இந்த உலகத்தில் பெற்றோருக்கு அடுத்தபடியாக தெய்வத்தைவிட மேலானவர்களாகக் கருதப்படுபவர்கள் ஆசிரியர்கள்தாம். குழந்தைகள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை அவர்களுடன் தாம் செலவிடுகின்றனர். இந்த உலகை குருவின் துணை கொண்டுதான் காணமுடியும் என்ற நிலையில் அந்தக் குருவே விஷமுள்ளாய்‌ மாறி கண்களைக் குருடாக்கிய நிலைதான் இப்போது கோவையில் நடந்துள்ளது.

குழந்தைப் பருவத்தை எப்போது நினைத்தாலும் இனிமையான நினைவுகள் நிரம்பியவர்கள் தாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஆனால், உலகத்தில் நிறையப் பேருக்கு அது அமைவதில்லை. வானவில் கனவுகளோடு, சின்னச் சின்னச் சண்டைகளோடு, கொஞ்சம் சுவாரசியமாகக் கழிய வேண்டிய இளம் பருவம் நிறையப் பேருக்கு கசப்பாகவே இருக்கிறது. அதைப் புறந்தள்ளி விட்டு, அழகான எதிர்காலத்தை அமைத்துக்கொண்டவர்கள் வெகு சிலரே.

பாலியல் அத்துமீறல் செய்த ‘ஆசிரியரை’ விட, அதை மூடி மறைக்க நினைத்த பள்ளி நிர்வாகத்திற்குத் தான் அதிக தண்டனை தர வேண்டும். பள்ளியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்தவர்கள், அந்தக் குழந்தையின் மனநிலையைத் துளியும் அறியவில்லை. இத்தகைய மனப்பிறழ்வு கொண்ட சமுதாயத்தில் தான் நாளை நம் குழந்தைகளும் நடமாட வேண்டும் என்று நினைக்கும் போதே பயமாக இருக்கிறது. இத்தகைய பள்ளி நிர்வாகத்தால் எத்தகைய சிறந்த ஒழுக்கத்தைப் போதிக்க முடியும்? வணக்கம் சொல்வதும், எழுந்து நிற்பதும், மரியாதையாகப் பேசுவதும்தான் ஒழுங்கு என்றால் அந்த வெங்காயமே எங்களுக்கு வேண்டாம். பெண்களிடமும் குழந்தைகளிடமும் (அது ஆணோ பெண்ணோ) சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு அத்துமீறுவதும், சந்தர்ப்பத்தை வலிந்து ஏற்படுத்திக் கொண்டு பாலியல் தொல்லைக் கொடுப்பதும் கூடாதென்று ஏன் சொல்லித் தரத் தயங்குகிறார்கள்? அதுதானே ஒழுங்கு?

குழந்தைகள் வீட்டுப் பெரியோர்களிடம் மனம்‌விட்டுத் தனது பிரச்சினைகளைச் சொல்லும் விதமான சமுதாயம் இல்லை இது. மாறாகப் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டும் இவர்களிடம் என்ன நியாயம் கிடைக்கும்? பெண் குழந்தைகள் (இப்போதெல்லாம் ஆண் குழந்தைகளும்) தங்களிடம் ஒருவர் நடந்துகொள்ளும் முறை தவறு‌ என்று சொல்ல முடிவது இல்லை. வெளியே தெரிந்தால் கௌரவம் போய்விடும் என்று அவர்களை ஓர் அதட்டல் போட்டு அடக்கும் பெற்றோர்கள் தாம் அதிகமாக இருக்கிறார்கள். முதலில் பெற்றோர்கள் மாற வேண்டும். குழந்தைகள் தங்களுடன் மனம் விட்டுப் பேச வழி செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும் தனக்கு உதவி செய்ய, தன் குடும்பம் இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளைக் கண்டிப்புடன் வளர்ப்பதைவிடக் கனிவுடன் வளர்க்க வேண்டும்.

எந்த ஒரு விஷயத்தையும் பெற்றோர் குழந்தைகளுடன் பகிர்ந்து கொண்டு அதிலுள்ள நல்லது கெட்டதைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்குப் பாலியல் தொடர்பான விஷயங்களை அவர்களது வயதுக்கேற்ப பெற்றோரே சொல்லித் தர வேண்டும். “இதப் பத்தி எப்படி அவளிடம்/அவனிடம் பேசுறது?” என்று தயங்கும் பெற்றோர்களே கவனமாகக் கேளுங்கள். நீங்கள் சொல்லித் தராததை அவர்கள் வெளியே தவறான ஆட்களிடம், தவறான முறையில் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்பிருக்கிறது.

முதலில் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசுங்கள். அவர்களுக்கு நம்பிக்கை தாருங்கள். தன்னிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியரைப் பற்றி வீட்டிலோ தோழிகளிடமோ பகிர்ந்துகொள்ளாத காரணம் தான் அந்த இளம் மொட்டு மரணித்ததற்கு முக்கியமான காரணம். பெண்ணுடலைப் புனிதப்படுத்தி ஆராதிக்கும் பத்தாம்பசலித்தனமான சமூகம் அடுத்த காரணம். “வெளியே தெரிந்தால் மானம் போச்சு… மரியாதை போச்சு…” என்ற சமூக அழுத்தங்கள், குழந்தைகளை மதிப்பெண் இயந்திரங்களாகக் கருதுவதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட ஆணின் வக்கிர புத்தி, அவனுக்குத் துணை போன பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் என்று காரணங்கள் நீண்டு கொண்டே போகும். ஆனால், போன உயிர் மீண்டு வருமா?

குழந்தைகளுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் அதைச் சமாளிக்கக் கற்றுக் கொடுப்போம். வாழ்க்கை என்பது ஒருமுறை தான். கோடிக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் தானே தப்பிப் பிழைத்து உருமாறுகிறது. இயற்கை நம்மைப் படைத்தது ஏதாவது ஒரு நல்ல காரணத்திற்காகத்தான் என்பதை அவர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். பெண்ணை, சக தோழியாக மட்டுமே பால் வேறுபாடின்றிப் பார்க்க ஆண் குழந்தைகளுக்குச் சொல்லித் தர வேண்டும். பெண்ணுடலும் சாதாரணம் தான். அது புனிதமும் இல்லை, போற்றுதலுக்கு உரியதும் இல்லை என்று அவர்களுக்குச் சகஜமாக்க வேண்டும்.

அதேபோல், “துப்பட்டா போடு.. நெஞ்சை நிமிர்த்தி நடக்காதே… எந்நேரமும் உடை பற்றிய கவனத்திலேயே இரு… நாணப்படு…” என்றெல்லாம் பெண் குழந்தைகளுக்கு அறிவுரைகளை அள்ளித் தெளிக்காமல் அவர்களை இயல்பாக வளர்க்க வேண்டும்.

தனக்கு ஏதேனும் இயல்புக்கு மாறாக நடக்கிறது என்பதே நிறையக் குழந்தைகளுக்குத் தெரிவதில்லை என்றால் அதற்கான முழுக் காரணமும் பெற்றோர்கள் தாம். ஒரு குழந்தைக்கு அதன் தாய், தந்தை தவிர வேறு யாரும் நல்லது நினைக்க மாட்டார்கள். அவர்களுடன் மனரீதியாகப் பழகினால் தான் பெற்றோர் மீதே குழந்தைகளுக்கு நம்பிக்கை ஏற்படும்.

தினமும் அதிக நேரம் ஆசிரியர்களுடன் செலவிடும் குழந்தைகளைப் பற்றிய தனிப்பட்ட கவனத்தை, அக்கறையை இப்போதுள்ள எந்த ஆசிரியர்களும் கடைபிடிப்பதில்லை. மாதம் பிறந்ததும் சம்பளம் வந்தால் போதும் என்ற நிலைமையில் தான் இப்போதுள்ள பெரும்பாலான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒரு குருவிற்கு உள்ள கடமைகள் என்னென்ன என்பதை முதலில் இப்போதுள்ள ஆசிரியப் பெருமக்கள் புரிந்துகொள்ள முயற்சியாவது செய்ய வேண்டும்.

குழந்தைகளின் மனம் முகர்ந்தாலே வாடிவிடும் அனிச்ச மலரைவிட மென்மையானது. அதைப் பண்படுத்துவதும் புண்படுத்துவதும் பெற்றோர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள ஆசிரியர்களின் கையில்தான் இருக்கிறது. இனியாவது கோவை பெண்ணின் மரணத்தோடு உதிரும் மலர்களின் எண்ணிக்கை நிற்கட்டும்.

படைப்பாளர்:

கனலி என்ற சுப்பு

‘தேஜஸ்’ என்ற பெயரில் பிரதிலிபி தளத்தில் கதைகள் எழுதி வருகிறார். சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதவே கனலி என்ற புனைபெயரில் எழுதத் தொடங்கியிருக்கிறார்.