வாப்புமாவும் அவங்க வயதிருக்கும் ஓரிருவரும் உற்சாகமாகச் சேர்ந்து கொள்வார்கள் எங்களுடன்.
அப்போதுதான் அதுவரை நான் அறிந்திராத ஒரு தகவலையும் எங்க வாப்புமா சொல்லக் கேட்டேன். என்னவென்றால் வாப்புமாவுக்குத் திருமணமாகியிருந்த அவர்களின் இளமைக்காலங்களில் ஏரலில் முஸ்லிம் பெண்கள் திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்க்கத் தடையேதும் இருக்கவில்லையாம். அப்போது வந்த படங்களுக்கு வாப்புமாவும் அவர்களின் நாத்தனாரும் அதுபோல இன்னும் சில பெண்களும் சேர்ந்து கொண்டுத் தவறாமல் சென்று விடுவார்களாம்! அதுவும் எப்போதாவது என்றில்லாமல் அடிக்கடி அல்லது தினமும் என்கின்ற கணக்கில்! அவசரம் அவசரமாக மதிய உணவை ஆக்கி கணவன்மாருக்குப் பரிமாறிய கையோடு, அவர்களும் இரண்டு வாய் சோற்றை அள்ளிப் போட்டு விட்டு உண்ட கையைக் கழுவியும் கழுவாமலும் மதியக் காட்சிக்கு ஓடுவார்களாம்.
இப்படித்தான் ஒரு நாள் சினிமாவுக்குப் போகப் புறப்பட்ட ஒரு பூமாவை அவரது தோழி வாசலில் வந்து நின்று கூப்பிட்டு அவசரப்படுத்த, வளவுக்குச் சென்று கால் கழுவிவிட்டு வரச் சென்ற அவர் அவசரத்தில் அங்கிருந்த தண்ணீர்ச்சட்டியைப் பார்க்காமலே காலில் கவிழ்த்த , அதுவோ மதியம் சோறு வடித்து வைத்திருந்த கஞ்சிச் சட்டியாம்! கையும் காலும் பிசுபிசுக்க, கழுவு கழுவென்று கழுவினாராம் ஆத்திரமும் அவதியுமாக! இப்படியாய் இருந்து பிறகு கொஞ்ச நாட்களில் தான், “பொம்பளைலுவோ ஒரே சினிமா சினிமான்னு கெடக்குறாளுவோ” என்று ஊர்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாம். இதெல்லாம் சொல்லக் கேட்டபோது அந்த வயதில் சிரிப்பும் வியப்புமாக மட்டுமே இருந்தது. பின்னர் யோசிக்கையில் அப்படி தினமும் சினிமா பார்க்கும் விருப்பம் கொண்டிருந்த அன்றைய பெண்களுக்கு எப்போதாவதுதான் சினிமா பார்க்க முடியும் என்று அருகிப்போன வாய்ப்பு எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும் எனவும் தோன்றியது .
சினிமாவுக்கென்றே இருக்கும் தொலைக்காட்சிச் சேனல்கள், அமேசான் நெட்ஃபிளிக்ஸ் போன்ற பல ஓ.டி.டி. தளங்கள், இணைய வசதிகள் என எந்தச் சிரமமுமின்றி நினைத்த போதில் நாம் சினிமாவில் மூழ்க முடியுமான இன்றைய தொழில்நுட்ப வசதிகளை நினைத்துக் கொள்கிறேன். யாரும் யாருக்கும் எதையும் தடை செய்ய இயலாது விரும்பியோர் விரும்பிய படங்களைப் பார்க்கக் கூடிய வசதியும் வாய்ப்புமான காலம்!
சென்று போன அவர்களெல்லாம் இன்று இருந்திருந்தால் திகட்டத் திகட்ட சினிமா பார்த்திருந்திருப்பார்களே என்று தோன்றத்தான் செய்கிறது. என்னுடைய வாப்புமாவும் மூமாவும் மாமியும் பூமாவும் சாச்சியும் அந்த ஊர்த்தடைக்கும் சினிமா ஹராம் என்ற ஏசலுக்கும் பணிந்து , அன்றாட வாழ்வின் போராட்டங்களைச் சிறுகணமேனும் மறக்கச் செய்து தம் உள்ளத்தில் குதூகலத்தை உண்டாக்கும் இச் சினிமாவைத் துறந்தே ஆக வேண்டும் என நினைக்காமல், அவ்வப்போதாவது சினிமாவை ரசித்திருக்க முடிந்ததே நல்லவேளை என சமாதானம் கொள்கிறேன்.
இல்லையோ இப்போது நான் தடையின்றி ரசிக்கும் ஒவ்வொரு பாடல் வரியிலும் ஒவ்வொரு படக்காட்சியிலும் அவர்கள் முகம் தோன்றி என்னைக் குற்றவுணர்வில் ஆழ்த்துமே , எங்களுக்கு மட்டும் எங்கள் ஆசை மறுக்கப்பட்டதேன் என்று!!
படைப்பாளர்
ஜமீலா
54 வயதாகும் ஜமீலா, தூத்துக்குடி மாவட்டம் ஏரலைச் சேர்ந்தவர். சுற்றி நடக்கும் வாழ்வைக் கவனிப்பதில் ஆர்வம் கொண்டவர். கவனித்தவற்றையும் மனதில் படிந்தவற்றையும் அவ்வப்போது எழுதியும் பார்ப்பவர். ஹீனா பாத்திமாவின் முக்கிய கட்டுரை ஒன்றை அருஞ்சொல் இணைய இதழுக்காக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். தீக்கதிர் இதழிலும் இவருடைய மொழிபெயர்ப்பு கட்டுரைகள் சில வெளியாகியுள்ளன.
என்ன ஒரு அருமையான எழுத்து நடை! அந்தக் கால ஏரலுக்கே கூட்டிச் சென்று விட்டீர்கள்.
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றியும் அன்பும்.
உயிர்ப்புடன் ஊரை கண்களின் முன் காட்சிப்படுத்தி விட்டீர்கள் உங்கள் அழகான எழுத்துப் பதிவுகள் மூலம்.. வாழ்த்துகள் சகோதரி 💐🤝💐இறைவன் அருளால் எல்லா வகையான வளமும் நலமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தி துவா செய்கிறோம்.