லிலித் எவ்வாறு அரக்கியாகச் சித்தரிக்கப்பட்டாள் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். அதைப் பற்றி ஒரு தோழியிடம் பேசும்போது, எனக்கு விசித்திரமான கோணத்தை அவள் அறிமுகப்படுத்தினாள். இயற்கை என்றுமே காட்டுமிராண்டித்தனமானது. இயற்கை மிகவும் ஆபாசமானது என்றாள். இதைக் கேட்டதும் எனக்கு மனதில் ஏதோ ஓர் அழுத்தம். என்னடா இது? செய்யும் தவறுகளையெல்லாம் மனிதர்கள் செய்துவிட்டு, இயற்கையின் மீது பழியைப் போடுவதா என்று தோன்றியது. அவளிடம் நேரடியாக வாக்குவாதத்தில் இறங்கினேன்.
அவள் கூறிய காரணம் திகைப்பாக இருந்தது. மானைப் புலி வேட்டையாடுவது இயற்கை என்றால், அடக்குமுறையும் இயற்கையின் ஓர் அங்கம்தான். இங்கு ஆண், பெண் என்கிற பேதமெல்லாம் இல்லை. வலிமை அதிகம் இருந்தால், அடக்கியாள முடியுமென்றால் அதுதான்
நிகழும் என்றாள்.
உடல் வலிமை உண்மையாவே இயற்கையானதுதானா? அவர்களின் உடல் வலிமை பழக்கத்தால் வந்ததில்லையா? என்றேன்.
ம்ம்ம்… இருக்கலாம். ஆனால் இது ஒரு தொடர் நிகழ்வு. இது நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும் என்றாள்.
இயற்கையில் வலிமை என்பது உடல் வலிமையை மட்டும் குறிப்பதில்லை. டார்வினின் பரிணாமக் கோட்பாட்டில், ஓர் உயிரினம் தன் சூழலுக்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டு இனப்பெருக்கம் செய்து, தன் பண்புகளை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் திறனே முக்கியமானது. இங்கு வலிமை என்பது ஆதிக்கம் செலுத்தும் ஆற்றல் மட்டுமல்ல; உயிர்வாழ்வதற்கான தகவமைப்பும்கூட.
மனிதன் இல்லாத உலகை நினைத்துப் பார் என்றாள்.
மனிதர்கள் தோன்றியதிலிருந்து பல பரிணாம வளர்ச்சிகளைச் சந்தித்துவிட்டார்கள் என்றேன்.
பரிணாம வளர்ச்சியை வைத்து மனிதப் பிறவியை அளந்தால், மனிதர் ஒரு குழந்தை என்றாள். உலகம் தோன்றிய காலத்தையோ, உயிர்கள் தோன்றிய காலத்தையோ வைத்து மனிதனின் வயதைக் கணித்தால், அவர்கள் சிறு குழந்தை என்றாள். அது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
இயற்கையில் வலிமை ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்காக, மனிதச் சமூகத்தில் ஆணின் ஆதிக்கமும் இயற்கையானதுதான் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா? மரம் சிந்திக்கவில்லை. மற்ற உயிரினங்கள் நம்மைப்போல் பண்படவில்லை என்றேன்.
இல்லை… நான் அப்படிக் கூறவில்லை. உயிர்கள் படைக்கப்பட்டதே மற்றோர் உயிரைப் பிறப்பிக்கத்தான் என்றாள். ஆம்… மரம், செடி, கொடி மற்றும் விலங்குகள் என அனைத்தும் அவ்வாறுதான் இயங்குகின்றன. ஆனால் மனிதரின் வாழ்வையும் அதற்குள் அடக்கிவிட முடியுமா என்ன? மனிதர்கள் சிந்தனையுடன் பிறந்தவர்கள். சிந்திக்கப் பிறந்தவர்கள். அவர்கள் வாழப் பல நெறிகளை வகுத்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்களைத் தகவமைத்துக்கொண்டே வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பிள்ளை பெறுவது மட்டுமே வாழ்க்கை என்றால், அவர்கள் காட்டிலேயே வாழ்ந்திருக்கலாமே என்றேன்.
இந்த உலகில் பிறந்த ஒவ்வோர் உயிரும் தன் இனத்தைப் பாதுகாப்பதில் பெரும் உழைப்பைச் செலவழிக்கிறது. இனப்பெருக்கம் இயற்கையின் பரிணாமத்தில் ஒரு முக்கிய அம்சம். அது இல்லையென்றால் உலகம் உயிர்கள் இல்லாத ஓர் உருண்டையாகவே உருண்டுகொண்டிருக்கும் என்றாள்.
உண்மைதான்… ஆனால் மனிதனுக்கு அது மட்டும் தேவையில்லையே. மனிதனின் தேவைகளையும் ஆசைகளையும் பட்டியலிடவே முடியாதே. அவ்வளவு நீளமானது. மேலும், எவ்வளவு விஷயங்களில் நமது பார்வை மாறியிருக்கிறது. தீர்க்கமான கருத்துகளைச் சுமந்தும், அதற்காகப் போராடவும் மனித இனம் தயாராக இருக்கிறதே. முதலாளித்துவம், பெண்ணடிமை, பெண்ணுரிமை, சமத்துவம் என்று பல போராட்டங்களைக் கடந்து வந்திருக்கிறது மனித இனம். இவ்வளவு ஏன்? இருபது வருடங்களுக்கு முன் ஆணும் ஆணும் திருமணம் செய்துகொள்வதையும், பெண்ணும் பெண்ணும் திருமணம் செய்துகொள்வதையும், திருநங்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத நான், இன்று அவர்களைப் பற்றிய புரிதலோடு இருக்கிறேன். இன்னும் என்னைப்போல் புரிதலோடு பலர் இருக்கிறார்கள்… மனிதனின் சிந்தனைகள் உலகத்தையே ஓர் இண்டலெக்சுவல் பருப்பொருளாக மாற்றியிருக்கிறது என்றேன்.
அட முட்டாள் பெண்ணே! ஆணும் ஆணும் புணர்வதோ, பெண்ணும் பெண்ணும் புணர்வதோ, மலட்டுத்தன்மையோ இயற்கையின் அங்கம். அதையே இப்போதுதான் மனித இனம் ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது. அதிலும் சொற்பமான மனிதர்களே ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறார்கள். அதனால்தான் மனிதர்கள் பரிணாம வளர்ச்சியில் தவழும் குழந்தையாகவே இருக்கிறார்கள் என்றாள்.
ஆம்… அவள் கூறுவது சரிதானே… மலட்டுத்தன்மை அனைத்து உயிர்களிலும் இருக்கிறது. ஆனால் மனிதர்கள் மட்டும் மலட்டுத்தன்மையை ஏன் இவ்வாறு ஒதுக்குகிறார்கள்? செயற்கை முறையில் குழந்தையைப் பெற்றுக்கொள்வதன் மூலம், மனிதர்கள் இயற்கையை வென்றுவிட்டதாக நினைக்கிறார்கள்.
மனித வரலாற்றின் பெரும்பகுதியில், அதிகமான குழந்தைகள் பிறப்பது ஒரு குடும்பத்தின் தொடர்ச்சிக்கும், சமூகத்தின் இனப்பெருக்கத்திற்கும் முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் குடும்ப அமைப்புகள், வாழ்க்கைமுறை, பொருளாதாரம், மருத்துவம் ஆகியவை மாறின. குழந்தைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதும், திட்டமிட்டுப் பெற்றுக்கொள்வதும் நாகரிக வாழ்வின் ஒரு பகுதியாக மாறியது.
இரு குழந்தையோ ஒரு குழந்தையோ பெற்றுக் கொள்வதை நாகரிகமாக அணுகும் சமூகம், குழந்தையின்மையை வன்மையாகப் பகடி செய்கிறது. மலட்டுதன்மையைக் கண்டு ஏன் மனித இனம் அஞ்சுகிறது என்கிற கேள்விக்கு எப்படி வேண்டுமானாலும் நாகரிகமாகப் பதில் எழுதலாம். ஆனால் உள்ளொளித்து வைக்கும் கருத்து ஒன்றுதான். தன்னை பாதுகாக்க ஒரு சந்ததியும், தன் இனம் அழியாமல் இருக்க ஓர் உயிரும் தேவை.
மலட்டுத்தன்மை அல்லது கருவுறாமை இயற்கையில் நிகழக்கூடிய ஒரு நிலை என்பதை மனிதச் சமூகம் ஏற்றுக்கொண்டிருந்தால், குழந்தையில்லாத தம்பதியினரை ஏன் இவ்வளவு அவசரமாகச் சிகிச்சையை நோக்கித் தள்ளுகிறது? கருத்தரிப்பு மையங்கள் இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. குழந்தை பெற விரும்பும் ஒருவருக்கு அறிவியல் துணை நிற்பதில் தவறில்லை. ஆனால் அந்த விருப்பத்தைச் சமூகத்தின் எதிர்பார்ப்பாக மாற்றுவதிலும், குழந்தையின்மையை ஒரு குற்றமாக உணரச் செய்வதிலும், அந்தக் குற்றவுணர்வை வணிகமாக்குவதிலும்தான் பிரச்னை இருக்கிறது.
அறிவியல் வளர்ச்சியின் மீது எனக்குக் கேள்வியில்லை. அந்த வளர்ச்சியை நிகழ்த்திய காரணத்தின் மீதான கேள்வி இது.
ஒரு திருமணம் நிகழ்கிறது. பெண்ணும் மாப்பிள்ளையும் மகிழுந்தில் வீட்டிற்குச் செல்லத் தயாராகிறார்கள். மகிழுந்து கிளம்பாமல் காத்திருந்தது. அங்கிருந்த வயது முதிர்ந்த ஒருவர், மகிழுந்தை நிறுத்தி வைத்திருந்தார்.
பின் அங்கு குழந்தையோடு இருந்த ஒரு பெண்ணை அழைத்தார். குழந்தையைத் தூக்கிக்கொண்டு எதிரே வருமாறு கூறினார். அந்தப் பெண்ணும் எதிர்த்திசையிலிருந்து நடந்துவர, மகிழுந்து கிளம்பியது. இந்தச் சம்பவத்தில் ஏதேனும் தவறிருக்கிறதா?
மேலோட்டமாகப் பார்த்தால் இதில் பிழை ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை. ஆனால், அங்கு கூட்டத்தில் நின்றிருந்த சில பெண்களுக்கு அது சுருக்கென்று தைத்திருக்கும். குழந்தை பெறாத பெண்களும், கணவன் இல்லாத பெண்களும் அந்தக் கூட்டத்தில் இருந்திருப்பார்கள் எனில், அவர்களின் மனநிலை என்னவாக இருக்கக்கூடும்?
செயற்கை முறையில் கருத்தரித்த பல பெண்களைப் பார்த்திருக்கிறேன்.
‘எப்படியோ குழந்தை பெற்றுவிட்டேன். எத்தனை நாள்தான் சமூகத்தின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டே இருப்பது’ என்கிற சலிப்பு வெளிப்படாமல் இல்லை. இப்போது குழந்தையின்மையைச் சாபமாகப் பார்க்கும் சமூகம், ஈராயிரம் வருடங்களுக்கு முன் எப்படிப் பார்த்தது?
ஏனெனில், பழங்காலத்தில் பிறக்கும் குழந்தைகள் இறப்பதும், தாய் இறப்பதும் வெகு சாதாரணம். குழந்தையின்மை நவீனக் காலத்தின் பிரச்னையில்லை. அதேபோல், குழந்தையில்லாத பெண்களைச் சமூகம் பார்க்கும் பார்வையும் நவீனக் காலத்தின் இடரல்ல. பல தொல்கதைகளில் குழந்தையைக் கொல்லும் அரக்கிகள் உண்டு. தனக்குக் குழந்தையில்லாத காரணத்தால், பிறந்த குழந்தைகளைக் கொல்லும் அரக்கிகளும் உண்டு. அதில் ஒருத்திதான் அபிசூ.
யூத, கிரேக்க மரபுகளுடன் தொடர்புடைய Testament of Solomon என்கிற நூலில் அபிசூவின் கதை இடம்பெறுகிறது. சாலமன் மன்னன் தனது மந்திர மோதிரத்தின் மூலம் பல்வேறு ஆவிகளைக் கட்டுப்படுத்துவதாக இந்தத் தொன்மம் விவரிக்கிறது. அவன் கட்டுப்படுத்தும் ஒரு பேயின் பெயர் அபிசூ. அவள் குழந்தைகளையும் பிரசவிக்கும் பெண்களையும் கொல்லும் அரக்கி.
அவளுக்குப் பல பெயர்கள் இருப்பதாகவும் அவள் கூறுகிறாள். பின் சாலமன் அவளோடு உரையாடி, அவளைக் கட்டுப்படுத்தும் தேவதூதரின் பெயரைக் கேட்கிறான். முதலில் கூற மறுத்தவள், பின் ரஃபேல் என்று தேவதூதரின் பெயரை உச்சரிக்கிறாள். பின் நாடு முழுக்க தேவதூதரின் பெயர் பிரகடனம் செய்யப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்றும் பரப்புகிறார்கள்.
இந்தத் தொன்மக்கதை வெறும் பேய் பற்றிய கதையாகப் பார்க்காமல், பிரசவம் தொடர்பான அச்சங்களின் வெளிப்பாடாகவும் வாசிக்கலாம். மருத்துவ அறிவும் பிரசவப் பாதுகாப்பும் இன்றைய அளவுக்கு வளராத காலத்தில், தாய் அல்லது குழந்தையின் மரணத்திற்கான காரணங்களைப் புரிந்துகொள்ள முடியாத மனிதன், அவற்றுக்கு ஓர் உருவத்தைக் கொடுத்திருக்கலாம். அந்த உருவம்தான் அபிசூ.
இந்தத் தொல்கதையில் ஒரு சுவாரசியமான எதிர்நிலை இருக்கிறது. குழந்தையைக் கொல்பவள் பெண்ணாகவும், அந்தத் துயரத்திலிருந்து மீட்பவர் ஆண் தேவதூதராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். பெண் உடல் மற்றும் மனம் சார்ந்த அச்சத்திற்குக் காரணமாக ஒரு பெண்ணையும், அச்சத்திலிருந்து மீட்கும் அதிகாரம் ஆணிடம் இருப்பதாக அமைகிறது கதை. இது தற்செயலான கதையமைப்பா இல்லை அக்காலத்தில் நிலவிய சமூகக் கட்டமைப்பின் வெளிப்பாடா என்பதை நம்மால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், இந்தக் கதைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.
அபிசூ அத்தகைய ஒரு தொன்மத்தின் உருவமாக இருக்கலாம். இயற்கையின் இயல்பான நிகழ்வுகளான குழந்தையின்மை, பிரசவ மரணம், குழந்தை இழப்பு ஆகியவற்றை எதிர்கொள்ள முடியாத மனிதனின் அச்சங்கள், ஒரு பெண் அரக்கியின் உருவத்தில் வெளிப்பட்டிருக்கலாம்.
இயற்கை கொடூரமானதல்ல. அதன் நிகழ்வுகளுக்கு மனிதன் கொடுக்கும் விளக்கங்களும், அவற்றின் பெயரால் உருவாக்கும் நம்பிக்கைகளும் சில நேரங்களில் கொடூரமானவையாக இருக்கின்றன. ஒருவேளை அபிசூவைவிடவும் கொடூரமானது, அவளை ஓர் அரக்கியாக உருவாக்கிய சமூகத்தின் பார்வையாக இருக்கலாம்.
ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவள் புனிதமாகிறாள். அதே பெண்ணால் குழந்தையைப் பெற்றெடுக்க இயலாதபோது அவள் குற்றவாளியாகிறாள். குழந்தையை இழந்தால் அவளது உடலே
சந்தேகத்திற்குரியதாகிறது. தாய்மையைப் பெண்ணின் இயல்பான அடையாளமாகக் கட்டமைத்துவிட்டு, அந்த அடையாளத்தை அடைய முடியாத பெண்ணைச் சமூகத்தின் விளிம்பில் நிறுத்துகிறது மனித இனம்.
படைப்பாளர்:

மீனாட்சி அடைக்கப்பன். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். அறிவியலிலும் வரலாற்றிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொருவரின் மனதிலும் விடைதெரியாத பல கேள்விகள் சுழன்று கொண்டிருக்கின்றன. இவர் மனதின் சுவர்களை அரிக்கும் இதுபோன்ற கேள்விகளுக்கான பதில்களைத் தேடும் ஒரு பயணமே இவர் எழுத்து. சமூகத்தில் நடக்கும் தவறுகளைக் கண்டும் காணாமல் கடந்து செல்லும் ஒரு சாதாரணப் பெண்ணாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மனப் போராட்டத்தை எழுத்தின் மூலம் வெளிப்படுத்த முயல்கிறார்.




