சில அறைகள் வெறுமையாக இருப்பதில்லை. அங்கே பேசப்படாத வார்த்தைகள் இருக்கும். மறக்கப்படாத நினைவுகள் இருக்கும். ஒரு நாள் நம்மை நாமே சந்திக்கக் காத்திருக்கும் தனிமையும் இருக்கும்.
தனிமை… அது எல்லாரையும் ஒரே மாதிரி அணைப்பதில்லை. சிலரை உடைக்கிறது. சிலரை உருக்குகிறது. சிலரை,அவர்களுக்கே அறிமுகப்படுத்துகிறது.
மாலை 6 மணி.
சென்னையின் கூட்ட நெரிசல், மெதுவாக இரவின் அமைதிக்குள் நகர்ந்துகொண்டிருந்தது. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய நிரஞ்சனா, வழக்கம்போல் கதவைத் திறந்தாள்.
வீட்டுக்குள் அமைதி. ஒரு காலத்தில் அந்த அமைதி அவளை விழுங்க வந்தது போல இருந்தது. இப்போது அது அவளிடம் அனுமதி கேட்டுத்தான் உள்ளே வருகிறது.
அந்த அமைதி எப்படித் தோழியாக மாறியது?
சமையலறைக்குள் சென்று, ஒரு கப் காபி தயாரித்து, பால்கனியில் வந்து அமர்ந்தாள். ஹால் முழுக்க அவள் மாட்டி இருக்கும் ஒளிப்படங்கள் அவளது வாழ்க்கையின் புன்னகை தருணங்களை நினைவுபடுத்திக் கொண்டிருந்தது.
எதிரே இருந்த அடுக்குமாடி வீடுகளின் ஜன்னல்களில், ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு வாழ்க்கையில் மூழ்கியிருந்தது.
அனைவரும் அவளைக் கேட்கும் கேள்வி மனதில் வந்தது, “இப்படித் தனியாக வாழ்வது தண்டனை இல்லையா?”
அந்தக் கேள்வி மனதில் பழைய நினைவுகளைத் திறந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்…
கணவனைப் பிரிந்து வந்த பிறகு, உலகமே அவளைக் குற்றவாளி போல பார்த்தது.
“பெண்ணா இருந்தா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்…”
“தனியா எப்படி வாழப் போற?”
“வாழ்க்கை முழுக்க இப்படியே இருக்க முடியாது.”
ஒவ்வொரு வார்த்தையும், அவளுக்குள் ஒரு பயத்தை விதைத்தது. அந்தப் பயம், தனிமையைவிடப் பெரியதாக இருந்தது.
டிவி ஓட வேண்டும், யாரிடமாவது பேசிக் கொண்டிருக்க வேண்டும் அல்லது போன் கையில் இருக்க வேண்டும்.
இல்லையெனில், மனம் ஏதோ வெற்றிடத்தில் விழுவது போலத் தோன்றும். என்ன வாழ்விது ? பேசாமல் கல்யாண வாழ்க்கையில் கொஞ்சம் அனுசரித்துப் போய் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும்.
அனுசரித்துப் போயிருந்தால் வீட்டில் போதும் போதுமென்னும் அளவுக்கு ஆட்கள் இருந்திருப்பார்கள். வீட்டிலும் வெளியிலும் உழைக்கும் அவளின் ஆற்றலை உறிஞ்சிக் கொண்டிருப்பார்கள். அதற்குத் தனியாக வாழ்வது மேல் என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.
கணவனைப் பிரிந்து வந்த முதல் மாதங்கள், மொபைல் எப்போதும் கையில் இருக்கும். யாராவது ஆன்லைனில் இருக்கிறார்களா? யாராவது பேசுவார்களா என எதிர்பார்ப்போடு இருப்பாள்.
காலை எழுந்தவுடன் பத்துப் பேருக்கு “குட் மார்னிங்” அனுப்புவாள்..
ஒரு பதில் வரும். இருவர் பார்த்திருப்பர். மற்றவர்கள் அலட்சியபடுத்தி இருப்பர். . அந்த மௌனம், வீட்டிலிருந்த அமைதியைவிட அதிக சத்தமாக இருந்தது. ஆனால் வீட்டில் தனியாக இருப்பதைவிட, தன் மனதுடன் தனியாக இருப்பதுதான் அவளுக்கு அதிக பயத்தைத் தந்தது.
ஒரு ஞாயிற்றுக்கிழமை.
பழக்கத்தால் இரண்டு பேருக்குச் சாதம் வைத்தாள். சாம்பாரும் செய்தாள். சாப்பிட அமர்ந்தபோது எதிரே இருந்த நாற்காலி காலியாக இருந்தது. அந்த காலி நாற்காலியைச் சில நொடிகள் பார்த்துக்கொண்டிருந்தாள்.
பிறகு மெதுவாக எழுந்து தட்டில் போட்டிருந்த உணவை எடுத்துக் குப்பைத்தொட்டியில் கொட்டினாள். ஸ்டீல் தட்டு சிங்கில் விழுந்த சத்தம் மட்டும் வீட்டில் எதிரொலித்தது.
அந்தச் சத்தத்தோடு அவளும் சமையலறை தரையில் உட்கார்ந்தாள். அன்று அவள் சாப்பிடவில்லை, அழவும் இல்லை. வெறுமனே உட்கார்ந்திருந்தாள். அந்த மௌனம் தான் அவளை முதன்முறையாக தோற்கடித்தது
ஒருகட்டத்தில் தனிமையே நிம்மதியாகத் தோன்ற ஆரம்பித்தது. ஆனால், வாக்கிங் போகும்போதுகூட, யாராவது கூட வர வேண்டும். இல்லையெனில், போனில் யாரிடமாவது பேசிக்கொண்டே நடக்க வேண்டும். அப்படிப் பழகியவளுக்கு, தனிமை பயமுறுத்தியது.
அதற்குப் பிறகுதான் அவள் கூட்டத்தைத் தேட ஆரம்பித்தாள். வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள், தேவையில்லாத நட்புகள்.
ஒவ்வோர் இரவும் யாராவது பேச வேண்டும்.
யாராவது “நீ எப்படி இருக்க?” என்று கேட்க வேண்டும்.
யாரும் கேட்காத இரவுகளில், போன் திரையையே பார்த்துக்கொண்டே தூங்கிவிடுவாள். ஆனால் எத்தனை பேரோடு பேசினாலும், தூங்கச் செல்லும் போது மீண்டும் அவளும்… அந்த அமைதியும் மட்டுமே.
அவளுக்குத் துணை தேவை என முதலில் நினைத்தாள். ஆனால் அவள் தேடியது தன் குரலைக் கேட்க முடியாத சத்தத்தைத்தான் என்று புரிந்து கொள்ளும் நாளும் வந்தது.
தவிர்க்க முடியாத அந்த இரவும் ஒரு நாள் வந்தது. ஓடவும் முடியாமல், ஒளியவும் முடியாமல் தன்னிடமே மாட்டிக்கொண்ட நாள்.
ஒருநாள் இரவு மின்சாரம் போயிருந்தது, போனிலும் சார்ஜ் இல்லை.
அந்த இருளில், முதல் முறையாக, எந்தச் சத்தமும் இல்லாமல் ஒரு மெழுகின் துணையோடு அமர்ந்திருந்தாள்.
இருளுக்கு ஒரு விநோதமான பழக்கம் உண்டு. அது நம்மை யாரிடமும் கொண்டு போகாது. நம்மிடமே கொண்டு வந்து நிறுத்திவிடும். அதனால்தான், சிலர் இருளை வெறுக்கிறார்கள். தனிமையைக் கண்டு பயப்படுகிறார்கள்.
ஆனால்.. அன்று அதே இருளும், அதே தனிமையும்,
“இத்தனை நாளாக உன்னை நீ பார்த்ததே இல்லையே…”
என்று மெதுவாகக் கையைப் பிடித்தது.
முதலில் மனம் அலறியது. பழைய நினைவுகள் வந்தன, வலி, கைவிடப்பட்ட உணர்வில் மனம் வெம்பியது.
ஆனால், இந்த முறை ஓட முடியவில்லை. யாரையும் தேடவும் முடியவில்லை. தன் இழப்புகளை நினைத்து, ஆற்றாமையோடு அழுதாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு, மனம்விட்டு அழுதாள்.
மனம் சோரும்வரை அழுத பிறகு, ஒரு விசித்திரமான அமைதி வந்தது. திடமாக இருக்கிறேன் என்கிற போர்வையில் இத்தனை நாள் இப்படி மனம் விட்டு அழாததற்காக மிகவும் வருத்தமாக இருந்தது.
தன் காயங்கள், தன்னைத் திரும்ப திரும்ப உடைக்க முடியாது என்பதை, அன்று அவள் முழுதாக உணர்ந்தாள். இதற்காகவா இத்தனை பயந்தோம் என்று சிரிப்புகூட வந்தது.
அந்த இரவு, அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. அவள் தனிமையை வெறுக்கவில்லை. தனிமையில், தன்னைத் தானே சந்திக்க வேண்டி வரும் என்றே பயந்தாள்.
அடுத்த நாள் காலை, எதுவும் மாறவில்லை. அதே வீடு, அதே அமைதி. ஆனால் இன்று எழுந்தவுடன் போனைத் தேடவில்லை.
படுக்கையை விட்டு எழும் போது கொஞ்சம் லேசாக உணர்ந்தாள். ஆனாலும் செய்ய வேண்டிய மாற்றங்களை மனதில் இருத்திக் கொண்டாள்.
நிரஞ்சனா கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள். எந்த மாற்றமும் சுலபமாக இல்லை. ஆனால், அவள் நினைத்த அளவிற்குக் கடினமாகவும் இல்லை.
முதலில் தனியாக ஒரு கபேக்குப் போனாள். உள்ளே போக தயக்கமாக இருந்தது, இரண்டொருமுறை வாசலோடு திரும்பி வந்ததும் உண்டு. வெயிட்டர் தன்னை விசித்திரமாகப் பார்ப்பதுபோல, காபி குடிப்பவர்கள் தன்னையே பார்ப்பதுபோல படபடப்பாக இருந்தது.
சுற்றி எத்தனையோ இளம் பெண்கள் தனியாக லேப்டாப் மற்றும் காபியோடு அமர்ந்திருப்பதைப் பார்த்தாள். தனது வயதினருக்குத் தான் இது வித்தியாசமாக இருக்கிறது போல என எண்ணிக்கொண்டாள்.
பிறகு அது பழகிப் போனது. வெயிட்டரின் நட்பான புன்னகையும், “ ப்ளாக் காபிதானே மேம் என்கிற கேள்வியும் பழகிப் போனது.
ஆரம்பத்தில், “இன்று நல்லாத்தான் இருந்துச்சு. நாளைக்கும் இதே தைரியம் வருமா” என்று குழம்புவாள்.
இப்போதெல்லாம் கபேயின் பின் பக்கத்தில் தெரியும் வ்யூவை பார்த்துக் கொண்டே காபியைக் குடிப்பது மகிழ்ச்சியான அனுபவமாகிப் போனது. ஆனாலும் சில ஞாயிறு மதியங்களில் வெறுமை அவளை வாட்டியதுண்டு. தனிமையை விரட்ட ரீல்ஸ் பார்க்கலாம் என்று தோன்றியதைப் பிடிவாதமாக ஒதுக்கி புத்தகம் படித்து, வீட்டைச் சுத்தம் செய்து நேரத்தைச் செலவு செய்திருக்கிறாள்.
அவளது ஃபேவரைட் ஹீரோவின் படம் வெளியாகி இருந்தது. இப்போதெல்லாம் படத்திற்குப் போவதெல்லாம் போன ஜென்மத்தில் என்று இருந்த நிலை மாறிவிட்டிருந்தது. அவ்வப்போது நண்பர்களுடன் போவதுண்டுதான்.
ஆனால் இன்று யாரும் ஃப்ரீயாக இல்லை. ‘யாரும் இல்லாவிட்டால் என்ன, நாம போவோம்’ என்றென்னி தியேட்டர் வரைக்கும் வந்து விட்டாள். ஆனாலும் பக்கத்தில் யாரு வருவார்கள், தனியாகப் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்றெல்லாம் யோசனை ஓடியது.
தியேட்டரில் நுழைந்த போது விளக்கெல்லாம் அணைத்து விட்டார்கள், இந்த இருட்டில் அறிமுகமில்லாதவர்களோடு தனியாகப் படம் பார்ப்பதா, திரும்பிப் போய்விடலாமென முடிவெடுத்த போது படம் ஆரம்பித்துவிட்டது. இனி திரும்பிப் போனால் மற்றவர்களுக்குத் தொல்லை என வேறு வழியில்லாமல் தன் இருக்கையில் அமர்ந்து பார்க்க ஆரம்பித்தாள்.
எல்லாம் படம் ஆரம்பித்து பத்து நிமிடம் வரைதான். பின் படத்தில் மூழ்கியதில் ’நல்லாத்தானே இருந்துச்சி இந்த பீலிங்’ என்கிற முடிவுக்கே வந்துவிட்டாள். அதிலும் ஒரு ஜோக்கிற்குத் தன்னை மறந்து சத்தமாகச் சிரித்துவிட்டு, யாரும் பார்க்கிறார்களா எனச் சுற்றிப் பார்த்தாள். பின் யார் பார்த்து என்ன என்று தோளைக் குலுக்கிக்கொண்டு படம் பார்க்க ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு முறையும், தனிமை கொஞ்சம் கொஞ்சமாகப் பயத்திலிருந்து சுதந்திரமாக மாறியது.
நண்பர்களுடன் அவுட்டிங் போனாள். வாழ்க்கையை ரசித்தாள். தனது முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினாள். ஒவ்வொரு வெற்றியும் அவளது மனக்காயங்களுக்கு மருந்தாகியது. முன்பெல்லாம் நண்பர்கள், உறவினர்களை என்ன விலை கொடுத்தேனும்கூட வைத்துக்கொள்ள முயல்வாள்.
இன்று, அனைவரிடமும் அன்புதான், யாருடன் பொழுதைக் கழித்தாலும் மகிழ்ச்சிதான். ஆனால் யாரையும் பிடித்து வைத்துக்கொள்ள முயல்வதில்லை. இந்த நொடியில் தன்னோடு இருப்பவரைக் கொண்டாடுகிறாள்.
இப்போது, அவள் ஒரு சோலோ ட்ராவல்க்குத் திட்டமிடுகிறாள்.
அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்த பெண் ஒருவர் கேட்டார்.
“மேம்… தனியா இருக்க பயமா உங்களுக்கு இல்லையா?”
நிரஞ்சனா சிரித்தாள்.
“சில நேரம் இருக்கும். ஆனா இப்போ நான் ஓட மாட்டேன்.”
“எப்படி?”
நிரஞ்சனா மென்மையாகச் சிரித்தாள்.
“புரியும் போது புரியட்டும். இப்போ குழப்பிக்க வேணாம்”
அந்தப் பெண்ணுக்கு புரியவில்லை, ஆனால் நிரஞ்சனா இதைத் தனக்காகச் சொல்லிக்கொண்டாள். நியாபகப்படுத்தி கொள்ளும் விதமாக…”
அன்று இரவு மழை ஆரம்பித்தது.
நிரஞ்சனா பால்கனியில் நின்று மழையைப் பார்த்தாள்.
வீட்டுக்குள் இன்னும் அமைதிதான்.
ஆனால், இன்று அந்த அமைதி வெறுமையாக இல்லை. அது மென்மையாக அவளைத் தழுவியது.
திறந்திருந்த பால்கனி வழியாக வந்த சாரல் இதமாக அவளை நனைத்தது. நிரஞ்சனா அமைதியாகக் கண்களை மூடி சாரலில் சிலிர்ப்போடு நனைந்தாள்.
தனிமை என்பது, வாழ்க்கை நம்மைத் தண்டிக்க கொடுத்த அறை இல்லை. நம்மை நாமே மீண்டும் சந்திக்க, வாழ்க்கை கொடுக்கும் இடம்.
சிலர் கூட்டத்தில் இருந்தும் உடைந்து போகிறார்கள்.
சிலர் தனிமையில் இருந்தும், முழுமையாக மாறுகிறார்கள்.
தனிமை தண்டனை அல்ல. தன்னுடன் நட்பு தொடங்கும் முதல் இடம்.
“இரு கால்களின் இடையிலே உரசும் பூனை போல், வாழ்க்கை போதும் அடடா… எதிர் காணும் யாவுமே தீண்ட தூண்டும் அழகா..
தோ… காற்றோடு வல்லூறு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்…”
(தொடரும்)
படைப்பாளர்:

யாமினி
வாழ்க்கைக் கல்வி மற்றும் மென்திறன் பயிற்சியாளர், இயற்கை விரும்பி, நெகிழி ஒழிப்பு ஆர்வலர், திடக் கழிவு மேலாண்மை பயிற்சியாளர். பயிலரங்குகள் நடத்துகிறார். உறவு மேலாண்மை தனிபட்ட ஆலோசகர். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு விழிப்புணர்வை உருவாக்குவதின் மூலமே நாட்டின் நலம், இயற்கை வளம், சரிவிகித சமுதாயத்தை அடைய முடியுமென்று தீவிர நம்பிக்கை உள்ளவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் வாழ்தலைக் கொண்டாடுபவர்.





