பக்தி என்பது ஒரு நம்பிக்கையின் மீதான வெளிப்பாடாகக் கருதப்படுவது. மனதை ஒரு விஷயத்தில் ஒன்றிக் குவிய வைப்பது பக்தி. அது ஒரு நபரின்‌ மேலாக இருக்கலாம், அல்லது ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தியின் மேலாக இருக்கலாம்.

 அலைபாயும் மனதை அடக்கி வைக்க மனிதன் கண்டறிந்ததே இந்தப் பக்தி. ஆதிமனிதர்கள் இயற்கையையே வணங்கினர். அதன்பின் வந்தவர்கள் தங்கள் மனமே இறைசக்தி என்று உணர்ந்தனர். தனது உள்ளத்தைக் கட என்று ‘கடவுள்’ என்ற ஒன்றை உருவாக்கினர். மனதை வென்றவருக்கு இறைவன் என்பது அவரவர் மனமேதான்.

மனதுக்குள் நேர்மறை எண்ணங்கள் வரவேண்டும் என்றுதான் வழிபாடு உருவானது. நாளடைவில் அது பலவிதமான மனிதர்களால் பலவிதமான நிலைகளை அடைந்துவிட்டது. இன்று நிறைய வழிபாட்டு முறைகள் மூடநம்பிக்கைகளின் கூடாரமாக இருக்கின்றன. பக்தி என்பது என்ன? கோயில்களுக்கு  நாள் தவறாமல், விசேஷ நாள்கள் தவறாமல் விளக்குப் போடுதல், அங்கப்பிரதட்சணம், மண்சோறு, அலகு குத்துதல், காவடி, பால்குடம், கண்ணீர் பெருக்கெடுக்க கோயிலில் முறையிட்டு அழுதுபுரளுதல், வாரந்தோறும் மாதா ஆலயம் சென்று மெழுகுவர்த்தி ஏற்றுதல், நாள் தவறாமல் ஐந்து வேளை தொழுதல்… இப்படி இருப்பதுதான் உண்மையான பக்தியா? அல்ல, தனக்கு அருகில் உள்ளவர்களை, தன்னிடம் உதவி கோருபவர்களை அரவணைத்துச் செல்தல், இயன்ற உதவிகளை மறுக்காமல் செய்தல், தான் செய்யும் தொழிலை மதித்தல், மிக முக்கியமாகத் தன்னை முதலில் நேசித்தல் என்று இருப்பது தான் உண்மையான பக்தி.

இன்றைய காலகட்டத்தில் பக்தியும் கோயில்களும் ஏராளமாகப் பெருகியிருக்கின்றன. இந்த டிஜிட்டல் யுகத்திலும் இறைவழிபாடு பல்கிப் பெருகிவருகிறது. அதன் காரணமாக ஏராளமான சாமியார்களும் சாமியார் மடங்களும் தோன்றியிருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும் என்று பார்த்தோமானால், மக்கள் ஆறுதலான வார்த்தைகளுக்கு அலைகிறார்கள். அது எங்கே கிடைக்கிறதோ அங்கே தங்களது உடல், பொருள், ஆவி, ஆஸ்தி என்று அத்தனையையும் அர்ப்பணிக்கிறார்கள்.        

முன்பெல்லாம் சாமியார்கள் காஷாயம் கட்டிக்கொண்டு, கமண்டலம், தண்டு ஏந்திக்கொண்டு, வெற்றுக் கால்களுடன் அல்லது கட்டைச் செருப்புகளுடன், திருவோடு ஏந்தி, யாசகம் பெற்று உண்டு வாழ்வார்கள். ஆனால், இன்றோ சாமியார் தொழில் என்பது நன்றாகக் ‘கல்லா கட்டும்’ தொழிலாக மாறிவிட்டது.

சாமியார்களும் வனங்களில், குகைகளில், மலைகளில் எல்லாம் வசிப்பதில்லை. குளிர்சாதன வசதிகள் நிறைந்த ஆடம்பரமான மாளிகைகள், மடங்கள் என்ற பெயரைத் தாங்கி நம்மை மடையர்களாக்குகின்றன. சொகுசு கார்களில், விமானங்களில் எல்லாம் பயணம் செய்கிறார்கள். வனவிலங்குகளையும் பழங்குடியினரையும் துரத்திவிட்டு அவர்கள் வாழ்விடங்களை ஆக்ரமித்துக்கொள்கிறார்கள். கேள்விகள் யாரும் கேட்கக் கூடாது என்று ஆட்சியாளர்களை வரவழைத்து ஆசீர்வதித்து அனுப்புகிறார்கள்.

இந்த ஹைடெக் சாமியார் மடங்கள் எண்ணற்ற மர்மங்களைப் பதுக்கி வைத்திருக்கின்றன. குற்றங்களின் கூடாரமாக இருக்கின்றன. ஆனால், இத்தனை தெரிந்தும் மீண்டும் மீண்டும் மக்கள் கூட்டம் அங்கே குவியக் காரணம் என்னவென்றால், கடும் அழுத்தத்தில் இருக்கும் மனதுக்கு ஆறுதலாக நாலு நல்ல வார்த்தைகள் கிடைக்கும் என்ற எண்ணம்தான் மதுவிலேயே வீழ்ந்து கிடக்கும் ஈக்களைப் போல மக்களை மயக்கி ஈர்க்கிறது. இவர்கள் காற்று வரக் கதவைத் திறந்து வைக்கிறார்கள். பாவிகளை ரட்சித்து, நோயுற்றவர்களைச் சொஸ்தமாக்குகிறார்கள். மந்திர நீர் தெளித்து சைத்தான்களை விரட்டுகிறார்கள்.

சேவை அமைப்புகள், அறக்கட்டளைகள் போன்றவற்றுக்கு அரசின் வரிவிலக்கு இருப்பதால் பணம் குவிக்கும் பெட்டகங்கள் இந்த மடங்கள். இவர்கள் பெறும் பணத்தில் கொஞ்சத்தை மக்கள் சேவைக்கென்று ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள பணத்தில் ஒரு தனித்தீவையே வாங்கி உல்லாச வாழ்க்கை நடத்தமுடிகிறது. கல்லூரி, பள்ளி, மருத்துவமனைகள் என்று நடத்தி மக்களை எக்கச்சக்கமாகச் சுரண்டிக் கொழுக்கிறார்கள். இதைக் கேள்வி கேட்பவர்களின் வாய் சத்தமில்லாமல் அடைக்கப்பட்டுவிடுகிறது. பங்குச் சந்தை முதலீடு, நில ஆக்கிரமிப்பு என்று சாமியார்களின் காலடித் தடம் பதியாத துறையே இல்லை.

இத்தகைய சாமியார்கள் எளிய உளவியல் அணுகுமுறைகளின் மூலம் மனித மனங்களைக் கையாள்கிறார்கள். நல்லதாக நான்கைந்து புத்த ஜாதகக் கதைகள், ஜென் கதைகள், சிலபல சுய பரிசோதனை குறித்த வாக்கியங்கள், எல்லா மத நூல்களையும் அவ்வப்போது புரட்டிக்கொள்வது, சில சில்லரை மேஜிக்குகள் இவையெல்லாம் இருந்தால் போதும். ஊடகங்களே இவர்களைத் தாறுமாறாக வளர்த்துவிடுகின்றன. புதிய நட்புகளும் ஆடல், பாடல், நடனம், தியானம் போன்ற வழிமுறைகளும் உற்சாகத்தையும் மனக்கிளர்ச்சியும் தருவதால் பலரும் இந்த மடங்களின்பால் ஈர்க்கப்படுகின்றனர். இத்தகைய புது நட்புகள் தொழில் சார்ந்த ஆதாயத்துக்கு மிகவும் தேவைப்படுகின்றன. அவையே பரிணாம வளர்ச்சி அடைந்து போதைப் பொருள் உபயோகம், பாலியல் குற்றங்கள் என்று விரிவடைகின்றன.  

சமீபத்தில் ஓர் ஆன்மிக யோக மையத்துக்குச் செல்ல நேர்ந்தது. ஓரிரவு அங்கே தங்கவும் நேரிட்டது. அங்கே பளிச்சிட்ட வெண்மை கண்ணை மட்டுமல்ல பணத்தையும் சேர்த்துப் பறித்தது. தொட்டதற்கெல்லாம் காசு. வெளிநாட்டினரும் வடநாட்டினரும் தான் அங்கே நிறைந்து வழிந்தனர். ஏகாந்த அமைதி வலுக்கட்டாயமாக அங்கே நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. மன அமைதி அங்கேதான் குடி கொண்டிருப்பது போல் ஒரு மாயத் தோற்றம் உண்டாக்கப்பட்டிருந்தது. நாங்கள் சென்று திரும்பிய பின்னர் அங்கே மன உளைச்சல் தாங்காமல் ஒரு வெளிமாநில இளைஞன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் நடந்தது. 

வாழ்வில் கஷ்டங்கள் நிறைந்தவர்கள் அல்லது கஷ்டங்கள் இருப்பதாகக் கற்பிதம் செய்துகொண்டவர்கள் இத்தகைய மாய வலைகளில் மாட்டிக்கொள்கிறார்கள். ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலையில் இருப்பவர்களும் இந்தப் போலிச் சாமியார்களிடம் சிக்கிக்கொண்டு வாழ்வைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.    

காற்றில் விபூதி வரவழைப்பதோ வாயிலிருந்து லிங்கம் எடுப்பதோ அற்புதங்கள் என்று நினைத்தால் கண்கட்டு வித்தைக்காரர்கள்கூட அற்புத சக்தி படைத்தவர்களாகி விடுவார்கள். ஆன்மிகம் என்பது இன்று சக்தி வாய்ந்த சந்தையாக, வணிகமாக மாறிவிட்டது. மக்களை வசீகரிக்கும் பேச்சாற்றல் போதும். கடவுள் இருக்கிறார் என்றுகூடச் சொல்லாமல் ‘நான்தான் கடவுள்’ என்று மார்தட்டும் சாமியார்களைச் சிறு கேள்விகூட இல்லாமல் நம்பும் மக்கள் பெருகிவிட்டார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் தேவை ஆறுதல்.

 ஆனால், இந்த மன உளைச்சல், மன அழுத்தங்கள் நாமாக விரும்பாமல் நமக்குள் வந்திருக்காது. அமைதியும் மகிழ்ச்சியும் நிம்மதியும் வெளியில் எங்கும் இல்லை. அவரவர் மனதிலேயே நிறைந்திருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் இத்தகைய சாமியார்கள் பின்னால் அலைய மாட்டார்கள்.

ஒரு கதை. ஒருமுறை தேவலோகத்தில் நாரதருக்கு சதா சர்வ காலமும்  நாராயணனை நினைத்துக்கொண்டிருப்பது தான்தான் என்று கர்வம் தோன்றியது. தன்னை மிஞ்சிய நாராயண பக்தன் மூவேழு உலகிலும் கிடையாது என்று பெருமிதம்கொண்டிருந்தார். அதை நாராயணனிடமும் சொன்னார்.

அவரது ஆணவத்தை அடக்க எண்ணம் கொண்ட நாராயணன், “உன்னைவிட என்னை அதிகமாக நினைப்பவன் ஒருவன் உண்டு” என்றார். நாரதருக்குப் பேரதிர்ச்சி. யாரென்று வினவினார்.

 நாராயணன் அவரை பூமிக்கு ஒரு விவசாயியின் வீட்டுக்கு அழைத்துவந்தார். அதிகாலையில் உறக்கத்தில் இருந்து விழித்த அந்த விவசாயி, “நாராயணா” என்றவாறே எழுந்து, கால்நடைகளுக்கு உணவளித்து வயலுக்குச் சென்றார். கடுமையாக உழைத்துவிட்டு, மாலை வீடு திரும்பி மீண்டும் கால்நடைகளுக்கு உணவளித்து விட்டு, அக்கம் பக்கத்தினருடன் அன்பாகப் பேசி விட்டு, உணவருந்தி உறங்கச் சென்றார். “நாராயணா” என்று சொல்லிவிட்டு நிம்மதியாக உறங்கத் தொடங்கினார். இதுவே அவரது தினப்படி வழக்கமாகத்   தொடர்ந்தது. 

நாரதருக்கு எரிச்சலாக இருந்தது. “தினமும் நொடி தவறாமல் உங்கள் நாமத்தை நான் உச்சரிக்கிறேன். இரண்டே இரண்டு முறை மட்டும் சொல்லும் இவன் உங்களுக்கு உசத்தியா?” என்று சண்டையிட்டார். நாராயணன் சிரித்தவாறே, “எண்ணிக்கை முக்கியமில்லை நாரதா. அவன் கடமையைத்தான் முக்கியமாகக் கருதினான். இத்தனை கடமைகளுக்குமிடையில்  என்னைத் தினமும் இரண்டு முறை நினைத்தான் அல்லவா? அதுதானே முக்கியம்?” என்றார். வெற்றுப் பக்தியினால் பயனேதும் இல்லை என்பதையும் கடமைதான் முக்கியம் என்பதையும் நாரதர் உணர்ந்து கொண்டார். 

 அதுபோல நாமும் நமக்கென்று வகுத்துக்கொண்ட கடமைகளை வழுவாது நிறைவேற்ற வேண்டும். அப்போது இதுபோன்ற மன உளைச்சல்கள் எதுவும் வராது‌. மனதில் ஒன்றைக் குறித்து ஆழமாக சிந்தித்துக்கொண்டே இருந்தால் அது உண்மையிலேயே நடக்கும் என்பதால் நேர்மறையான எண்ணங்களையே மனதில் விதைக்க வேண்டும். தினமும் தவறாது ஆலயம் செல்வதைவிட, ஒரு நொடியாகினும் நல்ல சிந்தனைகளை நெஞ்சில் படர விட்டால் அதுவே உண்மையான பக்தியும் சிறப்பான வழிபாடுமாக அமையும். மனமே கோயில்.

(தொடரும்)

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.