கன்னடத்தில் வெளிவந்த மிக முக்கியமான நாவல். ‘ஸ்நேகா’ பதிப்பகத்தின் அனுமதியோடு ஒவ்வொரு புதன் கிழமை அன்றும் வெளிவருகிறது.

தமிழில்: சி.சு. சதாசிவம்

9

மஹ‌மத்கான் இப்போது இரவு பகலாக யோசித்துக் கொண்டேயிருந்தார். தானே, த‌ன் கையினாலேயே தன் மகளின் வாழ்க்கைக் கொடியை, பசுந்தளிரைக் கிள்ளி எறிந்துவிட்டோமே! இதற்குப் பரிகாரம் தான் என்ன? ஜமீலா கணவன் வீட்டிற்குப் புறப்பட்டு போனவுடன் பீடி சுற்றுவதற்காக இவள் வீட்டிலிருக்கட்டும் என்று தான் எண்ணியது என்னவோ உண்மைதான். ஆனால், ரஷீதும் அவனது தாயும் இப்படிக் குழந்தையைப் பறித்துக்கொண்டு போய்விடுவார்களென்று தான் நினைத்தே பார்க்கவில்லை. குழந்தை போன பின்பு நாதிரா யாருடனும் பேசாமல், தனிமையில் அமர்ந்து வாழ்க்கையில் எந்தப் பிடிப்புமற்று உற்சாகமிழந்திருப்பதைப் பார்த்து, மீண்டும் திருமணமானால் பட்டுப்போன அவளின் வாழ்க்கைக் கொடி மீண்டும் தளிர்த்து வளரலாம் என்று தான் திட்டம போட்டது எவ்வளவு தவறாகப் போய்விட்டது. அதுவுமில்லாமல் அப்போது புதுவீட்டு சலீமின் செல்வசம்பத்து தன்னைக் கவர்ந்திழுத்தது. இழுத்தது என்ன, இப்போதும் இழுத்துக் கொண்டுதான் இருக்கின்றது. நாதிரா சம்மதித்தால் இப்போதுகூட அவனுக்கு நிக்ஹா செய்து கொடுத்துவிடலாம். அவள் சம்மதிக்க மறுக்கிறாளே ? இப்போது என்ன செய்வது ?

இதற்கிடையில் மஹமத்கானின் உடல் நலமும் கெட்டு வருகின்றது. பசியே எடுப்பதில்லை. அடிக்கடி வயிற்று வலியும் வந்துகொண்டிருந்தது. சில சமயங்களில் தின்றதெல்லாம் வாந்தியாகிவிடும். இத்துடன் மகளைப் பற்றிய கவலையும் சேர்ந்து அவர் உடல் நலத்தை மிகவும் பாதித்தது. ‘மகளுக்கொரு வழி செய்யாமல் தான் இறந்து விட்டால், மகளின் கதி என்னவாகும்?’ என்று எண்ணிப் பார்த்து ஒரு நாள் அவர் தன் நெருங்கிய நண்பரான காதர் சாயபுவின் வீட்டிற்குச் சென்றார். காதர் தன் வீட்டுப் புழக்கடையில் வாழை மரங்களுக்கு நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்.

வாங்க அண்ணே, உக்காருங்க.” வாஞ்சையோடு நண்பரை வரவேற்று உபசரித்தார் காதர். மஹமத்கான் உள்ளே வந்து உட்கார்ந்தார்.

என்ன அண்ணே ஒடம்பு சரியில்லையா? ரொம்ப மெலிஞ்சுபோயிட்டிருக்கீங்களே?” அருகிலேயே உட்கார்ந்தபடி நண்பரின் நலம் விசாரித்தார்.

ஆமாங் காதரு. கொஞ்ச நாளா ஒடம்பு சரியில்ல தான்.”

மணிப்புரம் ஆஸ்பத்திரிக்குப் போய் டாக்டர்கிட்ட காட்டியிருக்கணும், என்ன பண்ணுது ஒடம்புக்கு?”

பெரிசா அப்படி ஒண்ணும் இல்ல. அப்பப்போ கொஞ்சம் வயித்துவலி. அது ஒண்ணும் பெரிசில்ல. எனக்கு இப்போ எம்மக நாதிராவுதே பெரிய யோசனையாப் போயிடிச்சி…” இது தானே தன்கையாலேயே ஏற்படுத்திக்கொண்டது என்பதை அவர் அப்போது மறந்து போய்விட்டார். ”எனக்கு ஏதாவது ஆகிப் போச்சின்னா அவளுக்கு யாரு கதி?”

அவளப் பத்தி எதுக்குக் கவல? அந்தப் புதுவூட்டு சலீமுதான் உங்க மகள கல்யாணங் கட்டிக்கிடணும்னு ஆசப் படறாராமில்ல? யாரோ சொன்னாங்கப்பா.”

அவனுக்கு ஆசை இருந்தா போதுமா? அவ சம்மதிக்க வேணாமா? நான் அவளுக்கு எவ்வளவோ வகையில் சொல்லிப் பாத்துட்டேன். அப்பிடி நான் கட்டாயப்படுத்தினா சந்திரகிரி ஆத்துல விழுந்து உயிர உட்டுடறேன்னு என்னையே பயமுறுத்தறா. நான் என்ன பண்ணட்டும்? இந்தப் பொண்ணுங்க புத்தி இப்படித் தான்னு சொல்ல முடியல. ஆத்துலபோயி உளுந்து தொலைச்சிட்டான்னா என்ன கதியாவுறது?” கவலையோயோடு சொன்னார் கான். அப்போ வேற என்ன தான் பண்ணனுன்றீங்க?” நிதானமாக விசாரித்தார் நண்பர்.

அதுக்குத்தான் உங்கிட்ட வந்திருக்கிறது?” என்று சொல்லிப் பேச்சை நிறுத்தி நண்பரின் முகத்தைப் பார்த்தார்.

”சொல்லுங்கநான் என்ன பண்ணனும் ?” காதர் கேட்டார்.

நீ போய் ஒருதடவை ரஷீத பாத்துட்டு வர்றியா? அவனும் இதுவரைக்கும் வேற கலியாணம் பண்ணிக்கலயாம். அவன் சம்மதிச்சான்னா நாதிராவ மறுபடியும் அவனே கல்யாணம் பண்ணிக்கட்டும்.” தயங்கித் தயங்கி அவர் இதைச் சொல்லிமுடித்தார்.

ஆனா அவன் சம்மதிப்பானா?” சந்தேகத்தோடு கேட்டார் காதர்.

அவனுக்குத் தலாக் குடுக்கிறதுக்கு மனசு இருக்கலே! நான் தான் கட்டாயப்படுத்தி தலாக் சொல்ல வச்சு வாங்கிட்டு வந்துட்டேன். ஒரு கொழந்தையும் இருக்குது இல்ல?
அவன் நிச்சயமா ஒத்துக்குவான்.”

ஆகட்டும் அண்ணே, நான் போயிப் பேசிப் பாக்கறேன். நீங்க கவலப்படாதீங்கஎன்று நண்பரை உற்சாகப்படுத்தினார் காதர்.

மறுநாள் காதர் சாயபு மஹமத்கானின் வீட்டிற்கு வரும்போது இரவு கவிந்திருந்தது. அந்திமாலை நமாஜைப் பக்கத்திலிருந்த மசூதியில் முடித்துக் கொண்டு திரும்பும் போது அவர் கானின் வீட்டிற்கு வந்தார். அவர் அன்று காலை மணிப்புரம் சென்று ரஷீதை சந்தித்துவிட்டு வந்திருந்தார்.

என்ன காதர், ரஷீத் கிட்டப் போயிருந்தியா?” ஆவலோடு நண்பரிடம் கேட்டார் கான். ”போன வேலை என்னாச்சி ? பழமா காயா?”

காயி எப்பிடியாயிடும் அண்ணே, பழந்தான்னு வச்சுக்குங்க. இப்போ ரஷீதுக்கும் தெரிஞ்சுருக்கு, இதுல நாதிராவோட தப்பு எதுவுமில்லேன்னு. அவனும் ரொம்பக் வருத்தப்பட்டான்தானும் ரொம்பக் அவசரப்பட்டுட்டோம்னு. எவ்வளவு சீக்கிரமா முடியுதோ அவ்வளவும் நல்லதுன்னு அவனே சொன்னான். கொழந்தைய பாத்துக்கிறதுக்கு யாரும் இல்லாம அவங்கம்மாவே ரொம்பக் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்களாம்.” தூதுப் பொறுப்பை ஏற்றுச் சென்று சமாதான உடன்பாட்டைச் சுமந்துகொண்டு வந்த மனநிறைவு அவருக்கு.

இந்த மகிழ்ச்சியான செய்தியினால் மஹமத்கானின் முகம் மலர்ந்துபோயிற்று. அந்த மகிழ்ச்சியில் அவர் நண்பரை இரவு உணவு உண்டு போகும்படி கட்டாயப்படுத்தத் தொடங்கினார். மாலையில் விற்பனைக்கு வந்த பெரிய பெரிய பச்சைப் பங்கட மீன்களை பாத்திமா வாங்கிக் கொண்டிருந்ததைக் கான் பார்த்திருந்தார். அந்தத் துணிவில் தான் அவர் நண்பரைச் சாப்பிட்டுப் போகும்படி கட்டாயப்படுத்தியது.

நண்பர்களிருவரும் சேர்ந்தே உட்கார்ந்து சாப்பிட்டு முடித்தனர். பங்கட மீன் துண்டுகளை பாத்திமா தாராளமாகப் பரிமாறினார். தனக்குப் பசியில்லாமலிருந்தாலும் நண்பர் வயிராற சாப்பிட்டதைப் பார்த்து, கான் திருப்திப் பட்டுக்கொண்டார்.

நண்பர் புறப்பட்டுப் போன பிறகு, கான் உள்ளே வந்து தாயும் மகளும் சாப்பிடுவதற்காகவே காத்திருந்தார். பாத்திமா தாம்பூலத் தட்டை எடுத்துக்கொண்டு தாழ்வாரத்திற்கு வந்ததும் கானும் கூட அங்கேயே வந்து உட்கார்ந்தார். நாதிரா கதவருகில் மனைமீது உட்கார்ந்தாள்.

தாகாதர் இன்னைக்கு ரஷீத் கிட்ட போயிருந்தானாம்மஹமத்கான் சொன்னதும் நாதிராவின் காதுகள் கூர்மையடைந்தன.

”இனிமேல் ரஷீத் பேச்சு நமக்கெதுக்கு?” உற்சாகமேயில்லாமல் பேசினார் பாத்திமா.

ரஷீது நாதிராவ மறுபடியும் நிக்ஹா பண்ணிக்கிறதுக்குத் தயாரா இருக்கானாம்” என்று எந்தப் பீடிகையும் இல்லாமல் கான் இதைச் சொன்னதும் தாயும் மகளும் மலைத்துப் போயினர். என்ன சொல்வதென்று இருவருக்கும் தோன்றவேயில்லை.

ஆனா, ஒரு தடவை தலாக் ஆயிட்டதுக்கப்புறம் இன்னொரு தடவ அவனையே கல்யாணம் கட்டிக்கிறதுக்கு என்னமோ தடங்கலு இருக்குதாமே!” பாத்திமா மெதுவாகச் சந்தேகத்தைக் கிளப்பினார்.

அதெல்லாம் நான் நாளைக்கு மௌல்விகிட்ட கேட்டுக்கறேன்நீ சும்மா ஏதாவதொன்ன சொல்லிப் பொண்ணு மனச கெடுத்துடாதஎன்று கான் பாத்திமாவை அதட்டினார். பாத்திமா பேச்சிழந்து போனார்.

நாதிராவின் இதயவானில் பௌர்ணமி நிலவு மெல்ல முகிழத் துவங்கியது. ஏனோ அவளுக்கு அங்கே உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆற்றங்கரைக்குச் சென்று தனக்கு விருப்பமான கல்லின் மீது உட்கார்ந்து ஆற்றில் கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டாள். ஏழாம் பிறை நிலவின் ஒளிக் கதிர்கள் ஆற்றில் எதிரொளித்துக் கொண்டிருந்தன. சுற்றிலும் கம்பீரமான மௌனச் சூழலையும் மீறி நாதிராவின் இதயத்துள்ளிருந்து ஒரு குயில் கூவத் தொடங்கிற்று; மயிலொன்று தோகை விரித்து நடனமாடத் தொடங்கியது.

இப்போதெல்லாம் நாதிரா நொடிகளை, விநாடிகளை மணிகளை, நாட்களை எண்ணத் தொடங்கியிருந்தாள். ‘பாப்புவிற்குத் தன் நினைவு இருக்குமா? அவன் இப்போது நடக்கக் கற்றுக்கொண்டிருக்கின்றான் என்று பாரூ சொன்னாளே? நடந்து ஆற்றுப் பக்கமாகத் தனியாகச் சென்றால் என்ன ஆவது? மாமியார் அவனைப் பார்த்துக்கொள்ள எவ்வளவு தொல்லைப்படுகிறார்களோ என்னவோநான் ஒருமுறை அங்கு சென்றுவிட்டால் போதும், மறுபடியும் இனியெப்போதும் இந்தப் பக்கம் வரவே மாட்டேன். இந்தத் திக்கில் தலைவைத்தும் படுக்க மாட்டேன்.’

சில நாட்களிலேயே நாதிரா முன்போலவே சின்னஞ் சிறு சிறுமியைப் போல குதூகலத்துடன் கலகலப்பாக நடமாடத் தொடங்கிவிட்டாள். கண்களில் ஒளி பளபளத்தது. வெளுத்துப் போயிருந்த கன்னங்கள் செவ்வண்ணமாக‌ மாறத் தொடங்கின.

அன்று மஹமத்கான் பெரிய மௌல்விகளைப் பார்க்க மணிப்புரம் போனார். அப்போது நாதிரா தானாக அவர் முன்னால் இங்குமங்கும் நடமாடி அவருக்கு வேண்டியவற்றை எல்லாம் செய்து தந்தாள். தலைப்பாகையையும் குடையையும் தானே எடுத்துவந்து அவரிடம் கொடுத்தாள். புன்னகை முகத்தோடு அவரை வழியனுப்பிவைத்து அவர் திரும்பி வருவதற்காக ஒற்றைக்காலில் நின்று காத்திருக்கத் தொடங்கினாள்.

மாலையில் மஹமத்கான் திரும்பி வரும்போது தாயும் மகளும் தொழுகையில் மூழ்கிப் போயிருந்தனர். கான் வந்தவுடன் தலைப்பாகையை அவிழ்த்து அதன் முனையினால் முகத்திலிருந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே தனது கட்டிலின் மேல் உட்கார்ந்தார்.

தாயும் மகளும் வழிபாட்டை முடித்துக்கொண்டதும், நாதிரா உடனே ஆவலுடன் தன் தந்தையின் அருகில் வந்தாள். பாத்திமா அங்கே வரும்போது யாருடைய ஆட்டுக்குட்டிகளோ தம் வீட்டு வாழைக் கன்றுகளை மேய்வதைக் கண்டு அங்கே ஓடி அவற்றைத் துரத்தினார். கோழி தன் குஞ்சுகளோடு அவரைப் பந்தலின் அடியில் அதன் வேர்த்தண்டுகளையே கிளறுவதைக் கண்டு அவற்றை வாசலுக்கு அழைத்து அரிசி நொய்யைத் தூவினார். தந்தை கொண்டு வந்த செய்தியைக் கேட்க நாதிராவிற்கு இருந்த உற்சாகம். அவள் தாய்க்கு இல்லை.

தந்தை பேசாமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து நாதிரா தானே கேட்டாள்: ”அப்பா, மௌல்வியார்கிட்ட போயிருந்தீங்களா ?”

”உம்…”

அவரு என்ன சொன்னார்?”

”அவரு என்ன சொல்வாரு? குர்ஆன்ல இருக்கிறத சொன்னார்.” அமைதியான குரலில் சொன்னார் கான்.

நாதிரா பொறுமை இழந்துகொண்டிருந்தாள்.

என்ன இருக்குது குர்ஆன்ல?” அவளையறியாமல் அவளின் குரல் உரக்க பீறிட்டுக்கொண்டு வந்தது.

மஹமத்கான் மௌல்விகள் கூறியதை விவரிக்கத் துவங்கினார்: ”பாரும்மா, குர்ஆன்ல என்ன சொல்லியிருக்குன்னா ஒருமுற ஒருத்தன் தன் பொஞ்சாதியோட தலாக்மூணுமுற சொல்லிட்டா அதோட அந்தப் புருசன்பொஞ்சாதியோட சம்பந்தம் முழுக்க முழுக்க அறுந்து போயிடுது. மறுபடியும் அவங்க ஒண்ணு சேரணும்னா அவ வேற ஒருத்தன கலியாணம் கட்டிகிட்டு, அவங்கிட்டயிருந்தும் தலாக் வாங்கியிருக்கணும். அப்படி அவளுக்கு வேற ஒருத்தனோட கலியாணம் ஆயிருக்கலேன்னா, ஒரு நாளைக்காவது ஒருத்தனோட கலியாணம் பண்ணிக்கணும்; ஒரு ராத்திரியாவது அவனோட இருந்திருக்கணும். அடுத்தநாள் அவன்கிட்டயிருந்து தலாக்சொல்லி வாங்கிட்டு மூணுமாசம் காத்திருக்கணும். கர்ப்பம் ஏதாவது உண்டாகியிருக்கான்னு தெரிஞ்சிக்கத்தான். இல்லேன்னு உறுதியான பின்னால அந்த மொதல் புருசன் அவள கலியாணம் பண்ணிக்கலாம். இது இஸ்லாம் மதக்கோட்பாடு. அதை மீறவே முடியாது.”

இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நாதிராவின் முகம் வெளுத்துப் போய்விட்டது. நாக்கு உலர்ந்து விட் டது. அவளுக்குத் தலைமீது இடி விழுந்தது போலிருந்தது. இதுவரை தாக்கிய எல்லா இடிகளையும்விட இது மிக பயங்கரமான இடியாக இருந்தது. அவள் எதுவும் சொல்லாமல், சொல்ல முடியாமல், அறைக்குச் சென்று தன் கட்டிலின் மேல் சரிந்து விழுந்தாள்.

(
தொடரும்)

படைப்பாளர்

சாரா அபுபக்கர்

கன்னட எழுத்தாளர். நாவல்கள், சிறுகதைகள் ஏராளமாக எழுதியிருக்கிறார். ‘சந்திரகிரி ஆற்றங்கரையில்…’ மிகவும் புகழ்பெற்ற நாவல். சமூகத்தை நோக்கிக் கேள்விகளை அள்ளிவீசிய நாவல். மொழிபெயர்ப்பாளர். 85 வயதிலும் இயங்கிக்கொண்டிருக்கிறார்.