A New England Nun
அது ஒரு பின்னந்தி மாலைப்பொழுது. வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது. முற்றத்தில் விழுந்த மரத்தினுடைய நிழல்களின் தோற்றத்தில் வித்தியாசம் தெரிந்தது. எங்கோ தூரத்தில் இருந்து மாடு கத்தும் ஒலியும், அதன் கழுத்தில் கட்டியிருந்த மணியின் ஓசையும் சன்னமாக ஒலித்தன.
பண்ணை வேலைகளை செய்யும் ஒரு வண்டி இப்படியும் அப்படியுமாக சாய்ந்தவாறு சென்றதில், மண்ணில் இருந்து தூசி பறந்தது. நீல நிற ஷர்ட்டுகள் அணிந்திருந்த கூலியாட்கள், தோள்களில் மண்வெட்டிகளுடன் மெல்ல நடந்து சென்றனர். வீசிய மென் காற்றில் மக்களின் முகங்களுக்கு முன்பாக குட்டி ஈக்கள் கூட்டம் மேலேயும் கீழேயும் நடனமாடிக் கொண்டிருந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சின்ன பரபரப்பு எழுவதாகத் தோன்றியது – ஒய்வான அமைதியான இரவுக்கான முன்னறிவிப்பு.
தினசரி காணும் இந்த மென் பரபரப்பான காட்சி லூயிசா எல்லிஸிடமும் இருந்தது. அவள் மதியம் முழுவதும் தனது அறையில் ஜன்னலருகே உட்கார்ந்தவாறு அமைதியாக தையல் போட்டுக் கொண்டிருப்பாள். பின் அவள் வேலை செய்து கொண்டிருந்த துணியிலேயே ஊசியை கவனமாக குத்தி வைத்துவிட்டு, அதை துல்லியமாக மடித்து, அவளது விரல் கவசம், நூல் மற்றும் கத்தரிக்கோலுடன் ஒரு கூடைக்குள் வைப்பாள்.
லூயிசா எல்லிஸ் தனது வாழ்க்கையில் பெண்களுக்கே உரித்தான சின்ன சின்ன விஷயங்களில் இருந்து வழிதவறி நடந்ததாக நினைவில் இல்லை. நீண்ட நாள்களாக, நிலையாக அவள் செய்து கொண்டிருந்த செயல்பாடுகள் அவளது ஆளுமையின் ஒரு பகுதியாகவே மாறியிருந்தது.
லூயிசா தனது இடுப்பில் ஒரு பச்சை நிற ஏப்ரனை (Apron – உடைக்கு மேலே அணியும் ஒரு வகை சின்ன ஆடை) இறுக்கி கட்டி, பச்சை நிற ரிப்பனுடன் கூடிய ஒரு தட்டையான வைக்கோல் தொப்பியை வெளியே எடுத்தாள். பின்னர் தேநீருக்கு கொஞ்சம் திராட்சை சேர்க்க நினைத்து, நீல நிற பீங்கான் கிண்ணத்துடன் தோட்டத்துக்குச் சென்றாள். திராட்சைகளை சேகரித்து முடித்தவுடன், அவள் பின் கதவு-படிக்கட்டில் அமர்ந்து அவற்றின் தண்டுளை பொறுமையாக நீக்கிவிட்டு, அத்தண்டுகளை அவளது ஏப்ரனில் கவனமாக சேகரித்து, அதனை கோழி-கூண்டிற்குள் எறிந்தாள். அங்கே ஏதேனும் விழுந்திருக்கிறதா என்று தெரிந்துகொள்ள, படிக்கட்டுக்கு அருகிலுள்ள புல்லைக் கூர்மையாக ஆராய்ந்தாள்.
லூயிசா மெதுவாகவும், மிக நிதானமாகவும் ஒவ்வொரு செயலையும் செய்தாள். அவளுடைய தேநீர் தயாரிக்க அவளுக்கு நீண்ட நேரம் பிடித்தது; ஆனால் தயாரித்து முடித்தபோது, அவள் தன்னை தானே விருந்தினராக நினைத்து, அதை உவகையுடன் பருக தயாரானாள். சமையலறையின் மையத்தில், சுத்தமாக துவைத்த, ஓரங்களில் அழகிய பளபளப்பான பூ வேலைப்பாடுகள் கொண்ட லெனின் துணியால் மூடப்பட்ட ஒரு சிறிய சதுர வடிவ மேஜை இருந்தது. லூயிசா தனது தேநீர் ட்ரேயில் சின்ன துடைக்கும் துணி ஒன்றும் வைத்திருந்தாள், அந்த ட்ரேயில் டீஸ்பூன் நிறைந்த ஒரு கண்ணாடி டம்ளர், ஒரு வெள்ளி கெட்டில், ஒரு சீன பீங்கான் கிண்ணத்தில் சர்கரையும், இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பீங்கான் கப் & சாஸர் இருந்தன. லூயிசா ஒவ்வொரு நாளும் சீன பீங்கான் கோப்பையை பயன்படுத்தினாள் – அது அவளுடைய அக்கம்பக்கத்தினர் யாரும் செய்யாத ஒன்று. இதைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பார்கள். அவர்களின் தினசரி வழக்கில் சாதாரண பாத்திரங்கள் தான் இருந்தன, சிறந்த சீன பொருட்கள் பெரும்பாலும் அவர்கள் கப்போர்டில் தான் இருந்தன. லூயிசா எல்லிஸ் அவர்களை விட பெரும் பணக்காரரோ அல்லது மேட்டுக்குடியோ இல்லை. இருப்பினும் அவள் சீனப்பொருட்களை பயன்படுத்துவாள். இரவு உணவிற்கு ஒரு கண்ணாடி கிண்ணத்தில் இனிப்பில் தொய்த்த காய்ந்த திராட்சையும், சின்ன கேக்குகளை கொண்ட ஒரு தட்டும், அதனுடன் வெளிர் வெள்ளை நிற பிஸ்கட் ஒன்றும் வைத்திருந்தாள். அதோடு ஒரிரு லெட்யூஸ் (lettuce – கோஸ் போன்ற ஒரு வகை காய்) இலைகளும் இருந்தன. அவள் அதை அழகாக வெட்டியிருந்தாள். லூயிசாவுக்கு லெட்யூஸ் மிகவும் பிடித்தமான ஒன்று, அவள் தன்னுடைய சின்ன தோட்டத்திலேயே அதை பயிரிட்டு வளர்த்தாள். பொறுமையாக நிறைந்த மனதுடன் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து சாப்பிட்டாள். அப்படி சாப்பிடும் விதத்திலேயே எந்த அதிகளவிலான உணவாக இருந்தாலும் காலியாகி விடும் போன்ற ஆச்சரியத்தை தந்தது.
தேநீருக்குப் பிறகு நன்றாக சுட்ட மெல்லிய சோள-கேக்குகளால் ஒரு தட்டை நிரப்பி, பின்புறத்திற்கு கொண்டு சென்று, “சீஸர், சீஸர்” என அழைத்தாள்.
சின்ன வேகத்துடன், சங்கிலியின் மெல்லிய ஓசையுடன், மஞ்சளும் வெள்ளையும் கலந்த ஒரு பெரிய நாய் சின்ன குடிலின் வாசலில் தோன்றியது. வளர்ந்த புற்கள் மற்றும் பூக்களுக்கு இடையில் அது பாதி மறைந்திருந்தது. லூயிசா நாயைத் தட்டிக்கொடுத்துக்கொண்டே அதற்குச் சோள கேக்குகளை கொடுத்தாள். பின்னர் வீட்டிற்குத் திரும்பி, தேநீர் மற்றும் மாலை சிற்றுண்டிக்கான பொருட்களைக் கழுவி, சீனப்பீங்கான் பொருட்களை துடைத்து மெருகூட்டினாள். அந்தி இருள் அடர்ந்து பரவ தொடங்கியிருந்தது; தவளைகளின் கோரஸ் சத்தம் திறந்த ஜன்னலின் வழியாக உரத்த குரலில் மிதந்து வந்தது. இடையிடையே தேரையின் கூர்மையான குரல் ஒன்றும் அந்த தவளையின் கோரஸ் குரலை துளைத்துகொண்டு உள்நுழைந்தது. லூயிசா தனது பச்சை ஏப்ரனைக் கழற்ற, இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த ஏப்ரன் முழுவதுமாக வெளிப்பட்டது. பின் விளக்கை ஏற்றி, மீண்டும் தனது தையல் வேலையில் மூழ்கினாள்.
வேலையில் மூழ்கிய சுமார் அரை மணி நேரத்தில்லெல்லாம் ஜோ டாகெட் வந்தார். அவரது கனமான காலடியோசையை கேட்டவள், எழுந்து இளஞ்சிவப்பும் வெள்ளை நிறமும் கலந்த அந்த ஏப்ரனையும் கழற்றினாள். அதன் கீழ் இன்னொரு ஆடை இருந்தது – கீழே ஒரு சிறிய கேம்பிரிக் விளிம்புடன் வெள்ளை துணி; அது லூயிசா வீட்டில் அணிந்திருக்கும் ஆடை. அவள் விருந்தினர் சந்திப்பில்லையென்றால், அந்த காலிக்கோ ஏப்ரனை அணியமாட்டாள். கதவைத் திறந்து ஜோ டாகெட் நுழைந்தபோது, சட்டென இளஞ்சிவப்பும் வெள்ளை நிறமும் கலந்த அந்த ஏப்ரனை அவசரத்துடன் மடித்து, ஒரு டேபிள் டிராயரில் வைத்தாள்.
அவர் அந்த அறை முழுவதிலுமாக நிறைந்தார். தெற்குப்புற ஜன்னலில் தனது பச்சைக் கூண்டில் தூங்கிக் கொண்டிருந்த, சிறிய மஞ்சள் கேனரி பறவை எழுந்து காட்டுத்தனமாக பறந்து, கம்பிகளுக்கு எதிராக தனது சின்ன மஞ்சள் இறக்கைகளை அடித்தது. ஜோ டாகெட் அறைக்கு வரும் ஒவ்வொரு முறையும் அது எப்போதும் அவ்வாறு செய்தது.
‘குட் ஈவினிங்’ என்று கூறியவாறு லூயிசா, தனது கைகளை மெல்ல அவர் புறமாக நீட்டினாள்.
‘குட் ஈவினிங்’ என்று பதிலுக்கு சற்று உரக்கமாக கூறினார்.
அவர் அமர ஏதுவாக ஒரு நாற்காலியை நகர்த்தி வைத்தாள், அவர்கள் ஒருவருக்கொருவர் எதிர்புறமாக அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு இடையில் ஒரு மேஜை இருந்தது. அவர் நன்கு நிமிர்ந்து உட்கார்ந்து, தனது கனமான கால்களை அகலமாக வைத்து அறையைச் சுற்றி சற்றே சங்கடம் கலந்த சிரிப்புடன் நோட்டமிட்டார். அவள் தனது மெல்லிய கைகளை, தனது வெள்ளை லினன் துணியால் மூடப்பட்டிருந்த மடியின் மீது மடித்து மெதுவாக நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
“இனிமையான நாள்” என்றார் டாகெட்.
“உண்மையில் இனிமையான நாள்,” லூயிசா மென்மையாக ஆமோதித்தாள். சிறிது நேரம் கழித்து, “இந்த நாளை நீங்கள் வெறுக்கிறீர்களா?” எனக் கேட்டாள்.
“ஆமாம், நான் நாள் முழுவதும் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் அறுவடை வேலையில் இருந்தேன். கொஞ்சம் கடினமான வேலை” என்றார்.
“ஆம் அது அப்படித்தான் இருக்கும்” என்றாள்.
“ஆமாம், அதுவும் இந்த கொதிக்கும் வெயிலில் மிகவும் கடினமான வேலை”, என்றார்.
உரையாடலைத் தொடரும் விதமாக “உங்கள் அம்மாவுக்கு உடல் நிலை நன்றாக இருக்கிறதா?” கேட்டாள்.
“ஆம், அவள் நன்றாக இருக்கிறாள்.”
“லில்லி டயர் இப்போது அவளுடன் இருப்பதாக நினைக்கிறேன். சரியா?” என்றாள்.
அவர் சற்றே வெளிறிய முகத்துடன், “ஆம் அவளும் அம்மாவுடன் தான் இருக்கிறாள்” என மெதுவாகப் பதிலளித்தார்.
அவர் அந்தளவு இளமையாக இருக்கவில்லை, ஆனால் அவரது பெரிய முகத்தில் கொஞ்சம் சிறுவனின் சாயல் இருந்தது. லூயிசாவுக்கு அவனளவு வயதாகவில்லை, அவளுடைய முகம் அழகாகவும் மென்மையாகவும் இருந்தது; ஆனாலும் அவள் வயதானவள் என்ற தோற்றத்தையே அனைவருக்கும் கொடுத்தாள்.
“அவள் உங்கள் தாயாருக்கு நல்ல உதவியாக இருக்கிறாள் என நினைக்கிறேன்,” என்று மேலும் தொடர்ந்தாள்.
“ஆம் அப்படித்தான் நானும் நினைக்கிறேன்; அவள் இல்லாமல் அம்மா எப்படி இருப்பாள் என தெரியவில்லை,” என்று டாகெட் ஒருவித சங்கடத்துடன் கூறினார்.
“அவள் நிஜத்தில் ஒரு திறமையான பெண் போல் தெரிகிறாள், பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறாள்” என்று லூயிசா குறிப்பிட்டாள்.
“ஆமாம், மிகவும் அழகாக இருக்கிறாள்”, என்றார்.
தற்போது டாகெட் மேஜையில் இருந்த புத்தகங்களை விரல்களால் அலையத் தொடங்கினார். மேஜை மீது ஒரு சதுர சிவப்பு ஆட்டோகிராப் ஆல்பமும், லூயிசாவின் தாய்க்கு சொந்தமான ஒரு இளம் பெண்ணின் பரிசுப் புத்தகமும் இருந்தது. அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து திறந்து பார்த்தார்; பின் பரிசுப் புத்தகத்தில் உள்ள ஆல்பத்தை மீண்டும் கீழே வைத்தார்.
லூயிசா லேசான சங்கடத்துடன் அவற்றைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். இறுதியாக அவள் எழுந்து புத்தகங்களின் நிலையை மாற்றி, முன்பிருந்தது போலவே ஆல்பத்தை அடியில் வைத்தாள்.
டாகெட் சிறிய தடுமாற்றத்துடன் சிரித்தவாறு, ” இப்படி புத்தகத்தை மாற்றி மேலே வைப்பதில் என்ன பெரிய வித்தியாசம் தெரிகிறது?” என்றார்.
லூயிசா புன்னகையுடன் அவனைப் பார்த்து, “நான் எப்போதும் அவற்றை அப்படியே வைத்திருக்கிறேன்,” என முணுமுணுத்தாள்.
“நீங்கள் எல்லாரையும் வென்றுவிடுவீர்கள்” என்று டாகெட் மீண்டும் சிரிக்க முயன்றார். அவரது பெரிய முகம் லேசாகச் சிவந்து காணப்பட்டது.
சுமார் ஒரு மணிநேரம் இருந்துவிட்டு, பின்னர் விடைபெறுவதாக எழுந்தார். வெளியே செல்ல எத்தனிக்கும்போது, தரைவிரிப்பில் சற்று தடுமாறியதால், சுதாரித்துக்கொள்ள நினைத்தார். அப்போது லூயிசா மேஜை மேல் வைத்திருந்த வேலை செய்யும் பொருள்கள் வைத்திருக்கும் கூடையின் மேல் கைகள் பட்டு, அவை தரையில் கொட்டின.
அவர் லூயிசாவைப் பார்த்தார், பின்னர் உருளும் நூல்கண்டைப் பார்த்தார்; பின் ஒரு வித தடுமாற்றத்துடன் அந்த ஓடும் நூல்கண்டைப் பிடிக்க முயற்சித்தார். ஆனால் அவள் தடுத்து, “பரவாயில்லை,” “நீங்கள் சென்ற பிறகு நான் அவற்றை எடுத்துக்கொள்கிறேன்” என்றாள்.
அதனை லேசான விறைப்போடு கூறினாள். அவளின் செயல்கள் கொஞ்சம் சங்கடப்படுத்தியிருக்க வேண்டும், அல்லது அவருடைய பதட்டம் அவளை பாதித்து, அவரை சமாதனப்படுத்தும் முயற்சியில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டதாகத் தோன்றியது.
ஜோ டாகெட் வீட்டை விட்டு வெளியேறியபோது, வீசிய இனிமையான மாலைக் காற்றை பெருமூச்சுடன் உள்ளிழுத்தார், மேலும், அங்கிருந்து வெளியேறிய பின்னர், சீனப் பீங்கான் கடைக்குள் நுழைந்த அப்பாவியான கரடி வெளியேறியபின் எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாமல் போனதற்காக அடையும் மனதிருப்தியை உணர்ந்தார்.
லூயிசாவும் தன் பங்கிற்கு, சீனப்பீங்கான் பொருட்களுடைய கடைக்கு சொந்தக்காரர், கடையினுள் நுழைந்து கரடி அதிக சேதாரம் ஏற்படுத்தாமல் வெளியேறியபின், உணரும் கனிவினை உணர்ந்தாள்.
பின், முன்பு அணிந்திருந்த, இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த ஏப்ரனையும், அதன் மேல் பச்சை நிற ஏப்ரனையும் கட்டினாள். கீழே சிதறிய அனைத்துப் பொருள்களையும் எடுத்து, அவற்றை வேலை செய்யும் பொருள்களை வைக்கும் கூடையில் போட்டுவிட்டு, தரைவிரிப்பைப் பார்த்தாள். விளக்கைத் தரையில் வைத்துக்கொண்டு, தரைவிரிப்பின் மீது விரல்களைத் தடவி, கூர்மையாக ஆராய ஆரம்பித்தாள்.
“உள்ளே வரும்போது எப்போதும் மண்ணையும், புழுதியையும் சேர்த்தே தான் கொண்டு வருவார்” என முணுமுணுத்தாள்.
பின் லூயிசா குப்பை முறத்தையும், துடைப்பத்தையும் எடுத்துவந்து, ஜோ டாகெட் வந்து சென்ற பாதையை கவனமாக சுத்தப்படுத்தினாள்.
இதை அவர் அறிந்திருந்தால், அது அவரது குழப்பத்தையும் தர்மசங்கடத்தையும் அதிகரித்திருக்கும், இருப்பினும் அது அவருடைய விசுவாசத்தை குறைந்தபட்சம் கூட தொந்தரவு செய்திருக்காது. லூயிசா எல்லிஸைப் பார்க்க வாரத்திற்கு இரண்டு முறை வருவார், ஒவ்வொரு முறையும், அவளது இனிமையான அறையில் உட்கார்ந்திருக்கும்போதும், ஒரு மாய தேவதை உலகத்தால் சூழப்பட்டிருப்பதைப் போல உணர்ந்தார்.
அவள் பின்னி வைத்துள்ள அந்த மாய உலகத்தில் தனது விகாரமான கால் அல்லது கையை வைத்து எதையும் கலைத்துவிடக்கூடாது என பயந்தார். ஏனென்றால் லூயிசா தன்னுடைய உலகைக் கலைத்துவிடுவாரோ என்ற பயத்துடன் தன்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்ற உணர்வு அவருக்கு எப்போதும் இருந்தது.
பதினைந்து வருடங்களாக நீடித்த தனிமைப் பந்தத்திற்குப் பிறகு அவர்கள் ஒரு மாதத்தில் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். பதினைந்து வருடங்களில் பதினான்கு வருடங்களாக இருவரும் ஒருவரையொருவர் ஒருமுறைகூட பார்த்ததில்லை, அரிதாகவே கடிதங்களை பரிமாறிக் கொண்டனர். ஜோ அத்தனை ஆண்டுகளும் ஆஸ்திரேலியாவில் இருந்தார், பணம் சம்பாதிப்பதற்காகச் சென்ற அவர், அதைச் சம்பாதிக்கும் வரை அங்கேயே இருந்தார். நினைத்த மாதிரி பணம் சம்பாதிக்க ஐம்பது வருடங்கள் ஆகும் என்று இருந்தால் அவர் ஐம்பது வருடங்கள் அங்கேயே தங்கியிருப்பார். தள்ளாத காலத்தில்தான் வீட்டிற்கு வந்திருப்பார், அல்லது வீடு திரும்ப வாய்ப்பில்லாமல்கூடப் போயிருக்கலாம்.
ஆனால் பதினான்கு வருடங்களில் அதிர்ஷ்டம் அடித்துவிட்டது. அதனால் அதுவரை பொறுமையாகவும், எவ்வித சந்தேகமும் கொள்ளாமல் தனக்காகக் காத்திருந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள இப்போது வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.
அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்த சில நாள்களிலேயே, அவர் லூயிசாவிடம் புதிய துறைகளில் ஈடுபடுவதில் தனக்கு இருக்கும் விருப்பத்தை அறிவித்தார், மேலும் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தனக்கென ஒரு தனித்திறமை இருக்க வேண்டும் என விரும்பினார். அதை கவனமாக செவிமடுத்த அவள் தனது வழமையான அமைதியுடன் அவளது காதலனின் லட்சிய பயணத்தை ஏற்றுக்கொண்டாள். ஜோ இதனால் உற்சாகமடைந்தார் என்றாலும், கடைசியில் பிரியாவிடையின் போது கொஞ்சம் உடைந்துதான் போனார். ஆனால் லூயிசா லேசான வெட்கத்துடன் அவரை முத்தமிட்டு விடை கொடுத்தாள்.
“இந்த பிரிவு நீண்ட காலத்திற்கு எல்லாம் இருக்காது,” என்று ஜோ மெல்லிய கிசுகிசுப்பான வருத்தம் தோய்ந்த குரலில் கூறினார். ஆனால் பதினான்கு ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய நடந்தது. லூயிசாவின் தாயும் சகோதரனும் இறந்தனர், அவள் உலகில் தனியாக இருந்தாள்.
ஆனால் அதன் பின் தான் ஒரு பெரிய விஷயம் நடந்தது — இருவரும் புரிந்து கொள்ள முடியாத ஒரு நுட்பமான நிகழ்வு – லூயிசா தனக்கென ஒரு பாதையைth தேர்ந்தெடுத்துக்கொண்டாள், அமைதியான வானத்தின் கீழ் எந்த குறைகளும் இல்லாமல் தனக்கான வாழ்க்கையுடன் தனியளாக நிம்மதியாக இருந்தாள். இருக்கலாம், அவளது பாதை அவளின் கல்லறை வரை மிகவும் நேராகவும், யாரும் அசைத்து பார்க்க முடியாததாகவும் அவள் பக்கத்தில் யாருக்கும் இடமில்லை என்று அளவில் மிகவும் குறுகியதாகச் சுருங்கியது.
பதினான்கு வருடங்களுக்குப் பிறகு ஜோ டாகெட் வீட்டிற்கு வந்தபோது லூயிசாவின் முதல் உணர்ச்சி (அவர் வருவதை அவர் அறியவில்லை) திகைப்பாக இருந்தது, இருப்பினும் அவள் அதை ஒப்புக்கொள்ளவில்லை; அவள் தான் அப்படி திகைத்து போவோம் என்பதை கனவிலும் நினைக்கவில்லை. பதினைந்து வருடங்களுக்கு முன்பு அவள் அவனைக் காதலித்திருந்தாள் — குறைந்த பட்சம் அவள் காதலித்திருப்பதாக எண்ணினாள். அந்த நேரத்தில், பெண்மையின் இயல்பான சறுக்கலை மெதுவாக ஏற்றுக்கொண்டு, அதில் விழுந்து, திருமணத்தை ஒரு நியாயமான அம்சமாகவும், வாழ்க்கையின் சாத்தியமான விருப்பமாகவும் அவள் பார்த்தாள். இந்த விஷயத்தில் அம்மாவின் கருத்துகளை அவள் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். அவளது தாயார் தனது மென்மையான குணத்திற்காகவும், எப்போதும் பழகும் இனிமையான சுபாவத்திற்காகவும் அறியப்படுபவர். ஜோ டாகெட் தனது ஆசையை முன்வைத்தபோது, அவள் தன் மகளிடம் புத்திசாலித்தனமாகப் பேசினாள், லூயிசா எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனை ஏற்றுக்கொண்டாள். அவளின் முதல் காதலன் அவன்தான்.
இத்தனை ஆண்டுகளாக அவள் அவனுக்கு விசுவாசமாக இருந்தாள். வேறு யாரையும் திருமணம் செய்து கொள்வதை அவள் கனவிலும் நினைக்கவில்லை. அவளுடைய வாழ்க்கை, குறிப்பாக கடந்த ஏழு ஆண்டுகளாக, இனிமையான அமைதி நிறைந்ததாக இருந்தது, காதலன் இல்லாததால், அவள் ஒருபோதும் அதிருப்தியோ பொறுமையிழந்தோ இருந்ததில்லை; இன்னும் சொல்லப்போனால் அவர் திரும்பி வருவதையும் அவர்களின் திருமணத்தை தவிர்க்க முடியாத முடிவாகவும் அவள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். இருப்பினும், எதிர்காலத்தில் அதை எந்த இடத்தில் வைக்கப்போகிறோம் என்ற வழியில் அவள் விழுந்துவிட்டாள். ஏனென்றால் அது அவள் நிர்மாணித்திருந்த மற்றொரு வாழ்க்கையின் எல்லைகளுக்கு மேல் வைப்பதற்கு சமமாக இருந்தது.
ஜோ வந்தபோது அவள் அவனை எதிர்பார்த்திருந்தாள். மேலும் திருமணமாகி இருந்தால் பதினான்கு ஆண்டுகள் ஆகியிருக்கும் என நினைத்தாள். ஆனால் அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள், அவள் அதைப் பற்றி நினைக்காதது போல் திகைத்தாள்.
ஜோவின் திகைப்பு பின்னர் வந்தது. அவர் தனது மாறாத காதலுடன் லூயிசாவைப் பார்த்தார். அவள் கொஞ்சம் மாறியிருந்தாள். ஆனாலும் அவள் இன்னும் தனது பழைய மென்மையான அமைதியான குணத்தைத் தக்க வைத்திருந்தாள், மேலும் எல்லாம் எப்போதும் போல் கவர்ச்சிகரமானதாக இருப்பதாகக் கருதினார்.
அவரைப் பொறுத்தவரை, அவரது எண்ணம் நிறைவேறிவிட்டது; அவர் பணத்தைத் தேடுவதிலிருந்து தனது கவனத்தைத் திருப்பிக் கொண்டார், பழைய காதல் காற்று அவரது காதுகளில் எப்போதும் போல சத்தமாகவும் இனிமையாகவும் சீட்டி அடித்தது. அவரை பொறுத்தவரை அவர் கேட்க விரும்பும் சங்கீதம் லூயிசாவாகத்தான் இருந்தது. இன்னுமும் அதை மட்டும் தான் கேட்பதாக நீண்ட காலமாக ஒரு விசுவாசமான நம்பிக்கை வைத்திருந்தார், ஆனால் இறுதியாகக் காற்று எப்போதும் அந்த ஒரு பாடலைப் பாடினாலும், அதற்கு மற்றொரு பெயர் இருப்பதாக அவருக்குத் தோன்றியது. ஆனால் லூயிசாவிற்கு ஒருபோதும் இப்படி காற்று முணுமுணுத்ததே இல்லை; இப்போது அது குறைந்துவிட்டது, எல்லாம் அமைதியாக இருந்தது. அவள் அரைகுறை கவனத்துடன் சிறிது நேரம் அந்த இசையை கேட்பாள்; பின்னர் அமைதியாக விலகி திருமண ஆடைகளை தைக்கும் வேலைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டாள்.
ஜோ தனது வீட்டில் சில விரிவான அற்புதமான மாற்றங்களைச் செய்திருந்தார். அது ஒரு பழைய தோட்ட வீடு; புதுமணத் தம்பதிகள் அங்கு வசிக்கலாம், ஏனென்றால் ஜோ தனது தாயை விட்டு விலகமுடியாது, அவள் தனது பழைய வீட்டை விட்டு வெளியேற மறுத்தாள். அதனால் லூயிசா அவளது வீட்டை விட்டு வெளியேறவேண்டும். தினமும் காலையில் எழுந்து, தான் நேர்த்தியாக பராமரித்தவற்றுக்கு மத்தியில் சுற்றித் திரியும்போது, அன்பான தோழிகளின் முகங்களைக் கடைசியாகப் பார்ப்பது போல் உணர்ந்தாள். ஒரு அளவிற்கு அவள் அவற்றை தன்னுடன் எடுத்து செல்ல முடியும் என்பது உண்மைதான், ஆனால், அவற்றின் பழைய சூழல்களை பறித்துக்கொண்டு, புதிய இடத்தில் வைத்து என்ன பராமரித்தாலும், அவை முன்பு போல காட்சியளிக்க முடியுமா என்பது சந்தேகம் தான். அவளுடைய மகிழ்ச்சியான தனிமை வாழ்க்கையில் சில விசித்திரமான பண்புகள் இருந்தன, அதை அவள் இனி முழுவதுமாக கைவிட வேண்டியிருக்கும். அவள் பார்த்து பார்த்து செய்த இந்த வேலைகள் எல்லாம் தேவையில்லாமல் போய், தேவையற்ற கடுமையான பணிகள் அவள் மீது சுமத்தப்படும்.
அவள் கவனிப்பதற்கும் அவளை கவனிப்பதற்கும் ஒரு பெரிய வீடு இருக்கும்; பொழுதுபோக்க நபர்கள் இருப்பார்கள்; ஜோவின் பலவீனமான வயதான தாய் அவளுக்காக காத்திருக்கலாம்; அவள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலையாட்களை வைத்திருப்பது அனைத்து சிக்கனமான கிராம மரபுகளுக்கும் முரணானது. லூயிசா கொஞ்சம் அமைதியாக இருந்தாள், கோடை காலமாதலால் ரோஜாக்கள், மிளகுக்கீரை மற்றும் புதினா ஆகியவற்றிலிருந்து இனிப்பு மற்றும் நறுமண எஸன்ஸ்களை வடிகட்டுவதன் மூலம் தன்னை மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டாள். அதை இன்னும் தள்ளி வைக்க வேண்டும். அவளது எஸன்ஸ்களின் சேமிப்பு ஏற்கனவே கணிசமானதாக இருந்தது, இனி மகிழ்ச்சிக்காக வடிகட்ட அவளுக்கு நேரம் இருக்காது. ஜோவின் அம்மா அதை முட்டாள்தனமாக நினைப்பார்; அவள் ஏற்கனவே இந்த விஷயத்தில் தனது கருத்தை சுட்டிக்காட்டியிருந்தாள்.
லூயிசா மென்மையான லினன் துணியில் தைப்பதற்கு மிகவும் விரும்பினாள், எப்போதும் பயன்படுத்துவதற்கு அல்ல, தைப்பதில் இருக்கும் லேசான மகிழ்ச்சிக்காக. தனக்குப் பிடித்தவாறு அமைவதற்காகக் கத்தரித்து துண்டுகளை ஒன்றாக தைத்து, பின்னர் பிரித்து, திரும்பத் தைத்து, திரும்ப பிரித்து, தான் விரும்பியவாறு பெறுவதற்காக, வெறுக்காமல் தொடர்ந்து செய்வாள். நீண்ட இனிய மதிய வேளைகளில் ஜன்னலில் அமர்ந்து, மெல்லிய துணியில் ஊசியால் மெதுவாகத் தைத்து, ஒரு தவம் போல அமைதியாக செய்வாள். ஆனால் எதிர்காலத்தில் இதுபோன்ற முட்டாள்தனமான செயலுக்கு மிகச் சிறிய வாய்ப்பே இருந்தது.
ஜோவின் தாயார், ஆதிக்கம் செலுத்தும், புத்திசாலித்தனமான வயதான மேட்ரனாக தனது முதுமையிலும் இருந்தார், மேலும் ஜோ கூட, அவரது நேர்மையான ஆணாதிக்க சிந்தனையால், இந்த அழகான ஆனால் புத்திசாலித்தனமற்ற பழைய வழிமுறைகளைப் பார்த்து, சிரித்து முகம் சுளிக்கக்கூடும்.
லூயிசா தனது தனிமையான வீட்டின் தூய்மை மற்றும் ஒழுங்கின் மீது கிட்டத்தட்ட ஒரு கலைஞரின் உற்சாகத்தைக் கொண்டிருந்தாள். அவளின் பளபளப்பான ஜன்னல் கண்ணாடிகள், நகைகள் போல பிரகாசிப்பதிலேயே அவளின் சுத்தம் தெரிந்தது. அவளின் பீரோ இழுப்பறைகளில் ஆடைகள் லாவெண்டர் மற்றும் ஸ்வீட் க்ளோவர் மணத்துடன் நேர்த்தியாக மடித்து அடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தாள். இதெல்லாம் இல்லாமல் போவதை தாங்கும் சக்தி உண்டு என்று உறுதியாக இருக்க முடியுமா? அவளுக்கு என சில பார்வைகள் இருந்தன. எனவே திடுக்கிட வைக்கும் வகையில், முடிவில்லாத குப்பைகளில் சிதறிக் கிடக்கும் கரடுமுரடான ஆணின் உடைமைகளை அவள் தனக்குள்ளாக நிராகரித்தாள்; இந்த நுட்பமான இணைவுக்கு மத்தியில் ஒரு கரடுமுரடான ஆணின் இருப்பிலிருந்து எழும் தூசி மற்றும் ஒழுங்கின்மையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
அவளது குழப்பங்களில் சீசரையும் தவிர்க்க முடியாது. சீசர் நாயில் ஒரு துறவி என்றே கூறலாம். அது தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அந்த சின்ன தனிமையான குடிலில்தான் கழித்தது. அவளுக்காக அப்பாவியான அது தனது சமூகத்திலிருந்தும், நாய்களுக்கே உரித்தான சின்ன சின்ன சந்தோசங்களில் இருந்தும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சீசர் தனது இளமை பருவத்தில் அதற்கு பிடித்த உணவை பார்த்த்தில்லை, பக்கத்து வீட்டுக்காரரின் சமையலறை வாசலில் எலும்புத் துண்டுகள் வாசம் தரும் மகிழ்ச்சி குறித்து அறிந்திருக்கவில்லை. ஏனென்றால் குட்டியாக இருந்தபோதே அவளிடம் வந்த சேர்ந்த பாவம்தான்.
இந்த மென்மையான முகம் கொண்ட, முற்றிலும் அப்பாவி தோற்றமுடைய வயதான நாயின் வருத்தத்தின் ஆழம் யாருக்கும் தெரியாது; ஆனால் அது வருந்தியிருந்தாலும் இல்லாவிட்டாலும், முழு அளவிலான பழிவாங்கலை எதிர்கொண்டது. பழைய சீசர் அரிதாகவே தனது உறுமலை அல்லது குரலை உயர்த்தும்; கொழுகொழு என இருக்கும் அது பெரும்பாலும் தூங்கி கொண்டு தான் இருக்கும்; மங்கலான பழைய கண்களைச் சுற்றி மஞ்சள் நிற வளையங்கள் கண்ணாடிகள் போல இருந்தன; ஆனால் ஒருமுறை பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் சீசரின் கூரிய வெள்ளை இளமைப் பற்களை தனது கைகளில் ஏந்த நேர்ந்தது.
அதன் காரணமாக ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்டு தனியாக அந்த சின்ன குடிலில் பதினான்கு ஆண்டுகள் சீசர் வாழ வேண்டி வந்தது.
சிடுசிடுப்பான பக்கத்து வீட்டுக்காரார், அவரது காயத்தின் வலியால் சீசரைக் கொல்ல வேண்டும் அல்லது முழுதுமாக அதனை கட்டியே வைக்க வேண்டும் என்றார். எனவே, நாய்க்கு சொந்தக்காரனான லூயிசாவின் சகோதரர், தனது சின்னக் குடிலில் சீசரை கட்டி வைத்தான். இப்போது பதினான்கு வருடங்கள் ஆகின்றன, இளமை வேகத்தில் பக்கத்து வீட்டுக்காரரைக் கடித்ததன் விளைவாக, அங்கேயே சுற்றி வரும் சின்ன சின்ன உலாவல் தவிர, எப்போதும் சங்கிலியால் கட்டப்பட்டு, தனது எஜமானர் அல்லது வயதான லூயிசாவின் கடுமையான பாதுகாப்பின்கீழ் கைதியாகவே இருந்தது.
வரையறுக்கப்பட்ட லட்சியத்துடன் உலா வரும் சீசர் உண்மையில் மிகவும் பெருமைப்படுகிறதா என்பது சந்தேகமே, ஆனால் சீசருக்கு என கணிசமான புகழ் இருந்தது என்பது மட்டும் உறுதி. அந்த கிராமத்தில் உள்ள அனைத்து குழந்தைகளாலும், பல பெரியவர்களாலும் மிகவும் கொடூரமான அரக்கனாகக் கருதப்பட்டது. செயின்ட் ஜார்ஜ் டிராகன்கூட கெடுபெயரால் லூயிசா எல்லிஸின் முதிய மஞ்சள் நாயை விஞ்சியிருக்க முடியாது.
அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை சீசரிடம் நெருங்கிச் செல்ல கூடாது என்று கடுமையாக வலியுறுத்தினார்கள், அதைக் கேட்டு அப்படியே நம்பிய குழந்தைகளும் லூயிசாவின் வீட்டை தாண்டும்போது பக்கவாட்டில் பார்த்தவாறும், திரும்பித் திரும்பிப் பார்த்தவாறும் திருட்டுத்தனமாக ஓடினர்,
ஒருவேளை சீசரின் கரகரப்பான சத்தம் கேட்டால், பீதி அடைந்தனர். வழிப்போக்கர்கள் லூயிசாவின் வாசலில் நின்று அவரை மரியாதையுடன் பார்த்து, ‘சங்கிலி தடிமனாக இருக்கிறதா’ என்று விசாரித்தனர். சீசர் மிகவும் சாதாரண நாயாக இருந்திருக்கலாம்; அதுவும் எதுவும் சொல்லவில்லை. ஆனால் சங்கிலியால் பிணைக்கப்பட்டதால், அதற்கு நல்ல பெயர் கிடைக்காமல் போனது. இதனால் சீசர் நாய்க்கே உரித்தான அத்தனை வெளிப்புற சந்தோசங்களையும் இழந்திருந்தது என்றபோதும் அது பார்ப்பதற்கு தனக்கே உரித்தான அழகுடன்தான் காட்சியளித்தது.
இருப்பினும், ஜோ டாகெட், தனது நகைச்சுவை உணர்வு மற்றும் புத்திசாலித்தனத்தால், தன் இயல்பிலேயே சீசரைப் பார்த்தார். லூயிசாவின் மென்மையான கூச்சலையும் மீறி, அவர் துணிச்சலுடன் அதனை நோக்கிச் சென்று தலையில் தட்டினார், மேலும் சங்கிலியில் இருந்து விடுவிக்கவும் முயன்றார். லூயிசா மிகவும் பதற்றமடைந்ததால், அவர் அதனிடம் இருந்து விலகினார், ஆனால் இந்த விஷயத்தில் “நகரத்தில் நல்ல குணமுள்ள நாய் ஒன்று கூட இல்லை,” “அதை கட்டி வைத்திருப்பது மிகவும் கொடூரமானது. ஒரு நாள் நான் அதை வெளியே அழைத்துச் செல்லப் போகிறேன்,” என்று வலுக்கட்டாயமாக தனது கருத்துகளை இடையிடையே கூறிக்கொண்டிருந்தார்.
லூயிசா தனக்கு தேவையான உடைமைகள் இன்னும் முழுமையாக ஒன்றிணைக்கப்பட வேண்டிய இந்த நாள்களில், அவர் ஒன்றும் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு மிகக் குறைவாகவே இருந்தது. அமைதியான, பாதுகாப்பற்ற கிராமத்தில் சீசரை விட்டால் என்ன ஆகும் என நினைத்து பார்ப்பாள். ரத்தம் கொட்டும் அப்பாவிக் குழந்தைகளைக் காட்சியாகக் கண்டாள். வயதான நாயை அவள் மிகவும் விரும்பினாள், ஏனென்றால் அது இறந்துபோன அவளது சகோதரனுக்கு சொந்தமானது, மேலும் அவன் அவளுடன் எப்போதும் மிகவும் மென்மையாக இருந்தான். இருந்தாலும் அவள் சீசரின் மூர்க்கத்தனத்தில் நம்பிக்கை கொண்டிருந்தாள்.
சீசர் அருகில் அதிகம் செல்ல வேண்டாம் என்று எப்போதும் மக்களை எச்சரித்தாள். சந்நியாசிக்கு கொடுப்பது போல சோளக் கஞ்சி மற்றும் கேக்குகளை மட்டுமே சீசருக்கு உணவாக அளித்தாள். மேலும், சதையோ, எலும்போ இரத்தம் தோய்ந்த உணவோ கொடுத்து, அவனது ஆபத்தான மனநிலையை அவள் வளரவிடவில்லை. தனது எளிய உணவுகளுக்குப் பழகிய வயதான நாயைப் பார்த்து லூயிசா முணுமுணுத்தாள். தனது திருமணம் நெருங்குவதை நினைத்து நடுங்கினாள். இனிமையான அமைதியான நல்ல உணர்வுகளுக்கு பதிலாக இத்தகைய குழப்பத்தை அவள் எதிர்பார்க்கவில்லை, சீசரிடம் வெறித்தனத்தின் முன்னறிவிப்புகள் இல்லை, அவளுடைய சின்ன மஞ்சள் கேனரி பறவையின் காட்டுத்தனமான படபடப்பு அவளை மாற்ற துளி அளவு கூட போதுமானதாக இல்லை.
ஜோ டாகெட் அவளை விரும்பி, இத்தனை வருடங்களாக அவளுக்காக வேலை செய்து வந்தார். எது நடந்தாலும் பொய்யை நிரூபித்து அவரது இதயத்தை உடைப்பது சரியானதாக இல்லை என லூயிசா நினைத்தாள். அவளுடைய திருமண ஆடைகளில் நேர்த்தியான சிறிய தையல்களை அவள் போட்டாள், நாள்கள் நகரந்தன; அவளுடைய திருமண நாளுக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்தது. அது ஒரு செவ்வாய் மாலை. திருமணம் ஆகப்போகும் புதன்கிழமைக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது.
அன்று இரவு முழு நிலவு இருந்தது. ஒன்பது மணியளவில் லூயிசா சாலையில் சிறிது தூரம் உலா வந்தாள். தாழ்வான கல் சுவர்களை எல்லையாக கொண்டு இருபுறமும் அறுவடை வயல்கள் இருந்தன. சுவர் அருகே புதர்கள் செழிப்பாக கொத்துக் கொத்தாக வளர்ந்து இருந்தன. இடைவெளியில் காட்டுச் செர்ரி மற்றும் பழைய ஆப்பிள் மரங்கள் வளர்ந்து நின்றன.
லூயிசா சுவரில் அமர்ந்து லேசான துக்கம் பிரதிபலிக்க தன்னைப் பார்த்துக்கொண்டாள். புளூபெர்ரி மற்றும் ரோஜாவின் உயரமான புதர்கள், அனைத்தும் ஒன்றாக நெய்யப்பட்டு, அங்கிருக்கும் காட்டுச்செடிகளால் பிணைக்கப்பட்டு அவளது பார்வையை இருபுறமும் அடைத்தன. அதனிடையே கொஞ்சம் தெளிவான இடைவெளி இருந்தது. அவளுக்கு எதிரே, சாலையின் மறுபுறம், ஒரு மரம் பரவி இருந்தது; நிலா அதன் கிளைகளுக்கு இடையில் பிரகாசித்தது, இலைகள் வெள்ளியைப் போல மின்னியது.
சாலையில் மரத்தின் நிழல் வெள்ளியின் மினுமினுப்புடன் அழகாகப் பரவியிருந்தது; காற்றில் ஒரு மர்மமான இனிப்பின் வாசம் நிறைந்திருந்தது. “இது காட்டு திராட்சையாக இருக்குமோ என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது?” லூயிசா தனக்குள்ளாக முணுமுணுத்தாள். சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தாள். அவள் எழுந்திருக்க நினைத்தாள், ஆனால் அருகில் காலடி சத்தத்தையும், கிசுகிசுப்பான குரல்களையும் கேட்டு அமைதியாக இருந்தாள்.
அது ஒரு தனிமையான இடம், அவளுக்கு சற்றே வெட்கம் வந்தது. அவள் இன்னும் இருளில் இருக்க வேண்டும் என்று நினைத்தாள், அவர்கள் யாராக இருந்தாலும், தன்னைக் கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவளை அடைவதற்கு சற்று முன்பு காலடியோசையும் குரல்களும் நின்றுவிட்டன, அதற்கு சொந்தக்காரர்கள் கல் சுவரில் இருக்கைகளைக் கண்டுபிடித்துள்ளனர் என்பதை அவள் புரிந்துகொண்டாள். அவர்கள் பேசுவதை கவனிக்காமல் இருக்க முடியாதா என்று அவள் யோசித்தாள். ஆனால் அமைதியை உடைத்த அந்தக் குரல், அது ஜோ டாகெட்டுடையது. அமைதியாக அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தாள். குரல் தன்னைப் போலவே பரிச்சயமான ஒரு பெருமூச்சு மூலம் வெளிப்பட்டது. “சரி,” என்று டாகெட் கூறினார், “நீ முடிவு செய்துவிட்டாய் என நான் நினைக்கிறேன்?”
“ஆம்,” என்றது மற்றொரு குரல்; “நான் நாளை மறுநாள் செல்கிறேன்.”
‘அது லில்லி டயர்,’ லூயிசா தனக்குள் நினைத்துக்கொண்டாள். அந்தக் குரல் அவள் மனதில் பதிந்தது. அந்த பெண்ணின் உயரம், முழு உருவம், அழகான முகம், நிலவொளியில் மேலும் அழகாக இருப்பதைக் கண்டாள், அவளுடைய வலுவான மஞ்சள் கூந்தல் நெருக்க பின்னப்பட்டு முடிச்சிடப்பட்டு இருந்தது. அமைதியான கிராமிய வலிமையும் மலர்ச்சியும் நிறைந்த பெண், ஒரு இளவரசிபோல தோற்றமளிக்க கூடிய வகையில் இருந்தாள். லில்லி டயர் கிராம மக்களுக்கு மிகவும் பிடித்தமானவள்; பலர் போற்றத் தோன்றும் குணங்கள் அவளிடம் இருந்தன. அவள் அழகாகவும் புத்திசாலியாகவும் இருந்தாள். லூயிசா அடிக்கடி தன் பெயர் ஒலிப்பதைக் கேட்டாள்.
ஜோ டாகெட், “சரி, என்னிடம் சொல்ல வார்த்தை இல்லை,” என்றார்.
“நீங்கள் என்ன சொல்ல முடியும் என்று எனக்குத் தெரியவில்லை,” என்று லில்லி டயர் திரும்பினாள்.
“சொல்ல ஒரு வார்த்தை இல்லை,” ஜோ மீண்டும், வார்த்தைகளை பெருமூச்சுடன் கூறினார். பிறகு மௌனம் நிலவியது. “மன்னிக்கவும் வேண்டாம்,” என்று அவர் இறுதியாக ஆரம்பித்தார், “நேற்று அப்படி நடந்தது வருத்தம் தான். நாம் ஒருவருக்கொருவர் எப்படி உணர்ந்தோம் என்பதை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். அது நமக்கு நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் அடுத்த வாரம் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். பதினான்கு வருடங்கள் எனக்காகக் காத்திருந்த ஒரு பெண்ணை நான் திரும்பிப் பார்க்கப் போவதில்லை, அவளுடைய இதயத்தை உடைக்கப்போகிறேன்.”
“நாளைக்கு அவள் உறவை முறித்தால், நீ என்னுடன் இருக்க முடியாது,” என்று பெண் திடீரென்று ஆவேசத்துடன் பேசினாள்.
“சரி, நான் உனக்கு வாய்ப்பளிக்கப் போவதில்லை,” என்று அவர் கூறினார்; “ஆனால் நீயே இப்படி செய்வாய் என்று நான் நம்பவில்லை.”
“நான் செய்யமாட்டேன் அதை நீங்கள் பார்ப்பீர்கள். அது மரியாதைக்கு மரியாதை, உரிமைக்கு உரிமை. மேலும் எனக்காகவோ அல்லது வேறு எந்தப் பெண்ணுக்காகவோ அவர்களுக்கு எதிராகச் சென்ற எந்த ஆணையும் நான் ஒருபோதும் நினைக்க மாட்டேன்; நீங்கள் அதைக் தெரிந்துகொள்வீர்கள், ஜோ டாகெட்.”
“சரி, உனக்காகவோ அல்லது வேறு எந்த பெண்ணுக்காகவோ நான் அவர்களுக்கு எதிராக செல்லமாட்டேன் என்பதை நீயும் விரைவாகக் தெரிந்துகொள்வாய்,” என்று அவர் திரும்பினார். ஏறக்குறைய அவர்கள் ஒருவரையொருவர் கோபித்துக் கொண்டது போல் அவர்களின் குரல் ஒலித்தது. லூயிசா ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நீ விலகிச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் அளவுக்கு நான் நடந்து கொண்டதற்கு மன்னிக்கவும்,” என்று ஜோ கூறினார், பின் “எனக்குத் தெரியாது, ஆனால் அது தான் சிறந்தது.”
“நிச்சயமாக இது சிறந்தது தான். உங்களுக்கும் எனக்கும் நியாயமான நடைமுறை அறிவு இருக்கும் என்று நம்புகிறேன்.”
“ஆம், நீ சொல்வது சரி என்று நினைக்கிறேன்.” திடீரென்று ஜோவின் குரலில் மென்மை தெரிந்தது.
“சொல்லு, லில்லி, நான் நன்றாகத்தான் பழகுவேன், ஆனால் நீ பிரிந்து செல்வதை என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. இப்படி நடந்தால் நீ இதைப் பற்றி அதிகம் கவலைப்படுவாய் என்று நினைக்கவில்லையா?”
“திருமணமான ஒருவரைப் பற்றி நான் அதிகம் கவலைப்படமாட்டேன் என்பதை நீங்களும் தெரிந்துகொள்வீர்கள்.”
“சரி, நீ கவலைப்பட மாட்டாய் என்று நம்புகிறேன் . லில்லி, கடவுளுக்கு தெரியும். மேலும் இனி வரும் நாட்களில் நீ வேறு யாரையாவது நிச்சயமாக சந்திப்பாய் என நம்புகிறேன்.”
“நான் ஏன் சந்திக்க மாட்டேன் என்பதற்கு எந்த காரணமும் கூறமுடியவில்லை.” சட்டென்று அவள் குரலின் தொனி மாறியது. அவள் இனிமையான, தெளிவான குரலில், அதே சமயம் தெரு முழுவதும் கேட்கும் அளவுக்கு சத்தமாக கூறினாள்.
“இல்லை, ஜோ டாகெட்,” அவள் தொடர்ந்தாள், “நான் வாழும் வரை நான் வேறு எந்த ஆணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், நான் என் இதயத்தை உடைக்கவோ அல்லது என்னை முட்டாளாகவோ போவதில்லை. ஆனால் நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை, இரண்டு முறை காதலில் விழும் பெண் நான் இல்லை என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.”
லூயிசா புதர்களுக்குப் பின்னால் ஆரவாரத்தையும் மென்மையான சலசலப்பையும் கேட்டாள்; பின்னர் லில்லி மீண்டும் பேசினாள் — அவள் எழுந்தது போல் சத்தம் கேட்டது. “இது இத்துடன் நிறுத்தப்பட வேண்டும்,” என்று கூறினாள். “நாம் இங்கு நீண்ட நேரம் இருந்துவிட்டோம், நான் வீட்டிற்குச் செல்கிறேன்.”
லூயிசா அவர்கள் காலடியோசை தேயும் வரை கேட்டுக் கொண்டு திகைப்புடன் அமர்ந்திருந்தாள். சிறிது நேரம் கழித்து அவள் எழுந்து மெதுவாக வீட்டிற்குள் வந்து சாய்ந்தாள். மறுநாள் அவள் வீட்டு வேலைகளை முறையாகச் செய்தாள்; அது மூச்சு விடுவதைப் போன்ற ஒரு விஷயமாக இருந்தது; ஆனால் அவள் திருமண ஆடைகளைத் தைக்கவில்லை. அவள் ஜன்னலில் அமர்ந்து தியானம் செய்தாள். மாலை ஜோ வந்தார். லூயிசா எல்லிஸ் பிறரைப் புண்படுத்தாது அல்லது வருந்தச் செய்யாது அவர்களோடு பழகும் சாதுரியம் தனக்கு இருப்பதாக ஒருபோதும் நினைத்ததில்லை, ஆனால் அன்று இரவு அவள் வீட்டிற்குத் தேடி வந்தபோது, அவள் சாந்தமான குணமுடையவள்தான் என்றபோதிலும், அவளுக்குள் பெண்மையின் சின்னச் சின்ன ஆயுதங்கள் இருந்ததை அறிந்தாள். இப்போதும்கூட, தான் கேட்டது சரியென்றும், ஜோவுக்கு பயங்கரமான காயத்தை ஏற்படுத்த முடியும் என்றும் அவளால் நம்ப முடியவில்லை. இந்த விஷயத்தில் தனது சொந்த விருப்புகளை காட்டிக் கொள்ளாமல் அவரே பேசட்டும் என்று காத்திருந்தாள். அவள் அதை வெற்றிகரமாகச் செய்தாள். அவர்கள் இறுதியாக ஒரு புரிதலுக்கு வந்தனர்; ஆனால் அது மிக கடினமான விஷயம், ஏனென்றால் அவளைப் போலவே அவரும் தன்னைக் காட்டிக்கொடுக்க பயந்தார்.
லில்லி டயர் பெயரை அவள் குறிப்பிடவே இல்லை. அவர் மீது புகார் எதுவும் இல்லை என்றாலும், தான் ஒரு வழியில் இவ்வளவு காலம் வாழ்ந்ததால், அதில் மாற்றத்தை ஏற்படுத்துவது உவப்பானதாக இல்லை, தான் மிகவும் சுருங்கிவிட்டதாக வெறுமனே கூறினாள்.
“ஆனால், நான் ஒருபோதும் சுருங்கவில்லை, லூயிசா,” டாகெட் கூறினார்.
“நான் நேர்மையாகச் சொல்கிறேன், ஒருவேளை இந்த வழிதான் சிறந்தது என்று நினைக்கிறேன்; ஆனால் நீங்கள் தொடர விரும்பினால், இறக்கும் நாள்வரை நான் உங்களிடம் ஒட்டிக்கொண்டிருப்பேன். அது உங்களுக்குத் தெரியும் என்று நம்புகிறேன்.”
“ஆம், எனக்கு தெரியும்,” என்று அவள் கூறினாள்.
அன்று இரவு முன்பெப்போதையும் விட அவளும் ஜோவும் நீண்ட நேரம் பேசிவிட்டு, வாசலில் நின்று, ஒருவரையொருவர் கைகளைப் பிடித்துக் கொண்டு, சின்ன வருத்தத்துடன் கூடிய நினைவின் கடைசி அலை அவர்கள் மீது வீச, மிகவும் மென்மையாக பிரிந்தனர்.
“இது நாம் நினைத்த மாதிரி இல்லை இல்லையா? எல்லாம் முடியப்போகிறது தானே லூயிசா?” ஜோ கூறினார்.
தலையை ஆட்டினாள். அவள் அமைதியான முகத்தில் கொஞ்சம் நடுக்கம் தெரிந்தது.
“நான் உனக்காக எப்போதாவது ஏதாவது செய்ய முடியும் என்றால் எனக்கு தெரியப்படுத்து. நான் உன்னை மறக்க மாட்டேன், லூயிசா” என கூறிவிட்டு, பின்னர் அவளை முத்தமிட்டு, தன் பாதையில் சென்றார்.
இப்போது உயரமான களைகளும் புற்களும் சீசரின் சின்ன குடிலைச் சுற்றிக் குவியும், பனி அதன் கூரையின் மீது ஆண்டுதோறும் விழும், ஆனால் சீசர் ஒருபோதும் பாதுகாப்பற்ற கிராமத்தின் வழியாகச் செல்லவேண்டிய அவசியம் இருக்காது. இப்போது அவளின் சின்ன பறவைகள் இரவோடு இரவாக அமைதியான மஞ்சள் பந்தாக மாறக்கூடும், ஆனாலும் விழித்துக்கொண்டு பயத்துடன் எழுந்து படபடக்க வேண்டிய அவசியமில்லை. லூயிசா லினன் தையல் செய்யவும், ரோஜாக்களில் இருந்து எஸன்ஸ் வடிக்கவும், தூசி இல்லாமல் நேர்த்தியாக லாவெண்டர் மணத்துடன் துணிகளை அழகாக மடித்து வைக்க முடியும். அன்று மதியம் அவள் ஜன்னலில் ஊசி வேலையுடன் உட்கார்ந்தபோது, மிகவும் நிம்மதியாக உணர்ந்தாள்.
லில்லி டயர், நிமிர்ந்த நடையுடன் மலர்ச்சியாகக் கடந்து சென்றாள்; ஆனால் அவளைப் பார்த்து எந்த கவலையும் உணரவில்லை. லூயிசா எல்லிஸ் தனது பிறப்புரிமையை ஆரம்பத்திலேயே விற்றிருந்தால், அது அவளுக்குத் தெரிந்திருக்காது, ஆனால் அவள் ருசித்திருந்த சுதந்திரத்தின் வாசம் சமூகத்தில் அதிக மதிப்பில்லாதபோதும் மிகவும் சுவையாக இருந்தது, இவ்வளவு காலமாக அவளது ஆன்மாவுக்கு திருப்தியாக இருந்தது. அமைதியும், அதனுள் யாரையும் அனுமதிக்காத சுதந்திரமும் அவளது பிறப்புரிமையாக மாறியது. ஜெபமாலையில் முத்துக்கள் போல ஒன்றாக இணைக்கப்பட்ட சீரான நீண்ட எதிர்காலத்தை நினைத்துப் பார்த்தாள், எல்லோரும் மற்றவர்களை விரும்புகிறார்கள். அனைத்தும் மென்மையாகவும், குறைபாடற்றதாகவும், குற்றமின்றியும் இருந்தது, அவளுடைய இதயம் நன்றியுணர்வில் நெகிழ்ந்தது.
வெளியே உக்கிரமான கோடை மதியம் தகித்து கொண்டு இருந்தது; மனிதர்கள் பறவைகள் மற்றும் தேனீக்களின் பரபரப்பான ஒலிகளால் காற்று நிரம்பியது; ஆர்ப்பட்டமான குரல்கள், உலோகங்கள் மோதும் ஆரவார சத்தங்கள், இனிமையான அழைப்புகள், நீண்ட ரீங்காரங்கள் ஒலித்தன..
தன் வாழ்வை கடவுளுக்கு அர்பணித்த கன்னியாஸ்திரியைப் போல, தனக்காக தன்னை அர்பணித்து கொண்ட லூயிசா தனியாக அமர்ந்து, பிரார்த்தனையுடன் வரப்போகும் நாள்களை சந்தோசமாக எண்ணிக் கொண்டிருந்தாள்.
ஆசிரியர் : Mary Eleanor Wilkins Freeman
படைப்பாளர்
கமலி பன்னீர்செல்வம்
கமலி பன்னீர்செல்வம். எழுத்தாளர். ‘கேட் சோபின் சிறுகதைகள்’ என்ற நூல் இவர் மொழிபெயர்ப்பில் வெளிவந்து, பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இவரது ‘ஹார்மோன் விளையாட்டு’ என்ற நூலை ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
அமைதியான வானத்தின் கீழ் எந்த குறைகளும் இல்லாமல் தனக்கான வாழ்க்கையுடன் தனியாளாக நிம்மதியாக இருந்தாள்.
இருக்கலாம் அவளின் பாதை அவளின் கல்லறைவரை மிகவும்நேராகவும் யாரும் அசைத்துபார்க்க முடியாததாகவும் அவள் பக்கத்தில் யாருக்கும் இடமில்லை என்ற அளவில் மிகவும் குறுகியதாக சுருங்கியது💚💚💚💚