சிபியின் அப்பா வீட்டு வரவேற்பறை. சிபியின் அப்பாவுக்கு உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, திரும்பி இருந்தார். அவரைப் பார்க்கத்தான் சிபியை அழைத்து வந்திருந்தாள் ஆதி. கடுகடுவென்ற முகத்துடன் கால் மீது கால் போட்டு அமர்ந்திருந்தாள் ஆதி. அவள் அமர்ந்திருந்த விதமே அனைவருக்கும் ஓர் அச்சத்தையும் சங்கடத்தையும் கொடுத்தது.

சிபியின் தங்கை குழந்தைகள் பள்ளிக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். சிபி மாமாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், ஆதி அத்தை என்றால் அவர்களுக்கு ரொம்பவும் பயம்.

“வாங்க அண்ணி.” ஸ்லீவ்லெஸ் டிஷர்ட்டும் ஷார்ட்ஸுமாக வெளியே வந்தாள் இனியா, சிபியின் தங்கை. அண்ணியின் எதிரே கால் மேல் கால் போட்டு இனியா அமர்ந்ததும் சிபி டென்ஷனானான்.

முறைத்து தம்மடிக்க வெளியே சென்றாள் ஆதி.

“என்ன, அண்ணி, இன்னும் தம்மை விடலையா? நான் விட்டு ரெண்டு மாசமாச்சு.”

“சும்மா இருடி!” கண்களால் தங்கையை அடக்க முயன்று தோற்றான் சிபி.

“என்னண்ணா? அண்ணி பேசவே மாட்டேங்குறாங்க. அன்னிக்கு நான் போன்ல பேசுனதை இன்னும் மனசுல வெச்சிருக்காங்களா?”

“அப்பாவுக்கு உடம்பு சரியில்லை, உன் புருசனால ஒண்டியா எல்லாத்தையும் சமாளிக்க முடியலன்னு தானே என்னை உதவிக்குக் கூப்ட?”

“ஆமாம், அதுக்கென்ன இப்போ?”

“ஒரு வாரம் அப்பா வீட்ல இருந்து, அவரைக் கவனிச்சிட்டு வரட்டுமான்னு கேட்டேன். தாம்தூம்னு குதிக்க ஆரம்பிச்சிட்டா உங்கண்ணி.”

“புரியுது. ஆனா, நானும் பொம்பளைதான். ஆம்பள படுத்துட்டா எல்லா காரியத்தையும் என்னால செய்ய முடியுமா? என் புருசன் கண்ணன் அடுத்த வீட்லேருந்து வந்தவன். எவ்ளோ நாள்தான் அவனே எல்லாம் செய்வான். நீ மகன்தானே? உனக்குப் பொறுப்பில்லையா?”

படபடவெனப் பொரியத் தொடங்கிய இனியாவை ஷ்… ஷ்… என்று அடக்கப் படாதபாடுபட்டான் சிபி. மனைவி, தங்கை இருவருமே கோபக்காரிகள்.

“கத்தாதடி, அவங்க காதுல விழுந்துடப் போகுது!”

வாசலில் மரத்தடியில் நின்றுகொண்டு யாரிடமோ போனில் கலகலத்துக்கொண்டிருந்தாள் ஆதி.

”நீ சொல்றதெல்லாம் சரிதான். ஆனா, எங்க வீட்டு நிலைமையும் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. ஆதியோட அம்மா படுத்த படுக்கையா இருக்காங்க. எல்லாமே நான்தான் பார்த்துக்குறேன். சாப்பாடுகூட நான் ஊட்டி விட்டாதான் அவங்களுக்குப் பிடிக்கும். ஆதிக்கும் அவங்கம்மாவுக்கும் ஆகாதுன்னுதான் உனக்குத் தெரியுமே? அவங்களை விட்டுட்டு என்னால அப்டி இப்டி நகர முடியாது. அதுனால தாண்டி அப்பாவைப் பார்க்க என்னால வர முடியல. கோச்சுக்காதேடி!”

“ஹும்… இப்டி பசங்க எல்லாம் பெத்தவங்க பொறுப்பை விட்டுட்டு ஓடிட்டா. பொண்ணுங்கதான் எல்லாப் பொறுப்பையும் சுமக்க வேண்டி இருக்கு.”

தன் அழகிய நகங்களை வெட்டி நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டே அண்ணன் சொல்வதை எல்லாம் அசிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்த இனியா வேதனையுடன் சிரித்தாள்.

குற்றவுணர்வில் துடித்த சிபி, தலையைத் தாழ்த்திக்கொண்டான்.

அப்போது இனியாவின் கணவன் கண்ணன் அடுக்களைக்குள்ளிருந்து வெளிப்பட்டான். வீட்டுக்கு அயல் பெண்கள் வந்திருந்ததால் முழுக்கை டிஷர்ட்டும் கணுக்கால் வரை மூடிய பேண்டும் அணிந்திருந்தான். அடுக்களை சூட்டில் வியர்த்துக் கொட்டியது.

எல்லாருக்கும் டீயையும் புன்சிரிப்பையும் தந்துவிட்டு, ஒரு நிமிடம் ஃபேனின் கீழே அமர்ந்து ஒரு வாய் டீ குடிக்கப் போனான். உள்ளிருந்து மாமனாரின் முனகல் கேட்டவுடன் டீயை அப்படியே வைத்துவிட்டு ஓடினான்.

அவனைப் பெருமை பொங்கப் பார்த்துக்கொண்டிருந்த இனியா, அவன் புகழைப் பாடத் தொடங்கினாள். இடையில் வந்து சேர்ந்துகொண்ட ஆதியும் கண்ணனின் சமையல் வாசத்தையும் வீட்டைக் கவனித்துக்கொள்ளும் பாங்கையும் புகழ்ந்து தள்ள ஆரம்பித்தாள்.

“கண்ணன் ரியலி ஸ்வீட்! ஹும்… நானும் அவனை மாதிரி பத்தாவது வரைக்கும் படிச்ச அமைதியான பையனைக் கட்டி இருக்கலாம். என்ன பண்றது சிபியைப் பார்த்தவுடனே விழுந்துட்டேன். இப்ப டார்ச்சரை அனுபவிக்கிறேன்.”

“ஹா ஹா லவ் மேரெஜ்னாலே டார்ச்சர்தான் அண்ணி! அதுவும் எங்கண்ணன் ரொம்ப மோசம். பாவம் நீங்க, அப்பாவியா அவன் கிட்ட கஷ்டப்படுறீங்க” என்று இனியாவும் சிரிக்க இருவரும் கலகலப்பானார்கள்.

அண்ணியை உபசரிக்க ஒரு கட்டிங்கைத் திறந்து மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றுவிட்டாள் இனியா. அவள் சொல்லாமலே இரண்டு நிமிடங்களில் தட்டு நிறைய நொறுக்குத் தீனியையும் அப்போதுதான் பொறித்த மீன் துண்டுகளையும் கொண்டு கொடுத்துவிட்டு, இறங்கினான் அவளது கணவன் கண்ணன்.

சிபிக்கு அவனைப் பார்த்தாலே எரிந்தது. தான் வேலைக்கும் போய்ச் சம்பாதித்து வீட்டிலும் பம்பரமாக உழைத்தும் ஆதி என்னைவிடத் தன் தங்கை கணவனைத் தூக்கி வைத்துப் பாராட்டிவிட்டாளே என்று பொறாமையில் குமைந்தான்.

அப்பாவைப் பார்த்துக்கொள்ளும் சாக்கில் அவரது அறைக்குள் நுழைந்த சிபி, தங்கை கணவனிடம் என்ன குறை கண்டுபிடிக்கலாம் என்று சிந்தித்துக்கொண்டிருக்கும் போது, அவனுக்கு உதவியாக முன்னாள் காதல் மன்னன் ஸ்ரீஹரி குடும்பப்பாங்காக நடிக்கும் தொடர் டிவியில் ஓடத் தொடங்கியது.

(ஆண்கள் நலம் தொடரும்)

படைப்பாளர்

ஜெ.தீபலட்சுமி

பெண்ணிய செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான ஜெ.தீபலட்சுமி தொடர்ச்சியாக பெண்ணுரிமைக் குரலை எழுப்பி வருபவர். ‘இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை’ என்ற நூலை எழுதி இருக்கிறார். ஊடகங்களில் பெண்ணியக் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஆங்கிலம், தமிழ் என இரு மொழிகளிலும் சரளமாக எழுதியும், பேசியும் வருகிறார். எழுத்தாளர் ஜெயகாந்தனின் சிறுகதைகள் சிலவற்றைத் தொகுத்து ‘The Heroine and other stories’ என்ற நூலாக மொழிபெயர்த்திருக்கிறார்.