நானாக நான் – 13

எதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டுமென்றார் வள்ளுவர். சொற்கள் நம் வாழ்வின் வசந்தத்தைக் கொண்டுவரலாம். ஏதோ ஒரு சொல் நம் வாழ்வை வெறுமைக்கும் கொண்டு செல்லலாம். சொற்களைச் சரியாக கையாளத் தெரிந்தவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியான மனிதர்களாக இருக்கிறார்கள்.

கவிஞர் நரனின் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. ‘அவளின் மீது பிளாஸ்டிக்கைப் போல் எப்போதும் மட்காத ஒரு வார்த்தையை வீசினான்’. மட்காத பிளாஸ்டிக்கைப் போலச் சில வார்த்தைகளும் மட்காமல் மனதுக்குள் தகித்துக் கொண்டேயிருக்கின்றன.

சொற்கள் வாழ்வில் எவ்வளவு முக்கியம் வாய்ந்தவை என்பதை நான் சிறுவயது முதலே அறிந்திருந்தேன். நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது பேச்சுப் போட்டியில் கலந்துகொள்வேன். அவர்கள் தலைப்பு கொடுத்தவுடன் பக்கத்து வீட்டு அக்கா கீர்த்தி பணிபுரியும் பள்ளிக்குச் செல்வேன். சேலம் பாலைய்யா என்பவரிடமிருந்து பேச்சுப் போட்டிக்காக அவர் எழுதித் தருவதை வாங்கிக் கொண்டு வருவேன். அப்படி ஒருமுறை சென்றபோது சேலம் பாலைய்யாவுக்காகக் காத்திருந்தேன். நான் ஓரளவிற்குப் படம் வரைவேன். அலுவலகத்தில் இருந்த ஒருவர் என் அருகில் வந்து, ‘என்ன இது, நீ வரைந்ததா’ என்று கேட்டார். மிகுந்த உற்சாகத்துடன் ‘ஆமாம் பாக்குறீங்களா’ என்று எல்லாப் படங்களையும் காண்பித்தேன். அதில் ஜெய்ப்பூர் உடை அணிந்த பெண்ணின் படத்தைப் பார்த்துவிட்டு, அவர் கைகளை அந்தப் படத்தில் இருந்த பெண்ணின் மார்புக்குக் கொண்டு வந்து, ‘இதையெல்லாம் சரியா வரைஞ்சிடு’ என்றார். எதுவும் புரியவில்லை. அமைதியாக வந்துவிட்டேன்.

நெடுநேரம் யோசித்துக் கொண்டேயிருந்தேன். பெண்ணின் மார்பை வரைந்ததில் என்ன தவறு என்று. பிடிபடவே இல்லை. பிறகு அந்தப் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திவிட்டேன். நானே எழுத ஆரம்பித்து (அதுவும் ஐந்தாம் வகுப்பிலேயே) பரிசு வாங்கியது எல்லாம் வேறு கதை. அந்த ஆணின் முகம், பெயர், உருவம் எதுவும் ஞாபகமில்லை. ஆனால், இன்றளவும் அந்த வரி, அதை என்னால் கடந்து போக முடியவில்லை.

வாழ்வைச் சீராக்குவதும் சேறாக்குவதும் சொற்கள்தாம். பெண்ணுக்குக் காதல் எதிலிருந்து பிறக்கிறது என்று என்னைக் கேட்டால் சொற்களிலிருந்து பிறக்கிறது என்று சொல்வேன். பெண்கள், ஆண்களின் சொற்களெனும் மாய அம்பினால்தான் பெரும்பாலும் வீழ்த்தப்படுகிறார்கள் என்பது பேருண்மை. பெண்ணுக்கு ஆண் மீதான ஈர்ப்பு, காதல், நம்பிக்கை எல்லாமுமே சொற்களின் வழிதான் கடத்தப்படுகிறது.

உலகின் தற்கொலைகளுக்கு அதிகப்படியான காரணம் ஒருவேளை சொற்களாக இருக்கலாம். சொல்லின் உஷ்ணம் தாள இயலாமல் உயிர்விட்டவர்கள் எத்தனையோ பேர்.

கவிதையாய், கதையாய், பாடலாய், பேச்சாய், வசையாய் நம்மைச் சூழ்ந்திருக்கின்றன சொற்கள். சொற்களின் இடிபாடுகளுக்குள்ளேயே நாம் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.

ஒரே ஒரு வார்த்தைக்காகக் கொலை செய்யப்பட்டவர்களை, ஒற்றை வார்த்தைக்காகப் பல வருடங்கள் பேசாமல் இருந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோமல்லவா?

பெண்கள் மொழிவளம் படைத்தவர்கள். அவர்கள் மூளையில் மொழிக்கான மையம் செயல்படுகிறது. அவர்கள் பிறவிப் பேச்சாளர்கள். ஒரு நாளைக்கு இரண்டாயிரம் சொற்கள் பேசாத பெண்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்களாம். ஆகையால் வாயாடி என்ற பட்டத்தைப் பெண்களுக்குச் சூட்டுவதோடு நின்றுவிடாமல் அவர்கள் பேச்சுக்குச் செவி சாய்க்கவும், ஆறுதலாக நல்மொழி பேசவும் கற்றுக்கொண்டுள்ள ஆண்கள் பெண்களின் அன்புக்குரியவர்களாக எப்போதுமிருக்கிறார்கள்.

நகுலனின் கவிதைகளில் ’காலம் எப்போதும் ஒரு இடமாகத்தான் இருக்கிறது’ என்பதைப் போல பல நண்பர்களை நினைக்கும்போது அவர்கள் குறித்த சொற்களே நினைவுக்கு வருகின்றன அல்லது சில சொற்களை எண்ணும்போது அந்த நண்பர்களின் முகங்களே நினைவுக்கு வருகின்றன.

பர்வீன் சுல்தானா அடிக்கடி சொல்வார், ‘ஏதோ ஒரு காட்சியிலிருந்தோ ஒரு புத்தகத்திலிருந்தோ, எவருடைய வார்த்தைகளிலிருந்தோ சொல்லப்படும் ஒரு சொல் நம் வாழ்வை மாற்றியமைக்கலாம். அப்படி ஒரு சொல் உன்னை வந்து சேரும் போது அதை இறுகப் பற்றிக்கொள். தொலைத்து விடாதே’ என்று. அப்படி நாம் சொற்களை இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறோமா என்பதுதான் கேள்வி.

சொற்களைப் பற்றிப் பேசும்போது, ‘சொன்னது நீதானா சொல் சொல்’ என்னும் பாடல் எப்போதும் நினைவிற்கு வரும். காதலின் முதலும் முடிவும் சொற்கள்தாமே!

ஒரு சொல் காலத்திற்கு ஏற்றாற்போல பொருள் திரிந்தும் வரத்தான் செய்கிறது. நான் மிகவும் மதிக்கும் பகத்சிங் தன்னைத் தீவிரவாதி என்றே குறிப்பிடுவார். அதன் பொருள் தான் கொண்ட கொள்கைகளின் மீதுள்ள தீவிரவாதத் தன்மை என்பதே. ஆனால், இன்று தீவிரவாதம் அல்லது தீவிரவாதி என்ற சொல்லே பயங்கரவாதி அல்லது கொலைகாரன் என்னும் சொற்களுக்கு ஈடாகவே பார்க்கப்படுகிறது. காலம் சொற்களைத் திரிக்கவில்லை. ஆனால், மனிதர்களின் பார்வை ஒன்றை வேறொன்றாக முற்றிலுமாக மாற்றியிருக்கிறது.

நம் உணர்வுகளின் கடத்தி சொற்கள். சொற்களை லாவகமாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள் வாழ்வை சமநிலையோடு வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். நம்மைத் தொடர்ந்து சுரண்டிக்கொண்டிருக்கும் இச் சமூகக் கேடுகளைத் தட்டிக் கேட்கக்கூடிய சொற்கள் மிக தேவையானவையாக இருக்கின்றன.

என் உறவுக்காரப் பெண் ஒருவர் கணவரோடு ஒரே வீட்டில் வசித்தாலும் பல வருடங்களாக அவரிடம் பேசுவதேயில்லை. தவறுதலாகவோ அறிந்தோ சொன்ன ஏதோவொரு வார்த்தை ஏற்படுத்திய காயத்தில் கணவருடனான பேச்சுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். ஒரே ஒரு வார்த்தைதான். ஆனால், மனதில் சில நேரங்களில் மட்காத நெகிழியைப் போல அது முழுமையாக ஆக்ரமித்துவிடுகிறது. இன்பங்களின் தடங்கள் பெரும்பாலான நேரங்களில் எப்படி நீர்த்துப் போய்விடுகிறதோ, துன்பங்கள் மலை போல மண்டிக் கிடக்கிறதோ அதுபோல அன்பான வார்த்தைகள் அந்த நேர மகிழ்ச்சியோடு நீர்த்துப் போய்விடுகின்றன. ஆனால், மோசமான அல்லது தகாத வார்த்தைகள் வாழ்நாளெல்லாம் மனதுக்குள் அரித்துக் கொண்டேயிருக்கிறது.

சொற்கள் என்பது எண்ணத்தின் வெளிப்பாடு. தலைவனுக்கும் தொண்டனுக்கும் ஆசியருக்கும் மாணவனுக்கும் கணவனுக்கும் மனைவிக்கும் இப்படி எல்லா உறவுகளிலும் இன்றியமையாத பாலம் இந்தச் சொற்கள்தாமே! ஏதோ ஒரு சொல் தாளாமல் தற்கொலை வரை சென்ற எத்தனை பேரை பார்த்திருக்கிறோம்! அத்தகைய சொற்களை நாம் கவனமாக உபயோகிக்கிறோமா? வலிய உயிரினங்கள் எளிய உயிரினங்களை வேட்டையாடுவது இயல்புதான் என்பதுபோல பெரும்பாலான கணவர்மார்கள் மனைவிமார்களையும் பெற்றோர்கள் பிள்ளைகளையும் அண்ணன்கள் தம்பிகளையும் வசைபாடுவதை நாம் பார்க்கிறோமல்லவா? தன்னைவிட எளியவனிடத்து தன் வலிமையைக் காட்டும் அறமற்ற வீரம் நம்மில் பலருக்கும் இருக்கத்தானே செய்கிறது.

பல நேரங்களில் எதற்காகச் சண்டையிட்டோம் என்பதே மறந்து சண்டையில் பேசிய தடித்த வார்த்தைகள் மட்டும் காலம் கடந்தும் எஞ்சியிருப்பதை நாம் உணர்ந்ததுண்டா?

மானுடத்தின் வரலாறு சொற்களால் ஆனது. யாரோ கூறும் ஒரு சொல், நாம் எப்போதோ பழகிய யாரையோ நினைவுபடுத்தலாம். ஏதோ ஒரு பாடல்வரியின் சொற்கள் நம்மை நம் இளமை காலத்திற்குக் கொண்டு செல்லலாம். முன்பெல்லாம் தூரதேசத்திலிருந்து வரும் ஒரு கடிதம் நம்மை அரவணைத்துக் கொள்ளும். நம்மை அழ வைக்கும். திடுக்கிட வைக்கும்.

சொற்கள் சுருங்கி எமோஜி ஆகிவிட்ட தலைமுறையில் இருக்கிறோம். மூத்த தலைமுறை பேசினாலே காத தூரம் ஓடும் பிள்ளைகள் சொற்களை மிக வேகமாகப் பிரயோகிக்கிறார்கள். அவர்களுக்கு ஈடு கொடுக்க நாமும் கொஞ்சம் வேகமெடுக்கத்தான் வேண்டும்.

சொற்கள் இன்றிமையாதவைதான். ஆனால், யாரோ சொல்லும் பொருந்தாத சொல்லிற்காக நாம் வாழ்வை, மனதை உழற்றிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

தீதும் நன்றும் பிறர்தரவாரா!

நல்லதையே எண்ணுவோம்.

நல்லதையே பேசுவோம்.

கதைப்போமா?

படைப்பாளர்

ஹேமலதா

சென்னையில் பிறந்தவர்; தற்போது கொச்சியில் வசித்துவருகிறார். கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் பட்டதாரியானவர், யோகக் கலையில் எம்.ஃபில் பட்டம் பெற்றுள்ளார். சில நிறுவனங்களிலும், பள்ளிகளில் யோக ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். ‘முழுவல்’ என்ற கவிதை நூல் வெளியிட்டிருக்கிறார். பெண்ணியம் தொடர்பான நிகழ்வுகளில் தொடர்ந்து பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்.