வரலாறு இதுவரை யாரைப்பற்றி பேசி இருக்கிறது?

அரசர்கள், பிரபுக்கள், இளவரசிகள், கற்புக்கரசிகள், மதகுருமார்கள் இவர்களைப்பற்றித்தான்.

இப்போது வரலாற்றை எழுதும் சுயாதீனமான வரலாற்றாசிரியர்கள் சிலர் போல இல்லாமல், முந்தைய காலத்திலிருந்து வரலாற்றில் நமக்கு கிடைத்த எழுத்துக்கள் எல்லாம் அரசராலோ, மதத்தினாலோ, பிரபுக்களினாலோ புரவலம் (ஸ்பான்ஸர்) செய்யப்பட்டவை. எனவே, எழுதுபவர்கள் இவர்களைப்பற்றித்தான் எழுதி இருக்க முடியும், இவர்களின் பரிசும் அன்பும்தான் நோக்கமாக இருந்திருக்க முடியும்.

இவர்களால் சாதாரண குடியானவனைப்பற்றியே எழுதியிருக்க முடியாது. அந்த சாதாரண ஏழையும் மறைக்க விரும்பும் ஒரு சாராரைப்பற்றி யார் கவலைகொண்டிருக்கக்கூடும்? அவர்கள்தான் வரலாற்றில் இருந்திராதவர்கள்.

இதுவரை வரலாற்றில் இருந்திராதவர்கள் பற்றி, இருந்ததாக எந்த அரசும் ஒத்துக்கொள்ளாதவர்கள் பற்றி நாமெல்லாம் எப்படி அழைக்கவேண்டும் என்று பெயர் கொடுத்து, சொல்லகராதி கொடுத்திருக்கிறது தமிழக அரசு. நீதிமன்றம் சொல்லித்தான் இது நடந்தது என்றாலும், இதுவரை இந்தியாவின் எந்த மாநிலத்திலும், ஏன் மத்திய அரசே செய்திராத ஒரு முன்னெடுப்பு. வாழ்த்துக்கள். பால்சார், பாலினம்சார், பாலியல்புசார் இவற்றையொட்டிய சமூகசார் சொற்களுக்கான சொல்லகராதி இது.

அரசாணை எண் 52, சமூகநலன் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத் துறை, நாள் 20.08.2022.

காலங்காலமாக கண்ணாலம் காட்சி செய்துகொண்டு இருந்த பெரும்பான்மையினர் தங்களைத்தாங்களே அழைத்துக்கொண்டு இருந்த நேரானவர்கள் (Straight) என்ற பதத்தை நியாயமாக எதிர்பாலின ஈர்ப்பாளர்கள் என்றும், இதே போல இதர பாலின ஈர்ப்பாளர்களையும் உரிய கண்ணிய சொற்களாலும் வகைப்படுத்தி உள்ளது.

சொல்லகராதி மட்டுமல்ல, பிறப்புவழி வழங்கப்பட்ட பெயர்  (Deadname), அதை கேட்பதுகூட அவர்களின் மனதை நோகடிக்கும் என்பன போன்ற புரிதல்களையும் அளிக்க முயன்றிருக்கிறது.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் (Homosexuals), அல்பாலீர்ப்பாளர்கள் (Asexuals), அனைத்து பாலின ஈர்ப்பாளர்கள் (Pan Sexuals), பால்புதுமையினர் (Queers) இவர்கள் எல்லாம் சமூகத்தில் எங்கு இருந்தார்கள்? எவ்வளவு பேர் இருப்பார்கள்? நம் நாட்டின் வரலாற்றில் அப்படி யாருமே இல்லை என்றால் அது உண்மையான கருத்தாக இருக்குமா? இன்று எத்தனை பேர் இருக்கலாம் என்று பார்ப்போம்.

நமது நாட்டில் தேவையான புள்ளிவிவரங்கள் கிடைக்காததால், பாலீர்ப்பு குறித்த வெளிப்பாட்டில் அதிக சுதந்திரம் கொண்ட நாடுகளில் முன்னிற்கும் நாடுகளில் ஸ்வீடன், ஃப்ரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா என்று எடுத்துக்கொண்டோமானால் கிட்டத்தட்ட10 சதவீதத்தினர் பெரும்பான்மையினரல்லாத தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள், மற்றும் அல்பாலீர்ப்பாளர்கள் என்று  தெரிகிறது. இதில் டிரான்ஸ் என்னும் திருநர்கள் சேர்க்கப்படவில்லை.

ஏனெனில், பாலினத்தை வெளிப்படையாக மாற்றிக்கொள்ளாத அதே பாலினத்தில் இருந்து பாலின ஈர்ப்பில் மட்டும் பெரும்பான்மையை விட்டு விலகி நின்று வெளிப்படுத்திக்கொள்ளும் (coming out) தன்பாலின ஈர்ப்பாளர்கள், இருபாலின ஈர்ப்பாளர்கள் (LGB) மற்றும் அல்பாலீர்ப்பாளர்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இது 9 சதவீதம் முதல் 11 சதவீதம் வரை ஒவ்வொரு நாட்டிற்கும்  வெளிப்படுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கையாக உள்ளது. இந்த எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தை விட அதிகமாகிக்கொண்டும் வருகிறது.

Photo by 42 North: https://www.pexels.com/photo/white-and-multicolored-love-is-love-banner-1280638/

16 வயது முதல் 24 வயது வரை வெளிப்படுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என்றால், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளிப்படுத்திக்கொள்வதும் இருக்கத்தான் செய்கிறது. ஆக அங்கேயே வெளிப்படுத்திக்கொள்வதில் சிரமங்கள் இருப்பதாக தெரிகிறது அல்லவா?

இந்த அளவு சுதந்திரமும் ஏற்றுக்கொள்ளுதலும் தோழமையும் சட்ட பாதுகாப்பும் இருப்பின், இந்தியாவிலும் குறைந்த பட்சம் 10-15 சதவீதமாவது தன்பாலின மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்கள் இருப்பார்கள் என்றுதான் நாம் கொள்ள வேண்டியுள்ளது.

இவர்கள் எல்லாம் வரலாற்றிலும் இருந்திருப்பார்கள் இல்லையா? எங்கே இருந்திருப்பார்கள்? எப்படி வாழ்ந்திருப்பார்கள்? இன்று பெரும்பான்மை பாலீர்ப்பு ஏற்பாடான திருமணத்திலிருந்து தப்பிக்க என்ன செய்கிறார்கள்? அவர்களுக்கு பொருளாதார சுதந்திரம், பாரம்பரிய குடும்ப பொருளாதாரத்தை சார்ந்திருக்காத நிலை இருந்தாலுமே தன் பாலீர்ப்பு நிலையை வெளிப்படுத்திக்கொள்ள இவ்வளவு தயக்கம் என்றால், மதமும், அதன் அடிப்படையிலான உறுதியான கட்டமைப்பும் அதீதமாக இருந்து, பொருளாதாரத்திற்கும் பாரம்பரிய கட்டமைப்பை சார வேண்டி இருந்த காலத்தில் எப்படியாக இருந்திருக்கும்?

புராணங்கள் என்னவோ, பெண்ணாக மாறி பிள்ளை பெற்ற நாரதர், கிருஷ்ணனின் கோபிகையாக வந்த சிவன், சிவனுக்காக மோகினியாக போன விஷ்ணு, இரண்டு பெண்களால் கலவி செய்து பிள்ளையாக பெறப்பட்ட எலும்பில்லாத பாகீரதன் என்று விவரணைகள் கொண்டதாகவே இருக்கிறது. வழக்கம்போல சிவனை ஏற்றுக்கொண்டதில் ஆணாகவும், அரவானை திருமணம் செய்து கூடியதில் பெண்ணாகவும் கலந்து கட்டி அடித்தவரும் சாட்சாத் கிருஷ்ணரே தான்.

அரசியலமைப்புச்சட்டத்தின் கூறு 377 ஐ இந்திய உச்ச நீதிமன்றம் நீக்கியபோது வழக்கம்போல, ‘நாங்கள்லாம் அப்பவே’ என்று இந்த கதையெல்லாம் சொன்னாலும் பாபர், அலாவுதீன் கில்ஜி என்று இருபாலினஈர்ப்பு உடையவர்களாக இருந்தாலும் சாதாரணமாக மக்கள் அன்றும் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்றும் இவர்களை ஏற்றுக்கொள்வதில் பெரும் எதிர்ப்பு நிலவுகிறது என்பது தான் உண்மை. 

வரலாற்றில் நாம் இவர்களில் சிலர் பெயரை வேறு காரணங்களுக்காக தெரிந்து வைத்திருந்தாலும், இவர்களின் பாலின ஈர்ப்பு சார்ந்த விவரம் மட்டும் நமக்கு தெரியாமலேயே மறைக்கப்பட்டுவிட்டது. கௌரவத்திற்காக என்ற போர்வையில் கொலைகள் சாதாரணம் என்பதால்,  அச்சுறுத்தப்பட்ட சிறுபான்மையினராக சாதாரண வாழ்க்கையில் வேறு போர்வைகளில் ஒளிந்துகொள்ள வேண்டியிருந்தது. எப்படி?

பெயர்கள் சொன்னால் சட்டென புரியும் என்றாலும், அவர்கள் வாழ்ந்திருந்த சூழலை மட்டும் சொல்கிறேன். காரணமும் பின்னாலேயே வருகிறது.

i)  திருமணத்திலிருந்து தப்பித்தவர்கள்/திருமணம் செய்து இல்லறத்திலிருந்து     தப்பித்தவர்கள்,

ii) மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் மொழியின் பெயராலும் அரசியலின் பெயராலும் குடும்ப சூழலின் பெயராலும் பிரம்மச்சரியம் பூண்டவர்கள், 

iii) மேற்கண்ட காரணங்களால், ஒரே பாலினத்தவருடனே வசிப்பிடங்களில் வாழ்ந்தவர்கள்,

iv) வேறு பாலினத்தவரின் உடை பூண்டு அது கடவுளுக்கான தாசானுபவம் என்றவர்கள்,

v) பிச்சை, பைத்தியக்காரர்களாக சித்தரிக்கப்பட்டவர்கள், 

vi) அதீத தீவிரமான விலகத்தக்க உடை அல்லது பழக்க வழக்கங்கள் கொண்டு சமூகத்திடமிருந்து விலகியவர்கள் (பேயர்கள், பேய்மகளிர்),

vii) திருமணம் செய்து பாதியில் மதம் அல்லது அரசியல் என்ற எதோ காரணத்திற்காக திருமண வாழ்க்கையில் இருந்து ஓடிப்போனவர்கள்,

அல்லது 

viii) திருமணம் செய்து, இணையரின் பாலினத்தேவைகளை கண்டு கொள்ளாதவர்களாகவோ, அல்லது எதேனும் காரணம் வீசி இணையரின் பாலியல் தேவையை அடக்கியவர்களாகவோ இருந்தவர்கள்.

இன்று வரை இதில் ஒவ்வொரு வரிக்கும் உங்களுக்கு வரலாற்றிலோ, மதத்திலோ, இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர்களிலோ யாரேனும் நினைவுக்கு வரலாம். ஆனால் மேற்கண்ட சூழல் மட்டும் ஒருவரை இன்னார் என்று வரையறுக்க போதுமா என்றால் போதாது. உறுதியாக வேண்டும். நாம் அனுமானிப்பதற்கு அப்பாற்பட்டது இது. 

Photo by Alexander Grey: https://www.pexels.com/photo/close-up-photo-of-lgbtq-letters-on-a-person-s-hands-1566842/

இந்தியாவே அறிந்த ஒரு நபர், அவரது அரசியல் குருவான இன்னொரு அரசியல் தலைவருடன் ஒருபாலின உறவு முறையில் இருந்தார் என்று புகழ்பெற்ற புத்தகத்தில் வெளிவந்த போதிலும், இதை எதிர்கட்சிகள் நையாண்டி செய்ய பயன்படுத்தியபோதும், நமக்கு அவர்கள் சார்ந்த கொள்கைகளில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்த போதிலும், ஆழ்ந்த அக்கறையுடன் சொல்ல விழைவது என்னவென்றால் அவர்களே சொல்லாமல் இவர் இன்ன பாலின ஈர்ப்பு உடையவரா என்று அனுமானித்துக்கொள்வதுதான் நாம் அவர் மீது நிகழ்த்த முடிகிற உச்சபட்ச வன்முறை. அதை ஒரு நாளும் யார் மீதும் நாம் நிகழ்த்திவிடக்கூடாது.

எளிமையாக சொல்லவேண்டும் எனில், பெண் ஒருவர் தனது வசதி, வேலை, பாதுகாப்பு கருதி பேண்ட் சட்டை அணிவதோ, முடி வெட்டி இருப்பதோ அல்லது இரண்டுமோ செய்திருக்கலாம். அதற்காக அவர் திருநம்பி ஆகிவிட மாட்டார் இல்லையா? 

ஆக, தனது பாலின அடையாளம் என்பதை சம்பந்தப்பட்டவர்களே முடிவு செய்ய வேண்டும். பாலின ஈர்ப்பையும் அவர்களே சொன்னால் ஒழிய, நமது சொந்த பாலின ஈர்ப்பு அவர் மேல் இல்லாத நிலையில், நாமே அனுமானித்துக்கொள்வது தவறானது.

அப்படியானால் எப்படிக் கேட்பது? 

 தொடர்ந்து பேசுவோம்.

படைப்பாளர்:

காளி

காளி. இதே பெயரில் Twitter-ல்  @The_69_Percent  என்று இயங்கி வருகிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தப் புனைபெயரில் அழைக்கப்படுவதையே விரும்புகிறார். ஆணாதிக்கத்திடம் அதிகாரம் இழந்த பெண்மையைக் குறிக்கவே இந்தப் பெயர். முச்சந்துமன்றம் என்ற பெயரில் உள்ள புத்தக வாசிப்பு குழுவின் உறுப்பினர்களில் ஒருவர்.