பிரபல தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில், ஒருபுறம் அறிவியல் சார்ந்த சிகிச்சை முறைகளையும் மறுபுறம் போலி அறிவியல் தொடர்பான சிகிச்சை முறைகளையும் பற்றிய வாக்குவாதம் அனல் பறக்க நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்தப்‌ பக்கம் இருப்பவர்கள் நவீன மருத்துவ முறைகளுக்கான அறிவியல் ஆராய்ச்சிகளைச் சாட்சியாகத் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருந்தனர். மறுபக்கம் இருப்பவர்களோ சமூக ஊடகங்களில் உளவும் கற்பிதங்களை வாழ்வியல் அனுபவங்களாக முன்வைத்தனர். இதில் எது சரி என்பதை முடிவு செய்ய நோய் தீர்க்கும் சிகிச்சை முறைகளைப் பற்றிய புரிதல் அவசியம். 

எடுத்துக்காட்டுக்கு, வேம்பும் மஞ்சளும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் உடையவை என்பதை நவீன மருத்துவம் கண்டறிவதற்கு முன்பாகவே பண்டைய இலக்கியங்களும் மருத்துவக் குறிப்புகளும்‌ கூறிவிட்டனவே. அப்படிப் பார்த்தால் மனித இனத்தின் அனுபவ அறிவுதான் நோய் மேலாண்மைக்கான காரணம் அல்லவா? ஆனால், அனுபவ அறிவை வைத்து மட்டுமே எல்லா நோய்களையும் விரட்டிவிட‌ முடியாது. அனுபவமும் ஆய்வும் சேர்ந்த பல மருத்துவக் கண்டுபிடிப்புகள் இன்றைய வாழ்க்கைமுறையை எளிமையாக்கி உள்ளன. அதற்குச் சான்றாக நாம்‌ அன்றாட வாழ்வில் கடந்து வரும் சில மருந்துகளைக் குறிப்பிடலாம். 

காய்ச்சல், வலி ஆகிய அறிகுறிகளைக் குணப்படுத்த ஆஸ்பிரின் (aspirin) மாத்திரையை நாம் அனைவருமே பயன்படுத்தி இருப்போம். வில்லோ மரப்பட்டைதான் (ஆற்றுப்பாலை) தற்போதைய ஆஸ்பிரினின் மூதாதையர். வில்லோ மரப்பட்டை எப்படி ஆஸ்பிரினாக மாறியது என்பது ஒரு மருத்துவ வரலாறு. 

3500 ஆண்டுகளுக்கு முன்பாக சுமேரியர்கள் வில்லோ மரப்பட்டைகளை வீக்கத்துடன்கூடிய வாத நோய்களைக் குணப்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர். அதுமட்டுமன்றி வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் ஏற்படும் வீக்கம், வலி உள்ளிட்டவையைக் குறைப்பதற்காக வில்லோ மர இலைகள் மற்றும் மிர்ட்டல் (பூமருது) மர இலைகளைக் கொண்டு செய்த கஷாயம் பயன்படுத்தப்பட்டதாக எகிப்தின் மிகப் பழமையான மருத்துவ ஆவணங்களில் ஒன்றான எபர்ஸ் பாப்பிரஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்பிறகு பதினெட்டாம் நூற்றாண்டில் வில்லோ மர இலைகளைக் காய்ச்சலுக்கான சிகிச்சையில் பயன்படுத்தியுள்ளனர். 

இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வெவ்வேறு சிகிச்சை முறைகளில் வெவ்வேறு பகுதிகளைச் சார்ந்தவர்கள் இந்த வில்லோ மரப்பட்டையைப் பயன்படுத்தியதால், அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல ஆராய்ச்சியாளர்கள் ஆர்வம் காட்டினர். அந்த நூற்றாண்டின் பல மருத்துவ ஆய்வுகள் வில்லோ மரப்பட்டையை மையமாகக் கொண்டு நிகழ்ந்தன. அதன் விளைவு வில்லோ மரப்பட்டையில் ’சாலிசின்’ எனப்படும் மூலப்பொருள் இருப்பதாகவும், அதுதான் வலிநிவாரணத் தன்மையை அந்த மரப்பட்டைகளுக்கு அளிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் வெளியாகின. சாலிசின் உடலுக்குள் சென்று சாலிசிலிக் அமிலமாக மாறுவது குறிப்பிடத்தக்கது.‌ 

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சாலிசினை முடக்குவாத சிகிச்சை முறைகளில் பயன்படுத்துவதற்கான மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில் சாலிசின் வலியுடன் கூடிய வாதத்தையும் காய்ச்சலையும் குணப்படுத்தினாலும், வயிற்று எரிச்சல் உள்ளிட்ட பக்கவிளைவுகளை ஏற்படுத்தியது தெரியவந்தது. அதனால், 1897இல் ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியலாளர் ஃபெலிக்ஸ் ஹோஃப்மேன், சாலிசிலிக் அமிலத்தில் சிறிய வேதியியல் மாற்றத்தை ஏற்படுத்தி, வயிற்றுக்குக் குறைவான எரிச்சலை ஏற்படுத்தும் அசிட்டைல் சாலிசிலிக் அமிலத்தை உருவாக்கினார். அது 1899இல் ஆஸ்பிரின் என்கிற பெயரில் மருந்தாக வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து 1900இல் ஆஸ்பிரினுக்கான அமெரிக்க காப்புரிமையை ஜெர்மனியைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான பேயர் (Bayer) பெற்றது. அதன்பிறகு 1904இல் ஆஸ்பிரின் மாத்திரையாகச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 

இன்று மருத்துவர் பரிந்துரையின்றி சர்வ சாதாரணமாக மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஆஸ்பிரின் மாத்திரை இவ்வளவு தூரம் வந்திருப்பதற்கு வெறும் அனுபவ அறிவு மட்டுமே காரணம் கிடையாது. அது பல அறிவியல் ஆராய்ச்சிகளின் உதவியோடு இந்த நிலையை எட்டியிருக்கிறது. மாத்திரையாக விற்பனைக்கு வந்த பிறகு ஆஸ்பிரினைச் சுற்றிய ஆய்வுகள் புதிய கோணத்தில் திரும்பின. குறிப்பாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் ஆஸ்பிரின் ரத்த அடர்த்தியைக் குறைக்கும் பண்பைக் கொண்டிருக்கிறது எனும் ஆய்வு முடிவுகள் வெளியாகின. மூளையிலோ இதயத்திலோ ஏற்பட்டிருக்கும் ரத்தக் குழாய் அடைப்புகள் சீரான ரத்த ஓட்டத்தைத் தடுக்கும். இதனால், ரத்த அடர்த்தியைக் குறைக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் ரத்த ஓட்டத்தைச் சீராக்குவது மருத்துவ வழக்கம். அதனால், மாரடைப்பு, பக்கவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆஸ்பிரினைப் பயன்படுத்தலாம் எனும் அனுமதி வழங்கப்பட்டது. அனுமதியா? எதற்கான அனுமதி? அதை யார் வழங்க வேண்டும்? எந்த ஒரு மருந்தாக இருந்தாலும் அதற்கென்று சில வழிமுறைகள் உள்ளன. அந்த வழிமுறைகளை முறையாகப் பின்பற்றி கண்டறியப்பட்ட மருந்துகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  (Food and Drug  Administration – FDA) அனுமதிக்க வேண்டும்.

என்னதான் 1848ஆம் ஆண்டே அமெரிக்காவில் வேளாண் பொருள்களின் தரத்தை வேதியியல் பகுப்பாய்வு மூலம் கண்காணிக்கும் பணி தொடங்கப்பட்டிருந்தாலும், அது ஒரு பொறுப்பாகவும், நெறிமுறையாகவும் அமெரிக்க வேளாண் துறையின் கீழ் வந்தது என்னவோ 1862இல்தான். அதன்பிறகு படிப்படியாக 1906ஆம் ஆண்டு கலப்படமற்ற உணவு மற்றும் மருந்துகளை உறுதி செய்வதற்காக pure food and drug சட்டத்தை அமெரிக்கா கொண்டுவந்தது. அதன் அடிப்படையில், 1930ஆம் ஆண்டு உணவு மற்றும் மருந்து நிர்வாகம்  எனும் பெயர் அதிகாரபூர்வமாக வழங்கப்பட்டது. 

மருத்துவச் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளும், தொழில்நுட்பமும் பாதுகாப்பானவை மற்றும் நோய் தீர்க்கும் செயல்திறன் கொண்டவை என்பதை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல் உணவு மற்றும் அழகு சாதனப் பொருள்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதுதான் இதன் தலையாயக் கடமை. இன்று ஒரு மருந்தோ அல்லது மருத்துவத் தொழில்நுட்பமோ சந்தைக்கு வர வேண்டுமென்றால் இந்த நிர்வாகத்தின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். 

ஒரு மருந்து எப்படி உருவானது, எத்தனை பரிசோதனை முறைகளைக் கடந்து வந்துள்ளது, இதன் பக்கவிளைவுகள் என்ன, எவ்வளவு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும், எத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும், மாத்திரையாக எடுத்துக் கொள்ள வேண்டுமா அல்லது ஊசியாகச் செலுத்திக் கொள்ள வேண்டுமா, விலங்குகள் மீது பரிசோதனை செய்தபோது எந்த மாதிரியான விளைவுகள் இருந்தன, இதுவே மனித பரிசோதனையின் போது விளைவுகள் எப்படி இருந்தன உள்ளிட்ட முழுமையான ஆய்வு விவரத்தோடு கூடிய ஆய்வு முறைகளையும் FDAவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதனைப் பரிசோதித்துப் பார்த்த பிறகே, அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் நிர்வாகம் அந்த மருந்தை மக்கள் பயன்பாட்டிற்காக அனுமதிக்கும். இது எதுவுமே ஒரே நாளில் நடக்கும் காரியமல்ல.‌ 

சரி, அப்படியென்றால் இந்த வழிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே ஆஸ்பிரின் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டதே? ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் இதற்கு விதிவிலக்கா என்று கேட்டால் நிச்சயம் இல்லை. ஆஸ்பிரின் உள்ளிட்ட மக்கள் பயன்பாட்டில் இருக்கும் பழைய மருந்துகளையும் FDA மதிப்பீடு செய்து பார்த்து, அதன் பாதுகாப்பையும் நோய் தீர்க்கும் செயல்திறனையும் வைத்து இந்தந்த நோய்களுக்கு இந்தந்த மருந்துகளைப் பயன்படுத்தலாம் என்று தீர்மானித்துள்ளது. மருத்துவ ஒழுங்குமுறை அமைப்புகள் அங்கீகரித்த நோய்கள் மற்றும் மருத்துவச் சூழல்களில் மட்டுமே அந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும். அங்கீகரிக்கப்படாத பயன்பாடுகளுக்கு மருத்துவரின் அறிவுரையின்றிப் பயன்படுத்துவது ஆபத்தானது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

FDAவின் கடுமையான பரிசோதனை நெறிமுறைகளை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும் என்பதால்தான் புதிய மருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றன. நோய் தீர்வுதான் இலக்கு என்றால், அதைப் பரிசோதனை என்கிற பெயரில் தாமதிப்பது சரியா என்கிற கேள்வி இந்நேரம் பலருக்கு வந்திருக்கும். அதற்கு விடை வேண்டுமென்றால் FDA ஏன் இந்தக் கடுமையான நெறிமுறைகளை வகுத்தது என்பது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். 

1937ஆம் ஆண்டு ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனம் தயாரித்த எலிக்ஸிர் சல்ஃபனிலமைடு எனும் மருந்தை உட்கொண்டு அமெரிக்காவில் 100க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். அதற்குக் காரணம் அந்த மருந்தில் இருந்த நச்சுத்தன்மை. அப்போது இருந்த FDA நெறிமுறைகள் மருந்தின் மனித பாதுகாப்பை நிரூபிக்கும் விதியைக் கட்டாயமாக்கவில்லை என்பதால் இந்தப் பெரும் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து 1938இல் இயற்றப்பட்ட Federal Food, Drug, and Cosmetic (FFDCA) சட்டம் புதிய மருந்துகளின் நச்சுத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை வழங்கியது. அதை அடிப்படையாக வைத்துதான் இன்றைய FDA இயங்கி வருகிறது. ஒரு மருந்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர பலகட்ட ஆய்வுகளையும் முறையான அனுமதிகளையும் பெற்றிருக்க வேண்டும். அவைதான் புதிய மருந்துகள் விநியோகத்திற்கு வருவதற்காக எடுத்து கொள்ளப்படும் கால அவகாசத்திற்கான காரணம். 

3500 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டிலிருந்த வில்லோ மரப்பட்டைகள் ஆஸ்பிரின் மாத்திரையாக வடிவம் பெற இத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்றால், புதிதாகக் கண்டறியப்படும் மருந்துகள் பயன்பாட்டிற்கு வர  10லிருந்து 15 ஆண்டுகள் எடுப்பது ஆச்சரியமல்ல. அதுவும் இத்தனை பரிசோதனைக் கட்டங்களைக் கடந்து வர வேண்டும் என்றால் அவ்வளவு அவகாசம் தேவைப்படும்தான். 

ஓர் ஆய்வகத்தில் பிறக்கும் புதிய மூலக்கூறு, நோயாளியின் கைகளில் மருந்தாகச் சேரும் வரை என்னென்ன கட்டங்களைக் கடக்க வேண்டும்? அந்தப் பயணத்தில் எந்தக் கட்டத்திற்கு அதிகக் கால அவகாசம் தேவைப்படும்? இதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.

(தொடரும்)

படைப்பாளர்

வைஷ்ணவி என்கிற வாசகியாக இருந்து வெண்பா எனும் எழுத்தாளராக, ‘அவளொரு பட்டாம்பூச்சி’ வழியாக எழுத்துலகுக்கு அறிமுகமானவர். SRM கல்லூரியில், மரபணு‌ பொறியியலில் இளநிலை தொழில்நுட்பம் (B.Tech, Genetic Engineering) பயின்று, அண்ணா பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டு உயிரியலில் முதுநிலை தொழில்நுட்பம் (M.Tech, Computational Biology) பயின்று, தற்போது சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். ஹெர்ஸ்டோரிஸ் இணையதளத்தில் வெளிவந்த ‘தாயனை’, ‘அறிவதுவே’ ஆகிய தொடர்கள் ஹெர் ஸ்டோரிஸ் வெளியீடாக வந்திருக்கின்றன. ஹெர் ஸ்டோரிஸ் நடத்திய பெண்ணெழுத்துப் போட்டியில் வென்ற ‘வாகை சூடிய விஞ்ஞானிகள்’ நூலாக வந்திருக்கிறது.