அடுத்ததாக நாங்கள் தம்புள்ளைக்குப் பயணப்பட வேண்டும். அதற்குமுன் சிம் கார்ட் வாங்க வேண்டியிருந்தது. ஆட்டோ ஓட்டுநரிடம் ‘அறைக்குச் சென்று திரும்பி, சிம் கார்ட் வாங்கிய பிறகு எங்களைத் தம்புள்ளைக்குச் செல்லும் பேருந்தில் ஏற்றிவிட முடியுமா?’ என்று கேட்டோம். அவரும் கட்டணம் குறித்து எதுவும் பேசாமல் ஒப்புக்கொண்டார். உள்ளே சென்று கைகால் கழுவி என பத்து நிமிடம் ஆகிவிட்டது. அவர் பொறுமையாகவே இருந்தார். அவர் கேட்ட தொகையைவிடக் கூடுதலாகக் கொடுக்கவேண்டும் என எண்ணிக்கொண்டோம்.

சிம் கார்ட் வாங்குவதற்காக அவர் அழைத்துச்சென்ற கடைக்காரருக்கு ஆங்கிலம் தெரியவில்லை; சிங்களம்மட்டுமே தெரிந்திருந்தது. கடையைக் காட்டிவிட்டு ஓரிரு கடைகள் தாண்டி ஓட்டுநர் வண்டியை நிறுத்தினார். ஒரு ஐந்து பத்து நிமிடம் ஆட்டோவிலேயே அமர்ந்திருந்த ஓட்டுநர், இரக்கப்பட்டுக் கடைக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்கச்சென்றார். முறையாகப் பேசி, ஓரளவிற்குக் குறைந்த பணத்தில் வாங்கிக் கொடுத்திருக்கிறார். நான் ஆட்டோவில் அமர்ந்திருந்தேன். என் மடியில் சில பைகள். என்னால் சட்டென்று இறங்க இயலாத சூழ்நிலை. இதனால் உள்ளேயே உட்கார்ந்திருந்தேன்.

அப்போதுதான் போக்குவரத்துக் காவலர் அங்கே வந்தார். அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்று அறிவிப்புப் பலகை இருந்தது. ஆனால் கண்பார்வையிலிருந்த கடைகளில் பொருள் வாங்கிக்கொண்டிருந்த பலரை அழைத்துவந்தவர்கள், எங்களைப்போலவே வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். பெரும்பாலான ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களுக்கு அருகிலேயே இருந்ததால், காவலர் வந்ததும் உடனடியாக ஆட்டோக்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர். பைக்கில் வந்திருந்தவர்கள் ஓடிவந்து ஏறிச்சென்றுவிட்டனர். போக்குவரத்தைச் சீராக்குவதுதான் காவலரின் நோக்கமாக இருந்ததே தவிர, அபராதம் விதிப்பது அல்லை. அதனால் மற்றவர் எல்லோரும் தப்பித்தனர்.

எங்கள் ஆட்டோ ஓட்டுநரோ கடைக்குள் எங்களுக்கு உதவிக்கொண்டிருந்ததால், எங்கள் வண்டி மட்டும் அங்கே தனியாக நின்றது. என்னிடம் காவலர் விசாரித்தார். நான் இறங்கி அழைத்து வந்திருந்தால், விட்டிருப்பார். ஆனால் என்னால் சட்டென்று இறங்க இயலவில்லை. விளைவு! அபராதம் 1,500 ரூபாய்!

திரும்பி வந்த அந்த இளைஞரின் முகத்தில் கவலை அப்பட்டமாகத் தெரிந்தது. அவர் முதலில் பேசியிருந்த கட்டணமே 2,500 ரூபாய்தான். இப்போது தம்புள்ள பேருந்தில் ஏற்றிவிடுவதுவரை என்றால் ரூபாய் 3000 அவர் எதிர்பார்த்திருந்திருப்பார். அதில் 1,500 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டுமென்றால் அவருக்கு எவ்வளவு பெரிய இழப்பு! எங்களுக்காக உதவ வந்த இடத்தில் அவருக்கு இப்படி ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. “அபராதத் தொகையை நாங்களே கொடுத்துவிடுகிறோம்” என்று சொன்னபிறகுதான் அவரது முகத்தில் தெளிவு திரும்பியது.

பயணத்தை முடித்தபோது, நாங்கள் அவருக்கு 3,000 ரூபாயும் அபராதத்திற்காக 1,500 ரூபாயும் கொடுத்தோம். அவருக்கும் மகிழ்ச்சி; எங்களுக்கும் நிறைவு.

அவர் அழைத்துச் சென்ற கடையில் வாங்கிய சிம் கார்டின் விலையும் கொழும்பில் வாங்க நினைத்ததைவிடக் குறைவாக இருந்தது. அவரால் எங்களுக்கும் பெரிய நட்டமொன்றுமில்லை. நாங்கள் கொடுத்த மூவாயிரம் ரூபாயில் ஆயிரத்தைநூறு பெட்ரோல் போடவே போய்விடும். ஒரு உழைப்பாளி வயிற்றில் அடிக்க நாம் யார்?

ஆனால், இதே நாளில், எங்களை ஏமாற்ற நினைத்த இன்னொரு ஆட்டோ ஓட்டுநரையும் சந்திக்கவேண்டியிருந்தது. அதை இக்கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.

அந்தத் தம்பி எங்களை ஒரு குளிரூட்டப்பட்ட பேருந்தில் (AC bus) ஏற்றிவிட்டார். ஆனால் அது நாம் வழக்கமாகப் பார்க்கும் பேருந்து அல்ல; சிறிய குளிரூட்டப்பட்ட வேன். அதன் ஜன்னல்கள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. அந்தச் சிறிய வாகனத்திற்குள் அடைபட்டிருப்பது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. பயணத்தின்போது தலைச்சுற்றல் ஏற்படுபவர்களுக்கு இத்தகைய வாகனம் ஏற்றதாக இருக்காது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன். அதன் பிறகு, முடிந்தவரை பெரிய பேருந்துகளிலேயே பயணம் செய்வதைத் தேர்ந்தெடுத்தோம். சிரமம் ஏதுமில்லை.

பயணத்தின்போதுதான் நாங்கள் கண்டியைக் கடந்து செல்கிறோம் என்பது நினைவுக்கு வந்தது. எங்கள் முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு வாகனத்தின் பின்னால் ‘கண்டி’ என்பதற்குப் பதில் ‘கள்டி’ என்று எழுதப்பட்டிருந்தது. இலங்கை முழுவதுமே ஆங்காங்கே இத்தகைய எழுத்துப்பிழைகளைப் பரவலாகப் பார்க்கமுடிந்தது.

கண்டி என்றால் மலைகள், தேயிலைத் தோட்டங்கள், மலையகத் தமிழர்கள் என்று என் உள்ளத்தில் ஒரு உருவகம் இருந்தது. இலங்கையின் மலையகம் என்றாலே தேயிலைச் செடிகள் படர்ந்த மலைச்சரிவுகளும், அவற்றுக்கு இடையே உழைக்கும் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களும் நினைவுக்கு வருவார்கள். ஆனால், இந்தப் பயணத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தைக்கூட என்னால் பார்க்கமுடியவில்லை. நான் கடந்து சென்ற பாதை அத்தகைய தோட்டங்களின் வழியாக அமையவில்லையோ என்னவோ!

அதேபோல், முதலில் எங்களை அழைத்துச்சென்ற ஆட்டோ ஓட்டுநரைத் தவிர, வேறு எந்தத் தமிழரையும் நான் சந்திக்கவில்லை. இது எனக்கு வியப்பாக இருந்தது. நான் சந்தித்த மனிதர்களின் எண்ணிக்கையை வைத்து ஒரு பகுதியின் மக்கள்தொகையையோ மொழிசார் அடையாளத்தையோ தீர்மானித்துவிடமுடியாது என்பது உண்மைதான். ஆனாலும், ஒரு நிலப்பரப்பையும் அங்கு வாழும் மக்களையும் கற்பனை செய்துகொண்டு செல்லும்போது, நேரில் காண்பவை அந்தக் கற்பனையோடு பொருந்தாமல் போனால், அந்த வேறுபாடு நம்மைச் சிந்திக்கவைக்கிறது. மாநிலத்தின் தலைநகரான கண்டியை மட்டும் பார்த்தால்மட்டும் போதாது என்பது அப்போதுதான் புரிந்தது.

நினைவுக்கு வந்த மக்கள் திலகம்

கண்டி என்றதும் எனக்கு நினைவுக்கு வந்த மனிதர் என்றால், அவர் மக்கள் திலகம்தான். 1917 ஜனவரி 17 அன்று, கண்டிக்கு அருகிலுள்ள ஹந்தானைப் பகுதியில் அவர் பிறந்தார்.

1965 அக்டோபரில் எம்.ஜி.ஆர். இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். அவருடன் பின்னாளில் அமைச்சர் பதவி வகித்த ஆர். எம். வீரப்பனும், நடிகை பி. சரோஜாதேவியும், சென்றனர். கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, நுவரெலியா உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அவர், பல்வேறு பகுதிகளில் வாழ்ந்த தமிழ் மக்களைச் சந்தித்தார். அவர் பிறந்த ஊருக்கும் சென்றிருக்கிறார்.

அந்தப் பயணத்தில் நுவரெலியாவில் நடைபெற்ற ‘மலையக ராணி’ அழகிப் போட்டியும் குறிப்பிடத்தக்கது. 1965-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரின் இலங்கைப் பயணத்துடன் தொடர்புடைய முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ‘மலையக ராணி’ அழகிப் போட்டி. சிந்தாமணி (Chinthamani) இதழின் ஆசிரியர் எஸ்.டி. சிவநாயகத்துடன் தொடர்புபடுத்தப்படும் இந்த நிகழ்வு, வழக்கமான அழகிப் போட்டியைத் தாண்டிய சமூகப் பொருளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தேயிலைத் தோட்டங்களில் உழைக்கும் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் ஆளுமையையும் திறமைகளையும் பொதுவெளியில் முன்னிறுத்துவது இதன் நோக்கமாக விளக்கப்படுகிறது.

மலையகத் தமிழர்களின் வாழ்க்கை பெரும்பாலும் தோட்ட உழைப்போடும் பொருளாதாரப் போராட்டங்களோடும் அடையாளப்படுத்தப்பட்ட காலத்தில், அவர்களுடைய பெண்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து மகுடம் சூட்டுவது சமூக அங்கீகாரத்தின் அடையாளமாக அமைந்திருக்கலாம். இந்த நிகழ்வில் எம்.ஜி.ஆர். பங்கேற்றது, போட்டிக்கு மக்களிடையே கூடுதல் கவனத்தை ஈர்த்தது. மீனா லோஜினி என்பவர் ‘மலையக ராணி’யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவருக்கு எம் ஜி ஆர் தங்கச் சங்கிலி வழங்கியதாகவும் இந்த நிகழ்வைப் பற்றிய காணொளிப் பதிவு குறிப்பிடுகிறது. அந்த நாள்களில் எம்.ஜி.ஆர். நடித்த ‘எங்க வீட்டுப் பிள்ளை’ திரைப்படமும் இலங்கையில் வெளியானது.

ஏ-9 நெடுஞ்சாலையில் கண்ட காட்சிகள்

பயணத்தில் ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்தை அடைவது மட்டுமே நமது நோக்கமாக இருந்தாலும், வழியில் கடந்து செல்லும் இடங்களும் பல கதைகளைச் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அவற்றைக் கவனிக்கத் தொடங்கினால், சாலையோரக் கடைகளும் பாலங்களும் வழிபாட்டிடங்களும் வெறும் பின்னணிக் காட்சிகளாகத் தோன்றுவதில்லை. அவை அந்தப் பகுதியின் அன்றாட வாழ்க்கையையும் வரலாற்றையும் அறிந்துகொள்வதற்கான சாளரங்களாக மாறுகின்றன.

கண்டியிலிருந்து தம்புள்ளை நோக்கிச் செல்லும் ஏ-9 நெடுஞ்சாலையின் தொடக்கப் பகுதியில் கடுகஸ்தோட்டை (Katugastota) வருகிறது. இங்குள்ள மகாவலி ஆற்றைக் கடக்கும் புதிய பாலம், அந்தப் பகுதியின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. பாலத்தின் மீது செல்லும்போது அகன்ற ஆறும் இரு கரைகளிலும் வளர்ந்திருக்கும் மரங்களும் கண்ணில் படுகின்றன. நகரத்தின் கட்டிடங்களையும் வாகன நெரிசலையும் கடந்து, ஆற்றையும் பசுமையையும் காண்பது பயணத்திற்கு ஒரு தனி அழகைச் சேர்க்கிறது. பாலத்தின் அருகே தெரியும் பெரிய விளம்பரப் பலகையும் நகர்ப்புற வணிகத்தின் அடையாளமாக நிற்கிறது.

அதே பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய தொங்குபாலமும் (Katugastota Suspension Bridge) நம்மை ஈர்க்கிறது. புதிய பாலம் இன்றைய போக்குவரத்தின் வேகத்தையும் தேவையையும் பிரதிபலிக்கிறது என்றால், பழைய பாலம் அந்தப் பகுதியின் முந்தைய போக்குவரத்து வரலாற்றை நினைவூட்டுகிறது. அதன் வெள்ளை நிறக் கைப்பிடிகளுக்கு இடையே பள்ளிச் சீருடை அணிந்து புத்தகப் பைகளுடன் நடந்து செல்லும் சிறுவர், இந்தப் பாலம் இன்னும் மக்களின் வாழ்க்கையோடு இணைந்திருப்பதை உணர்த்துகிறது.

நாகொல்ல (Nagolla) பகுதியில் உள்ள கடைகளும் உணவகங்களும் உள்ளூர் மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் இடங்களாகத் தெரிந்தன. அவற்றில் சிலவற்றின் பெயர்ப்பலகைகள் வழியாகவே அந்த இடங்களின் அடையாளங்களை அறிந்துகொள்ள முடிந்தது. எஞ்சின் எண்ணெய் விற்பனை நிலையம், இருசக்கர வாகனங்களுக்கான உதிரிப்பாகங்கள் மற்றும் பழுதுபார்ப்புச் சேவை வழங்கும் கடை, பழங்களையும் காய்கறிகளையும் விற்கும் சிறிய சாலையோரக் கடை, அவற்றின் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் முச்சக்கர வண்டி எனப் பல காட்சிகள் ஒன்றாகத் தெரிகின்றன. அந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை எதைச் சுற்றி இயங்குகிறது என்பதை இவை காட்டுகின்றன.

பாலபத்வெல (Palapathwela) பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயசேகராராமய புராண விகாரை (Sri Wijayashekararamaya Purana Viharaya) அதன் நுழைவாயிலிலும் சுற்றுச்சுவரிலும் காணப்படும் வேலைப்பாடுகளால் தனித்து நிற்கிறது. மஞ்சள் நிறத்தில் அமைந்த நுழைவாயில், வெள்ளை நிறத் தூபி, பறக்கும் பௌத்தக் கொடிகள் ஆகியவை தொலைவிலிருந்தே தெரிகின்றன.

சாலையோரத்தில் காணப்பட்ட முகப்புச் சுவரில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்த பெயர், அது மூலிகைச் செடிகள், நறுமணப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதச் சிகிச்சையுடன் தொடர்புடைய மையம் என்பதை உணர்த்தியது. இடம் லங்கா ஆயுர்வேதிக் வில்லேஜ் (Lanka Ayurvedic Village).

மாத்தளை (Matale) பகுதியை நெருங்கியபோது வணிகக் கட்டிடங்கள், சிறிய உணவகங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவ மையங்கள், வழிபாட்டிடங்கள் எனப் பலவற்றைக் கடந்து சென்றோம். அவற்றுள் ஒன்று மாத்தளை மஹாவெல ஜும்மா மஸ்ஜித் (Mahawela Jumma Mosque).
மாத்தளை நகரின் அடையாளங்களில் ஒன்று அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் (Sri Muthumariamman Temple). சாலையிலிருந்து பார்க்கும்போதே வலப்பக்கம் அதன் உயரமான ராஜகோபுரம் நமக்குத் தரிசனம் தருகிறது. பல அடுக்குகளாக அமைந்த வண்ணச் சிற்பங்கள், இந்துக் கோயில் கட்டிடக்கலையின் கலைநயத்தை வெளிப்படுத்துகின்றன.

மாத்தளையைக் கடந்து நாவுல (Naula) நோக்கிச் செல்லும்போது மலைகளும் வயல்வெளிகளும் மாறிமாறிக் கண்ணில்படுகின்றன. சில இடங்களில் சாலைக்கு அருகிலேயே பசுமையான வயல்கள் விரிந்திருக்கின்றன; அவற்றிற்கு அப்பால் உயர்ந்து நிற்கும் மலைகள் காட்சிக்கு ஒரு அழகைத் தருகின்றன. இத்தகைய காட்சிகள் பயணத்தின் வேகத்தைக் குறைத்து நின்று பார்க்கத் தூண்டுகின்றன. ஆனால் இயலவில்லை.

தம்புள்ளை நோக்கிச் செல்லும் பாதையில் அமைந்துள்ள அலுவிஹாரை பாறைக் குகைக் கோயில் (Aluvihare Rock Temple) இலங்கையின் பௌத்த வரலாற்றில் தனித்த இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் ஓட்டுநர் எங்களை இறக்கி விட்டார். சாலையின் இடப்புறம் நீண்ட வெண்சுவரும் அதன் நுழைவாயிலும் தெரிந்தன. வலப்புறத்தில் இரும்பு வேலிக்கு உள்ளே மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன. கிழக்கு நோக்கிச்சென்ற ஒரு சிறிய மண்சாலையில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். நாங்கள் செல்ல வேண்டிய இடத்தின் முகவரியைச் சொன்னதும், அவர் அறுநூறு ரூபாய் கேட்டார்.

பொதுவாகவே எந்த பொது வாகனமாக இருந்தாலும் ஓட்டுநர்கள் நமக்குத் தேவையான இடத்தில் இறக்கிவிடுகிறார்கள். அதனால் முடிந்தவரை வரைபடத்தின் உதவியால் அருகாமை இடத்தைத் தெரிவு செய்து சொன்னால் நமக்கு எளிதாக இருக்கும். நாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு முன்னால்தான் மரங்கள் கொண்ட இடம் உள்ளது. வேலி இருந்தாலும் ஆங்காங்கே வழி வைத்திருக்கிறார்கள். அந்த வீட்டிற்கு நேராகவே வழி இருக்கிறது. தெரிந்தால் அதில்கூட இறங்கியிருக்கலாம். இதைச் சொல்வதன் நோக்கம், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது உதவும் என்பதற்காகத்தான்.

வரைபடத்தைத் திறந்து பார்த்தோம். நாங்கள் செல்ல வேண்டிய இடம் நூறு அடி தூரத்திற்குள்தான் இருந்தது. அதுவும் கண்ணுக்குத் தெரியும் தொலைவில்! இவ்வளவு அருகிலுள்ள இடத்திற்குச் செல்ல அறுநூறு ரூபாய் கொடுப்பதைவிட நடந்தே சென்றுவிடலாம் என்று முடிவுசெய்தோம். பயணத்தில் சில நேரங்களில் வரைபடம் வழியைக் காட்டுவதோடு நம் முடிவுகளையும் எளிதாக்கிவிடுகிறது. நாங்கள் சென்ற இடத்தின் பெயர் S A VILLAGE. தன் வீட்டை விடுதியாக மாற்றி அதைத் திறம்படச் செய்யும் ஒரு பெண்ணின் உலகம் அது!

அவர் குறித்து? அடுத்த பகுதியில்!

தொடரும்…

படைப்பாளர்

பாரதி திலகர்

தீவிர வாசிப்பாளர், பயணக் காதலர்; தொன்மை மேல் பெரும் ஆர்வம் கொண்டவர். அயல்நாட்டில் வசித்து வந்தாலும் மண்ணின் வாசம் மறவாமல் கட்டுரைகள் எழுதிவருகிறார். ஹெர் ஸ்டோரிஸில் இவர் எழுதிய கட்டுரைகள், ‘பூப்பறிக்க வருகிறோம்’, ‘சினிமாவுக்கு வாரீகளா ? – 1, 2 & 3’ என்கிற புத்தகங்களாக, ஹெர் ஸ்டோரிஸில் வெளிவந்திருக்கின்றன. இவை தவிர ‘தமிழர் பாரம்பரிய விளையாட்டுகள்’, ‘நகர்தல் என்றும் நன்று’, ‘கேட்டல் என்றும் நன்று’, ‘ஒரு தாய் மக்கள்’ ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தொடர்ந்து இந்து தமிழ் திசை உள்ளிட்ட நாளிதழ்களில் எழுதிவருகிறார். இவரது நூல்கள் கவிதை உறவு உள்ளிட்ட விருதுகளை வென்றுள்ளன. ‘சினிமாவுக்கு வாரீகளா – 4’ மற்றும் ‘சாதனை படைக்கும் சாமானியர்’ என்கிற இரண்டு தொடர்களை ஹெர் ஸ்டோரீஸ் வலைத்தளத்தில் எழுதியுள்ளார்.