கேளடா, மானிடவா – 11
‘போன தலைமுறையில் இந்த அளவு child abuse இல்லை; அப்போ வெல்லாம் Moral science என்று மதிப்பீட்டு வகுப்புகள் இருந்தன. நாங்களெல்லாம் 5, 6 வயதில் இருந்து தனியே தெருவில் இரவில்கூட விளையாடி இருக்கிறோம். இருட்டும் வரை வெளியே சுற்றி இருக்கிறோம்; எங்களுக்கும் ஒன்றும் நேர்ந்தது இல்லை; இப்போது இண்டெர்நெட் யுகம்; டெக்னாலஜியால் மோசமான வீடியோக்களால் சீர்கெட்டுக் கிடக்கிறது இந்தச் சமூகம்.’
‘அப்போ எல்லாம் குடும்பம் கூட்டுக் குடும்பம் என்று வாழ்க்கை முறை சிறப்பாக இருந்தது; பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வீட்டில் பெரியவர்கள் இருந்தார்கள்; அதனால் child abuse என்பது அறவே இல்லை’ என்று இப்படியெல்லாம் சொல்கிற அனைவருக்கும் ஒன்று சொல்ல கடமைப்படுகிறேன்.
இட்லி கதை:
ஒரு கிராமத்துப் பையன் முதல் முறையாக நகரத்திற்குப் போனான். பசித்தது. ஒரு ரூபாய்க்கு எட்டு இட்லிகள் வாங்கி, ருசித்துச் சாப்பிடத் தொடங்கினான். சாப்பிட்டுக் கொண்டே இருந்தவன், திடீரென பெருங்குரலெடுத்து அழத் துவங்கினான். கூட்டம் கூடிவிட்டது. எல்லாரும் ‘ஏன் பையா அழுவறே’ என்று ஆறுதலாகக் கேட்க, அவனும் அழுகையை நிறுத்தி சொன்னான்.
”ரொம்ப பசிச்சிச்சு. ஒரு ரூபாய்க்கு எட்டு இட்லி வாங்கினேன்.’’
”ம்… சரி’’
”ஏழாவது இட்லியைச் சாப்பிட்டதும் வயித்துப் பசி தீர்ந்துச்சு.”
”சரி… இப்ப அதுக்கு ஏன் அழுவறே?”
”இல்ல, நா மொதோவே அந்த ஏழாவது இட்லிய சாப்பிட்ருந்தேன்னா, எனக்கு எல்லா இட்லியும் மிச்சம் ஆகிருக்கும்ல.”
இந்தக் கதையைப் போலத்தான், நாம் எல்லோருமே இப்போது ஏழாவது இட்லி நிலையில் இருக்கிறோம். இந்த நிலை அடைவதற்கு முன்பு ஆறு இட்லிகள் உள்ளே சென்றிருப்பதை மறத்தலாகாது; மறுத்தலாகாது.
வீட்டில் சித்தப்பாக்கள், மாமாக்கள், தாத்தாக்கள் தொடங்கி பக்கத்து வீட்டு ஆட்கள் வரை மீ டூவில் வெளிவந்த லிஸ்ட்டில், குழந்தைகளை வன்புணர்வு செய்பவர்களில் போன தலைமுறை ஆட்கள் எத்தனைபேர் என்பதை சொல்லத் தேவையில்லை.
அலைபேசிகள் வந்து 20 ஆண்டுகள்கூட இன்னும் ஆகவில்லை. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில்தான் எல்லா வகை அலைபேசிகளிலும் இணைய வசதி என்கிற பொதுமைப் படுத்துதல் வந்திருக்கிறது. அதற்கு முன்பு நிகழ்ந்த வன்கொடுமைகளை எந்தக் கணக்கில் சேர்த்துவது?
இப்போது நிகழ்பவை எல்லாம் டெக்னாலஜியால் உடனுக்குடன் எல்லாருக்கும் தெரிய வருகிறது. அதுதான் விஷயம்.
இந்த இண்டெர்நெட் யுகத்தில் எல்லாமே வேகமாயிருக்கிறது. எல்லாமே உடனடி. இரண்டு வயதுக் குழந்தைக்கு செல்போன் இயக்கத் தெரிகிறது. ஏழு வயதில் சமூகத்தின் எல்லாக் குப்பைகளும் அதை வந்தடைகிறது. ஆனால், அதற்கு இணையாக, அந்தக் குப்பைகளைக் கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் எதிர் சக்தி தயார்ப்படுத்தப்படவில்லை.
ஆக்கும் சக்தி – அழிக்கும் சக்தி – காக்கும் சக்தி சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். குற்றங்களின் வேகத்தை விடவும் அவற்றைத் தடுத்து அழிக்கும் சக்திகள் அதைவிட வேகமாகச் செயல்படும்படி இருக்க வேண்டும். குற்றங்கள் நிகழும் முன்பே தடுக்கும் தொலைநோக்குச் சிந்தனை அவசியம் வேண்டும். மனித ஆற்றல் நல்லவிதமாக முறைமைப் படுத்தப் பட வேண்டும்.
டெக்னாலஜி என்பது வளர்ச்சி மாற்றம். அதை ராமநாராயணன் படத்தில் பயன் படுத்துகிறோமா, பேய்ப் படத்தில் பயன்படுத்துகிறோமா, பக்தி படத்தில் பயன் படுத்துகிறோமா அல்லது சைன்ஸ் ஃபிக்ஷன் படத்திலா என்பது அவரவர் மன வளர்ச்சியைப் பொறுத்தது. அந்த மனவளர்ச்சியைத் தருவதில் பெற்றோரும் உற்றோரும் சமூகமும் எந்தளவு பங்கு வகிக்கிறோம் என்பதில் எல்லாமும் இருக்கிறது.
ஃ
நடிகை + சமூக ஆர்வலர் ரோகிணி ஓரிரு வருடங்கள் முன்பு முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். ஓர் ஆணை மகனாகப் பெற்றவர் என்கிற வகையில் அருமையான பதிவு அது.
//சமூகத்தில் நடைபெறும் குழந்தைகள் பெண்கள் மீதான வன் கொடுமைகளை எப்படி தடுக்கலாம் என்கிற கேள்விக்கு பதில் – பெண்ணை எப்படி ஆண் பார்க்கிறான் என்பதில் இருக்கிறது; அது ஒவ்வொரு ஆணுக்கும் வேறுபடுகிறது; அவன் வளர்ந்த விதம், அவனின் தன்மை, அவனின் பாலியல் பிரச்னை, காமத்தின் வடிகால் – இப்படிப் பல தரப்பட்ட கோணங்களில் பார்க்கவேண்டியுள்ளது. அப்படிப் பார்த்து, அவன் போக்கில் இருக்கும் வன்மையை, பிறழ்வைச் சரி செய்யும் பெற்றோர்களை நாம் வளர்த்தோமா?
‘நீ ஆம்பிளைடா’ எனும் வாசகத்துக்குப் பதிலாகப் பிறரைத் துன்புறுத்துவது தவறு என்று சொல்லப் பழக வேண்டும். ‘அழு, நீ ஒண்ணும் மாவீரனில்லை’ என்று அவர்கள் அழ அனுமதிக்க வேண்டும்.// என்ற பதிவு.
அதே பதிவில் அருண்ராஜா என்பவர், ‘ஆணின் அத்தனை வக்கிரத் தன்மைக்கும் பெண்களே காரணம்; பெண்கள் அணியும் உடைகள் காரணம்; போலவே, குழந்தைகளும் அவர்கள் அணியும் உடைகளும் காரணம்’ என்று பேசியது, ஆணின் வக்கிரப் பார்வையை நியாயப்படுத்துவதாக இருந்தது.
பெண்கள் மீது, ஆண்கள் நடத்தும் அத்தனை அத்துமீறல்களுக்கும் பெண்களேதான் காரணமா?
பெண்கள் அணியும் உடை காரணமா?
பெண்கள் வீட்டில் அடங்கி இருக்காமல், வேலைக்குப் போவதும் சம்பாதிப்பதும் சம உரிமை பேசுவதும் காரணமா?
முதலில் பெண் போடுகிற உடையைக் காரணமாகச் சொன்னார்கள்; பிறகு, அவளின் படித்த திமிரைச் சொன்னார்கள்; அப்புறம் வேலைக்குப் போகிற திமிர், சம்பாதிக்கிற திமிர், வெளியே சுற்ற முடிகிற திமிர், பெண்ணியம் மற்றும் சம உரிமைப் பேசுகிற திமிர்… இப்படி இது இன்னும் இன்னும் நீள்கிறது.
அதே போல, செல்போன் காரணம்; காணொலிகள் காரணம். டெக்னாலஜி காரணம். எதையும் விட்டு வைக்காமல், இப்போது குழந்தைகளையும் காரணமாகச் சொல்ல அதே மனம் துணிகிறது.
இப்போது ஆறு வயதுக் குழந்தைகளைச் சொல்லத் துணிந்த மாதிரி, அடுத்து பிறந்து எட்டு மாதங்களே ஆனக் குழந்தையையும் அது சொல்லத் துணியும். ஏன் பிறந்த குழந்தையையே கூடச் சொல்லத் துணியும். ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்பார்கள். சுற்றிலும் இருக்கிற எல்லாமுமே குற்றம் எனில், சொல்லிக் கொண்டிருக்கிறவர்தான் குற்றவாளி. பெண்ணை, உணவுப் பண்டத்துடன் ஒப்பிடுவது எனக்குச் சம்மதமில்லைதான். ஆனால். ஓர் உணர்வை விளக்க அப்படிப் பயன்படுத்துகிறேன்.
ஒருவருக்குப் பசி எடுத்துச் சாப்பிடுவது ஆரோக்கியம். ஆனால், உணவைப் பார்க்கும் போதெல்லாம் பசி எடுக்கிறது எனில் அது எத்தகைய நோய்மையான மனநிலை. அவரது மன ஆரோக்கியத்தைத் தானே பரிசோதிக்க வேண்டி இருக்கிறது. உணவுப் பண்டங்களை அல்ல.
தனது உடம்பில் இருக்கும் ஓருறுப்பை நேர்மறையாகச் செயல்படுத்தத் தெரியாமல் – கட்டுப்பாடிழந்து, எல்லார் மீதும், எதன் மீதும் பிரயோகப்படுத்தி, எப்போதும் விபத்துக்குள்ளாக்கி, எல்லாரையும் நாசமாக்கி விட்டு – ரோடு கோணை, சிக்னல் கோணை, டிராபிக் போலீஸ் கோணை, ஏன் இந்த உலகமே கோணை என்பது எந்த விதத்தில் நியாயம்? இதில் எங்கு மனிதத் தன்மை இருக்கிறது. மிருகத் தன்மை என்றுகூடச் சொல்ல முடியாது, அதை விடவும் கேடு கெட்டத் தன்மை.
நிகழ்பவற்றை உணர்ந்து அறியும்போதுதான் – இப்போதைய உண்மை நிலையை உள்ளது உள்ளபடி உணர்ந்து ஏற்றுக் கொள்ளும்போதுதான் – அடுத்த நிலையைப் பற்றி, இனி நிகழாமல் தடுப்பதைப் பற்றிப் பேச முடியும். இப்படிப் பட்ட நோயுற்ற மனநிலையுள்ளவர்களைக் குணப்படுத்த முடியும். அவர்கள் குணமானால்தான், சமூகம் நலமாகும்.
இது ஆணாதிக்க உலகம். ஆண்களே நிறைந்த உலகம். ஆனால், ஆணின் உடல் குறித்த இயலாமைகளும் அவர்களின் பயங்களும் பலவீனங்களும் இதுவரை வெளிப்படையாகப் பேசப் பட்டிருக்கிறதா? ‘எங்கு பிரச்னையே இல்லையோ, அங்குதான் எல்லாப் பிரச்னைகளும் இருக்கின்றன என்று அர்த்தம்’ என்பார் விவேகானந்தர்.
பெண்ணுடலை என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்தவர்கள், ஆணுடலைப் பற்றி, அதன் பிரச்னைகள் பற்றி நேர்மையாக இதுவரை பதிவு செய்திருக்கிறார்களா? ஆணின் ‘இயலாமை’கள் இதுவரை எழுதப்பட்டிருக்கிறதா, சொல்லப்பட்டிருக்கிறதா?
குடிப்பழக்கம், சிகெரெட், போதை மருந்து பழக்கம் போலவே, பெண்களைத் தவறாகப் பார்த்தல், பெண்கள் மற்றும் ஆண்/பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்ளுதல், தன்னுறுப்பை அத்துமீறிப் பயன்படுத்துதல், மற்றவர்களை மனரீதியாக, உடல் ரீதியாகப் புண்படுத்துதல் அனைத்தும் தவறான நோய் வகையைச் சார்ந்தவையே.
ஒரு சங்கிலியின் பலவீனப் பகுதியின் பலம் எதுவோ, அதுவே அந்தச் சங்கிலியின் மொத்த பலம். போலவே, நமது சமூகத்தின் உண்மையான பலம் என்பது, நோயுற்ற மனதுடையவர்களின் ஆரோக்கிய அளவே. அவர்களைக் குணப்படுத்தும்போதுதான், சமூகம் பலமுள்ளதாகும்.
எதையும் கேள்வி கேள்!
படைப்பாளர்
பிருந்தா சேது
சே.பிருந்தா (பிருந்தா சேது), கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர்.