மாடிக்கு வந்தது முதல் நான்கு சிகரெட்டை ஊதித் தள்ளி இருந்தாள் ஆதி. ஐந்தாவதைப் பற்ற வைக்கும் போது படிக்கட்டில் காலடிச் சத்தம் கேட்டது. அவசரமாக சிகரெட்டை அணைத்தாள்.
புதிரான புன்னகையுடன் மேலேறி வந்தான் சிபி. கையில் பால் டம்ளர்.
“செமயா இருக்குல்ல இங்கே!” மூச்சை இழுத்து இரவுக்காற்றை அனுபவித்தான். அவனுக்குப் பொதுவாக மேலே வர நேரமே இருப்பதில்லை.
“குழந்தை தூங்கிட்டாளா?”
“ம்ம்… இப்பதான். இன்னிக்கு ரெண்டு கதை சொல்ல வேண்டி இருந்துச்சு. அதான் லேட். சரி நீ ஏதோ பேசணும்னியே.”
தூரத்தில் மாமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த வௌவாலின் கண்கள் சிவப்பாகப் பளபளத்தன.
எப்படித் தொடங்குவது என்று தெரியாமல் திணறித் திணறி ஆதி பேசி முடிக்கும் வரை அந்த வௌவாலின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சிபி. அவனது உலகமும் ஒரு நொடியில் தலை கீழாகத் தொங்குவதைப் போல்தான் உணர்ந்தான்.
“சிபி, சிபி… இப்டிப் பேசாம இருந்தா எப்படி? ஏதாவது சொல்லுடா” என்று நாதழுதழுக்கக் கெஞ்சிக்கொண்டிருந்தாள் ஆதி.
அனல் தெறிக்கும் கண்களோடு அவளை உற்று நோக்கியவன், பேசாமல் அவள் கையிலிருந்த காலி டம்ளரை வாங்கிக்கொண்டு கீழே சென்றான்.
ஆதிக்குக் குப்பென்று வியர்த்தது. மேலும் இரண்டொரு சிகரெட்டுகளைச் சாம்பலாக்கிவிட்டுக் கீழே போனபோது வீடு இரவைப் போர்த்தி உறங்கி இருந்தது.
சமையல் கட்டுக்குச் சென்று லைட்டைப் போட்டாள். வழக்கமாக ஓர் இண்டு இடுக்கு விடாமல் சமையற்கட்டைத் துடைத்து விட்டுத்தான் படுக்கப் போவான் சிபி. இன்று போட்டது போட்டபடி எல்லாம் கிடந்த நிலையில் விபரீதத்தை உணர முடிந்தது. ஏதேதோ சிந்தனையில் வெகு நேரம் உறக்கம் பிடிக்காமல் அப்படியே சோபாவில் கிடந்து ஆதி உறங்கத் தொடங்கிய போது மணி மூன்றிருக்கும்.
“யாழினி, ஸ்கூலுக்கு நேரமாச்சு, எழுந்திரு” என்று சிபி மகளை எழுப்பும் குரல் கேட்டு விழித்தாள் ஆதி. தொடர்ந்து குக்கர் சத்தம். காபி மணமும் சாம்பார் மணமும் கலந்துவந்து அவள் நாசியைத் தாக்கின. வெள்ளிக்கிழமை, தரை கிருமிநாசினி மணத்துடன் ஈரமாகச் சுத்தமாக இருந்தது. பாதங்களைக் கீழே வைக்கத் தயங்கி சம்மணமிட்டு சோபாவில் அமர்ந்துகொண்டாள் ஆதி.
டீப்பாயின் மேல் சூடான காபி இருந்தது. குற்றவுணர்வோடு அதைக் குடித்துவிட்டுக் குளிக்கப் போனாள்.
உடை மாற்றி வந்தவுடன், “அம்மா, டாட்டா!” என்று குழந்தை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துவிட்டு ஓடியது.
“புறப்படறேன். இன்னிக்கு சீக்கிரம் போகணும் ஆபிஸ்க்கு” எனப் பொதுவான அறிவிப்புடன் சிபி முகம் கொடுத்துக்கூடப் பேசாமல் குழந்தையை அழைத்துச் சென்றான்.
***
“சிபி, இது நடந்து ரொம்ப வருஷம் ஆச்சு. நான் அப்போ போஸ்ட் பார்ட்டம் டிப்ரஷன்ல இருந்தேண்டா. It meant nothing. அவன் குழந்தையைப் பார்க்கத்தான் வந்தான். அப்புறம் அன்னிக்கு டாக்டர் செக் அப்புக்குப் போக வேண்டிய அன்னிக்கு உன்னால வர முடியல. அவன் வந்து கூட்டிட்டுப் போனான்… என்னமோ உன் கிட்ட சொல்லணும்னு தோணிச்சு. Please don’t make it a big deal. It was just one time!”
சிபி பேசாமல் கொண்டுவந்து கொடுத்த டீயை வாங்கிக்கொண்ட ஆதி, மீண்டும் மாலை பேச்சைத் தொடங்கினாள்.
“அப்போ? எல்லாத்துக்கும் நான்தான் காரணம். நான் உன்னை அன்பா கவனிச்சிக்காததாலதான் இப்டி ஆச்சுன்னு சொல்றியா?” எரிந்து விழுந்தான் சிபி.
“அப்டி இல்லடா…”
“ஏன் ஆதி! இதே மாதிரி நான் ஒரு பொண்ணு கிட்ட நடந்திருந்தா நீ என்னை ஏத்துப்பியா… சொல்லு?”
அமிலம் தோய்ந்த அந்த வார்த்தைகளைக் கேட்க முடியாமல் காதைப் பொத்திக் கொண்டாள் ஆதி. அவள் மனம் புழுவாகத் துடித்தது. “மன்னிச்சிடு சிபி, வார்த்தையால என்னைக் கொல்லாதே. என்னால தாங்க முடியல. இனி சாகுற வரைக்கும் உனக்குத் துரோகம் பண்ண மாட்டேண்டா. அவன் யாரு? சரியான பொறுக்கி. ஏதோ நான் வீக்கா இருந்த சமயம் தாங்கிப் பிடிச்சிக்கிட்டான் அவ்ளோதான். என் வாழ்வின் உண்மையான தேவதன் நீ தானே?”
என்று கண்ணீருடன் கேட்க, மெல்ல அவள் மடியில் சாய்ந்துகொண்டான் சிபி.
ஆதியின் விரல்கள் மென்மையாக அவன் தலையைக் கோதத் தொடங்கின.
(ஆண்கள் நலம் தொடரும்)
படைப்பாளர்
ஜெ.தீபலட்சுமி
பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.