“ஆங், ஓக்கேடி, நான் காலைல 6 மணிக்கெல்லாம் கோர்ட்ல இருப்பேன். செம மேட்ச் போடுறோம் நாளைக்கு. ஷீலா, ஜான்ஸி, எல்லாருக்கும் சொல்லிட்டியா?”

நிலா போனில் தோழிகளிடம் தன்னை மறந்த அரட்டையில். விடியப் போகும் சனிக்கிழமைக்கான திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாள்.

வருண் துணிகளை மடித்து வைத்தபடியே அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். ‘என்ன, வெளிய போகப் போறாளா? ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கோமே?”

“நிலா…”

“……”

“நிலா…”

“ம்…”

“நிலா நாளைக்கு வேந்தன் ஸ்கூல்ல ஓப்பன் டே.”

“ம்…”

“நிலா, கொஞ்சம் போனை வெச்சிட்டு நான் சொல்றதக் கேக்குறியா?”

“ஏண்டா கத்துற? ச்சை எப்பப் பாரு உன்னையே பார்க்கணும், நீ பேசுறதையே கேக்கணும். மனுசி கொஞ்ச நேரம் வீட்ல நிம்மதியா இருக்க முடியுதா?”

“நிலா, நாளைக்கு ஓப்பன் டே. ஒரு வாரமா சொல்லிட்டு இருக்கேனே…”

“……”

“ நீ காலைல விளையாடப் போயிட்டா எப்படி?”

“எத்தனை மணிக்கு?”

“9 டு 12”

“……..”

“சொல்லு நிலா…” டென்ஷன் ஆனான் வருண்.

“வந்துருவேன்!”

“எப்போ?”

“அதான் வந்துடுவேன்கிறேன்ல?”

“லேட்டா போனா கூட்டமாயிடும். போன தடவையே டீச்சர்ஸ் முறைச்சாங்க. ஏன் இவ்ளோ லேட்டா வர்றீங்கன்னு கேட்டாங்க. உனக்காக வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணி….”

“இப்ப ஏன் கத்துற? ஆரம்பிச்சிட்டியா சனி ஞாயிறு வந்தாகூட மனுசி நிம்மதியா இருக்க முடியுதா?”

“ப்ளீஸ், நாளைக்கு ஒரு நாள் போகாதே… ப்ரெண்ட்ஸ்தான் உனக்கு முக்கியமா?”

“நீ இப்படிக் கத்திட்டே இருந்தா அப்படித்தான்.”

வருணுக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. புரிந்து கொள்ள மறுக்கிறாளா அல்லது நடிக்கிறாளா?

அடுத்த நாள் காலை.

8 மணி.

“அம்மா எப்போப்பா வருவாங்க?”

10 மணி.

“அம்மா எப்போப்பா வருவாங்க?”

11 மணி.

“அம்மா எப்போப்பா வருவாங்க?”

11.30

”அம்மா நாம ஓப்பன் டே போகலியா?”

வேந்தன் அழத் தொடங்கிவிட்டான்.

இனி காத்திருந்தால் அவ்வளவுதான் என்று வெண்பாவைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு வேந்தனை அழைத்துக் கொண்டு, வெயிலில் இறங்கி ஆட்டோ பிடித்தான் வருண்.

ஓப்பன் டே முடிய சில நிமிடங்கள் இருக்கும் போது டீச்சரைச் சந்தித்தான்.

’எவ்ளோ லேட்டா வருதுங்க பாரு. ஸ்டைல் பண்ணிக்கிறதுதான் முக்கியம், பசங்க படிப்பை விட’ முணுமுணுப்புகள் கேட்டன.

ஒரு சில அம்மாக்கள் வந்திருந்தார்கள். தன்னம்பிக்கையும் பெருமையும் மிளிர அவர்கள் முகத்தில் புன்னகைகள் மட்டுமே. அவர் தம் கணவன்கள்தாம் டீச்சர்களுடனும் பிள்ளைகளின் பேப்பர்களையும் கையில் வைத்துக் கொண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

வேந்தன் பள்ளியின் குழந்தைகளின் அப்பாக்கள் பெரும்பாலும் ஹவுஸ் ஹஸ்பெண்டுகள். பிள்ளைகளை வளர்ப்பதையும் படிக்க வைப்பதையும் முழுநேர வேலையாகச் செய்பவர்கள்.

அவர்களைப் பார்த்தாலே வருண் நடுங்குவான். வேலைக்குப் போவதை ஒரு குற்றம்போல் உணர வைத்துவிடுவதில் வித்தகர்கள்.

“ஆபிஸ்லேருந்து எப்ப வருவீங்க? அது வரைக்கும் பசங்க பாவம்ல?”

“வேந்தன் சயின்ஸ் யூனிட் டெஸ்ட்ல எத்தனை மார்க்?” என்று கேட்டுத் தன் பிள்ளை வாங்கி இருக்கும் மதிப்பெண்களை ஒப்பிப்பார்கள்.

“அபாக்கஸ் க்ளாஸ் இன்னும் சேர்க்கலியா?” அக்கறையுடன் கேள்விகள்.

“வருண், நீங்க வொர்க் பண்றீங்கல்ல? அப்போ பாவம் உங்களுக்கு டைம் இருக்காது, நான் வேணும்னா அழைச்சிட்டுப் போகவா?” தேவையற்ற பச்சாதாபங்கள்.

ஓ… என்று கத்திக் கொண்டு எங்காவது ஓடிவிடலாம் போலத் தோன்றும். பல்லைக் கடித்துக் கொண்டு சிரிக்க வேண்டி இருக்கும்.

“கெத்தை விடாதே. நீ வேலைக்குப் போவது குற்றமில்லை. சலுகை இல்லை. உன் உரிமையும் கடமையும் ஆகும். நீ சிறந்த தந்தைதான்” என்று மீண்டும் மீண்டும் தனக்குள் சொல்லிக் கொண்டே இருந்தான்.

டீச்சர் ரிப்போர்ட் கார்டைக் கொடுத்துவிட்டு, “இங்கே சைன் பண்ணுங்க’ என்றார். “அப்படியே இந்த டீடெய்ல்ஸ் எழுதிடுங்க” என்றொரு குறிப்பேட்டைக் காட்டினார்.

அதில் பிள்ளைகள் குறித்த பல தகவல்களுடன் பெற்றோரின் கல்வித் தகுதி, வேலையைப் பற்றிக் கேட்டிருந்தார்கள்.

லேசாக மற்ற பெற்றோரின் வரிசைகளில் கண்ணை ஓட விட்டான் வருண்.

அம்மாக்கள் அனைவரும் வேலையில் இருக்க, அப்பாக்களின் தகவல்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் பொறியியல், முதுகலைப் பட்டங்கள் முடித்திருந்தார்கள். அறிவியல், கணிதம், தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பை முடித்திருந்தார்கள். ஆனால், வேலை என்று குறிப்பிடப்பட்ட இடத்தில் பெரும்பாலும் ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ என்று இருந்தது.

சுற்றிப் பார்த்தான்.

“சுரேஷ், அனிதாக்கு நீங்க தந்துவிட்ட பனீர் ஃப்ரைட் ரைஸ் பத்தி அர்ஜு வீட்ல வந்து அதே மாதிரி பண்ணிக்குடுன்னு உயிரை வாங்கிட்டான். ரெசிப்பி தர்றீங்களா?”

“க்வார்ட்டலில 96தான் வாங்கி இருந்தா. சில்லி மிஸ்டேக்ஸ் பண்ணி இருந்தா. அவ அம்மாவை விட்டு நன்னா டோஸ் கொடுக்க வெச்சேன். இந்த தடவை 98.” பெருமைகள்.

“ஐயோ, லேட்டாடிடுச்சு. ஓப்பன் டே இருக்குனு சொல்லியும் மாமனார் சொந்தக்காரங்க வீட்டுக்குக் காலைலயே கிளம்பிப் போயிட்டார். போய்தான் சமைக்கணும்.” கவலைகள்.

வருணுக்குத் தலை சுற்றியது.

“அப்பா, போலாமா? பசிக்குது.”

தன்னையே நிமிர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் அந்த அழகிய கண்களில் விரியப் போகும் உலகத்தைக் காண வருணுக்கு அச்சமாக இருந்தது.

“வாடா தங்கம். முதல்ல கொஞ்சம் இளநீர் குடிக்கலாம்” என்று மகனின் கையை இறுகப் பிடித்து வேகவேகமாக வெளியேறியபோது மனதில் ஒரு புதிய உறுதி பிறந்தது வருணுக்கு.


(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்:

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் இவர் எழுதிய பெண்ணியக் கட்டுரைகள், ’குத்தமா சொல்லல, குணமாதான் சொல்றோம்’ என்கிற நூலாக ஹெர்ஸ்டோரீஸ் பதிப்பகத்தில் வெளிவந்திருக்கிறது. ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.