இந்தியாவின் முதல் பெண் கால்நடை மருத்துவர் சக்குபாய் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏலுருவில் காலமானார். அவருக்கு வயது 91. அவரது சாதனையைப் போன்றே அவரது மரணமும் வெளித்தெரியாமல் போனது வருத்தமே. வெகுசன ஊடகங்களில் அதிகம் பேசப்படாத ஆளுமை சக்குபாய். போலவே அவர் தேர்ந்தெடுத்த கால்நடை மருத்துவத் துறையும்.

மருத்துவமும் கால்நடை மருத்துவமும் ஆண்களின் உலகமாக இருந்த காலகட்டம் அது. 1948ம் ஆண்டு சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி பெண்களும் கற்கும் அனுமதி வழங்கியது. ஏலுருவில் பிறந்த சக்குபாய்க்கு கிண்டி பொறியியல் கல்லூரி, வேப்பேரி கால்நடை மருத்துவமனை என இரண்டு கல்லூரிகளிலும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கால்நடை மருத்துவத்தைத் தேர்ந்தெடுத்தார். 11 வயதில் மாடு மேய்க்க அனுப்பப்பட்டு, தாய்க்கு சமையல் வேலைகளின் உதவி செய்யப் பணிக்கப்பட்ட சிறுமி, கல்வி என்ற கொழுகொம்பை கெட்டியாகப் பற்றிக்கொண்டார்.

1952ம் ஆண்டு கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பை முடித்தவர், முக்தேஷ்வர் கால்நடை ஆய்வு மையத்தில் பணியமர்த்தப்பட்டார். இன்றிலிருந்து 70 ஆண்டுகளுக்கு முன்பு, 22 வயதே நிரம்பிய இளம்பெண், தன்னந்தனியாக மொழி தெரியாத வட இந்தியாவுக்கு வேலைக்குச் செல்வது என்பது எளிதான காரியமல்ல. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணி செய்துகொண்டிருந்தவர், 1966ம் ஆண்டு ஸ்வீடனில் ‘வைராலஜி’ ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைக்க, அதையும் விடவில்லை. புதிய தேசம், புதிய சூழல் என எதுவும் சக்குபாயைத் தடுத்து நிறுத்தவில்லை.

1969ம் ஆண்டு திருமணம், அதன்பின் காதல் கணவருடன் கால்நடை வைராலஜி ஆய்வுகள் என தொடர்ந்து இயங்கினார். புற்றுநோய் கண்டு கணவர் இறந்துபோக, கணவரது நினைவாக ராமச்சந்திரன் சக்குபாய் தொண்டு நிறுவனம் தொடங்கி அதன் மூலம் உதவிகள் செய்துவந்தார். அவரது கணவரது வாழ்க்கை வரலாறை 436 பக்க நூலாக ‘Letters by Thousands’ வெளியிட்டார்.

இந்நூலின் பிரதி தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழகம் (TANUVAS) நூலகத்தில் இருப்பதாக அறிகிறேன். பொதுவெளியில் இல்லை. அந்நூலை டிஜிட்டைஸ் செய்து பொதுமக்கள் பார்வைக்கு பல்கலைக்கழகம் கொண்டுவருவது சக்குபாய் போன்ற சாதனையாளரைக் குறித்து நாம் அறிந்துகொள்ள உதவும், நலம் பயக்கும். இதை என் அன்பு வேண்டுகோளாக பல்கலைக்கழகத்துக்கு முன்வைக்கிறேன்.

சக்குபாய், PC: vectos.com

கால்நடைப் படிப்பில் முதலிடம் பெறும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக தங்கப் பதக்கம் சக்குபாயால் வழங்கப்படுகிறது. முதல் பெண்கள் நூலுக்காக பெங்களூரு பிரேசர்டவுனில் உள்ள அவரது இல்லம் வரை ஆள் அனுப்பி முயற்சித்தும், அவரை சந்திக்கவோ, அவரிடம் உரையாடவோ முடியவில்லை என்பது எனக்கு பெரும் வருத்தமே. குடத்திலிட்ட விளக்காகிப் போன பெண் சாதனையாளர்களில் சக்குபாயும் ஒருவர் என கனத்த மனதுடன் கடந்துபோகிறேன்.

சக்குபாய் என்ற மருத்துவர் என அவரை நான் என்றும் அணுகியதில்லை. அவர் சமூக மாற்றத்துக்கு வித்திட்டவர். ஒவ்வொருவர் வாழ்க்கையும் நமக்கு ஏதோ ஒரு படிப்பினையைத் தருகிறது. சக்குபாய் பெண்களாகிய நமக்கு விட்டுச் சென்ற வாழ்க்கைச் செய்தி:

“ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த நம் சமூகத்தின்மேல் எனக்குக் கடும் கோபம் வரும். ஆனால் நம் பணியை நாம் எப்படியாவது செய்தே ஆகவேண்டும் என்றால், எப்படியோ அதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்துத் தானே ஆகவேண்டும்?”

போய் வாருங்கள் சக்குபாய்…எங்களுக்கான வழியை எப்படியும் கண்டுபிடித்துப் பயணிப்போம்.

இன்று அவர் இறந்துபோனதாக தகவல் தந்து உதவிய கால்நடை மருத்துவர் அனிதா அவர்களுக்கு என் நன்றி.