நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இருக்கும் முக்கிய கிறிஸ்துவ தேவாலயம் கள்ளிகுளம் பனிமாதா கோயில். இங்கு நடைபெற்ற திருவிழாக்கள் பற்றிய எழுத்தாளரின் தன்அனுபவப் பகிர்வு இது.

திருவிழா ஜூலை மாதம் 27 ஆம் நாள் தொடங்கும். அப்போதெல்லாம் திருவிழாவிற்கு மட்டும் தான் கோவிலில் பாடல் போடுவார்கள். காலை கேட்கும் பாடல் ஒலி மனதில் குதூகுலத்தை ஏற்படுத்தும். கோவிலை சுற்றிப் பார்த்தால், கோவிலின் முன்னால் பலவிதமான வணிகர்களும், பின்புறம் செல்வன் சவுண்ட் சர்வீசும் தங்களது பொருட்களை இறக்குவது, இறக்கிய பொருட்களை அடுக்கி வைப்பது என திருவிழாவைத் தொடங்கி வைப்பார்கள். கோவிலின் பின்புறம் செல்வன் சவுண்ட் சர்வீஸ் ஊழியர்கள் நீளநீளமான மூங்கில் பட்டியல்களில் சிறு சிறு விளக்குகள் இணைத்து கோபுரத்தில் போடுவதற்கு விளக்குச் சரம் செய்வார்கள்.

பள்ளிக்குள் செல்லுமுன், மத்திய இடைவேளையில் ஒரு முறை, என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோவில் முன் சுற்றி வருவோம். வழக்கத்திற்கும் மாறாக அன்று 3.30 மணிக்கே பள்ளியிலிருந்து விட்டு விடுவார்கள். பள்ளியிலிருந்து வெளியே வந்ததும் பலர் தத்துக்கொடி எடுப்பதைப் பார்க்கலாம்.

எங்கள் ஊர் வழக்கில், தத்து என்றால், மிகப்பெரிய சிரமம் என்பது பொருள். எடுத்துக்காட்டிற்கு பிற ஊர்களில் செத்துப் பிழைத்து விட்டாய் என சொல்வதை எங்கள் ஊரில் ‘உனக்குத் தத்து கழிந்து விட்டது’ என்பார்கள். இவ்வாறான பெரிய சிக்கலிலிருந்து மீண்டதாக விடுபட்டதாக நினைப்பவர்கள், தத்துக்கொடி எடுப்பார்கள். கோவிலில் ஏற்றப் படும் கொடியின் சிறிய வடிவம், ஒரு தாம்பாளத்தில் வைத்து கோவிலில் கொடுப்பார்கள். அதற்கு அவரவர் விருப்பப்படி சிறு காணிக்கை கொடுப்பார்கள். கொடியை வாங்குபவர்களில் சிலர் கோவிலினுள் தங்கள் கைகளில் வைத்து சிறிது நேரம் கும்பிட்டு விட்டு, கொடுத்து விடுவார்கள்.

சிலர் கோவிலை சுற்றி விட்டு கொடுப்பார்கள். சிலர் தங்கள் வீடுகளுக்கே கொண்டு சென்று விட்டு வருவார்கள். இவர்களில் பலர் மேளதாளத்தோடு வருவார்கள். பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்றதும் புது ஆடையை உடுத்திக் கொண்டு கோவிலுக்கு விரைவோம். அப்போதெல்லாம் பலருக்கு ஆண்டுக்கு ஒரு புது துணி தான்; அது கொடியேற்றத்திற்குத் தான். அப்போதெல்லாம் எங்கள் பள்ளியில் இலவச சீருடை கிடையாது. அதனால் பள்ளியில், கோவில் கொடியேற்றம் வரை சீருடை போட வேண்டியது கட்டாயம் இல்லை. ஏனென்றால், பலரும் கொடியேற்றத்திற்கு போடும் புது துணியாக சீருடை தான் இருக்கும்.

பூவும் விலைக்கு வாங்குவது திருவிழாவிற்கு மட்டும் தான். திருவிழா நாட்களில் மட்டும் தான் பூ வியாபாரிகள் வருவார்கள். அப்போதெல்லாம், வீடுகளில் மல்லிகை, பிச்சி, செவ்வந்தி போன்ற பூஞ்செடிகள் வைக்க
மாட்டார்கள். ஏனென்றால் தண்ணீர் பற்றாக்குறை. கோடையில் அவை பட்டுப்போகும். கனகாம்பரம், மஞ்சள் கனகாம்பரம், டிசம்பர் பூஞ்செடி போன்றவை தான் இருக்கும். சில வீடுகளில் முல்லை, இருவாட்சி கொடி
இருக்கும். அதனால், மல்லிகை, பிச்சி, கதம்பம் போன்றவை அரிதானவைகளாக இருந்தன.

சாக்கரின் கலந்த குளிர்பானம் மற்றும் சேமியா பாயச கடை, சவ்வு மிட்டாய் மற்றும், குச்சி மிட்டாய் வைக்கப்பட்ட தட்டுக் கடைகள், கடிகாரமாகக் கட்டி விடப்படும் சவ்வு மிட்டாய்காரர்கள், பஞ்சு மிட்டாய் விற்பவர், குச்சி ஐஸ் (சேமியா ஐஸ், பனிக்கட்டி ஐஸ்) விற்பவர், பலூன், ஊது குழல் போன்றவை கொண்ட வணிகர் போன்றோர் தங்கள் வணிகத்தில் மும்முரமாக இருப்பர்.

பொதுவாக 6 ½ மணிக்குக் கொடியேற்றுவார்கள். இதற்கு உள்ளூரில் உள்ள இசைக் கலைஞர்கள் வாசிப்பார்கள். சிறிய அளவில் வாண வேடிக்கைகள் நடைபெறும். இப்போது போல கை தட்டுவது, பலூன் விடுவது போன்றவை எல்லாம் நடக்காது. அனைவரும் உணர்ச்சி மிகுதியால் கைகூப்பி வணங்குவார்கள்.

அப்போதெல்லாம் இப்போது போல் 10 நாட்களும் கலை நிகழ்ச்சிகள் இருந்ததில்லை. அதனால் இரவுகளில், மக்கள் கூட்டம் கூட்டமாக உட்கார்ந்து பேசுவார்கள். சிறுவர்கள் விளையாடுவார்கள். அந்த கோடை காலத்தில் இரவு நேரத்தில் கோவில் முன் விளையாடும் சுகமே தனி. எங்கள் பள்ளியின் முன் ராட்டு, மற்றும் குடை ராட்டு வரும். சிறுவர்களை பகலிலும் , இளம் பெண்களை இரவிலும் அங்கு காணலாம்.

இடையிடையே பீடி கம்பெனி காரர்கள் வந்து ஊருக்குள் எங்கேயாவது படம் போடுவார்கள். அவர்களுக்கு தேவை ஒரு வெள்ளை சுவர் தான். ஒரு வேனில் வருவார்கள். அதனுள் ப்ரொஜெக்டர் வைத்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போடுவார்கள். இடையிடையே கம்பெனி விளம்பரம் வரும். அப்போது த பி சொக்கலால் பீடி கம்பெனி மிகவும் புகழ் பெற்றது.

வெளியூர் பக்தர்கள் ஆறாம் திருவிழா இரவில் இருந்தே வரத் தொடங்குவார்கள். வருபவர்கள் பத்தாம் திருவிழா முடிந்து தான் போவார்கள். ஏழாம் திருவிழா அன்றிலிருந்தே எங்களுக்கு விடுமுறை. கோபுரத்தில் முழுமையான ஒளி அலங்காரம் செய்து விடுவார்கள். மிட்டாய் கடைகள் எங்கள் பள்ளி அருகில் அருமையான பந்தல் அலங்காரத்துடன் அமைக்கப்படும் . கடைகளின் முன் ஓலை பெட்டிகள் அடுக்கி வைத்திருப்பார்கள். வளையல், விளையாட்டுப் பொருட்கள் கடைகள் கோயிலின் தென்புறம் அமைக்கப்படும் .

மிட்டாய்க் கடை

திருவிழா காண வருபவர்கள் தங்குவதற்கு, சமைப்பதற்கு, பள்ளிகள் திறந்து விடப்படும். ஊர் மக்களும் தங்கள் வீடுகளில் இடம் கொடுப்பார்கள். கோயில் களஞ்சியத்தில் இலவசமாக மண் சமையல் பாத்திரங்கள் கொடுப்பார்கள். திருவிழா முடிந்த பிறகு ஒரு ஆள் தெரு தெருவாக வந்து அந்த பாத்திரங்களை சேகரித்துச் செல்வார். ஒரு கால கட்டத்தில், வைப்புத் தொகை கோவில் நிர்வாகம் வாங்கியது. எடுத்துக் கொண்டு போகும் பாத்திரங்களைத் திரும்பவும் கொண்டு வந்து கொடுத்து விட்டால், முழு பணத்தையும் திருப்பி கொடுத்துவிடுவார்கள்.

பெரும்பாலான பக்தர்கள் வீடுகளில் தங்குவதையே விரும்புவார்கள். நன்றாக மீன் எல்லாம் வாங்கி சமைத்துச் சாப்பிடுவார்கள். அதனால் அவர்களுக்கு வீடு என்றால் அம்மி போன்றவை பயன்படுத்த வசதியாக இருக்கும். ஊரின் பெரிய பிரச்சனை தண்ணீர். திருவிழா நடக்கும் காலம் கடும் கோடை காலம். மிகச்சில ஆண்டுகள் மட்டுமே தெருக் குழாய்களில் தண்ணீர் வரும். மற்ற ஆண்டுகளில், லாரியில் தண்ணீர் கொண்டு ஊற்றுவார்கள். இதற்கெல்லாம் வீடுகள் வசதியாக இருக்கும். அதனால் பலர் வீடுகளில் தங்குவதை விரும்புவார்கள். அவ்வாறு தங்குபவர்கள், வீட்டிலிருப்பவர்களுக்கு அவர்கள் வீட்டிலிருந்து, தேங்காய் போட்ட மாவு, அவர்கள் ஊரில் கிடைக்கும் பொருட்கள் போன்றவை கொண்டு வந்து கொடுப்பது உண்டு. ஒரு காலத்தில் என் அம்மாவின் அம்மா வீட்டிற்கு வந்த ஒரு அம்மா, பின் ஆண்டுகள் எங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்படி வருபவர்களுக்கு, சமயம் இனம் என எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் முடிந்தவரை இடம் கொடுப்பார்கள்.

ஊரில் உள்ள உணவகங்களை பெரிதாக்குவர். பல தற்காலிக உணவகங்களும் உருவாகும். அப்போதெல்லாம் கோவிலில் இலவச உணவு வழங்கும் வழக்கம் இல்லை. இப்போது பெரும்பாலான நாட்கள் இலவச உணவு வழங்கப்படுகிறது. அதனால் அவர்களின் வணிகம் எவ்வாறு இருக்கும் என தெரியவில்லை.

எட்டாம் திருவிழாவிற்கு, பெரிய மின் ராட்டினம், மரண கிணறு, சிறு சிறு சர்க்கஸ், போன்றவை வரும். ஐஸ் கிரீம், கோன் ஐஸ் வண்டிகள் வரும். இரவு கச்சேரி இருக்கும். பொதுவாக புகழ் பெற்ற குழு வரும். கட்டபொம்மன், திருவள்ளுவர், நேசமணி, சேரன் என பல போக்குவரத்துக் கழக குழுக்கள், நெல்லை பிரபாகரன் குழு போன்றவை அப்போதைய புகழ் பெற்ற குழுக்கள். கச்சேரி பார்ப்பதற்கு வண்டி கட்டி வருவார்கள். வேன்கள் வாடகைக்கு அமர்த்தி வருவார்கள். மேற்கு ரத வீதி, ஓடை பகுதிகள் முழுவதும் அவை வரிசையாக நிற்கும்.

பனிமாதா ஆலயம், கள்ளிகுளம்

ஏழாம் திருவிழா அன்றிலிருந்தே வெளியூரிலிருந்து பக்தர்கள் வரத் தொடங்கினாலும் ஒன்பதாம் திருவிழா மாலையில் தான் கூட்டம் அதிகமாக இருக்கும். வருபவர்கள் பெரும்பாலும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கேரள மக்களும் வருவார்கள். அதனால் மலையாள வழிபாடுகளும் நடக்கும். எங்களைப் பொறுத்தவரை, கன்னியாகுமரி மாவட்டத்துக்காரர்களே மலையாளத்து ஆட்கள் தான்.

மாலையில், மலை கோவிலில் கூட்டம் எக்கச்சக்கமாக இருக்கும். சிலர் குழந்தைகளை கோவிலுக்கு கொடுத்ததாகவும், அந்த குழந்தையை திரும்ப வாங்குவதாகவும் ஒரு சடங்கு நடத்துவார்கள். இது திருவிதாங்கூர் மன்னர் தன்னை பத்பநாப சாமிக்கு ஒப்படைத்ததன் நீட்சியாக இருக்கலாம். மலையில், ஐஸ் பெட்டி, நிலக்கடலை, சுக்கு காபி போன்றவை விற்கும். இப்போது போல் மலையில் விளக்குகள், தண்ணீர் வசதிகள் அப்போது இல்லை.

இரவு நாதசுவர கச்சேரி நடக்கும். தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாதஸ்வரம் வாசித்த M.P.N. சேதுராமன்- M.P.N.பொன்னுசாமி நாதஸ்வரம் வாசிப்பார்கள். ‘கிளாரிநெட் எவெரெஸ்ட்’ என பட்டத்தைப் பெற்ற ஏ. கே. சி. நடராஜன், கிளாரினெட் வாசிப்பார்.

ஏ கே சி நடராஜன்

பின் சப்பர பவனி நடக்கும். இப்போது அது தேர் பவனியாகி விட்டது. சப்பரம் என்பது தூக்கி செல்வது, தேர் உருட்டுவது. தீவட்டி பிடிப்பார்கள். தீவட்டி என்பது நீண்ட மூங்கில் கழியின் மேல் வட்டமாக இரும்பு வளையம் இருக்கும். வளையத்தில், ஈட்டி மாதிரி நான்கைந்து முனைகள் இருக்கும். அதில் துணி சுத்தி அதன் மேல் எண்ணெய் (பின்னக்கெண்ணை ) ஊற்றுவார்கள். அதை எரித்தால் கிடைக்கும் வெளிச்சம், விளக்காகப் பயன்படுத்தப்படும். தீவட்டி பிடிப்பவர்கள், கைகளில் பூ சுற்றியிருப்பார்கள். கையில் சூடு ஏறாமல் இருப்பதற்காக இருக்கலாம். மூன்று தேர்கள் எடுப்பார்கள். கடைசி தேருக்கு முன்னால் நாதசுவர கச்சேரி நடக்கும். இப்போது ஒவ்வொரு தேருக்கும் முன்னாலும், பாண்டு வாத்தியம், செண்டி மேளம், நாதசுவர கச்சேரிகள் நடைபெறுகின்றன.

கள்ளிகுளம் தேர் பவனி

தேரோட்டம் நடக்கும் போதே உள்ளூர் மக்கள், வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு திருவிழா மிட்டாய் வாங்குவார்கள். வெளியூர் மக்கள் வளையல், விளையாட்டுப் பொருட்கள் வாங்குவார்கள். உள்ளூர் மக்கள், மறுநாள் தான் வாங்குவார்கள்.

தேர் இருப்புக்கு வந்ததும் திருவிழா முடிந்து விடும். அப்போது மனதில் ஏற்படும் வருத்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

திருவிழா பேருந்துகள் பேருந்து நிலையத்தின் மேற்குப் பகுதியில் நிற்கும். பத்தாம் திருவிழா காலை முதல் அந்த இடத்தில் மிகப்பெரிய வரிசை இருக்கும். வரிசையில் நிற்கும் நேரத்திற்கு வள்ளியூர் சென்றால்,
அங்கிருந்து திருநெல்வேலி – நாகர்கோவில் பேருந்து பிடித்து சென்று விடலாம் என வள்ளியூர் வரை நடந்து போவர்களும் உண்டு. இப்போதெல்லாம் பலர் அவர்களுக்கென வாகனங்கள் அமர்த்தி வருவதால், அவ்வளவு வரிசை கிடையாது.

ஊரிலிருந்து செல்பவர்கள் அனைவர் கையிலும் மிட்டாய் பெட்டி தவறாது இருக்கும்.

கட்டுரையாளரின் பிற படைப்பு:

படைப்பு:

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.