மஞ்சுவுக்கு இந்தக் கேள்வி திடீரென்று தோன்றவில்லை. பல வருடங்களாகச் சிறுசிறு சம்பவங்களாக மனசுக்குள் தேங்கிக் கிடந்த ஒன்று, இப்போது கேள்வியாக மாறி இதயத்தைத் துளைத்தது.

நேசிக்கப்படவே தகுதி இல்லாதவள்தான் என்றால், எதற்காக உயிர் வாழ வேண்டும் என யோசிக்க ஆரம்பித்தாள்.

இன்று அவளுக்கு இரண்டாவது ப்ரேக் அப்.

அவள் அவளாகவும், அவளுக்காகவும் வாழ்ந்ததே இல்லை. எல்லா உறவிலும் அவள்தான் அதிகமாகக் கொடுப்பாள், மன்னிப்பாள், புரிந்து கொள்வாள்.  எந்த உறவையும் தக்க வைக்க அவள் எப்போதும் தியாகம் செய்யத் தயாராக இருப்பாள். அப்படி இருந்தும் அவளை யாரும் புரிந்துகொள்ளவில்லை.

இந்த இரண்டாவது பிரேக் அப் இவளது அதீதமான பதற்றத்தால் நடந்தது. மனோஜ், அவளின் பாய் ப்ரெண்ட். ஒரு மீட்டிங்கில் இருந்ததால் இரண்டு மணி நேரம் மஞ்சுவின் மெசேஜுக்குப் பதில் அனுப்பவில்லை. அதற்குள் மஞ்சு பத்து மெசேஜ்களும் மூன்று மிஸ்டு கால்களும் செய்திருந்தாள்.

“மஞ்சு, நீ ரொம்ப அதிகமா ரியாக்ட் பண்ணற… நீ இப்டி இருந்தா நாம சேர்ந்து இருக்கிறது ரொம்ப கஷ்டம்.“

“என்ன மனோஜ் இப்படிச் சொல்ற, நான் உனக்காகப் பண்ணதெல்லாம் நினைச்சுப் பாத்தியா ? என்னைவிட உன்னை யாரு நல்லா பாத்துப்பா?“

“மஞ்சு… பிளீஸ், பாத்துகிறதெல்லாம் அப்புறம். நீ அதெல்லாம் செய்யணும்னு எந்த அவசியமும் இல்ல. பட் உன்னோட ஆட்டிடூட், அது ஒத்து வராது.”

“சரி, நீ சொல்லு நான் மாத்திக்கிறேன். என்ன மாத்திக்கணும்?”

“இது உன்னோட வாழ்க்கை. நீயே யோசிச்சுப் பாத்து மாத்திக்கோ, நான் சொல்லி நீ மாறினா அது இயல்பா இருக்காது.”

”சாரி மஞ்சு, இது வொர்க் அவுட் ஆகாது. நீ நல்லா டைம் எடுத்து யோசி. உன் கிட்ட மாத்திக்கணும்னு நினைக்கிறத மாத்திக்கோ.“

அவ்வளவுதான், அவன் அவளுடைய வாழ்க்கையிலிருந்து மொத்தமாகப் போய்விட்டான். போனைக் கையில் வைத்தபடியே  அமர்ந்திருந்தாள்.

அவன் திரும்பக் கூப்பிடுவான், தன்னை விட முடியாது என்று  சொல்வான் என்கிற எதிர்பார்ப்புடன் போனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அழுகை வரவில்லை. உள்ளே ஏதோ உடைந்தது போல இருந்தது. முதல் பிரேக் அப் ஆன போது அறிமுகமானவன்தான் மனோஜ். அவனின் பேச்சு அப்போது அவளுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. முதல் காதலை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட்டோமா என்று அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. இன்று மனோஜும் போய்விட்டான். ’அவளது பயம் உண்மை தான். யாரும் அவளுடன் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை’ என்று குமைந்தது மனம்.

அவள் எப்போதும் யார் மனமும் புண்படக் கூடாதென நினைக்குமாறு வளர்க்கப்பட்டவள். அவள் மனதில் ஒரு குழந்தை எப்போதும் பயந்து கொண்டே இருந்தது.

“நான் போதுமானவளாக இல்லையென்றால் யாரும் என்னை நேசிக்க மாட்டார்கள்…” என்கிற உணர்வுடனே வளர்ந்ததால் அவள் மனம் மிகவும் சோர்ந்தது. ஏனெனில் அவள் அன்பை இயல்பாகப் பெறவில்லை. அன்புக்குத் தகுதியானவளாக நடித்துக் கொண்டிருந்தாள்.

சிறிய வயதில் அழுது கொண்டு அம்மாவின் முந்தானையைத் தேடும் போதெல்லாம், மென்மையாக தலையை வருடி “எதற்கெடுத்தாலும் அழக்கூடாது தங்கம்“ என்று கூறிய அம்மா. இரவில் தனியாகப் படுக்கப் பயந்தபோது, “இதுக்கெல்லாமா பயப்படுவ?” என்று கேலியாகச் சிரித்த அண்ணன். அண்ணன் தட்டை கழுவாத போது, “நான் மட்டும் எதுக்கு என் தட்டைக் கழுவணும்? “ என்று கேள்வி கேட்ட போது, “நல்ல பிள்ளையா இரு பாப்பா. இப்படி எல்லாம் பேசக் கூடாது”  என்று பாடமெடுத்த அப்பா.

ஆக மொத்தம் சொந்த வீட்டிலேயே தன் உணர்வுகளைப் பாதுகாப்போடு வெளிப்படுத்த முடியாத சூழ்நிலையில் வளர்ந்தவளுக்கு, ’நாம் எப்போதும் சரியாக நடந்து கொண்டால்தான் பிறரின் அன்புக்குத் தகுதியாகிறோம். நம் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் இருந்தால்தான் அந்த அன்பு நிலைக்கும்’ எனப் பதிந்துவிட்டது.

அதன் பிறகு அவள் வாழ்க்கை முழுக்க நல்லவளாக இருக்க முயன்றாள். அப்போதுதான் அனைவரும் தன்னுடன் கூடவே இருப்பார்கள் என்கிற நம்பிக்கையில்.

எப்படி நடந்துகொண்டாலும் அவரவருடைய இடம் வந்ததும் இறங்கிக்கொள்ளும் பயணிகளைப் போல, அனைவருமே ஒரு நாள் நம் வாழ்க்கையிலிருந்து விலகிப் போகும் நாளும் வரும்.

அவளுக்கும் அது நடந்தது. அண்ணன் திருமணமாகி மனதளவில் கொஞ்சம் தள்ளிப் போனான். பள்ளித் தோழிகள் வேறு கல்லூரியில் சேர்ந்தனர். கல்லூரித் தோழிகள் படிப்பு முடிந்ததும் அவரவர் பாதையில் சென்றனர்.

யாருமே நிரந்தரமாகத் தன்னுடன் இருக்க முடியாததற்கு அவரவர் வாழ்க்கைதான் காரணம் என்பதைப் புரிந்துகொள்ளாமல், தான் என்ன தவறு செய்தோம் எதனால் பிரிந்து போனார்கள் என்று குழம்பிப் போனாள்.

அவள் மனதில் ’ஒருநாள் எல்லாரும் என்னை விட்டுப் போய்விடுவார்கள்…’ என்பது ஆழமாகப் பதிந்துவிட்டது.

அப்படி நடக்ககூடாதென எப்போதும் அதிகம் கொடுப்பவளாக மாறினாள். அப்படி இருந்தும் எந்த உறவும் ஏன் நிலைக்காமல் போகிறதென அவளுக்குப் புரியவில்லை.

அவளுக்கு யாரிடம் இருந்து மெசேஜ் வந்தாலும் உடனடியாகப் பார்த்து, பதில் சொல்லிவிட வேண்டும். சிறிது தாமதமாகப் பதில் சொன்னால், அவர்கள் தப்பாக நினைப்பார்கள் என்று பதறுவாள்.

யாராவது அவள் அனுப்பிய செய்தியைப் படித்துவிட்டு, பதில் உடனே கூறாவிட்டாலும் அவளுக்குப் பதற்றம் கூடிவிடும். நூறு முறை போனைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்.

’நான் ஏதாவது தவறு செய்தேனா?’ என்று மனம் தன்னிடமே காரணம் தேடும்.

யாராவது சிறிது விலகிப் போவது போல் தோன்றினாலே,  அவள் முதலில் தன்னிடமே குற்றம் காணுவாள்.

இப்போது மனோஜ் விலகியவுடன் பித்துப் பிடித்தது போல ஆகிவிட்டாள். அவளின் மனப்போராட்டத்தைப் பார்த்த தோழி அவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்துப் போனாள்.

இளங்கோ, மனநல மருத்துவர். மிகவும் ஹேண்ட்சம்மாக இருந்தார். அவளிடம் கனிவாகப் பேசினார்.  அவள் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டித் தீர்த்தபோது அமைதியாகக் கேட்டுக் கொண்டார்.

பிறகு அவளுக்குச் சில மருந்துகள் கொடுத்து, “தூக்கம் வரும், நல்லா தூங்குங்க. எதுவும் யோசிக்காதீங்க. அடுத்த வாரம் மறுபடியும் பார்க்கலாம்” என்றார்.

மஞ்சுவிற்கும் அவருடன் பேசியது மிகவும் ஆறுதலாக இருந்தது. இரண்டு மூன்று சிட்டிங் போன உடன், அவள் மிகவும் லேசாக உணர்ந்தாள். இளங்கோவின் நட்பு தொடர்ந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தாள்.

இப்போதெல்லாம் யாராவது மெசேஜுக்குத் தாமதமாகப் பதில் அனுப்பினாலும் முன்பைப் போல பதறவில்லை. அவள், அவளது வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தினாள்.

அன்று கடைசி சிட்டிங்கில், “எப்படி பீல் பண்றீங்க மஞ்சு?” என்று கேட்டார் டாக்டர்.

“ரொம்ப லைட்டா ஃபீல் பண்றேன் டாக்டர். சந்தோஷமா இருக்கேன்.“

“இப்போ மனோஜ் போனது அதே போல வலிக்குதா?”

“இல்லை டாக்டர், அதை இப்போ நினைக்கிறதே இல்லை.“

“குட். இப்போ உங்க பயம் எப்படி இருக்கு?”

“சில சமயம் பயம் வருது, அப்போ வேற ஏதாச்சும் பண்ணி என்னை டைவர்ட் பண்ணிக்கிறேன். இளங்கோ….”

“சொல்லுங்க மஞ்சு..”

சிறிது தயங்கிய மஞ்சு, “என்னோட காதலைக் கண்டறிஞ்சுட்டேன்னு நினைக்கிறேன். ஐ ம் இன் லவ் வித் யூ…”

சற்றுப் பெரிய மூச்செடுத்த இளங்கோ, “இல்லை மஞ்சு நீங்க என்னைக் காதலிக்கலை…“ என்றார்.

“அப்போ மத்தவங்களைப் போல நீங்களும் நான் அதுக்குத் தகுதி இல்லைன்னு நினைக்கிறீங்களா?” உடைந்த குரலில் கேட்டாள் மஞ்சு.

“நான் நிராகரிக்கலை மஞ்சு. நீ  பாதுகாப்பா உணர்வதைக் காதல்னு தவறாகப் புரிஞ்சிக்காதேன்னு சொல்றேன். நீ என்னைச் சந்திச்சப்போ உடைந்து போயிருந்த. நான்  உன் உணர்வுகளை மதிச்சேன். உன்னை மாற்ற முயற்சி பண்ணல. அதனால உனக்கு நான் முக்கியமானவனா தோணலாம். அது இயல்புதான். ஆனா மஞ்சு, யாராவது நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கிறாங்கன்னா அது காதலாதான் இருக்கணும்னு இல்லை. நீ உன்னோட காதலை ஒரு நாள் நிச்சயமா கண்டறிவே, ஆனா அதுக்கு முன்னாடி உன்னை நீ முழுசா கண்டறியறதுதான் முக்கியம். நீ எல்லாருக்காகவும் கொடுத்த அன்பை உனக்குக் கொடு. அப்புறம் காதலைப் பத்தி யோசி. அப்பவும் என்னைப் பிடிச்சிருக்குன்னு தோணினா வந்து சொல்லு. ஆனா அநேகமா…. உனக்குத் தோணாது“ என்று புன்னகையோடு முடித்தார்.

“ஓகே டாக்டர்.”

“குட். நீ உனக்காக வாழு. அதுல சேர்த்துக்கணும்னு நினைக்கிறவங்க சேர்ந்துக்கட்டும். You deserve Love as you are. இதை மறந்துடாத.”

“தேங்க்யூ டாக்டர்“ என்று  எழுந்த மஞ்சுவிற்குத் தோள்களில் இருந்த கனம் போய் மனம் லேசானது.

காதல் வரும்போது வரட்டும். நான் என்னை நேசிக்கப் போகிறேன் என முடிவு செய்தாள்.

சிறகுகள் வீசியே சுதந்திர வானிலே

நான் போகிறேன்… நான் போகிறேன்.

(தொடரும்)

படைப்பாளர்:

யாமினி

வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.