ஆப்கானிஸ்தான் ஆரம்பத்தில் இருந்தே வெளிநாட்டுப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நிலப்பரப்பு. ஆசியாவின் மத்தியில் இந்திய துணைக்கண்டத்தில் ஈரான், ரஷ்யா, சீனா நாடுகளை அண்டை நாடுகளாக கொண்ட அமைவிடம் காரணமாக ஆப்கானிஸ்தான் புவியியல் முக்கியத்துவத்தை பெறுகிறது.
பல நூற்றாண்டுகளாகப் பெரும்பாலும் மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் சூழ்ச்சிகளைச் சந்தித்த ஒரு நாடு. இரண்டு நூற்றாண்டுகளாக அது ரஷ்யாவிற்கும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கும் இடையேயான தவறான வரிசையில் இருந்தது. இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகள் தங்கள் பலப்பரீட்சைகளைச் சோதிப்பதற்கான ஒரு களமாக ஆப்கானிஸ்தானை உபயோகித்தன. ஆப்கானிஸ்தானை மையமாகக் கொண்டு இவ்விரு நாடுகளுக்கும் வெவ்வேறு சித்தப் பிரமையான லட்சியங்கள் இருந்தன. ஆப்கானிஸ்தானின் சூடான நீர் துறைமுகங்கள், கனிமங்களை உறிஞ்சுவதை விடவும் பெருங் கனவொன்று இவ்விரு நாடுகளுக்கும் இருந்தது. அது இந்நாட்டின் புவியில் முக்கியத்துவம். இந்த நிலப்பரப்பைத் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் வழியாக ஆசிய, தெற்காசிய நாடுகளுக்குள் ஊடுவறுவல் நிகழ்த்த முடியும். இவ்விரு நாடுகளும் நம்பின.
1747 முதல் 1973 வரை முடியாட்சி முறைமை கொண்ட நாடாகவே ஆப்கானிஸ்தான் இருந்தது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் மையப் புள்ளியாக பூகோளத்தில் அமைந்துவிட்ட காரணத்தினால் பல நாடுகளினது தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளையும் போர்களையும் இந்நிலப்பரப்பு சந்திக்க நேர்ந்தது. ஆரியர், (Indo-Iranians: Indo-Aryans, Mede) பாரசீகர், கிரேக்கர், மௌரியர்கள், குசானர்கள், எப்தலைட்டுகள் (Mauryans, Kushans, Hepthalites), அரேபியர், மொங்கோலியர் போன்றவர்களாலும், துருக்கி, பிரித்தானியா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டது. இந்த நீண்ட வரிசையில் மிக அண்மைக் காலத்தில் ஐக்கிய அமெரிக்காவினாலும் ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.
முதல் ஆங்கிலோ – ஆப்கான் போர் (1838 – 48), ஆங்கிலேயர்களால் ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட பேரழிவு. பிரித்தானியப் பேரரசுக்கும் ஆப்கானிஸ்தான் எமிரேட்ஸ்க்குமிடையில் இடம்பெற்ற இந்தப் போர் ஒரு தசாப்தகாலம் நீடித்தது. அக்காலத்தில் பராக்ஸாய், துரானி ஆகிய இனக்குழுக்களுக்கிடையில் உருவான பிளவுகளில் சாதுரியமாக நுழைந்த பிரித்தானியா 1839-ல் காபூலைக் கைப்பற்றியது.
1878 முதல் 1880 வரை இடம்பெற்ற இரண்டாவது ஆங்கிலோ – ஆப்கான் போர் பிரித்தானியப் பேரரசுக்கும் ஆப்கானிஸ்தான் எமிரேட்ஸ்குமிடையேயான ராணுவ மோதலாகவும், பிரித்தானியாவுக்கும் ரஷ்ய பேரரசுகளுக்குமிடையேயான பெரும் விளையாட்டின் ஒரு பகுதியாகவும் இருந்தது. இந்தப் போரிலும் ஆங்கிலேயர்கள் விரைவாக வெற்றி பெற்றார்கள்.
இரண்டாம் ஆங்கிலோ-ஆப்கான் போரின் முதல் கட்டத்தை அதிகாரப்பூர்வமாக முடிவுக்குக் கொண்டுவர 1879 மே 26 அன்று கந்தமக் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும், எதிர்பார்த்ததுபோல இந்த ஒப்பந்தம் போரை முடிவுக்குக் கொண்டுவரவில்லை. பிரித்தானியர்கள் நியமிக்கும் தலைவர்களை ஒட்டுமொத்த ஆப்கான் இனக்குழுக்களும் ஏற்கவில்லை. அங்கங்கு போராட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்றபடியே இருந்தன.
பிரித்தானியப் பேரரசின் படைகளை எதிர்த்துப் போராட ஆப்கான் படைகளுக்கு ரஷ்யா உதவியது. ஆனால், குறி வேறாக இருந்தது. ஆப்கான் நிலப்பரப்பை கட்டுப்படுத்த விரும்பிய ரஷ்யாவினதும் பிரித்தானியாவினதும் மறைமுக இலக்காக இருந்தது ஓட்டமான் பேரரசின் தலைநகராக இருந்த கான்ஸ்டான்டினோப்பிளைக் கைப்பற்றுவது. ஆப்கானிஸ்தானின் அமைவிடம் துருக்கியின் தலைநகரைக் கைப்பற்றுவதற்கு துணைபுரியும் என்று இவ்விரு நாடுகளும் நம்பின. ஆனால், விளைவுகள் ஆப்கான் மக்களுக்கு எதிர்மறையாக இருந்தன. பிரித்தானியப் பேரரசு காபூலை எடுத்துக் கொண்டது. இரண்டாம் ஆங்கிலோ – ஆப்கான் போரின் முக்கிய நிகழ்ச்சியாக 1890-களில் எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டன. இந்த எல்லை நிர்ணயம் பஷ்டூன் சமூகத்தைப் பிளவுபடுத்தியது. ஆப்கானிஸ்தானை இரண்டு பகுதிகளாகத் துண்டித்தது.
முதல் உலகப் போரின்போது ஆப்கானிஸ்தான் நடுநிலை வகித்தது. பிரித்தானியாவிற்கும் ரஷ்யாவிற்கும் எதிராக கூட்டணி சேர்ந்த ஜெர்மன்-ஆஸ்திரிய-துருக்கிய நாடுகளுக்கும் விசுவாசத்தைக் காண்பிக்க முயன்றது. இந்திய சுதந்திரப் போராட்டம் காரணமாக கிழக்கிந்தியாவில் பிரித்தானியா பலவீனமடைவதை உணர்ந்த ஆப்கானிஸ்தான் 1919-ல் மூன்றாவது ஆங்கிலோ – ஆப்கானிஸ்தான் போரை ஓர் எல்லை ஊடுறுவலுடன் கைபர் கணவாயில் நடத்தியது. ஒப்பீட்டளவில் குறுகிய மோதல். இதே காலப்பகுதியில் ராவல்பிண்டி ஒப்பந்தம் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
மூன்றாவது ஆங்கிலோ-ஆப்கான் போரில் நவீன ஆப்கானிஸ்தானிற்கான உண்மையான உருவகம் வடிவம் பெற்றது எனலாம்.
ஆகஸ்ட் 19, 1919 அன்று ஆப்கானிஸ்தான் சுதந்திரம் பெற்றது. அமனுல்லா கான் அரசராக அரியணை ஏறினார். பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற ஆப்கானிஸ்தான் வெளிநாட்டு விவகாரங்களில் பூரண சுதந்திரம் பெற்றது. அப்போது ரஷ்யாவின் தலைவராக இருந்த விளாமிடிர் லெனின், சோவியத் தூதுக்குழுவை செப்டம்பர் 1919 இல் காபூலுக்கு அனுப்பிவைத்தார்.
ராஜதந்திர நிகழ்ச்சி நிரல்கள் தொடங்கின. 1921-இல் இரு நாடுகளும் நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் சோவியத் ஈடுபடத் தொடங்கியது.
இது, ஏகாதிபத்தியத்திற்கும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் தேசிய கதையின் முதல் பாகம்.
(தொடரும்…)
கட்டுரையாளர்
ஸர்மிளா ஸெய்யித்
விதிவிலக்கான துணிச்சலான சமூக செயற்பாட்டாளர். சமூக அநீதிகள் குறித்து அச்சமற்று விமர்சிக்கக்கூடியவர், எழுத்தாளர், கவிஞர். சிறகு முளைத்த பெண் (கவிதை 2012), உம்மத் (2014 நாவல்), ஓவ்வா ( கவிதை 2015), பணிக்கர் பேத்தி (நாவல் 2019), உயிர்த்த ஞாயிறு (2021 அனுபவம்) ஆகியன இவரது நூல்கள்.
Very interesting..
Really nice article… Excellent writing..can I get Writer Sharmila mail id?
Hi Janki Raman, here you go, email – sharmilseyyid@yahoo.com
Thank you.